Published:Updated:

கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள்... கவனித்து செயல்பட்டால் கூடுதல் லாபம்..!

சேமிப்பும் முதலீடும்
பிரீமியம் ஸ்டோரி
News
சேமிப்பும் முதலீடும்

சேமிப்பும் முதலீடும் - 7

வங்கிகளின் டெபாசிட்டுகள், தபால் அலுவலக டெபாசிட்டுகள் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் சொன்னீர்கள். அதேபோல, கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் பற்றி சொன்னால் உதவியாக இருக்கும்’’ என தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த கவிதா என்கிற வாசகி கேட்டிருக்கிறார். அவரைப்போல பல முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். எனவே, இந்த வாரம் கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களின் சாதக, பாதகங்கள் பற்றிப் பார்ப்போம்.

சிவகாசி மணிகண்டன் 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

வங்கி, தபால் அலுவலக ஃபிக்ஸட் டெபாசிட் (எஃப்.டி) போல, கம்பெனி எஃப்.டி-யும் ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தைப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியிட்டு, பொது மக்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இதற்கான வட்டி விகிதம் எஃப்.டி-யின் முதிர்வுக் காலத்தைப் பொறுத்து இருக்கிறது. இந்த கம்பெனி டெபாசிட்டுகள், நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.

மூலதனத்துக்குப் பாதுகாப்பு இல்லை...

வங்கி டெபாசிட்டுக்கு ரூ.5 லட்சம் வரை (அசல் மற்றும் வட்டி) உத்தரவாதம் உண்டு. தபால் அலுவலக எஃப்.டி-க்கு முழுத் தொகைக்கும் மத்திய அரசின் உத்தரவாதம் உண்டு. கம்பெனி எஃப்.டி-க்கு எந்த உத்தரவாதமும் கிடையாது என்பதால், ரிஸ்க் அதிகம். நிறுவனம், டெபாசிட் பணம் மற்றும் அதற்கான வட்டியை வழங்கவில்லை அல்லது சரியான தேதியில் கொடுக்கவில்லை எனில், சிக்கல் உருவாகும். மேலும், மூலதனம் மற்றும் வட்டி கொடுப்பது என்பது ஃபிக்ஸட் டெபாசிட்டை வெளியிடும் கம்பெனி மட்டுமே உத்தரவாதமாகும். கம்பெனி எஃப்.டி-க்கான வட்டி, வங்கி மற்றும் தபால் அலுவலக எஃப்.டி-யைவிட சற்று அதிகமாக இருக்கும். அந்த வகையில், பணவீக்க விகிதம் அல்லது அதைவிட சற்று அதிக வருமானம் கிடைக்கக்கூடும்.

முதலீட்டு நோக்கம்...

வங்கி எஃப்.டி-யைவிட சற்றுக் கூடுதல் வருமானம் பெற வேண்டும் என்பதற்காகத்தான் கம்பெனி எஃப்.டி-யில் பலரும் முதலீடு செய்கிறார்கள். மேலும், இவற்றின் மூலம் மாதம் அல்லது காலாண்டு அல்லது அரையாண்டு அல்லது ஆண்டுக்கொரு முறை தொடர் வட்டி வருமானம் பெற முடியும். முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத, ஓராண்டு முதல் மூன்றாண்டுகள் வரை முதலீட்டுக் காலத்தைக் கொண்டவர்கள் சற்றுக் கூடுதல் வருமானத்துக்காக கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்யலாம்.

ஒருவர் தனது மொத்த முதலீட்டுத் தொகையில் சுமார் 20 சதவிகிதத்தை மட்டுமே இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட இடைவெளியில் மொத்த முதலீடு மேற் கொள்பவர்களுக்கு ஏற்ற முதலீடாகும். இந்தியக் குடிமக்கள் அனைவரும் கம்பெனி எஃப்.டி-யில் முதலீடு செய்யலாம். சில குறிப்பிட்ட கம்பெனிகளின் டெபாசிட்டுகளில் மட்டுமே வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்ய முடியும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவர்களாவே முதலீட்டை மேற்கொள்ள முடியும். மைனர்கள், பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் முதலீடு செய்யலாம்.

கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள்... கவனித்து செயல்பட்டால் கூடுதல்  லாபம்..!

எவ்வளவு முதலீடு..?

குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 தொடங்கி லட்சங்களில் செல்கிறது. தனிநபர், இருவர் சேர்ந்து, இந்துக்கூட்டுக் குடும்பத்தினர் முதலீட்டை மேற்கொள்ளலாம். பெரும் பாலான கம்பெனிகளின் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் காகித விண்ணப்பப் படிவங் களைப் பூர்த்தி செய்து கொடுத்து முதலீடு செய்ய வேண்டியிருக்கும். சில கம்பெனிகளில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்ய முடியும்.

முதலீடு செய்ய ஆதார் மற்றும் பான் எண்கள் மற்றும் அவற்றின் ஆவணங்கள் தேவைப்படும். ரொக்கப்பணம், காசோலை, கேட்புக் காசோலை, ஆன்லைன் பரிவர்த்தனை என ஏதாவது ஒரு வழியில் முதலீடு செய்யலாம்.

தற்போதைய நிலையில் கம்பெனி எஃப்.டி-களுக்கு வழங்கப்படும் வட்டி 6% தொடங்கி 7.5% வரை செல்கிறது.

யாருக்கு ஏற்றதல்ல..?

மூன்றாண்டுகளுக்குமேல் நிதி இலக்கைக் கொண்டவர்கள் மற்றும் நீண்ட காலத்தில் செல்வம் சேர்க்க விரும்புகிற வர்களுக்கு கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு ஏற்றதல்ல. ஆனால், குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட இடைவெளியில் முதலீடு செய்யும் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு இது ஏற்றதல்ல.

மாற்று முதலீட்டுத் திட்டங்கள்...

தபால் அலுவலக டைம் டெபாசிட்டுகள் (வட்டி5.5% முதல் 6.7% வரை), தபால் அலுவலகச் சேமிப்புச் சான்றிதழ் (வட்டி 6.8%), வங்கி டெபாசிட்டுகள் (வட்டி 5.5 - 6%), கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் (வருமான எதிர்பார்ப்பு 8 - 9%) போன்றவை கம்பெனி டெபாசிட்டுக்கு மாற்றாக இருக்கின்றன.

வருமான வரி...

கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும். பொதுவாக, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் என்கிறபோது வட்டி வருமானம் நிதி ஆண்டில் 40,000 ரூபாயைத் தாண்டும்போதுதான் பொதுப் பிரிவினருக்கு டி.டி.எஸ் பிடிக்கப்படும். இந்த வரம்பு மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 ஆக இருக்கிறது.

அதேநேரத்தில், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் என்கிறபோது, நிதி ஆண்டில் வட்டி வருமானம் ரூ.5,000-க்கு மேற்படும்போது மூலத்தில் வரிப் பிடித்தம் (டி.டி.எஸ்) செய்வார்கள். இது 60 வயதுக்கு உட்பட்ட பொதுப் பிரிவினர் மற்றும் மூத்த குடிமக்கள் அனைவருக்குமான விதிமுறையாகும். பான் நம்பர் தந்திருக்கும்பட்சத்தில் 10% டி.டி.எஸ் பிடிக்கப்படும்; அதைத் தரவில்லை எனில், 20% டி.டி.எஸ் பிடிக்கப்படும். அடிப்படை வரி வரம்புக்குக்கீழே இருப்பவர்கள் டி.டி.எஸ் பிடிப்பதைத் தவிர்க்க அதற்குரிய படிவத்தை முதலீடு செய்யும்போதே பூர்த்தி செய்து தர வேண்டும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

1. முதிர்வுக் காலத்துக்கு முன் டெபாசிட் பணத்தை எடுத்துக்கொள்ள கம்பெனிகள் அனுமதிக்கின்றன. ஆனால், அதற்கு அபராதம் விதிக்கின்றன. இந்த அபராதம் என்பது வங்கிகள் ஃபிக்ஸட் டெபா சிட்டுகளை முன்கூட்டியே விதிக்கும் அபராதத்தை விட அதிகமாக இருக்கும். எனவே, முதலீடு செய்யும் போதே முதலீட்டுத் தொகையைப் பிரித்து முதலீடு செய்வது அல்லது பல்வேறு முதிர்வுக் காலத்தைத் தேர்வு செய்வதன்மூலம் அபராதத்தைத் தவிர்க்கலாம்.

2. கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு கிரைசில், கேர், இக்ரா போன்ற நிறுவனங்களின் தரக் குறியீட்டைப் பார்த்து முதலீடு செய்வது அவசியம்.

3. முதலீட்டுக்கு நாமினியை நியமிக்கத் தவறாதீர்கள்.

4. நிதி நெருக்கடியால் நிறுவனம் திவால் ஆகிறது எனில், பணத்தைத் திரும்பப் பெறுவது கஷ்டம். எனவே, கூடுதல் வட்டி கிடைக்கிறது என்பதற்காகக் கண்ணை மூடிக் கொண்டு அனைத்து கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளிலும் முதலீடு செய்யக் கூடாது. பாரம்பர்யமான, நல்ல தரக் குறியீடு பெற்றிருக்கும் நிறுவனங்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டு களைத் தேர்வு செய்துதான் முதலீடு செய்ய வேண்டும்.

5. கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் மீதான ரிஸ்க்கைக் குறைக்க, பல்வேறு கம்பெனிகளில் முதலீட்டைப் பிரித்து மேற்கொள்வது அவசியமாகும்!