கடந்த 2020 ஜூலை முதல் 2021 பிப்ரவரி வரையிலான ஒன்பது மாத காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்பட்ட முதலீடுகளைவிட வெளியேறிய தொகை அதிகம். இந்தக் காலகட்டத்தில் சுமார் ரூ.47,000 கோடி நிகரமாக ஈக்விட்டி ஃபண்டுகளிலிருந்து வெளியேறியது.

இந்த நிலையில், 2021 மார்ச் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி ஃபண்டுகளில் நிகர முதலீடு கிட்டத்தட்ட ரூ.2.475 கோடியாக உள்ளது. 2021 மார்ச் மாதத்தில், முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுப்பது குறைந்திருப்பது, வரிச் சேமிப்புக்காக இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் அதிக முதலீடு செய்திருப்பது ஆகியவை இந்த அதிகரிப்புக்குக் காரணங்களாகும். மார்ச் மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.10,482 கோடி மதிப்புள்ள இந்தியப் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்கள்.
இந்த நிகர வரத்தின் காரணமாக ஃபண்ட் மேனேஜர்களுக்கு கணிசமான தொகையை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மார்ச் மாதத்தில் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தது. மாத ஆரம்பத்தை விட சந்தை சுமார் 5% இறக்கத்தில் காணப்பட்டது.
கொரோனா பாதிப்பால் சந்தை வீழ்ச்சியிலிருந்த 2020 மார்ச் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ரூ.30,285 கோடியை முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.