மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உங்கள் போர்ட்ஃபோலியோவில் இன்டர்நேஷனல் ஃபண்டுகள் இடம்பெறுவது அவசியமா?

இன்டர்நேஷனல் ஃபண்டுகள்...
பிரீமியம் ஸ்டோரி
News
இன்டர்நேஷனல் ஃபண்டுகள்...

மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச்! - 7

ஆரத்தி கிருஷ்ணன், primeinvestor.in

இன்றைய நிலையில், இந்திய முதலீட்டாளர்கள் சர்வதேச சந்தைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சர்வதேச ஃபண்டுகள், ஃபீடர் ஃபண்டுகள், வெளிநாட்டு சந்தைக் குறியீடுகள் மற்றும் நேரடி வெளிநாட்டு நிறுவனப் பங்குகள் என அதற்கான முதலீட்டுப் பட்டியல் நீள்கிறது.

ஆரத்தி கிருஷ்ணன் 
primeinvestor.in
ஆரத்தி கிருஷ்ணன் primeinvestor.in

எனவே, போர்ட்ஃபோலியோவில் சர்வ தேசப் பங்களிப்பையும் சேர்க்க வேண்டுமா என்ற கேள்வி பலரிடம் எழுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. சர்வதேச சந்தைகளில் முதலீடு செய்வதன் மூலம் நமது போர்ட் ஃபோலியோவைப் பல்வகைப்படுத்துவது அவசியமா, அப்படி அவசியம் எனில், நேரடி யாகப் பங்குகளில் முதலீடு செய்யலாமா அல்லது மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமாக முதலீடு செய்யலாமா என்கிற கேள்விகளுக்கான பதிலைப் பார்க்கும்முன் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

இந்திய முதலீட்டாளர்கள் வெளிநாட்டுப் பங்குகளில் அல்லது ஃபண்டுகளில் முதலீடு செய்து போர்ட்ஃபோலியோவைப் பல்வகைப்படுத்த வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. காரணம், சமீபத்திய சர்வதேச பொருளாதாரப் பின்னடைவு களிலும்கூட, இந்தியாவின் வளர்ச்சி வலுவாகவே இருந்து வருகிறது. இதனால் இந்திய நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் இரண்டிலுமே செல்வத்தை உருவாக்கும் வாய்ப்புகள் இந்திய முதலீட்டாளர்களுக்கு இருந்து வருகிறது. அதே சமயம், மிகவும் அனுபவமுள்ள முதலீட்டாளர்கள் சர்வதேச அளவில் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் குறிப்பிட்ட இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

வெளிநாட்டுப் பங்குகள், ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்குத் தயாராகும் முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங் களை இனி பார்ப்போம்.

உங்கள் போர்ட்ஃபோலியோவில் 
இன்டர்நேஷனல் ஃபண்டுகள் இடம்பெறுவது அவசியமா?

1. ஏற்றம் தரும் துறைகள்...

பங்கு முதலீட்டாளர்களில் ஒரு பகுதியினர் அவர்களது போர்ட் ஃபோலியோ மதிப்பில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் இல்லாத வரையில் 15% வருமானம் என்பதே போதும் என்று மகிழ்ச்சி அடைகின்றனர். அதே சமயம், பிற முதலீட்டாளர்கள் அதிக வருமானம் பார்ப்பதற்காக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கிறார்கள். அப்படியான துணிகர முதலீட்டாளர்கள் பத்தாண்டுகள் மற்றும் அதற்குமேல் முதலீட்டை நிர்வகித்து நல்ல வருமான வளர்ச்சியைத் தரக்கூடிய வகையிலான துறைகளில் ரிஸ்க் எடுக்க விரும்புகிறார்கள். ஆனால், இந்தியப் பங்குச் சந்தைகளில் இவர்களுக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன.

அதாவது, கொரோனா காலத்தில் கோவிட் தடுப்பூசி உருவாக்கிய நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்பினார்கள். வளர்ந்துவரும் இயந்திரக் கற்றல் / செயற்கை நுண்ணறிவு (Mechine Learning / Artificial Intelligence) ஆராய்ச்சியில் ஈடுபடும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளைச் சொந்தமாக்க விரும்பினார்கள். ஆன்லைன் கற்றல் நிறுவ னங்களையும் தேடினார்கள். மந்தநிலைகளில் சிக்காத சில விசித்திரமான வணிகங்களிலும் முதலீடு செய்ய முயற்சி செய்தார்கள்.

ஆனால், இந்தியாவில் இவர்களுக்கான வாய்ப்புகள் வைக்கோல் இடுக்கில் ஊசியைத் தேடுவது போலத்தான் இருக்கிறது. இந்தியப் பங்குச் சந்தையில் நிறுவனங்கள் தங்கள் பங்குகளைப் பட்டியலிடுவதற்கு செபி அமைப் பானது, நிறுவனங்களின் லாப வளர்ச்சி, வருவாய் எனக் கடுமையான பல விதிமுறைகளை வைத்துள்ளது. இதன் காரணமாகவே ஆரம்ப நிலையில் உள்ள நிறுவனங்கள், வலுவான அடிப்படைக் காரணிகளைக் கொண்டிருக்காத நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் இருந்து விலகி இருக்கின்றன.

ஆனால், சமீப காலங்களில் ஓலா, ஸ்விக்கி, டன்சோ, பைஜூஸ், ஸொமேட்டோ போன்ற வேகமாக வளரும் நிறுவனங்கள் பங்குச் சந்தைகளுக்கு வரத் தொடங்கி இருக்கின்றன. துணிகர முதலீட்டாளர்கள் இதுபோன்ற ‘வேகமாக வளரும் துறை சார்ந்த’ நிறுவனங்களில் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள். இது போன்ற துறைகள் சார்ந்த நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தைகளைக் காட்டிலும் வெளிநாட்டு சந்தைகளில் அதிகமாக உள்ளன.எனவே, ஒருவரது போர்ட்ஃபோலியோ பரவலாக்கத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள நிறுவனப் பங்குகள் சரியான தேர்வாக இருக்கும்.

2. முதலீட்டுக்கான பாதுகாப்பு...

ஒரே திசையில் நகராத பல்வேறு சொத்துகளில் முதலீட்டைப் பரவலாக்க முதன்மையான அடிப்படைக் காரணம் ஏற்ற இறக்கமான சூழலில் இருந்து முதலீடுகளின் வருமானத்தைப் பாதுகாப்பதுதான். அந்த வகையில், வெவ்வேறு நாடுகளின் பங்குச் சந்தை குறியீடுகள் ஒரே மாதிரியான போக்கில் நகர்வதில்லை.

2015-ல் சென்செக்ஸ் கடும் இறக்கத்தைச் சந்தித்தது. ஆனால், ஐரோப்பிய மற்றும் ஜப்பான் சந்தைக் குறியீடுகள் அந்த ஆண்டை நல்ல ஏற்றத்தில் நிறைவு செய்தன. 2017-ல் சென்செக்ஸ் 28% லாபத் துடன் நிறைவு செய்தது, ஆனால், சீனாவின் ஹாங்செங் 36% லாபத் துடன் சிறப்பாக இருந்தது. காரணம், சர்வதேச சந்தைகள் பெரும்பான்மையாக உள்நாட்டை சார்ந்தவையாக இருக்கின்றன. இதனால் அமெரிக்கா போன்ற நாடுகளின் சந்தைகள் சர்வதேச நெருக்கடிகளின்போது, இந்தியா போன்ற வளரும் நாடுகளைக் காட்டிலும் குறைவாகவே பாதிக்கப் படுகின்றன.

இதற்கு நல்லதோர் உதாரணம், 2000-ல் நடந்த இணையதளக் குமிழ் உடைப்பு (DotCom Bubble Crash). அப்போது சென்செக்ஸ் 21% வீழ்ந்தது. ஆனால், அமெரிக்க டவ் ஜோன்ஸ் சந்தை 6% மட்டும் இறக்கம் கண்டது. 2008 லேமன் பிரதர்ஸ் நெருக்கடியின்போதும் சென்செக்ஸ் 52% வீழ்ச்சி கண்டது. ஆனால், அமெரிக்க சந்தை 34% மட்டுமே வீழ்ந்தது. எனவே, நிலையான வளர்ச்சி அடைந்த சந்தைகளில் கணிசமான முதலீடு களை வைத்திருப்பதன் மூலம், நெருக்கடி சமயங்களில் ஏற்படும் சவால்களிலிருந்து முதலீட்டைப் பாதுகாக்க முடியும்.

3. டாலரில் கிடைக்கும் வருமானம்...

வாரன் பஃபெட்டின் பிரபல மான கருத்து ஒன்று உண்டு. ‘அமெரிக்கா மீது பணயம் வைக் காதீர்கள்’ என்பதுதான் அது. ஆனால், அவருடைய பெரும் பகுதியான வருமானம் அமெரிக்க நிறுவனப் பங்குகளில் இருந்துதான் வந்திருக்கிறது / வருகிறது. அதே போல, இந்திய முதலீட்டாளர்களும் தங்களின் போர்ட்ஃபோலியோ வில் ஒரு பகுதியை டாலர் மதிப்பிலான பங்குகளில் முதலீடு செய்து வருவதன் மூலம் தங்கள் போர்ட்ஃபோலியோ வருமானத் தைக் கணிசமாக அதிகரித்துக் கொள்ள முடியும்.

1994-ம் ஆண்டு ஆரம்பத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 31.3-ஆக இருந்தது. 1999 ஜனவரியில் 42.5 வரை ரூபாயாக மதிப்பு சரிந்தது. ஜனவரி 2004-ல் 45.2-ஆகக் குறைந்தது. 2009-ல் 48.8-ஆகவும், தற்போது ரூபாய் மதிப்பு 82 ரூபாய்க்கு மேலாகவும் குறைந்திருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிற நிலையில் இந்திய முதலீட்டாளர்கள் அமெரிக் கப் பங்குகளில், அமெரிக்க ஃபண்டுகளில் கடந்த 20 ஆண்டுகளில் முதலீடு செய் திருந்தால், அவர்களுடைய போர்ட்ஃபோலியோ உள்நாட்டு முதலீட்டைக் காட்டிலும் நல்ல வருமானத் தைத் தந்திருக்கும். எப்போ தெல்லாம் நெருக்கடிகள் தலைதூக்குகிறதோ, அப்போதெல்லாம் முதலீட் டாளர்களுக்குப் பாதுகாப் பாக டாலர் இருக்கும்.

இந்தியச் சந்தைகள் எஃப்.பி.ஐ, எஃப்.ஐ.ஐ முதலீடுகளைச் சார்ந்து இருப்பதால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு உள்நாட்டு முதலீடுகள் மீதான வருமான வளர்ச்சியை நன்றாகவே பாதிக்கும். தவிர, டாலர் மதிப்பிலான முதலீடுகளை மேற்கொள்ளும்போது போர்ட்ஃபோலியோவுக்குப் பேரியல் காரணிகளால் வரும் ஆபத்துகளையும் சமாளிக்க முடியும். உதாரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்வு, வட்டி விகித உயர்வு, எஃப்.பி.ஐ முதலீடுகள் வெளியேற்றம் போன்ற காரணிகள் சந்தையை பாதிக்கும்போது, வெளிநாட்டுப் பங்குகளில், ஃபண்டுகளில் குறிப்பாக, டாலர் சார்ந்த முதலீடுகளை மேற்கொள்ளும்போது ரூபாய் சரிவால் உண்டாகும் சவால்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். குறிப்பாக, வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும்பட்சத்தில், வெளிநாடுகளில் குழந்தைகள் படித்துவரும்பட்சத்தில், ரூபாய் வீழ்ச்சியானது பெரிய அளவில் நிதிநிலையை பாதிக்கும். எனவே, இதுபோன்ற சந்தர்ப்பங்கள் உள்ளவர்கள் டாலர் சார்ந்த முதலீடுகளை மேற்கொள்வது மிகவும் உதவியாக இருக்கும்.

மேற்சொன்ன காரணங்கள் அனைத்தையும் அலசிப் பார்த்து, வெளிநாட்டுப் பங்கு / ஃபண்டுகளில் முதலீடு செய்வதாக முடிவெடுத்தால், உங்கள் போர்ட்ஃபோலியோவில் 10% - 20% ஒதுக்கீடு செய்து முதலீட்டை மேற்கொள்ளலாம்.

நேரடிப் பங்குகளா அல்லது ஃபண்ட் முதலீடா..?

கொரோனா காலத்துக்குப் பிறகு சந்தைகளையும், துறை செயல்பாடுகளையும் புரிந்துகொள்வது சற்று கடினமானதாகவே உள்ளது. எனவே, முதலீடு செய்யப்போகும் நிறுவனம், அதன் செயல்பாடு, அது சார்ந்த துறையின் செயல்பாடு அனைத்தையும் அலசி ஆராய்ந்தபின்னர் நேரடியாக முதலீடு செய்ய வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் ஃபெமா (FEMA), எல்.ஆர்.எஸ் (LRS) உள்ளிட்ட விதிமுறைகளின்படி முதலீடுகளை மேற் கொள்ளலாம். விதி முறைகளை மீறினால் நடவடிக்கைக்கு ஆளாக வேண்டும். மேலும், வெளிநாட்டுப் பங்குகளில் வர்த்தகம் செய்ய தரகுக் கட்டணமும் சற்று அதிக மாக இருக்கும்.

நிறுவனங்களை, துறைகளை அலசி ஆராய்ந்து முடிவு செய்ய முடியாதபட்சத்தில், ஃபண்ட் மூலமாக முதலீடுகளை மேற்கொள்வது சிறந்த வழியாக இருக்கும். டாலர் சார்ந்து பலன் தரக்கூடிய அமெரிக்க நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதன்மூலம் நல்ல லாபத்தை அடையலாம். அதே சமயம், இந்தியா போன்ற வேறு வளரும் நாடுகளின் சந்தைகளில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

(ஆய்வு தொடரும்)

தமிழில்: ஜெ.சரவணன்