
சூப்பர் இன்வெஸ்டார் - முதலீட்டு அனுபவம்
"நாணயம் விகடனை 2013-ம் ஆண்டு முதல் தொடர்ந்து படித்து வந்ததால், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது. அந்த முதலீடு குறித்த தெளிவும் எனக்குக் கிடைத்தது.
1995-களிலேயே நான் கைநிறைய சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால், அப்போது முதலீட்டை ஆரம்பிக்கவில்லை. ஏனெனில், எனக்கு முதலீடுகள் குறித்து வழிகாட்ட அன்று யாரும் இல்லை” என்று மகிழ்ச்சியாகப் பேசும் தஞ்சாவூர் பேராவூரணியைச் சேர்ந்த சங்கர் ரங்கராஜனுக்கு வயது 51. லேட்டாக முதலீடு செய்தாலும், குறுகிய காலத்தில் எப்படி சூப்பர் இன்வெஸ்டாராக மாறினார் என்பதை அவரே சொல்கிறார்.

“எனக்கு சொந்த வீடு உள்ளிட்ட சொத்துகள் அனைத்தும் பேராவூரணியில் இருந்தாலும், பிள்ளைகளின் படிப்புக்காகத் திருச்சியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். என் மனைவி கற்பகவல்லி இல்லத்தரசி. மூத்த மகள் ஹரிசங்கரி 11-ம் வகுப்பும், இளைய மகன் துஷ்யந்த் 8-ம் வகுப்பு படிக்கிறார்கள்.
என்னுடைய தென்னந்தோப்புகளில் கிடைக்கும் தேங்காய்கள் மற்றும் மற்ற விவசாயிகளிடம் இருந்து பெறும் தேங்காய் களைக் கொண்டு வர்த்தகம் செய்து வருகிறேன். தொழில் மூலம் நல்ல வருமானம் கிடைத்து வந்த நிலையில், என் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் நிதித் திட்டமிடல் செய்ய வேண்டும் என நாணயம் விகடனைத் தொடர்புகொண்டதன் மூலம் சொக்கலிங்கம் பழனியப்பனின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது.
அவரைச் சந்தித்து எனது வரவு செலவு விவரங்களைப் பகிர்ந்துகொண்டேன். நான் 2015-ல் அவரைச் சந்தித்தபோது, எனக்கு 44 வயது. நான் என்டைய 60 வது வயதில் தொழிலில் இருந்து ஓய்வு பெற வேண்டுமெனில், நான் மாதம்தோறும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் எனக் கேட்டேன். என் ஓய்வுக் காலத்துக்கு 16 ஆண்டுகள் மட்டுமே பாக்கி இருந்ததால், அதற்காக மட்டுமே மாதம் 12,500 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய வேண்டியிருந்தது. அப்போது அந்த அளவுக்குத்தான் எஸ்.ஐ.பி முதலீட்டையும் ஆரம்பித்தேன். ஆனால், இப்போது மொத்தம் ஏழு மியூச்சுவல் ஃபண்டுகளில் 72,500 ரூபாயை மாதம்தோறும் முதலீடு செய்து வருகிறேன். நான் எதிர்பார்த்தது ஆண்டுக்கு 12% வருமானம்; ஆனால், எனது ஃபண்டுகள் 25% வருமானம் தருகிறது.

என்னைப் பொறுத்தவரை, மியூச்சுவல் ஃபண்ட் பெஸ்ட் முதலீடு என்பேன். காரணம், நிலமாகவும் தங்கமாகவும் வாங்கி வைத்திருக்கும்போது, அது எல்லோர் கண்களுக்கும் புலப்படும் சொத்தாக இருக்கிறது. அதைப் பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் போடும் தொகையை, அந்த நிறுவனம் நிர்வகித்து, அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை முதலீட் டாளர்களுக்குப் பிரித்துக் கொடுப்பதை நம்மால் நேரடியாகப் பார்க்க முடிகிறது. பெரிய பராமரிப்புச் செலவு இல்லை; பெரிய அளவில் தவறு எதுவும் நடக்காதபடிக்கு கண்காணிக் கப்படுவதால், முதலீடு பாதுகாப்பாக இருக்கிறது.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களால் நான் மட்டும் லாபம் அடைந்தால் போதும் என நினைக்காமல், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சார்ந்த விஷயங்களை என் உறவினர்களுக்கும், என் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லி அதில் முதலீடு செய்ய வைத்திருக்கிறேன். இதுவரை 100 நபர்களுக்குமேல் நான் சொன்ன யோசனைகளைக் கேட்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து, அதன் மூலம் பயனடைந்திருக்கிறார்கள்.
என் பிள்ளைகளின் மேற்படிப்புக்கு, திருமணத்துக்கு எனத் தனித்தனியாகப் பிரித்து முதலீடு செய்து வருகிறேன். நான் 2015-ல் முதலீடு செய்ய ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை எஸ்.ஐ.பி முதலீட்டையும் ஒரு மாதம்கூட தவறவிட்ட தில்லை. தவிர, அதில் முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுப்பதும் இல்லை. இந்த இரண்டு காரணங்களால்தான் லாபம் அதிகரித்து, என் எதிர் காலத் தேவைகள் குறையில்லாமல் நிறைவேறக் காரணமாக இருக்கிறது’’ எனத் திருப்தியுடன் பேசும் சங்கர் ரங்கராஜன், நிம்மதியான வாழ்க்கைக்குத் தேவையான இன்ஷூரன்ஸ் திட்டங்களையும் எடுத்து வைத்திருக்கிறார்.
‘‘எனக்கும் என் மனைவிக்கும் சேர்த்து 75 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் இருக் கிறது. இது எனது தற்போதைய வருமானத்துடன் ஒப்பிடும்போது குறைவுதான். டேர்ம் இன்ஷூரன்ஸ் அளவை அதிகப்படுத்த நினைக்கிறேன். மேலும், என் குடும்ப உறுப்பினர் கள் அனைவருக்கும் சேர்த்து 16 லட்சம் மதிப்புள்ள ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் பாலிசி இருக்கிறது’’ என முடித்தார்.
ஒவ்வொரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்துவரும் இவரைப் போல எல்லோரும் இருக்க முயற்சி செய்யலாமே!