Published:Updated:

சந்தையின் ஏற்ற, இறக்கத்தைச் சமாளிக்க டைனமிக் அஸெட் அலொகேஷன் ஃபண்ட்..!

முதலீடு

பிரீமியம் ஸ்டோரி

ஜெய்பிரகாஷ் தோஷ்னிவால், சீனியர் ஈக்விட்டி ரிசர்ச் அனலிஸ்ட் & ஃபண்ட் மேனேஜர் - ஈக்விட்டி, எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட் அஸெட் மேனேஜ்மென்ட் லிட்

செல்வம் சேர்ப்பது (Wealth creation) நீண்ட கால செயல்முறை ஆகும். ஆனால், முதலீடு என்பது ஒரு நீண்ட மாரத்தான் ஓட்டப் போட்டி; அது குறுகிய கால ஓட்டப் போட்டி அல்ல. சரியாக, நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தால், சந்தையின் குறுகிய கால இறக்கங்கள், உங்கள் முதலீட்டுக் கலவையில் (portfolio) குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யும் போது கூட்டு வளர்ச்சி சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

ஜெய்பிரகாஷ் தோஷ்னிவால் 
சீனியர் ஈக்விட்டி ரிசர்ச் அனலிஸ்ட் & 
ஃபண்ட் மேனேஜர் - ஈக்விட்டி,
எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட் அஸெட் மேனேஜ்மென்ட் லிட்
ஜெய்பிரகாஷ் தோஷ்னிவால் சீனியர் ஈக்விட்டி ரிசர்ச் அனலிஸ்ட் & ஃபண்ட் மேனேஜர் - ஈக்விட்டி, எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட் அஸெட் மேனேஜ்மென்ட் லிட்

அமெரிக்காவில் 2008-ல் ஏற்பட்ட நிதி நெருக்கடி, பிரெக்ஸிட் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் குறைந்தபட்சம் குறுகிய காலத்துக்கு உங்கள் முதலீட்டின் தொகுப்பு நிதியை (corpus) பாதிக்கும். பங்குச் சந்தை, மிகவும் வீழ்ச்சியில் இருக்கும்போது, முதலீட்டுக் கலவையின் மதிப்பு, அதன் முந்தைய உச்ச மதிப்பிலிருந்து 60% - 70% (ஆதாரம்: என்.எஸ்.இ பங்குச் சந்தை) வரை கீழே போகலாம் என்று வரலாற்றுப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, பங்குச் சந்தையின் இறக்கங்கள் மற்றும் சந்தை வீழ்ச்சியின்போது முதலீட்டாளர்கள் தங்கள் தொகுப்பு நிதியின் மதிப்பு பெரிய அளவில் குறையாமல் பாதுகாக்க ஒரு முதலீட்டு உத்தி தேவையாக உள்ளது.

சொத்து ஒதுக்கீடு ஏன் தேவை..?

பங்குச் சந்தையின் இறக்கத்தைச் சமாளித்து, முதலீட் டாளரின் தொகுப்பு நிதியைப் பாதுகாத்து, நீண்ட காலத்தில் செல்வத்தை உருவாக்க வகுக்கப்பட்ட ஓர் உத்திதான் சொத்து ஒதுக்கீடு. சொத்து ஒதுக்கீடு என்பது முதலீட்டைப் பிரித்து மேற்கொள்வதாகும். ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத பல்வேறு சொத்துப் பிரிவு களில் முதலீடு செய்வதன்மூலம் ஏதாவது ஒரு சொத்துப் பிரிவில் ஏற்படும் அதிக இறக்கம் முதலீட்டாளரின் முதலீட்டுக் கலவையைப் பெரிதாகப் பாதிக்காமல் இருக்கச் செய்ய முடியும். இந்த முதலீட்டுப் பாணி, பல்வேறு சொத்துப் பிரிவுகளின் செயல்பாடுகளில் எதிர்பார்ப்பு அடிப்படையில், ஒரு சொத்துப் பிரிவிலிருந்து மற்றொரு சொத்துப் பிரிவுக்கு முதலீட்டை மாற்றி, லாபம் ஈட்டுவதாக இருக்கிறது.

பல வகையான சொத்துப் பிரிவுகள்...

முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப பல்வேறு வகையான சொத்து ஒதுக்கீடுகள் இருக்கின்றன. உதாரணமாக, பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் (நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள்), கடன் சந்தை சார்ந்த முதலீடுகள் (ஃபிக்ஸட் டெபாசிட், பப்ளிக் பிரவிடன்ட் ஃபண்ட், கடன் மியூச்சுவல் ஃபண்டுகள்), தங்கம் (கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட்), கமாடிட்டி, கரன்சி, ரியல் எஸ்டேட், ரியல் எஸ்டேட் சார்ந்த ரெய்ட்ஸ் (REITS) மற்றும் இன்விட்ஸ் (InvITs) போன்ற சொத்துப் பிரிவுகளைக் குறிப்பிடலாம். பங்கு சார்ந்த திட்டங்கள், கடன் சார்ந்த திட்டங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது முக்கியமான அஸெட் அலொகேஷன் உத்தி ஆகும். பங்கு சார்ந்த முதலீடானது மூலதனத்தைப் பெருக்கவும், கடன் சார்ந்த முதலீடானது மூலதனத்தைப் பாதுகாக்கவும், தங்கம் சார்ந்த முதலீடானது பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தருவதாகவும் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சந்தையின் ஏற்ற, இறக்கத்தைச் சமாளிக்க டைனமிக் அஸெட் அலொகேஷன் ஃபண்ட்..!

அஸெட் அலொகேஷன் பற்றி புரிந்துகொள்ளுங்கள்...

இன்றைக்கு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், பல்வேறு சொத்துப் பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்யும் பல அஸெட் அலொகேஷன் திட்டங்களைக் கொண்டிருக்கின்றன. நீண்ட காலத்தில் மல்ட்டி அஸெட் அலொகேஷன் ஃபண்ட் லாப கரமானது என நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அஸெட் அலொகேஷன்படி, முதலீட்டை மேற்கொள்ளச் சொல்வது எளிது. ஆனால், அதைப் பின்பற்றுவது கடினம். அஸெட் அலொகேஷனை நடை முறைப்படுத்துவதற்கு அதிக முதலீட்டு அறிவு வேண்டும் மற்றும் பல்வேறு சொத்துப் பிரிவுகளின் செயல்பாடு பற்றி நன்கு புரிந்து வைத்திருக்க வேண்டும். எந்தச் சொத்துப் பிரிவைத் தேர்வு செய்வது, எவ்வளவு தொகையைப் பிரித்து முதலீடு செய்வது, எந்தச் சொத்தில் எப்போது முதலீடு செய்வது மற்றும் எந்தச் சொத்துப் பிரிவிலிருந்து வெளியேறுவது எனத் தெரிந்தால் மட்டுமே அஸெட் அலொகேஷன்படி, சரியாக, லாபகரமாக முதலீடு செய்ய முடியும்.

டைனமிக் அஸெட் அலொகேஷன் ஃபண்ட்...

சொத்துகளைப் பிரித்து முதலீடு செய்யும் அஸெட் அலொகேஷன் உத்தி பற்றி ஓரளவுக்கு மட்டுமே தெரிந்த முதலீட்டாளர், அவரே முதலீடுகளை மேற்கொள்ளும், பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தையின் சூழ்நிலைக்கேற்ப முதலீட்டை மாற்றி அமைக்கவில்லை எனில், இழப்பு ஏற்படும் ரிஸ்க் இருக்கிறது. எனவே, அஸெட் அலொகேஷன்படி, முதலீடு செய்ய விரும்புவர்கள் நிதி ஆலோசகரின் வழிகாட்டல்படி செய்வது சரியாகவும் லாபகரமாகவும் இருக்கும். அல்லது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நடத்தும் மல்ட்டி அஸெட் அலொகேஷன் ஃபண்டுகள் அல்லது டைனமிக் அஸெட் அலொகேஷன் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சரியாக இருக்கும்.

மதிப்பீடுகள் அதிகமாக இருக்கும்போது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் டைனமிக் அஸெட் அலொகேஷன் ஃபண்டில் முதலீடு செய்வது சரியான தேர்வாக இருக்கும். எந்தச் சொத்துப் பிரிவில் எவ்வளவு முதலீடு செய்வது என்பதை முடிவு செய்ய சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் குவான்ட் மாடலைப் (Quant model) பின்பற்றுகிறார்கள். இந்த முறையில், மாறிக்கொண்டிருக்கும் சொத்துப் பிரிவு களின் போக்கைப் பகுப்பாய்வு செய்து சரியான சொத்து ஒதுக்கீட்டு சதவிகிதமானது கம்ப்யூட்டர் மூலம் கணக்கிடப்படுகிறது.

சரியான சொத்து ஒதுக்கீட்டை மேற்கொள்வது மூலம் ஃபண்டின் ஏற்ற, இறக்கத்தைக் குறைப்பதுதான் இந்த ஃபண்டின் பிரதான நோக்கம் ஆகும். உதாரணமாக, பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கிறது; மதிப்பீடு அதிகமாக இருக்கிறது எனில், இந்த மாடலில் நிறுவனப் பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகளில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு குறைக்கப்படுகிறது; கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு அதிகரிக்கப் படுகிறது. அந்த வகையில், பங்குச் சந்தை இறக்கத்தில் முதலீட்டுக் கலவையின் மதிப்பு பாதுகாக்கப்படுகிறது. பங்குச் சந்தை இறக்கத்தில் இருக்கும்போது, மதிப்பீடு மலிவாக இருக்கும்போது பங்குகளில் அதிகமாக முதலீடு செய்யப்படுகிறது.

அஸெட் அலொகேஷன் என்கிற உத்தி பல்வேறு நன்மைகளை அளித்தாலும், சொத்துப் பிரிவுகள் பற்றிய நல்ல புரிதல் இருந்தால்தான், இதில் லாபம் ஈட்ட முடியும். நிபுணத்துவம் கொண்ட மற்றும் போதிய அளவுக்கு இது குறித்த புரிந்துகொள்ளல் மற்றும் திறமைகளைப் பெற்றிருக்கும் நிதி மேலாளர்கள் நிர்வகிக்கும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் டைனமிக் அஸெட் அலொகேஷன் ஃபண்ட் / மல்ட்டி அஸெட் அலொகேஷன் ஃபண்டுகளை முதலீட் டாளர்கள் முதலீட்டுக்குக் கவனிக்கலாம்.

டைனமிக் அஸெட் அலொகேஷன் ஃபண்டுகளில் இனி முதலீடு செய்ய நீங்களும் பரிசீலிக்கலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு