Published:Updated:

Swiss banks: ₹20,706 கோடியாக உயர்ந்த இந்தியர்களின் முதலீடு; 13 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு!

Swiss bank
Swiss bank ( Screenshot from YouTube channel Schweizerische National bank )

தற்போதய நிலையில், ஸ்விஸ் வங்கியில் வெளிநாட்டு வாடிக்கையாளர்களில் இங்கிலாந்து நாட்டினர் அதிக பணம் போட்டு வைத்துள்ளனர். இந்த வரிசையில் அமெரிக்கா 2-வது இடத்திலும், இந்தியா 51-வது இடத்திலும் உள்ளது.

ஸ்விட்சர்லாந்து தேசிய வங்கி (Switzerland's central bank) சமீபத்தில் தனது வருடாந்தர கணக்கு விவரங்களை வெளியிட்டது. அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டின் இறுதியில் ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு ரூ.20,706 கோடியாக அதிகரித்துள்ளது. 2019-ம் ஆண்டின் இறுதியில் இது ரூ.6,625 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குறைந்து வந்த இந்த முதலீடு, 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள ஸ்விஸ் வங்கிக் கிளைகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலமாக இந்தியர்கள் மேற்கொண்ட பங்குப் பத்திரங்கள் மற்றும் சேமிப்புப் பத்திர முதலீட்டின் மதிப்பு உயர்ந்ததே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

Bank ATM
Bank ATM
Vikatan

ஸ்விஸ் பேங்க் என்றாலே கறுப்புப் பணத்தைப் பதுக்கிவைக்கும் வங்கி என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. மற்ற வங்கிகளைப்போல ஸ்விஸ் வங்கியும் ஒரு வங்கி அவ்வளவே. அதுமட்டுமல்லாமல், உலகிலேயே பாதுகாப்பாகப் பணத்தைச் சேமித்து வைக்கக்கூடிய வங்கிகளில் ஒன்றாக ஸ்விஸ் வங்கி இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

வெளிநாட்டைச் சேர்ந்த தனிநபர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்க பெரும்பாலான நாடுகளின் வங்கித் துறைகள் அனுமதிப்பதில்லை. ஆனால், ஸ்விட்சர்லாந்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் வங்கிக் கணக்கு தொடங்க அனுமதியுண்டு.

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில், ஸ்விட்சர்லாந்து குடியுரிமை பெற்றவர்களின் டெபாசிட் மற்றும் ஸ்விட்சர்லாந்தில் சம்பாதித்த பணத்தை டெபாசிட் செய்வதற்கு மட்டுமே அந்நாட்டில் வரி செலுத்த வேண்டும். வெளிநாட்டிலிருந்து டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு வரி செலுத்தத் தேவையில்லை. இதன் காரணமாகவும் வெளிநாட்டினர் இங்குள்ள வங்கிகளில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.

Investment
Investment

ஸ்விட்சர்லாந்து நாட்டின் பொருளாதாரம் நிலையானதாக இருக்கும். அந்த நாட்டின் பண மதிப்பு தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கிறது. இன்றைய நிலையில் `ஸ்விஸ் பிராங்க்'கை இந்திய ரூபாயோடு ஒப்பிட்டால், ஒரு ஸ்விஸ் பிராங்கின் மதிப்பு 80.69 ரூபாயாக இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன் சுமார் ரூ.45-க்குச் சமமாக இருந்தது. ஸ்விட்சர்லாந்தின் பொருளாதாரம் சீராக இருப்பதும்கூட மற்ற நாட்டு வாடிக்கையாளர்கள், இந்த வங்கிகளில் முதலீடு செய்வதற்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த அம்சங்களை கவனித்தால் முதலீடு லாபகரமாக இருக்கும்!

தற்போதய நிலையில், ஸ்விஸ் வங்கியில் வெளிநாட்டு வாடிக்கையாளர்களில் இங்கிலாந்து நாட்டினர் அதிக பணம் போட்டு வைத்துள்ளனர். இந்த வரிசையில் அமெரிக்கா 2-வது இடத்திலும், இந்தியா 51-வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு