Published:Updated:

சூப்பர் இன்வெஸ்டார்!

பாலமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
பாலமுருகன்

முதலீட்டு அனுபவம்

சூப்பர் இன்வெஸ்டார்!

முதலீட்டு அனுபவம்

Published:Updated:
பாலமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
பாலமுருகன்

சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வரும் பாலமுருகன், ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மேலாளர். மனைவி, சுகன்யா இல்லத்தரசி. இவர்களின் குழந்தைகள் சாய் ஆர்ணவ் மற்றும் சாய் அக்‌ஷரா இருவரும் 3-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் இரட்டையர்கள். தான் சூப்பர் இன்வெஸ்டாராக உருவெடுத்த கதையை பாலமுருகன் நமக்கு எடுத்துச் சொன்னார்.

“என்னுடைய சொந்த ஊர் சென்னை. 21 வயதில் வேலைக்குச் சேர்ந்தேன். என் இளமைக் காலங்களில் தேவைகள் குறைவாக இருந்ததால், வயதுக்கு ஏற்ற செலவுகளையும் நான் செய்யத் தவறவில்லை. இருப்பினும், பணம் சார்ந்த விஷயங்களில் ஒழுங்கீனமாக இருக்கக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருப்பேன். அதனால் செலவுகளை எப்போதும் கட்டுக்குள் வைத்திருப்பேன்.

பாலமுருகன்
பாலமுருகன்

காலப்போக்கில், எதிர்காலம் பற்றியும், எதிர்காலத்தில் பணத்தேவைகள் பற்றியும் யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது என்னிடம் பொருளாதார ரீதியாக, சரியான திட்டமிடல் இருக்கவில்லை. ரியல் எஸ்டேட் முதலீடு மட்டுமே சிறந்த ஆப்ஸனாக நினைத்ததாலும், வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புகள் அதிக பரிச்சயம் என்பதாலும் இந்த இரண்டு விஷயங்கள் மட்டுமே எனது முதல் சாய்ஸாக இருந்தது. சம்பாதிக்கும் பணத்தில் செலவுகள் போக, இந்தச் சேமிப்புகளில் நான் அதிகம் சேமித்தேன். அப்போதும் செலவுகள் போகத்தான் சேமிப்புக்கு ஒதுக்குவேன். ஆனால், செலவுகள் போக சேமிப்புக்கு என எடுத்து வைப்பது தவறு. சேமிப்புக்கு ஒதுக்கியது போகத்தான் செலவு செய்ய வேண்டும் என்பதை பிற்பாடு புரிந்துகொண்டேன்.

2014-ல் முன், ரியல் எஸ்டேட்டில் நான் மேற்கொண்ட முதலீட்டால் ஒரு வீடும் மற்றும் ஒரு நிலமும் எனக்கு சொந்தமாகியிருந்தது. இதற்காக வாங்கிய கடன்களை முழுமையாக அடைத்திருந்தேன். கடன் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவதென்பதே ஓர் அலாதி சுகம்தான். அந்நிலையை அடைந்த பிறகு, ஒரு நாள் நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதியைச் சந்தித்தோம்.

எதிர்கால இலக்குகள் பற்றியும், குடும்பத்தின் தற்போதைய நிதி நிலை பற்றியும் அவரிடம் தெளிவாக எடுத்துச் சொன்னேன். நிதித் திட்டமிடல் தொடர்பாக அவர் கொடுத்த ஐடியாக்களும், முதலீட்டு ஆலோசனைகளும் தான் என்னை என் நிதி வாழ்க்கையை நோக்கி சரியான திசையில் பயணிக்க வைத்தது. குழந்தைகளின் படிப்பு, திருமணம், எங்கள் ஓய்வுக்காலம் என ஒவ்வொரு இலக்குக்குமான முதலீட்டுக்குத் தேவையான தொகையை சரியாகக் கணக்கிட்டு, அதை மாதம்தோறும் எப்படி, எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் அவர் விளக்கமாகச் சொன்னார்.

அவரை சந்திக்கும் வரை ரியல் எஸ்டேட் முதலீடுதான் நல்ல வருமானத்தைத் தரும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அது தவறு; அதைவிட நல்ல வருமானத்தை மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு நல்ல லாபம் தரும் என்பதை அவர் மிகத் தெளிவாகப் புரிய வைத்தார். 2014-ல் முதலீட்டைத் தொடங்கியபோது, எனக்குக் கடன் இல்லாததால் என்னால் மாதம் 18,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்காக ஒதுக்க முடிந்தது. அதை எந்தெந்த தேவைகளுக்கு எந்தெந்த ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு, அதை அப்படியே செய்ய ஆரம்பித்தேன்.

சூப்பர் இன்வெஸ்டார்!

ஒவ்வொரு வருடமும் இந்த முதலீட்டுக்கான தொகையின் மதிப்பை உயர்த்திக்கொண்டே வந்தேன். தற்போது மாதம்தோறும் ரூ.50,000 முதலீடு செய்கிறேன். அதில் லார்ஜ்கேப்பில் 29%, ஃப்ளெக்ஸிகேப்பில் 20%, மிட்கேப்பில் 33%, ஸ்மால்கேப்பில் 13%, இன்டர்நேஷனல் ஃபண்டுகளில் 5% என மொத்தம் 12 மியூச்சுவல் ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்கிறேன். அனைத்து ஃபண்டுகளும் நல்ல வருமானத்தைத் தந்து வருகின்றன.

இன்றைய நிலையில் மக்களில் பெரும்பாலானவர்கள் தங்கம் வாங்கி வைப்பது, நிலத்தில் முதலீடு செய்வதை முக்கியமாக நினைக்கிறார்கள். அதுதான் நல்ல வருமானத்தைத் தரும் என்றும் கருதுகிறார்கள். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் என் முதலீட்டுச் சிந்தனையை மாற்றிவிட்டன. நாம் சம்பாதிக்கும் பணம், பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தை நமக்கு சம்பாதித்துத் தர வேண்டும் எனில், அதற்கு ஒரே சாய்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தான்.

பங்குச் சந்தை முதலீட்டில் இருக்கும் நேரடியான ரிஸ்க், இதில் இல்லை என்பதும் அலுவலகத்தில் வேலை பார்க்கும் என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் ஏற்ற விஷயம்.

நாணயம் விகடனின் நீண்ட கால வாசகன் நான். புத்தகமாக வாங்கிப் படிக்க ஆரம்பித்து, இப்போது ஆன்லைனில் சப்ஸ் கிரைப் செய்து படித்துவருகிறேன். பணத்தை லாபகரமாக எப்படிக் கையாள வேண்டும் என்பதை எனக்குக் கற்றுக்கொடுத்தது நாணயம் விகடன்தான்.

ஒரு முதலீட்டை குறுகிய காலத்தில் அணுகுவதில் இருக்கும் பாதகத்தையும், நீண்டகால முதலீட்டில் இருக்கும் சாதகத்தையும் பல்வேறு கட்டுரைகள் மூலம் எனக்குச் சொல்லித் தந்ததும் நாணயம் விகடன்தான்’’ என்று பேசி முடித்தார் பாலமுருகன்.