Published:Updated:

‘‘செல்போன் வாங்குவதில் காட்டும் கவனம் பங்கு வாங்கும்போதும் இருக்கட்டும்..!’’

முதலீட்டு விழிப்புணர்வு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீட்டு விழிப்புணர்வு

முதலீட்டு விழிப்புணர்வு

கொரோனா நோய்த்தொற்று ஓரளவுக்கு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் விழிப்புணர்வுக் கூட்டம் நேரடியாக நடக்கத் தொடங்கிவிட்டன. இதில் முதல் நிகழ்ச்சியாக செபியின் நிகழ்ச்சி நடந்திருப்பது ஆரோக்கிய மான விஷயம்.

மத்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி செபி, பி.எஸ்.இ மற்றும் சி.டி.எஸ்.எல் அமைப்பு இணைந்து நடத்திய `75 அசாதி கா அம்ரித் மஹோத்ஸவ்’ (75 azadi ka amrit mahotsav) நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடப்பது இதுவே முதல்முறையாகும்.

‘‘செல்போன் வாங்குவதில் காட்டும் கவனம் பங்கு வாங்கும்போதும் இருக்கட்டும்..!’’

முழுமையாகத் தெரிந்துகொண்டு முதலீடு செய்யுங்கள்...

இந்த நிகழ்ச்சியில் முதலில் பேசிய குஷ்ரோ புல்ஷாரா, ``கொரோனாவுக்குப் பிறகு, இந்திய பங்குச் சந்தைகளின் போக்கு சிறப்பாக இருக்கிறது. சில்லறை முதலீட்டாளர்களின் வருகை அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக, இளைய தலைமுறையினர் இந்திய பங்குச் சந்தைகளில் ஆர்வத்துடன் முதலீடு செய்து வருவது, வரவேற்கத்தக்க விஷயம். அதே சமயம், பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முன், பங்குச் சந்தை குறித்த புரிந்து கொள்ளலும், அதைப் பற்றிய தெளிவும் அவர்களுக்கு இருப்பதும் அவசியமாகும்.

ஏனெனில், பங்குச் சந்தை முதலீட்டைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டால் தான், அதில் ஒரு முதலீட்டாளராக அதிக லாபம் பார்க்க முடியும். அதுமட்டுமல்லாமல், பங்குச் சந்தை முதலீடு பற்றி விழிப்புணர்வுடன் இருக்கும் முதலீட்டாளர்கள்தான் பாதுகாப் பான முதலீட்டாளர்கள் என்பதை அனைவரும் கவனத்தில்கொள்வது அவசியம்” என்றார் தெளிவாக.

தமிழகத்தில் 40 லட்சம் டீமேட் அக்கவுன்டுகள்...

இவரைத் தொடர்ந்து பேசிய செபி அமைப்பின் முதன்மை பொது மேலாளர் என்.ஹரிஹரன், ``இன்றைய நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் 75 லட்சம் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் (பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ இரண்டையும் சேர்த்து) இருக்கிறார்கள். ஆகஸ்ட் 21, 2021-ம் தேதி நிலவரப்படி, 40 லட்சத்துக்கும் மேல் டீமேட் கணக்குகள் இருக்கின்றன. இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில், அண்மைக் காலத்தில் புதிய முதலீட்டாளர்களின் வருகை அபரிமிதமாக இருக்கிறது.

ஒரு ஸ்மார்ட்போனை வாங்குகிறோம் எனில், அதன் விலையில் ஆரம்பித்து, அதிலுள்ள தொழில்நுட்ப வசதிகள் என அனைத்தையும் ஆராய்ந்து, திருப்தி எனில் மட்டும்தானே வாங்குவோம். அதேபோல் தான், ஒரு நிறுவனத்தின் பங்கைத் தேர்வு செய்வதும். தேர்வு செய்யும் நிறுவனத்தின் பின்புலன், வரவு செலவு விவரங்கள், நிகழ்கால செயல்பாடுகள் போன்ற விஷயங்களை அலசி ஆராய்ந்து, அந்தப் பங்கில் முதலீடு செய்ய வேண்டும். நண்பர்கள் சொல்கிறார்கள், உறவினர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக வெல்லாம் பங்குகளைத் தேர்வு செய்யக் கூடாது. பங்குச் சந்தை பற்றிய முழுமையான புரிந்துகொள்ளல் எப்போது ஏற்படுகிறதோ, அப்போது முதலீடு செய்யுங்கள். அதே சமயம், அந்த முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருமானத்தின் மீது நியாயமான எதிர்பார்ப்பு களை வையுங்கள். பேராசைப்பட வேண்டாம்” என்றார் அவர்.

‘‘செல்போன் வாங்குவதில் காட்டும் கவனம் பங்கு வாங்கும்போதும் இருக்கட்டும்..!’’

மனைவியுடன் கலந்தாலோசியுங்கள்...

செபி அமைப்பின் முழுநேர உறுப்பினர்களில் (Whole Time Member) ஒருவரான ஜி.மகாலிங்கம், ``கடந்த ஓராண்டுக் காலமாக ஐ.பி.ஓ சந்தை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டிருக்கிறது.

குறிப்பாக, நடப்பு ஆண்டில் மிக முக்கியமான நிறுவனங்கள் சந்தையில் ஐ.பி.ஓ மூலம் பங்குகளை வெளியிட்டிருக்கின்றன. அவற்றில் பல நிறுவனங்கள் மிகவும் பரிட்சயமானவை என்றாலும்கூட, அந்த நிறுவனத்தின் டி.ஆர்.ஹெச்.பி (Draft red herring prospectus - DRHP) ஆவணங்களை முதலீட்டாளர்கள் படித்துப் பார்ப்பது அவசியம்.

சுமார் 300 - 400 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணங்களை முதலீட்டாளர்களால் முழுமையாகப் படிக்க முடியவில்லை என்றாலும்கூட, ஆறு முதல் ஏழு பக்கங்கள் கொண்ட ரிஸ்க் ஃபேக்டர் விஷயங்களைப் படிக்க வேண்டியது அவசியம் ஆகும். அப்போதுதான் ஐ.பி.ஓ வெளியிடும் நிறுவனத்தில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா என்பதை முதலீட் டாளர்களால் முடிவு செய்ய முடியும்.

முதலீட்டாளர்களில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு, ஆலோசனைகளின் பேரில் அப்படியே முதலீடு செய்வது. முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன், குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் ஒதுக்கி, அது பற்றிச் சிந்தியுங்கள். முதலீட்டாளர்களில் பலர், தங்களின் குடும்ப உறுப்பினர் களிடம்கூட முதலீடு சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில்லை. இது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும். பங்குச் சந்தை முதலீடு சார்ந்த நடவடிக்கைகளை மனைவியிடம் கலந்தாலோசியுங்கள்.

அவர்கள் சொல்லும் ஆலோசனைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை, மனைவியேகூட, உங்களுடைய முதலீட்டு ஆலோசகராக மாறலாம். ஏனெனில், ஆண்களைவிட பெண்களுக்கு சிறந்த முதலீட்டு அறிவு இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதே போல, நாமினி நியமிக்கும் விஷயத்திலும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார் தெளிவாக.

இனி பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் என்னவெல்லாம் அவசியம் செய்ய வேண்டும், என்ன எல்லாம் செய்யக் கூடாது என்பது குறித்து இந்த முதலீட்டாளர் விழிப்புணர்வுக் கூட்டத்தில் விளக்கமாக எடுத்துச் சொல்லப்பட்டது. இது மாதிரியான விழிப்புணர்வுக் கூட்டம் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்பதே முதலீட்டாளர்களின் கோரிக்கை!