மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்றாலே அது அதிக ரிஸ்க்கானது என பெரும்பாலானோர் தவறாக நினைக்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்டில் பல்வேறு வகைகள் உள்ளன. முதலீட்டுத் தன்மைக்கேற்பவே ரிஸ்க் இருக்கிறது. அதிகமான வருமானம் வேண்டும் என்பவர்கள் அதிக ரிஸ்க் உள்ள திட்டங்களையும், குறைந்த அளவு வருமானம் கிடைத்தாலும், ரிஸ்க் இல்லாத திட்டங்களே வேண்டும் என்கிறவர்களுக்கு ஏற்ப பல திட்டங்களை மியூச்சுவல் ஃபண்டில் இருக்கவே செய்கின்றன.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மிகக் குறைவான ரிஸ்க் கொண்ட திட்டம், லிக்விட் ஃபண்ட் (Liquid Fund) ஆகும். அதிக தரக்குறியீடு கொண்ட கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால், இந்த ஃபண்டில் ரிஸ்க் குறைவாக இருக்கிறது. இதன் பெயருக்கேற்ப இதை விரைவாகப் பணமாக்க முடியும்.

செபி வரையறை...
இந்த ஃபண்டில், முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதி, 91 நாள்கள் வரை முதிர்வு கொண்ட கடன் சந்தை (Debt Market) மற்றும் நிதிச் சந்தை ஆவணங்களில் (Money Market instruments) முதலீடு செய்யப்படுவது லிக்விட் ஃபண்ட் என்பது செபி அமைப்பின் வரையறை ஆகும்.
2021 டிசம்பர் நிலவரப்படி, லிக்விட் ஃபண்ட் பிரிவில் சுமார் ரூ.6,79,408 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் தொகையில் கிட்டத்தட்ட 18% ஆகும். இந்த ஃபண்டில் ரூ.2 லட்சத்துக்குமேல் முதலீடு செய்திருக்கும் சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 23,21,053 ஆகும். ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக முதலீடு செய்திருக்கும் மிகக் சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எளிதில் முதலீடு, பணம் எடுக்கும் வசதி...
லிக்விட் ஃபண்ட் ஓப்பன் எண்டட் ஃபண்ட் ஆகும். அதாவது, இந்த ஃபண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்; எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இதற்கு முன்னால் இந்த ஃபண்டில் லாக்இன் பீரியட் எதுவும் இல்லாமல் இருந்தது. இதனால், மிகப் பெரிய முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கான பணத்தை இதில் முதலீடு செய்துவிட்டு, திடீரென மொத்தப் பணத்தை எடுக்க ஆரம்பித்தார்கள். இதனால், இதன் என்.ஏ.வி மதிப்பு திடீரென அதிகமாகக் குறைய ஆரம்பித்தது; சிறு முதலீட்டாளர்களும் பாதிக்கப்பட்டார்கள்.
இதைத் தடுக்கும் விதமாக இந்த வகை ஃபண்டுகளில் ஆறு நாள்களுக்குள் வெளி யேறினால் வெளியேறும் கட்டணம் கட்ட வேண்டும் என செபி அமைப்பு விதிமுறை கொண்டுவந்தது. இந்தக் கட்டணம் மிக அதிகம் இல்லை. மிகக் குறைவுதான். முதலீடு செய்து மறுநாள் எடுத்தால் 0.0070% அதாவது, ரூ.1 லட்சத்துக்கு 7 ரூபாயாக வெளியேறும் கட்டணம் இருக்கிறது.
முதலீட்டு நாள்கள் அதிகரிக்க அதிகரிக்க வெளியேறும் கட்டணம் குறையும். ஆறாவது நாள் பணத்தை எடுத்தால் 0.0045% அதாவது, ரூ.1 லட்சத்துக்கு 4.5 ரூபாய்தான் வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டும்.
லிக்விட் ஃபண்டின் பயன்பாடு...
‘கையில் இருக்கும் பணத்தை, ஒரு வாரம், பத்து நாள், இருபது நாள், ஒரு மாதம் என ஏதாவது ஒரு ரிஸ்க் இல்லாத மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து கொஞ்சம் வருமானம் பார்க்க முடியுமா’ என்று கேட்பவர்களுக்கு ஏற்றதுதான் இந்த லிக்விட் ஃபண்ட். இந்த ஃபண்டில் 7, 10, 15 நாள்களுக்குக் கூட பணத்தை முதலீடு செய்து லாபம் பார்க்கலாம்.
குறுகிய காலத் தேவைக்குப் பணத்தை முதலீடு செய்து வைக்க, அவசரகாலத் தேவைக்கு எமெர்ஜென்சி ஃபண்ட் உருவாக்க இந்த லிக்விட் ஃபண்ட் உதவும்.

பணமாக்குவது மிக எளிது..!
மற்ற மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்த பணத்தை எடுக்க வேண்டும் எனில், ரிடம்ஷன் ஃபார்மில் கையெழுத்து போட்டு கொடுத்த தேதியிலிருந்து 2 முதல் 3 வணிக நாள்களாவது (Business Days) ஆகும். ஆனால், இந்த லிக்விட் ஃபண்டில் இன்று காலை 11 மணிக்குள் எழுதிக் கொடுத்தால், நாளை காலை 11 மணிக்குள் வங்கிக் கணக்குக்குப் பணம் வந்துவிடும்.
நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் போன்ற ஓரிரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் கள், லிக்விட் ஃபண்ட் முதலீட் டாளர்களுக்கு ஹெச்.டி.எஃப்.சி போன்ற முன்னணி வங்கி களுடன் இணைந்து ஏ.டி.எம் கார்டு தந்துள்ளன. இதைக் கொண்டு மொத்த தொகையில் பாதியை எப்போது வேண்டு மானலும் தேவைக்கு ஏ.டி.எம் மூலம் எடுத்துக் கொள்ளலாம். மீதித் தொகையை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத் திடம் எழுதிக் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இந்த கார்டைப் பயன்படுத்தி ஷாப்பிங்க்கும் செய்ய முடியும்.
ஆன்லைன் கணக்கு இருக்கும் பட்சத்தில், லிக்விட் ஃபண்டி லிருந்து முதலீட்டாளரின் வங்கிக் கணக்குக்கு மொத்த தொகையையும் சுமார் 30 நிமிடத்துக்குள் மாற்றும் வசதி இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கணக்கு எண்ணான ஃபோலியோ இருந்தால், தொடர் புடைய மியூச்சுவல் ஃபண்டின் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் கணக்கை முதலீட் டாளரே உருவாக்கிக் கொள்ள முடியும்.
ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட், நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்டவை மொபைல் செயலி (App) மூலம் நொடியில் லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்யும் வசதி மற்றும் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கின்றன.
குறைந்தபட்ச முதலீடு ரூ.100
18 வயதுக்கு மேற்பட்ட இந்தி யர்கள் இதில் முதலீடு செய்யலாம். லிக்விட் ஃபண்டில் குறைந்தபட்ச முதலீடு ரூ.100-லிருந்து ஆரம்பிக்கிறது.
இந்த லிக்விட் ஃபண்ட் திட்டத்தை அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் நடத்தி வருகின்றன. அவற்றின் கிளை அலுவலகங்களில், விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து கொடுத்து முதலீட்டை ஆரம்பிக் கலாம். நிதி ஆலோசகர், மியூச்சுவல் ஃபண்ட் முகவர்கள் மூலமும் முதலீட்டை செய்யலாம்.

வருமானம் எவ்வளவு?
வங்கி சேமிப்புக் கணக்கைவிட சிறிது அதிக வருமானம் கொடுப்ப தாக இந்த லிக்விட் ஃபண்ட் இருக்கிறது. தற்போதைய நிலையில், இந்த ஃபண்ட் பிரிவு சராசரி வருமானம் ஆண்டுக்கு சுமார் 3.26 சதவிகிதமாக இருக் கிறது. ஆனால், ஓராண்டு காலத் தில் 5 டாப் ஃபண்டுகளின் வருமானம் சுமார் 3.5% முதல் 4.25% வரை இருக்கிறது. இது மூன்று ஆண்டு காலத்தில் 4.6% முதல் 5.5% ஆகவும், ஐந்து ஆண்டுக் காலத்தில் 5.6% முதல் 6.10 சதவிகிதமாகவும் இருக்கிறது.
வங்கி சேமிப்புக் கணக்குக்கான வட்டி பொதுவாக, 2.7% முதல் 3 சதவிகிதமாக இருக்கிறது. மூன்று ஆண்டுக்கு உட்பட்ட குறுகிய காலத்தில் கடன் ஃபண்ட் வகையான லிக்விட் ஃபண்ட் மற்றும் வங்கி சேமிப்புக் கணக்குக்கான வருமான வரி ஒரே போல் இருப்பதால், லிக்விட் ஃபண்ட் மூலம் அதிக வருமானம் கிடைக்கும்.
இதுவே அவசரகாலத் தேவை எதற்காகவும் லிக்விட் ஃபண்டை மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்தவில்லை. அதற்கு மேற்பட்ட காலத்தில் பயன்படுத்தும்பட்சத்தில், அந்த நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வந்தாலும் பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20% வரி கட்டினால் போதும்.
அந்த வகையில் நீண்ட காலத்திலும் சேமிப்புக் கணக்கை விட லிக்விட் ஃபண்ட் வருமானம் அதிகமாகவே இருக்கும். இந்த ஃபண்டில் செய்யப்படும் முதலீடு, வங்கிச் சேமிப்புக் கணக்குக்குச் சிறந்த மாற்றாகப் பார்க்கப்படுகிறது.
முக்கியமான மூன்று சிறப்பம்சங்கள் அம்சங்கள்
* லிக்விட் ஃபண்ட் திட்டத்தில் எப்போது வேண்டு மானாலும் முதலீடு செய்யலாம்; * ஆறு நாள்களுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் திரும்ப எடுக்க முடியும்; * முதலீடு மீதான ரிஸ்க் மிகக் குறைவு.
குறுகிய காலத்துக்குத் தேவைப்படும் பணத்தை, இந்த லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்து வைத்து, அவசரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதோடு சிறிது கூடுதல் லாபமும் பெற முடியும்!
(முதலீடு செய்வோம்)