நிரஞ்சன் அவஸ்தி, ஹெட், புராடக்ட், சந்தைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் வணிகம், எடெல்வைஸ் ஏ.எம்.சி
அதிக ஏற்ற, இறக்கமா அல்லது சமநிலையான பயணமா என்று கேட்டால், சமநிலையான பயணம்தான் வேண்டும் என்று சொல்பவர்களே அதிகம் பேர் இருப்பார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட் டாளர்கள் கலப்பின ஃபண்டுகளில் (Hybrid funds) சரியான சமநிலையைக் காணலாம். பங்குச் சந்தை போன்ற அதிக வருமானம் மற்றும் கடன் சந்தை போன்ற குறைந்த ஏற்ற இறக்கம் ஆகியவை கலந்த சமநிலையான முதலீடு ஹைபிரிட் ஃபண்ட் ஆகும்.
கலப்பின ஃபண்டுகளின் முக்கிய உத்திகள் யாவை, எது உங்களுக்கு சரியான, பொருத்தமானதாக இருக்கும், இந்த ஃபண்டுகளிலிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம், என்ன எதிர்பார்க்கக் கூடாது என்கிற கேள்விகளுக்கான பதிலைக் கடந்த கால வரலாற்றுத் தரவுகளுடன் பார்ப்போம்.
அதற்கு முன் பங்குச் சந்தை சார்ந்த கலப்பின ஃபண்டுகளில் மூன்று வகையான ஃபண்டுகளைப் பற்றி பார்ப்போம். முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்படும் நிதியானது இந்த மூன்று ஃபண்ட் திட்டங்களில் தான் முதலீடு செய்யப்படுகிறது.
அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட் (Aggressive Hybrid Funds - AHFs)
முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதியில் 65% முதல் 80% வரையில் பங்குச் சந்தையிலும் மீதி கடன் சார்ந்த ஆவணங்களிலும் முதலீடு செய்யப்படுவது அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட் ஆகும்.
இந்த ஃபண்ட் பிரிவில் சராசரியாக 75% தொகை ஈக்விட்டியிலும், 25% டெப்டிலும் முதலீடு செய்யப்படும். இந்த ஒதுக்கீடு சட்டப்படி, பங்கு சார்ந்த முதலீடு 80 சதவிகிதத்துக்குள் கீழே இருக்க வேண்டும் என்பதற்கேற்ப குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றி அமைக்கப்படுகிறது.

பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் (Balanced Advantage Fund - BAFs)
முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதியில் 30% முதல் 80% வரையில் பங்குச் சந்தையிலும் மீதி கடன் சார்ந்த ஆவணங்களிலும் முதலீடு செய்யப்படுவது பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் ஆகும். இது டைனமிக் அஸெட் அலொகேஷன் ஃபண்ட் எனவும் அழைக்கப்படுகிறது.
இதன் சிறப்பம்சம், நிறுவனப் பங்குகளில் செய்யப்படும் முதலீடு 30 - 80 சதவிகிதமாக இருந்தாலும், சில ஃபண்டுகளில் 100% வரையில்கூட பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், அவற்றின் சொந்த அஸெட் அலொ கேஷன் மாதிரியை இந்த ஃபண்டுக் காக உருவாக்கியிருக் கின்றன. இது பி/இ (P/E), பி/பி (P/B) விகிதங்கள் மற்றும் தொழில்நுட்பக் காரணி களான டெய்லி மூவிங் ஆவரேஜ் மற்றும் ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைகிறது.
இந்த பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டின் முக்கிய இலக்கு, ஃபண்டின் என்.ஏ.வி ஏற்ற இறக்கத் தைக் குறைப்பது மற்றும் பங்குச் சந்தையின் அதிக இறக்கத்தில் மூலதனத்தைப் பாதுகாப்பதாக இருக்கிறது.
ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் (Equity Savings Fund)
முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதியில் 30 - 40% நிறுவனப் பங்குகளிலும், 25 - 35% ஈக்விட்டி ஆர்பிட்ரேஜ் ஆவணங் களிலும், 25 - 35% கடன் சார்ந்த ஆவணங்களிலும் முதலீடு செய்யப் படுவது ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் ஆகும்.
ஈக்விட்டி ஆர்பிட்ரேஜ் என்பது இரு வேறு பங்குச் சந்தைகள் (உதாரணம், பி.எஸ்.இ & என்.எஸ்.இ) மற்றும் இரு வேறு முதலீட்டு முறைகளில் (பங்குச் சந்தை & ஃப்யூச்சர் / ஆப்ஷன்) காணப் படும் விலை வித்தியாசத்தைப் பயன் படுத்தி லாபம் பார்ப்பதாகும்.
அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டு களுடன் ஒப்பிடும்போது ஈக்விட்டி ஆர்பிட்ரேஜ் முதலீடு மட்டும் ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டில் வேறுபடுகிறது.

என்ன வருமானம் எதிர்பார்க்கலாம்?
ஒரு மியூச்சுவல் ஃபண்டில் வருமானம் மட்டுமே முக்கிய ஒப்பீட்டு விஷயமல்ல. மற்ற எந்த முதலீட்டுத் திட்டங்களைப் போலவே உங்கள் வருமான எதிர்பார்ப்பும் ஒரு ஹைபிரிட் ஃபண்டில் இருக்கும் ரிஸ்க்குடன் இயைந்துபோக வேண்டும்.
எந்தவொரு முதலீடாக இருந்தாலும் அதிக ஏற்ற இறக்கம் என்பது அதிக ரிஸ்க் ஆகும். மூன்று ஆண்டுக்கால (20 ஜூன் 2021 வரை) வரலாற்றுத் தரவைப் பார்ப்பதன் மூலம் நம் வருமான எதிர்பார்ப்புகளைச் சரியாக அமைத்துக் கொள்ள முடியும்.
மேலே உள்ள அட்டவணையில் நிஃப்டி 50 வருமானத்துடன் ஒவ்வொரு ஹைபிரிட் ஃபண்டின் ரோலிங் வருமானம் ஒப்பிடப்பட்டிருக்கிறது. முதலில், உச்சபட்ச ஏற்றத்திலிருந்து இறக்கம், அதன் பிறகு குறைந்தபட்ச, அதிகபட்ச வருமானங்களை ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. கடைசியாக சராசரி வருமானம் தரப் பட்டுள்ளது.
பொதுவாகப் பார்த்தால், அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் ஆகிய இரண்டும் கிட்டத்தட்ட ஒரே வருமானத்தைக் கொடுத்திருக்கின்றன. ஆனால், இரு ஃபண்டுகளுக்கும் இடையே ஏற்ற இறக்கத்தில் அதிக வித்தி யாசம் இருக்கிறது.
பங்குச் சந்தை உயர்ந்ததால், அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட் அதிக வருமானம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில், பங்குச் சந்தை அதிக இறக்கத்தைச் சந்தித்தால், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் அதிக இறக்கத்தைச் சந்திக்காமல் பாதுகாப்பாகச் செயல்பட வாய்ப் பிருக்கிறது. உதாரணமாக, பங்குச் சந்தை உச்சபட்ச ஏற்றத்திலிருந்து மிக கீழ் நிலைக்கு இறக்கம் கண்ட போது, அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட் 27% இறங்கியிருக்கிறது. இந்த நிலையில் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் 19 சதவிகிதம் மட்டுமே இறக்கம் கண்டுள்ளது.
100% பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது, ஈக்விட்டி சேவிங்க்ஸ் ஃபண்டுகளில் ரிஸ்க் குறைவு. அதே நேரத்தில், 100% கடன் ஆவணங்களில் முதலீடு செய்யும் கடன் ஃபண்டுகளை விட அதிகமாகும். ஈக்விட்டி சேவிங்க்ஸ் ஃபண்ட் சராசரி மூன்று ஆண்டு ரோலிங் வருமானம் 7 முதல் 9 சதவிகிதமாக உள்ளது. இந்த ஃபண்டுகள் குறைந்த வட்டி விகித காலத்தில் கடன் ஃபண்டுகளுக்கு நல்ல மாற்றாக இருக்கும். மூன்று முதல் 5 ஆண்டுகளில் கடன் ஃபண்டு களிலிருந்து 2% கூடுதலாகவோ குறைவாகவோ வருமானத்தை எதிர்பார்க்கலாம்.
ஹைபிரிட் ஃபண்டுகளிலிருந்து என்ன எதிர்பார்க்கக் கூடாது?
முதலீட்டாளர்கள் சமீபத்திய வருமானத்துடன் மியூச்சுவல் ஃபண்டுகளைப் பகுப்பாய்வு செய்ய முனைகிறார்கள். கடந்த ஓராண்டில் கிடைத்த அதிக வருமானம் மீண்டும் கிடைக்கும் என எதிர்பார்க்கக் கூடாது.
இது தவிர, அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட் மற்றும் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் மூலம் சந்தையின் வருமானத்தைவிட அதிகமாக எதிர்பார்க்கக் கூடாது. அந்த ஃபண்டுகள் அப்படி வடிவமைக் கப்படவில்லை. இந்த ஃபண்டுகள் சில நேரங்களில் பங்குச் சந்தையைவிட சிறப்பாகச் செயல்படும். ஆனால், தொடர்ந்து அப்படிச் செயல் படாது. எனவே, அந்த எதிர் பார்ப்பையும் நம் மனதில் இருந்து நீக்கிவிட வேண்டும்.
இந்த ஃபண்டுகள், முதலீட்டுக் கலவையில் (Portfolio) ஏற்ற இறக்கத்தைத்தான் அதிகமாகக் குறைக்கும்; வருமானத்தை அதிகரிக்காது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஈக்விட்டி சேவிங்க்ஸ் ஃபண்டுகள் மூலம் இரட்டை இலக்க வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. இந்த வகை ஃபண்டுகளைக் கடன் ஃபண்டுக்கு ஒரு மாற்றாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர, ஈக்விட்டி ஃபண்டுக்கு அல்ல.
எடெல்வைஸ் ஈக்விட்டி சேவிங்க்ஸ் ஃபண்ட், கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் 9.34% வருமானத்தைக் கொடுத்திருக் கிறது. இதே காலகட்டத்தில் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் மற்றும் அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட் முறையே 12.60% மற்றும் 11.96% வருமானம் கொடுத் திருக்கின்றன.
மூன்றாண்டுக் காலத்தில் எடெல்வைஸ் ஈக்விட்டி சேவிங்க்ஸ் ஃபண்ட் 9.41% என்ற சிறந்த வருமானத்தைக் கொடுத் திருக்கிறது. மூன்றாண்டுக் காலத்தில் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் மற்றும் அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட் முறையே 13.41% மற்றும் 12.07% வருமானம் கொடுத்திருக்கின்றன.
யார் எதில் முதலீடு செய்ய வேண்டும்?
இந்த வகை ஃபண்டுகளில் முதலீட்டுக் காலம் 3 முதல் 5 ஆண்டுகள். மற்றும் குறைந்த ஏற்ற இறக்கத்தில் ஈக்விட்டி முதலீடு போல் வருமானம் எதிர்பார்த்தால், அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்டில் முதலீடு செய்யலாம். ஏற்ற இறக்கத்தைக் குறைக்க நினைத்தால், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இது, சந்தையின் இறக்கத்தில் பாதுகாப்பை அளிக்கும். சந்தையின் உச்சத்தில் லாபத்தைப் பாதுகாக்க விரும்புபவர்கள் ஈக்விட்டி சேவிங்க்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாம். மேலும், கடன் ஃபண்டை விட அதிக வருமானம் எதிர்பார்ப்பவர்கள் ஈக்விட்டி சேவிங்க்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
ஏற்ற இறக்கம் இல்லாமல் ஓரளவு நல்ல வருமானம் பார்க்க நினைப்பவர்கள் இந்த வகை ஃபண்டுகளைப் பரிசீலிக்கலாம்!
டிஸ்க்ளெய்மர்: இங்கே சொல்லப்பட்டவை கட்டுரை ஆசிரியரின் சொந்தக் கருத்துகளே.