Published:Updated:

முதலீட்டிலும் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்! ஆத்மநிர்பார் காட்டும் வழி

முதலீடு...
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு...

I N V E S T M E N T

நமது பிரதமர் மோடி முன்வைத்த ‘ஆத்மநிர்பார் இந்தியா’ திட்டம், ‘இந்தியா தன் வளர்ச்சிக்கு பிற நாடுகளைச் சார்ந்திருப்பது தவறு; சுயசார்பு முறையில் வளர்ச்சி பெறுவதே சரியான வழி’ என்று கூறுகிறது. டி.சி.எஸ் போன்ற சாஃப்ட்வேர் கம்பெனிகள், மாருதி கார் கம்பெனி, தம்ஸ் அப், அமுல் மற்றும் சமீப காலத்திய பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா போன்ற கம்பெனிகள் நம் நாடு சுயசார்பு பெற பெரும் உதவியாக இருப்பதைப் பார்க்கிறோம்.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

அதேபோல, இன்றைய கோவிட் சூழ்நிலையில் நாமும் சுயசார்பு முறையைப் பின்பற்றினால்தான் நம் செல்வத்தை வளர்க்கவோ, பாதுகாக்கவோ இயலும். இதை உணர்ந்ததால்தான் இன்று டாக்டர்கள், இன்ஜினீயர்கள்கூட என்.எஸ்.இ அகாடமியில் பர்சனல் ஃபைனான்ஸ் சம்பந்தமான ஆன்லைன் கோர்ஸ்களில் பயிற்சி பெறுகிறார்கள்.

‘அவர் சொன்னார்; இவர் செய்தார்; அதனால்தான் நானும் இந்த முதலீட்டில் இறங்கினேன்’ என்று நம் தோல்விகளுக்கு யாரையும் காரணமாக்க முடியாது. நம் முதலீடுகளில் பெரிய கோளாறுகளே நேர்ந்தாலும், இந்த கோவிட் நேரத்தில் ரிசர்வ் வங்கி, செபி, பேங்கிங் ஆம்புட்ஸ்மேன், கோர்ட் போன்ற நெறியாளர்கள் விரைந்து உதவு வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. கடந்த இரண்டு வருடங்களாக வங்கிகள், பாண்ட் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள் என்று ஒவ்வொரு துறையிலும் முதலீட்டாளர்கள் சந்திக்கும் சவால்கள் அப்படி.

முதலீடு
முதலீடு

வங்கித் துறை

பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கோ-ஆபரேட்டிவ் வங்கி (PMC Bank) 35 ஆண்டு்களுக்கும் மேலாக ஏழு மாநிலங்களில் மக்களுக்குச் சேவை அளித்து வருகிறது. இந்த வங்கி, விதிமுறைகளுக்கு மாறாக தன் மொத்தக் கடனில் 73% அதாவது, ரூ.6,500 கோடிக்கும் மேலாக ஹெச்.டி.ஐ.எல் குழுமத் துக்குக் கடனாக வழங்கியது. அந்தக் குழுமத்திலிருந்து அசலும், வட்டியும் வராத நிலையில் அதை வாராக்கடன் என்று அறிவிக்கவும் தவறியது. விளைவு, ரிசர்வ் வங்கி இதன் செயல்பாடுகளை முடக்கியது.

ஆனாலும், டெபாசிட் இன்ஷூ ரன்ஸ் (DICGC) விதிமுறைப் படி, ரூ.1 லட்சம் வரை (இன்றைய தேதியில் ரூ.5 லட்சம் வரை) முதலீட்டாளர் களுக்குப் பணம் திருப்பித் தரப்பட வேண்டும். அதை எதிர்பார்த்திருந்த முதலீட்டாளர்களுக்குப் பெரும் ஏமாற்றம் அளிக்கும் விதமாக முதலில் ரூ.1,000 மட்டுமே வழங்கப்பட்டது. பின் ரூ.25,000 வரை திருப்பி அளிக்கப் பட்டது.

மார்ச் 2020 முடிவில் வாடிக்கை யாளர்களின் மொத்த டெபாசிட்டுகள் ரூ.10,000 கோடியில், ரூ.2,955 கோடி அளவே வங்கியில் மீதம் இருந்தது. ஒருவழியாக ஆகஸ்ட் 2020-ல் வாடிக்கையாளர்களின் முதலீட்டில் ரூ.1 லட்சம் வரை ஒவ்வொருவருக்கும் திருப்பி அளிக்கப்பட்டது. டெபாசிட் இன்ஷூரன்ஸ் ரூ.5 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதே; ஏன் தரவில்லை என்ற வாடிக்கையாளர் களின் கேள்விக்கு வங்கியின் லைசென்ஸ் கேன்சல் செய்யப் பட்டால் மட்டுமே ரூ.5 லட்சம் வரை தரப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறிவிட்டது. பாவம், வாடிக்கை யாளர்கள் தவிக்கிறார்கள்.

பாண்ட் மார்க்கெட்

AT1 பாண்ட்ஸ் என்பவை வங்கி களால் வழங்கப்படும் பாண்டுகள். இவற்றில் வட்டி விகிதம் அதிகம் இருந்தாலும், முழு முதலீடும் பறிபோகும் அபாயமும் உண்டு. யெஸ் வங்கி இதிலுள்ள ரிஸ்க்கை மறைத்து, இந்த பாண்ட்களுக்கு ‘சூப்பர் எஃப்டி’ என்று பெயர் சூட்டி வெளியிட்டது.

இந்த மோசடியை உணராத ரீடெயில் முதலீட்டாளர்கள் பலரும் தங்கள் வழக்கமான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளை அவசரமாக குளோஸ் செய்து, அந்தப் பணத்தை இந்த பாண்டுகளில் முதலீடு செய்தனர். யெஸ் வங்கிக்குப் பண நெருக்கடி ஏற்பட்டதும், AT1 பாண்டு களை ரத்து செய்ய சட்டத்தில் இடமிருப்பதைக் காரணமாகக் காட்டி, வாடிக்கையாளர்களுக்கு பணம் தராமல் கைவிரித்துவிட்டது.

இது முறையற்ற செயல் என்று செபி கண்டிக்கிறது. ஆனால், ரிசர்வ் வங்கியோ “யெஸ் வங்கியின் நடவடிக்கை சரிதான்; லாபம் வரும்போது வாய் திறக்காத வாடிக்கையாளர்கள் நஷ்டம் வரும் போது மட்டும் நிறுவனங்களையும், நெறியாளர்களையும் ஈடுகட்டச் சொல்வது தவறு” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. பாவம், வாடிக்கையாளர்கள் தவிக்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட்

இந்தியாவின் ஒன்பதாவது பெரிய ஃபண்ட் நிறுவனம் என்று பெயர் பெற்றிருக்கும் ஃப்ராங்களின் டெம்பிள்டன் நிறுவனத்தின் ஆறு கடன் ஃபண்டுகள் முடக்கப்பட்டு உள்ளன. அதிக வருமானம் பெறும் ஆசையில் ரிஸ்க் மிகுந்த அனில் அம்பானி குழும நிறுவனங்கள், யெஸ் பேங்க், வோடஃபோன் ஐடியா, டி.ஹெச்.எஃப்.எல் போன்ற தரக் குறியீடு குறைந்த கம்பெனிகளில் முதலீடு செய்தது ஃப்ராங்களின். பொதுவாக, மியூச்சுவல் ஃபண்டுகள் இத்தகைய கம்பெனிகளில் முதலீடு செய்யும்போது தங்கள் பணத்தில் 5 - 10% வரையே முதலீடு செய்யும். ஆனால், ஃப்ராங்களின் 30 - 44% வரை முதலீடு செய்துள்ளது. கிரெடிட் ரிஸ்க் ஃபண்டுகளில் மட்டு மன்றி, லோ டியூரேஷன் ஃபண்ட், அல்ட்ரா ஷார்ட் ஃபண்டுகளிலும் இந்த முறையைக் கையாண்டுள்ளது.

முதலில் எல்லாம் சுமுகமாகத்தான் சென்றது. மற்ற ஃபண்டுகள் 6 - 8% வரை வருமானம் தரும் இடத்தில் ஃப்ராங்களின் 2% அதிகம் தந்தது. ஆனால், கோவிட் தாக்கத்தால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதில், நிலைமை கையை மீறிச் செல்லத் தொடங்கியது. ஆறு ஃபண்டுகளை முடக்கும் செய்யும் நிலை ஏற்பட்டது. இதில் சிக்கி இருக்கும் வாடிக்கையாளர் பணம் ரூ.25,856 கோடி. அவசரத்துக்கு வெளியே எடுக்க இயலாது. பாவம், வாடிக்கையாளர்கள் தவிக்கிறார்கள்.

என்ன செய்யலாம்?

இன்றைய காலகட்டத்தில் வங்கிகள், பாண்ட் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடு களை யாராலும் தவிர்க்க இயலாது. மேலும், ஓரிரு முதலீட்டுக் கணக்குகள் தவறாகப் போகவும் வாய்ப்பு உண்டு. ஆனால், அவை நம் முதலீட்டைக் கபளீகரம் செய்துவிடாமல் பாதுகாக்க:

1. கூடியவரை பெரும் நிறுவனங்கள், வங்கிகள் இவற்றில் ஒரு பகுதியை முதலீடு செய்வது நல்லது.

2. புதிய முதலீடுகளில் உள்ள ரிஸ்க் பற்றி சரிவரப் புரிந்துகொள்ளாமல் இறங்குவது தவறு.

3. ஓரிரு சதவிகித வட்டிக்கு ஆசைப்பட்டு தரம் குறைந்த நிறுவனங் களில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பதே சரி.

4. நம் மொத்த முதலீட்டில் 5 - 10% வரையே புதிய முதலீடுகளில் போட வேண்டும்.

5. எல்லாவற்றுக்கும் மேலாக, நம் பொருளாதார அறிவை மேம்படுத்திக் கொள்ள நிறைய படிக்க வேண்டும். படித்து நம் அறிவை வளர்த்துக் கொள்வதன் மூலமே நாம் சுயசார்பை பெற்று சுதந்திரமாக இருக்க முடியும். எதில், எவ்வளவு கிடைக்கும் என்பதையும், அதில் உள்ள சிக்கல் களையும் தெரிந்துகொண்டு செயல் பட்டால், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்க வேண்டியிருக்காது!