Published:Updated:

‘‘65 வயதுக்குப் பிறகும் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறேன்!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மனைவி நர்மதாவுடன் ரங்கசாமி சந்திரன்
மனைவி நர்மதாவுடன் ரங்கசாமி சந்திரன்

சூப்பர் இன்வெஸ்டார் - முதலீட்டு அனுபவம்

பிரீமியம் ஸ்டோரி

எனக்கு இப்போது 67 வயது. இன்றும் பங்குச் சந்தையிலும் மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்து நல்ல லாபம் பார்க்கிறேன்’’ என்று மகிழ்ச்சியும் உற்சாகமும் பொங்கப் பேசுகிறார் சென்னையில் பெருங்குடியில் வசித்து வரும் ரங்கசாமி சந்திரன். ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்துவரும் அவர்தான் இந்த வாரத்தின் சூப்பர் இன்வெஸ்டார். பங்குச் சந்தையிலும் மியூச்சுவல் ஃபண்டிலுமான அவருடைய முதலீட்டு அனுபவங் களை அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

‘‘எனது சொந்த ஊர் அருப்புக்கோட்டை - தூத்துக்குடி சாலையில் உள்ள சிதம்பராபுரம் என்கிற கிராமம். அப்பா, பள்ளி ஆசிரியர். கொஞ்சமாக இருந்த நிலத்தில் உளுந்து, ராகி, நெல் என நவதானியம் பயிரிடுவோம். எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள செட்டிக்குறிச்சியில் 10-ம் வகுப்பு வரை படித்தேன். பி.யு.சி படிப்பையும், உயிரியியல் பட்டப் படிப்பையும் பாளையங்கோட்டையில் உள்ள செயின்ட் ஜான் கல்லூரியில் படித்தேன். பிறகு, சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் கடல்வாழ் உயிரியியல் பட்ட மேற்படிப்பையும் படித்து, அங்கேயே ஆராய்ச்சி மேற்கொண்டு, டாக்டர் பட்டம் வாங்கினேன்.

1980-ம் ஆண்டு நான் ஆராய்ச்சிப் பட்டம் பெற்று முடித்தவுடன் இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தில் இறால் மீன் வளர்ச்சி தொடர்பான ஆய்வகத்தில் வேலையில் சேர்ந்தேன். 2010-ல் வி.ஆர்.எஸ் வாங்கி ஓய்வு பெறுகிறவரை இறால் வளர்ப்பு தொடர்பான நிறுவனங்களிலேயே வேலை பார்த்தேன்.

மனைவி நர்மதாவுடன் ரங்கசாமி சந்திரன்
மனைவி நர்மதாவுடன் ரங்கசாமி சந்திரன்

1980-ல் நான் ஹெச்.யு.எல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது எனக்குக் கிடைத்த மாதச் சம்பளம் ரூ.975. இன்றைக்கு என் வயதில் இருக்கும் பலருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு என் முதல் வேலையிலேயே எனக்குக் கிடைத்தது. ஹெச்.யு.எல் நிறுவனத்தின் ஆய்வுக்கூடம் சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் இருந்தது. அந்த அலுவலகத்தின் கணக்கு வழக்குகளைக் கவனிக்க மும்பையிலிருந்து சொக்கலிங்கம் பிள்ளை என்பவர் வருவார். அவருக்கு பங்குச் சந்தை முதலீடு தொடர்பான விஷயங்கள் அனைத்தும் அத்துப்படி. அவர்தான் என்னை ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்வதைச் சொல்லித் தந்தார். 1983-ம் ஆண்டு ரேமண்ட்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வந்தபோது ஒரு பங்கு விலை ரூ.10 என்கிற கணக்கில் ரூ.500 முதலீடு செய்தேன். அதன்பிறகு எப்போதெல்லாம் ஐ.பி.ஓ வருகிறதோ, அப்போதெல்லாம் அதில் முதலீடு செய்யும்படி சொக்கலிங்கம் பிள்ளை என்னிடம் சொல்ல, ரூ.500, ரூ.1,000 என கையில் இருக்கும் பணத்தை ஐ.பி.ஓ-வில் போட்டுவிடுவேன். குஜராத் அம்புஜா, ரிலையன்ஸ் எனப் பல பங்குகளில் முதலீடு செய்தேன். ஹெச்.யு.எல் நிறுவனப் பங்கை செகண்டரி மார்க்கெட்டில் வாங்கினேன்.

நான் பங்குகளை வாங்கும்போதே, அந்தப் பங்குகளை நீண்ட காலம் வைத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்துதான் வாங்கினேன். இப்போது போல, அந்தக் காலத்தில் டீமேட் நடைமுறை இல்லை. பங்குகளை வாங்கவோ, விற்கவோ வேண்டுமெனில், புரோக்கரை நேரில் தேடிப் போக வேண்டும். இதனால் நினைத்த நேரத்தில் பங்குகளை வாங்க அல்லது விற்க முடியாது. நான் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வேலை மாற்றலாகிப் போய், ஐந்து ஆண்டுகள் கழித்துதான் பங்குகளை விற்றேன். அதற்குள் அந்தப் பங்குகள்மூலம் எனக்கு 100% லாபம் கிடைத்துவிட்டது. இதன்பிறகு நல்ல பங்கு என்று நான் நினைக்கும் பங்குகளை எல்லாம் வாங்குவேன். இப்போது எனக்கு 67 வயதாகிறது. இந்த வயதிலும் பங்கை வாங்கவும், விற்கவும் செய்கிறேன். இப்போது என் போர்ட்ஃபோலி யோவில் மொத்தம் 19 பங்குகள் உள்ளன. இதில் இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி பேங்க், சன் பார்மா எனச் சில பங்குகளை மட்டும் நீண்ட காலத்துக்கு என வைத்திருக்கிறேன். மற்ற பங்குகள் 20% வரை உயர்ந்தால், ஒரு பகுதியை விற்பேன். விலை குறையும்போது மீண்டும் கொஞ்சம் வாங்குவேன்.

நான் 2005-ம் ஆண்டுக்குப் பிறகுதான் மியூச்சுவல் ஃபண்டில் அவ்வப்போது கிடைக்கும் பணத்தை முதலீடு செய்தேன். அதிலும் நல்ல லாபம் கிடைத்தது. என் மகள் அமெரிக்காவில் படிக்கச் சென்றபோது, பணம் தேவைப் பட்டது. மியூச்சுவல் ஃபண்டில் நான் போட்டிருந்த பணத்தை எடுத்து, அவள் அமெரிக்காவுக்குச் செல்லும் செலவைச் செய்தேன்.

இன்றைக்கு என் மகனும் மகளும் திருமணமாகி, அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள். பங்குச் சந்தை முதலீடு பற்றி என் மகனுக்கு ஆரம்பத்திலேயே சொல்லித் தந்துவிட்டேன். இப்போது அவனும் அமெரிக்கா வில் பங்குச் சந்தையில் முதலீடு செய்துவருகிறான். பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளைப் பற்றிப் பேசினால், ‘அதெல்லாம் நமக்கு வேண்டாம்’ என்று சொல்லும் அளவுக்கு அவனிடம் முதிர்ச்சியான சிந்தனை இருக்கிறது.

பங்குச் சந்தை முதலீட்டில் பலரும் தவறு செய்யக் காரணம், குறுகிய காலத்தில் அதில் பெரும் பணம் சம்பாதித்துவிடலாம் என்கிற ஆசையில் வருவதுதான். பங்கு மற்றும் ஃபண்ட் முதலீட்டில் ஆண்டுதோறும் 12% லாபம் கிடைத்தாலே போதும் என்று நினைக்கிற மனப்பக்குவம் வேண்டும். தவிர, ஒரு பங்கு நிறுவனத்தைப் பற்றி நன்கு படித்து, ஆராய்ந்து பார்த்த பின், முதலீடு செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் படிக்க முடியாத வர்கள் நாணயம் விகடனை வாரம்தோறும் படித்தாலே போதும்.

இந்தக் காலத்து இளைஞர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய பயந்தால், மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி மூலம் மாதம்தோறும் 2,000 ரூபாயைத் தொடர்ந்து முதலீடு செய்தாலே போதும், கணிசமான பணத்தைச் சேர்க்க முடியும்’’ எனக் கலகலப்பாகப் பேசி முடித்தார் ரங்கசாமி சந்திரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு