Published:Updated:

‘‘15 ஆண்டு முதலீடு செய்தேன்... 45 வயதில் ஓய்வு பெற்றேன்..!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மகன் ஆகாஷ், மனைவி சித்ராவுடன் பிரகாஷ் ராமஸ்வாமி
மகன் ஆகாஷ், மனைவி சித்ராவுடன் பிரகாஷ் ராமஸ்வாமி

சூப்பர் இன்வெஸ்டார் - முதலீட்டு அனுபவம்

பிரீமியம் ஸ்டோரி

நம் வாழ்க்கையில் சீக்கிரம் ஓய்வு பெற வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உண்டு. 30 வயதில் முதலீட்டைத் தொடங்கியதன்மூலம், 45 வயதில் ஓய்வு பெற்று, சென்னையை அடுத்துள்ள பள்ளிக் கரணையில் தனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார் பிரகாஷ் ராமஸ்வாமி. அவரால் எப்படி இதைச் செய்ய முடிந்தது என்று அவரிடமே கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘மதுரைதான் என் சொந்த ஊர். பள்ளிப் படிப்பை முடித்ததும், சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படித்தேன். என் அப்பா வணிக வரித் துறையில் வேலை பார்த்தார். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும் நடுத்தரக் குடும்பம் எங்களுடையது. வங்கி எஃப்.டி, போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள், எல்.ஐ.சி எண்டோவ்மென்ட் பாலிசி, தங்கம் வாங்குவது போன்றவைதான் எங்களுக்குத் தெரிந்த முதலீடு.

நான் கல்லூரியில் படித்து முடித்தவுடன், டி.வி.எஸ் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் டிபார்ட் மென்ட்டில் வேலைக்குச் சேர்ந்தேன். சில ஆண்டுகள் அங்கு பணிபுரிந்த நிலையில், என் திருமணம் நடந்தது. 96-ல் டி.சி.எஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்ததும், சென்னை வந்தேன். 97-ல் குழந்தை பிறந்த பின், டி.சி.எஸ் மூலமாகவே அமெரிக்காவுக்குச் சென்று வேலை பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.

அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் வேளச்சேரியில் ஒரு ஃபிளாட் வாங்கினேன். வசிக்க ஒரு வீடு கிடைத்துவிட்டது. அடுத்து என்ன என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, வாழ்க்கையில் சீக்கிரம் ஓய்வு பெற வேண்டும் என்கிற எண்ணமே என் மனதில் இருந்தது. காரணம், ஐ.டி வேலை என்பது எப்போதும் டென்ஷன் நிறைந்தது. இந்த வேலையைக் காலத்துக்கும் செய்துகொண்டிருக்க முடியாது.

மகன் ஆகாஷ், மனைவி சித்ராவுடன் பிரகாஷ் ராமஸ்வாமி
மகன் ஆகாஷ், மனைவி சித்ராவுடன் பிரகாஷ் ராமஸ்வாமி

என் ஒரே மகன் ஆகாஷ், செஸ் விளையாட்டில் மிகுந்த ஆர்வமும் திறமையும் கொண்டிருந்தான். அவனைப் பல்வேறு இடங்களில் நடக்கும் போட்டிக்கு அழைத்துச் சென்றுவருவதற்கான செலவைச் செய்ய வேண்டியிருந்தது. தவிர, எனக்குப் புதிய கேட்ஜெட்டுகள் வாங்கிப் பயன்படுத்துவதிலும் ஆர்வம் உண்டு. தவிர, நான் திருத்தலப் பயணப் பிரியன். குறிப்பாக, இந்தியாவில் உள்ள கோயில்கள், புனிதத்தலங் களுக்கு நேரில் சென்று வர விரும்புவேன்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு, சம்பளத்தில் ஒரு பகுதியையாவது முறையாக முதலீடு செய்து, 50 வயதில் ரிட்டயர்டு ஆவதுதான் என்று முடிவு செய்திருந்தேன். இந்த நிலையில், காக்னிசன்ட் நிறுவனத்துக்கு மாறினேன். ஆனால், என் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழி எனக்குத் தெரியவில்லை.

2003-ல் சென்னை டிரேட் சென்டரில் ஒரு முதலீட்டுக் கண்காட்சி நடந்தது. சரி, போய்த் தான் பார்ப்போமே என்று அங்கு போனேன். அந்தக் கண்காட்சியில் ஒவ்வொரு ஸ்டாலாகக் கடந்து வந்தபோதுதான், லட்சுமிநாராயணன் என்கிற நிதி ஆலோசகரை சந்தித்தேன். 50 வயதில் நான் ரிடையர்டு ஆக வேண்டும் எனில், என் முதலீட்டை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய பரிந்துரை செய்தார் அவர். நான் காக்னிசன்ட் நிறுவனத்தில் வேலை பார்த்தபோதே பங்கு களை வாங்கப் பழகியிருந்தேன். ரிலையன்ஸ், டாடா, எஸ்.பி.ஐ என நல்ல புளூசிப் பங்குகளை மட்டுமே வாங்கும் பழக்கம் எனக்கு இருந்தது. 2008-ல் பங்குச் சந்தை சரிந்தபோது அந்த மாதிரியான பல பங்குகள் குறைந்த விலையில் கிடைத்தன. அப்போதும் துணிந்து முதலீடு செய்தேன். அவை எல்லாம் நல்ல லாபம் தரும் நிலையில் இருந்ததால், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மேலும் முதலீடு செய்வதில் எனக்குப் பெரிய தயக்கம் எதுவும் இல்லை.

ஐ.டி வேலையில் அவ்வப்போது புரொமோஷன் வரும்; கூடவே சம்பள உயர்வும் வரும். வீட்டுக் கடன், வாகனம் பிரீமியம் கட்டியதுபோக, மீதமுள்ள பணத்தை எதிர்காலத் தேவைக்கு முதலீடு செய்யத் தொடங்கினேன். ஆரம்பத்தில் தலா ரூ.1,000 என எட்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யும் படியான ஒரு பிளானை அவர் எனக்குத் தந்தார். ஓய்வுக்குப் பின் பென்ஷன் கிடைக்கிற வகையில் சில இன்ஷூரன்ஸ் திட்டங்களையும் எடுத்தோம். குறைந்த பிரீமியத்தில் டேர்ம் இன்ஷூரன்ஸ், ஹெல்த் இன்ஷூரன்ஸ் போக, அனைத்துப் பணத்தையும் ஓய்வுக்கால வருமானத்துக்குச் செல்கிற மாதிரி யான முதலீட்டை அமைத்துக் கொடுத்தார் நிதி ஆலோசகர் லட்சுமி நாராயணன்.

அவர் அமைத்துக் கொடுத்த பிளான் பற்றிப் பல கேள்வி களைக் கேட்டபோது, அதுபற்றி விளக்கமான பதிலை அவர் தந்ததால், அந்தப் பிளானில் இருந்து நான் ஒருபோதும் பின்வாங்கியதில்லை. ஆண்டுக்கொருமுறை அவருடன் உட்கார்ந்து என் முதலீட்டை அலசுவோம். அதன்பிறகு, அநேகமாக அடுத்த ஆண்டுதான் மீண்டும் அவரைச் சந்திப்பேன். முதலீட்டில் ஏதாவது மாற்றமோ, அதிலிருந்து பணம் திரும்பப் பெறும் தேவையோ இருந்தால் மட்டுமே இடையில் சந்திப்போம்.

இப்படியாக சுமார் 15 ஆண்டுகள் என் முதலீட்டை தொடர்ந்ததன் விளைவாக, 50 வயதில் ரிடையர்டு ஆவதற்குப் பதிலாக என் 45-வது வயதில், அதாவது, 2015-லேயே ரிடையர்டு ஆகிவிட்டேன். காக்னிசன்ட் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது எனக்கு ஸ்டாக் ஆப்ஷன் கிடைத்தது. அங்கிருந்து விலகியபோது, இரண்டாவது வீட்டுக்கான கடனை எளிதில் கட்டி முடிக்கவும், மாத வருவாய்க்கான சில புதிய முதலீடுகளுக்கும், அந்தப் பங்குகளை விற்ற தொகை உதவியாக இருந்தது.

இன்றைக்கு முதல் வீட்டிலிருந்து வரும் வாடகையையும், ஏற்கெனவே செய்திருந்த முதலீடுகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) மூலம் எடுப்பதாலும், குடும்பச் செலவுக்கு எந்தக் குறையும் இல்லாமல் இருப்பதுடன், கயிலாயம், கேதார்நாத் போன்ற திருத்தலங்களுக்கும் விரும்பிய போது சென்று வருகிறேன். செலவுகளைக் கட்டுப்படுத்தி, முதலீட்டுக்கு முக்கியத்துவம் அளித்து, திட்டமிட்டபடி வாழ பேருதவி செய்கிறார் என் மனைவி சித்ரா. இப்போது என் மகன் செஸ்ஸில் இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்று, பொறியியல் பட்டமும் பெற்று, மேற்படிப்புக்குத் தயாராகி விட்டார். அவருடைய எதிர்காலத் தேவைகளுக்கு எஸ்.ஐ.பி முதலீட்டின் மூலம் எப்படிப் பணம் சேர்ப்பது என்பதைச் சொல்லித் தர, அவருக்காக நானே முதலீடு செய்துவருகிறேன். அதுபோக, என் ஒரு சில எஸ்.ஐ.பி திட்டங் களிலும், விடாமல் தொடர்ந்து முதலீடு செய்துவருகிறேன்.

இன்றைய தலைமுறையினர் என்னைப்போல விரைவில் விருப்ப ஓய்வு பெற வேண்டும் எனில், சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியைக் குடும்பச் செலவுக்கும், இன்னொரு பகுதியை இ.எம்.ஐ கட்டவும், மூன்றாவது பகுதியை முதலீட்டுக்கும் ஒதுக்குவது அவசியம்’’ என்று உற்சாகமாகப் பேசி முடித்தார் பிரகாஷ் ராமஸ்வாமி.

திட்டமிட்டு முதலீடு செய்தால், யார் வேண்டுமானாலும் சீக்கிரத்திலேயே ரிடையர்டு ஆகலாம் என்பதற்கு இவர் சிறந்த உதாரணம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு