பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற பங்கு சார்ந்த ஃபண்டுகள்..!

சேமிப்பும் முதலீடும்
பிரீமியம் ஸ்டோரி
News
சேமிப்பும் முதலீடும்

சேமிப்பும் முதலீடும் - 19

மியூச்சுவல் ஃபண்டில் கடன் ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது ஈக்விட்டி ஃபண்டுகள் மிகவும் ரிஸ்க்கானவை; மூலதனத்துக்கு அதிக இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், இந்த இழப்பு எல்லாம் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு உட்பட்ட முதலீடுகளுக்குத்தான். அதற்கு மேற்பட்டு, 10 - 15 ஆண்டு வரை நீடிக்கும் ஈக்விட்டி ஃபண்ட் முதலீட்டின்மூலம் சுமார் 12% - 15% வருமானம் பெற வாய்ப்புள்ளது. முதலீட்டுக் காலம் மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட நிலையில்தான் இந்த ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். அதுவும் அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட முதலீட்டாளர்கள்தாம் முதலீடு செய்ய வேண்டும் என்பது பாலபாடம் ஆகும்.

சிவகாசி மணிகண்டன் 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் ஃபண்டுகள்...

ஈக்விட்டி ஃபண்டுகளை லார்ஜ்கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகள் என மூன்று பெரும் பிரிவாக செபி அமைப்பு பிரித்துள்ளது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பின் (Market Capitalization) அடிப்படையில் 1 முதல் 100 இடங்களில் இருக்கும் நிறுவனங்கள் லார்ஜ் கேப் நிறுவனங்கள் எனவும், 101 முதல் 250 வரையில் இருக்கும் நிறுவனங்கள் மிட்கேப் நிறுவனங்கள் எனவும், 251-வது நிறுவனத்துக்கு மேல் உள்ள அனைத்து நிறுவனங்களும் ஸ்மால்கேப் நிறுவனங்கள் ஆகும். இந்த லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் நிறுவனங் களின் பட்டியலை இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபி ஆறு மாதத்துக்கு ஒரு முறை (ஜூன் மற்றும் டிசம்பர்) அதன் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. இதைப் பின்பற்றி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அவற்றின் ஃபண்டுகளில் உள்ள பங்குகளை ஒரு மாத காலத்துக்குள் (தேவை இருக்கும்பட்சத்தில்) மாற்றி அமைக்க வேண்டும் என்பது விதிமுறை ஆகும்.

ஈக்விட்டி ஃபண்ட்: ரிஸ்க்கைக் குறைப்பது எப்படி?

1. மியூச்சுவல் ஃபண்டுகளில் 5, 10, 15, 20 ஆண்டுகள் என நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வது மூலம் ரிஸ்க்கைக் குறைக்க முடியும். மூன்று ஆண்டுகள், ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் ஈக்விட்டி ஃபண்டுகளில் மூலதன இழப்புக்கு வாய்ப்பு குறைவாக உள்ளது. எட்டு அல்லது பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட கால முதலீட்டில் இழப்புக்கு வாய்ப்பில்லை எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2. கடந்த காலங்களில் அதாவது, கடந்த3, 5, 10 ஆண்டுகளில் ஒரு ஈக்விட்டி ஃபண்ட் எப்படி செயல்பட்டிருக்கிறது என்று பார்க்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பங்குச் சந்தை மற்றும் அந்த ஃபண்ட் வகைகளின் சராசரி வருமானத்தைவிட அதிக வருமானம் தந்திருக்கிறது எனில், அந்த ஃபண்டில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைப் பொறுத்தவரை, கடந்த கால வருமான செயல்பாடு எதிர்காலத்தில் உத்தரவாதம் இல்லை என்றாலும், ஃபண்டின் ரிஸ்க் மற்றும் ரிட்டர்ன் எதிர்பார்ப்பைக் கணக்கிட இதை ஓர் அளவீடாக எடுத்துக் கொள்ளலாம்.

3. அடுத்து ஃபண்ட் திட்டத்தை நிர்வகிக்கும் ஃபண்ட் மேனேஜரின் அனுபவத்தை அளவிட வேண்டும். அவர் இதற்குமுன் நிர்வகித்த மற்றும் தற்போது நிர்வகித்துவரும் இதர ஃபண்டுகள் நல்ல லாபம் தந்திருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அந்த ஃபண்டு கள் தொடர்ந்து லாபம் தந்து வரும் பட்சத்தில், இந்த ஃபண்டும் நல்ல வருமானம் தர அதிக வாய்ப்புள்ளது. இந்திய மியூச்சுவல் ஃபண்டை எடுத்துக்கொண்டால், பல ஈக்விட்டி ஃபண்டுகள் 10, 15, 20, 25 ஆண்டுகளாக நல்ல வருமானம் தந்து வருகின்றன. இவை ஆண்டுக்குச் சராசரியாக 12% - 20% வரை வருமானம் தந்துள்ளன.

4. ஈக்விட்டி ஃபண்டைப் பொறுத்தவரை, எப்போதும் மொத்தமாக முதலீடு செய்துவிடக் கூடாது. எஸ்.ஐ.பி முறை யில் முதலீடு செய்துவந்தால், சந்தையின் ஏற்ற இறக்கத்தில் சராசரியாக அதிக யூனிட்டுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற பங்கு சார்ந்த ஃபண்டுகள்..!

ரிஸ்க்குக்கு ஏற்ற ஃபண்டுகள்...

ஈக்விட்டி ஃபண்டைப் பொறுத்தவரை, அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள் லார்ஜ்கேப், ஃபிளெக்ஸிகேப், மல்ட்டிகேப் ஃபண்டுகளிலும், நடுத்தர அளவு ரிஸ்க் எடுப் பவர்கள் லார்ஜ்கேப் ஃபண்ட் & மிட்கேப் ஃபண்டுகளிலும் அதிக ரிஸ்க் எடுப்பவர்கள் மிட்கேப், ஸ்மால்கேப், செக்டோரல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம். முதலீட்டுக் காலம் சுமார் 3 முதல் 5 ஆண்டுகள் என்கிற பட்சத்தில், லார்ஜ்கேப், ஃபிளெக்ஸிகேப், மல்ட்டிகேப் ஃபண்டுகளிலும், சுமார் 5 - 8 ஆண்டுகள் எனில், லார்ஜ் கேப் ஃபண்ட் & மிட்கேப் ஃபண்டுகளிலும் எட்டு ஆண்டு களுக்குமேல் எனில், மிட்கேப், ஸ்மால்கேப், செக்டோரல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.

ஈக்விட்டி ஃபண்ட் வகைகள்...

செபியானது ஈக்விட்டி, ஃபண்டுகளை 11 துணைப் பிரிவுக்குள் அடக்கியுள்ளது.

1. ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட்: நிறுவனப் பங்குகளில் குறைந்த பட்சம் 65% முதலீடு செய்வது ஃபிளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். இதன் சிறப்பு லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகளில் எதில் வேண்டுமானாலும் எவ்வளவு சதவிகிதம் வேண்டுமானாலும் ஃபண்ட் மேனேஜர் முதலீடு செய்துகொள்ளலாம். இதனால் ரிஸ்க் குறைந்து, அதிக வருமானம் கிடைக்கிறது.

2. மல்ட்டிகேப் ஃபண்ட்: இதில் முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்படும் பனம், லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் தலா 25% எனப் பிரித்து முதலீடு செய்யப்படும். பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த ஆவணங்களில் குறைந்தபட்ச முதலீடு 75 சதவிகிதமாக இருக்க வேண்டும். பல்துறை மற்றும் அனைத்து மார்க்கெட் கேப்பிடலைசேஷன் கொண்ட பங்குகளில் பிரித்து முதலீடு செய் வதால், இந்த ஃபண்டில் ரிஸ்க் பரவலாகி நீண்ட காலத்தில் அதிக வருமானம் தருவதாக இருக்கும்.

3. லார்ஜ்கேப் ஃபண்ட்: லார்ஜ்கேப் பங்குகள் மற்றும் அது சார்ந்த ஆவணங்களில் குறைந்தபட்ச முதலீடு 80 சத விகிதமாக இருக்க வேண்டும். இந்த ஃபண்டில் மிக அதிக வருமானம் கிடைக்காது என்றா லும் அதிக இழப்பும் இருக்காது.

4. லார்ஜ்கேப் & மிட்கேப் ஃபண்ட்: இந்த ஃபண்டில் லார்ஜ் கேப், மிட்கேப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. லார்ஜ்கேப் பங்குகள் மற்றும் மிட்கேப் நிறுவனப் பங்குகள் மற்றும் அது சார்ந்த ஆவணங் களில் குறைந்தபட்ச முதலீடு தலா 35 சதவிகிதமாக இருக்க வேண்டும். இந்த ஃபண்டில் மல்ட்டிகேப் ஃபண்ட் போன்று அதிக வருமானம் கிடைக்கலாம்.

5. மிட்கேப் ஃபண்ட்: இந்த ஃபண்டில் மிட்கேப் நிறுவனப் பங்குகள் மற்றும் அது சார்ந்த ஆவணங்களில் குறைந்தபட்சம் 65% தொகை முதலீடு செய்யப்படு கிறது. மற்றும் அதிக ரிஸ்க் இந்த ஃபண்ட் முதலீட்டில் இருக்கிறது.

6. ஸ்மால்கேப் ஃபண்ட்: ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகள் மற்றும் அது சார்ந்த ஆவணங் களில் குறைந்தபட்ச முதலீடு 65 சதவிகிதமாக இருக்க வேண்டும். மிக அதிக ரிஸ்க் இருக்கிறது. அதேநேரத்தில் மிக அதிக வருமானமும் கொடுக்கும்.

7. டிவிடெண்ட் யீல்டு ஃபண்ட்: அதிக டிவிடெண்ட் வழங்கும் பங்குகளில் குறைந்த பட்சம் 65% முதலீடு செய்யப் படுகிறது. ரிஸ்க் ஓரளவுக்குக் குறைவு, வருமானம் ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட ஓரிரு சதவிகிதம் அதிகம்.

நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற பங்கு சார்ந்த ஃபண்டுகள்..!

8. வேல்யூ ஃபண்ட் / கான்ட்ரா ஃபண்ட்: மதிப்பு (Value) அடிப் படையிலான பங்குகள் மற்றும் அது சார்ந்த ஆவணங்களில் குறைந்தபட்சம் 65% முதலீடு செய்யப்படுகிறது. இப்போது மலிவான விலையில் வர்த்தகமாகிவரும் பங்கு, எதிர்காலத்தில் நல்ல லாபம் தரும் என்கிற எதிர்பார்ப்பில் முதலீடு செய்வ தாகும். குறுகிய காலத்தில் அதிக ரிஸ்க் என்றாலும், நீண்ட காலத்தில் அதிக லாபம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

கான்ட்ரா ஃபண்ட்: முரண்பாட்டு (Contrarian) முதலீட்டு பாணியில் பங்குகள் மற்றும் அது சார்ந்த ஆவணங்களில் குறைந்த பட்சம் 65% முதலீடு செய்யப்படு கிறது. அனைவரும் ஒரு திசையில் முதலீடு செய்தால், அதற்கு எதிராக முதலீடு செய்வது இந்த ஃபண்டின் பாணியாகும். ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வேல்யூ ஃபண்ட் அல்லது கான்ட்ரா ஃபண்ட் இதில் ஏதாவது ஒன்றை மட்டுமே வெளியிட செபி அனுமதிக்கிறது.

9. ஃபோகஸ்ட் ஃபண்ட்: இந்த ஃபண்டில் லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் குறைந்தது 65% முதலீடு செய்ய வேண்டும். ஆனால், முதலீடு செய்யும் பங்குகளின் எண்ணிக்கை 25 - 30 என்பதாக இருக்கும். அதிக ரிஸ்க் மற்றும் அதிக வருமானம் எதிர்பார்க்கலாம்.

10. தீமெட்டிக் ஃபண்டுகள் / செக்டோரல் ஃபண்டுகள்: ஏதாவது ஒரு கருத்தின் (Theme) அடிப்படையில் பங்குகளை தேர்வு செய்து, 80% முதலீடு செய்வதே தீமெட்டிக் ஃபண்ட். இதில் மிக அதிக ரிஸ்க் இருக்கிறது. எனவே, ஒருவரின் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் 5 - 10% இருந்தால் போதும்.

செக்டோரல் ஃபண்டுகள்: ஒரு குறிப்பிட்ட துறையைச் சார்ந்த பங்குகளில் மட்டுமே 80% முதலீடு செய்வது இந்த ஃபண்டின் பணியாகும். துறை சார்ந்த நிறுவனங்களில் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்வதால் ரிஸ்க் மிக அதிகம். வருமான வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இந்த ஃபண்டிலும் மொத்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் 5 - 10 சதவிகிதத்துக்கு மேல் இருக்கக் கூடாது.

11. பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டம்: பங்குகள் மற்றும் அது சார்ந்த ஆவணங்களில் குறைந்தபட்சம் 80% தொகை முதலீடு செய்யப்படும். பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டம் இ.எல்.எஸ்.எஸ் (ELSS - Equity Linked Savings Scheme) என்பது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் ஒரு வகையாகும். இதில் முதலீடு செய்தால், 80சி பிரிவில் நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்தால், வரிச் சலுகை கிடைக்கும். இந்த ஃபண்ட் முதலீட்டுக்கு மூன்று ஆண்டு ‘லாக் இன் பீரியட்’ உள்ளது.

இ.எல்.எஸ்.எஸ் தவிர, மீதமுள்ள 11 ஃபண்டுகளில் எப்போது வேண்டுமானலும் முதலீடு செய்யவும், யூனிட்டு களை விற்று பணமாக்கும் வசதியுள்ள ஓப்பன் எண்டட் ஃபண்ட் திட்டங்கள் ஆகும்.

(முதலீடு செய்வோம்)