Published:Updated:

பணச் சிக்கல் இல்லாத வாழ்க்கை... நிம்மதிக்கு கைகொடுத்த எஸ்.ஐ.பி!

வி.கே.பத்ரிநாராயணன்
பிரீமியம் ஸ்டோரி
News
வி.கே.பத்ரிநாராயணன்

சூப்பர் இன்வெஸ்டார் - முதலீட்டு அனுபவம்

எதிர்கால இலக்குகளுக்காக முறையாக நிதித் திட்டமிட வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு 2011-ல் வந்தபோது, நாணயம் விகடன்தான் எனக்கு வழிகாட்டியது. அன்று நாணயம் விகடன் வழங்கிய நிதி ஆலோசனையால் இன்று என் வாழ்க்்கை வளமானதாக மாறியிருக்கிறது என மனநிறைவுடன் பேசுகிறார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வி.கே.பத்ரிநாராயணன். கடந்த 10 ஆண்டுகளில் அவர் பெற்றிருக்கும் முதலீட்டு அனுபவங்களை அவரே சொல்கிறார்...

வி.கே.பத்ரிநாராயணன்
வி.கே.பத்ரிநாராயணன்

“நான் காஞ்சிபுரத்தில் உள்ள பல்லவன் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன். என் மனைவி சரண்யா இல்லத்தரசி. என் மூத்த மகன் பாலகுமாருக்கு திருமணமாகிவிட்டது. இரண்டாவது மகன் ராஜராஜன், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவருகிறார். மூன்றாவது மகன் தர்ஷன் 10-ம் வகுப்பு படிக்கிறார்.

பத்து ஆண்டுகளுக்கு முன், நான் நாணயம் விகடனை தொடர்ந்து படிக்கத் தொடங்கிய போது, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சார்ந்த விஷயங்கள் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது. எனக்கு நிதி ஆலோசனை கேட்டு நாணயம் விகடனை நாடினேன். நிதி ஆலோசகர் பி.பத்மநாபனை எனக்கு அறிமுகம் செய்ய, அவரை ஒரு நாள் நேரில் சென்று பார்த்தேன். ஃபைனான்ஷியல் ரீதியாக நான் செய்த சேமிப்புகள், கடன் சார்ந்த விவரங்கள் என அனைத்தையும் அவரிடம் சொன்னேன்.

அவருடைய வழிகாட்டுதலின்படி, மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டை ஆரம்பித் தேன். ஆனால், போட்ட பணம் கிடைக்காமல் போனால் என்ன செய்வது என்கிற ஒருவித பயம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. அன்றைய நிலையில், என் குடும்பத்திலேயே நான்தான் முதன்முதலாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டை ஆரம்பித்தேன். அதற்கு முன், வங்கி எஃப்.டி, போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி தவிர, வேறு எதுவும் எனக்குத் தெரியாது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எதிர்பார்த்த வருமானத்தைத் தராமல் போனால் அல்லது நஷ்டம் தந்தால் பிரச்னையாகிவிடுமே என்கிற பயம் இருந்துகொண்டே இருந்தது.

நிதி ஆலோசகர் பத்மநாபன் சொன்னபடி, 2012-ல் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பித்தபோது, மாதம் 4,500 ரூபாயை முதலீடு செய்தேன். சம்பளம் உயர உயர, முதலீட்டையும் அதிகரித்தேன். அவ்வப்போது மொத்தமாகக் கிடைக்கும் பணத்தையும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தேன். இன்றைய நிலையில், 9 ஃபண்டுகளில் மாதம்தோறும் சுமார் 24,500 ரூபாயை முதலீடு செய்துவருகிறேன்.

எஸ்.ஐ.பி முதலீட்டின்மூலம் கிடைத்த பணம் மற்றும் இதர சேமிப்பைக் கொண்டு என் மூத்த மகனின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடித்துவிட்டேன். அதே போல, எஸ்.ஐ.பி முதலீட்டைக் கொண்டு, என் இரண்டாவது மகனின் கல்லூரிக் கட்டணத்தையும் கட்டினேன். அதனால், மூத்த மகனின் சொந்த வீட்டுக்கான இலக்கை சில காலம் தள்ளிப் போட்டிருக்கிறேன். 2015-ல் என் வீட்டுக் கடன் ரூ.6 லட்சத்தை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு அடைத்தேன்.

பணச் சிக்கல் இல்லாத வாழ்க்கை... நிம்மதிக்கு கைகொடுத்த எஸ்.ஐ.பி!

என் ஓய்வுக் காலத்துக்கு இன்னும் நான்கு வருடங்கள் மட்டுமே இருக்கின்றன. இருப்பினும், தற்போதைய நிலையில், ஓய்வுக் காலத்தில் தேவைப்படும் நிதிக்கான திட்டமிடல் பலமாக இருப்பதால், கவலை இல்லாமல் இருக்கிறேன்.

முதலீடு செய்வது மட்டும்தான் நம் வேலை என்று நான் என்றைக்கும் இருந்ததில்லை. நான் செய்திருக்கும் ஃபண்டு களின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை கூகுளில் ஆராய்ந்து பார்ப்பேன். நிதி ஆலோசகரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்வேன். இன்றைய நிலையில், தங்கம் விலை குறைந் திருப்பதால், பலர் தங்கத்தில் முதலீடு செய்வதைப் பார்க் கிறேன். ஆனால், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகளின் மீது என்றைக்கும் எனக்கு விருப்பம் இல்லை.

கொரோனா காலத்தில் சம்பளக் குறைப்புக்கு ஆளான போது, என்னைக் காப்பாற்றி யதும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுதான். மகனின் கல்லூரிக் கட்டணத்தை என் முதலீட்டின் மூலம் கிடைத்த லாபத்தின் ஒரு பகுதியை எடுத்துக் கட்டியது எனக்கு நிம்மதியைத் தருவதாக இருந்தது.

இப்போது பலரும் சந்தேகத் துடன் பார்ப்பதுபோல, நானும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைப் பார்த்து, அதில் முதலீடு செய்யாமல் போய், வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பு களில் மட்டும் பணத்தைப் போட்டிருந்தால் என் எதிர்கால இலக்குகளை நிறைவேற்றத் தேவையான பணம் கிடைக் காமல் மிகவும் சிரமப்பட்டிருப் பேன்’’ என்றவர், இப்போது தன் இரு மகன்களையும் அவர்களின் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்ய வைத்திருக்கிறார்.