Published:Updated:

கவலை தரும் கடன் ஃபண்டுகள்... கலக்கல் வருமானத்துக்கு கச்சிதமான முதலீட்டு வழிகள்!

முதலீட்டு வழிகள்...
பிரீமியம் ஸ்டோரி
முதலீட்டு வழிகள்...

C O V E R S T O R Y

கவலை தரும் கடன் ஃபண்டுகள்... கலக்கல் வருமானத்துக்கு கச்சிதமான முதலீட்டு வழிகள்!

C O V E R S T O R Y

Published:Updated:
முதலீட்டு வழிகள்...
பிரீமியம் ஸ்டோரி
முதலீட்டு வழிகள்...

இன்றைக்கு எல்லோரையும் கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறது கடன் ஃபண்டுகள் மூலம் கிடைக்கும் வருமானம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட சிறிது அதிக வருமானம் தந்துவந்த கடன் ஃபண்டுகள், தற்போது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட குறைவாக வருமானம் தருகின்றன. கடன் ஃபண்டுகளின் வருமானம் ஏன் குறைகிறது, ஓரளவு அதிக வருமானம் தரும் திட்டங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், 
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.
prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www. prakala.com)

காரணம் என்ன?

பொதுவாக, பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும்போது பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை குறைவாகத்தான் இருக்கும். ஆகவே, நுகர்வை ஊக்கப்படுத்தி வளர்ச்சியை அதிகப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும். நமது ஜி.டி.பி வளர்ச்சி விகிதமானது, 2016-17-ல் 8.26 சதவிகிதமாக இருந்தது, 2019-20-ல் 4.04 சதவிகிதமாகவும், சென்ற ஆண்டில் -7.25 சதவிகிதமாகவும் உள்ளது. (பார்க்க, வரைபடம்). ஆக, கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, நமது ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. சென்ற ஆண்டு கொரோனா தாக்கம், நமது பொருளாதார வளர்ச்சியை பூஜ்ஜியத்துக்கும் கீழே கொண்டு சென்றுவிட்டது. அதைத் தொடர்ந்து வந்த கொரோனா இரண்டாம் அலையும் மீண்டுவந்த பொருளாதார வளர்ச்சியைக் கொஞ்சம் மட்டுப் படுத்தியுள்ளது. இதுபோன்ற அசாதரணமான சூழ்நிலைகள்தான் இன்றைய குறைவான வட்டி விகிதத்துக்கு முக்கியமான காரணம்.

ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் (%)
ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் (%)

தரமான நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன்...

குறைவான வட்டி விகிதம் இருந்தால்தான் தேவை அதிகரிக்கும். பலரும் கடன் வாங்கி, வீடு வாங்கு வார்கள்; கார் வாங்குவார்கள்; வீட்டுக்குத் தேவையான பல நுகர்பொருள் களை வாங்குவார்கள். தொழில்களுக்கு குறைவான வட்டி விகிதத்தில் கடன் கிடைத்தால்தான் தொழில்கள் தழைக்கும். இந்தக் குறைவான வட்டி விகிதத்தை நிலைநாட்டுவதற்கு நமது ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை கையாள்கிறது. முக்கியமாக, அதிக ரேட்டிங் (AAA) கொண்ட தரமான நிறுவனங்கள் அனைத்துக்கும் மிக மிகக் குறைந்த மலிவான (நினைக்க முடியாத அளவுக்கு) வட்டியில் குறுகியகால கடன்கள் தற்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் காரணத்தால் வங்கிகளும் தனது டெபாசிட்தாரர்களுக்கு குறைவான வட்டி விகிதத்தையே தருகின்றன. உதாரணமாக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 1 வருட டெபாசிட்டுக்கு 4.90% வட்டியையும், 5 – 10 வருட டெபாசிட்டுக்கு 5.40% வட்டியையும் வழங்குகிறது.

பிரச்னை ஏற்படுத்திய ஃப்ராங்க்ளின் நிறுவனம்...

சென்ற வருடம், முதல் கொரோனா அலை வந்தபோது, ஃப்ராங்க்ளின் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நடத்தி வந்த ஆறு திட்டங்கள் திடீரென, லிக்விடிட்டி பிரச்னையால், மூடப் பட்டன. அந்தத் திட்டங்களில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் அனை வருக்கும் இன்றளவும் சரியாகப் பணம் திரும்ப வந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், அந்த பிரசனைக்குப் பிறகு, பெரும்பாலான ஃபண்ட் நிறுவனங்கள், தங்களது கடன் ஃபண்டுகளின் போர்ட் ஃபோலியோவை உயர்தரமான (AAA மற்றும் அரசாங்க) பாண்டு களுக்கு மாற்றிவிட்டன. ஏனென்றால், உயர்தரமான பாண்டுகளைத்தான் நினைத்த வுடன் விற்க முடியும். ஆனால், அந்த வகை பாண்டுகள் குறைந்த வட்டியைத்தான் தரும்.

குறைவான வட்டி, உயர் தரமான பாண்டுகள் ஆகிய இரு காரணங்களால் கடன் சார்ந்த ஃபண்டுகளின் வருவாய் குறைந்து விட்டது. இருந்தாலும், 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய தயாராக இருப்பவர்களுக்கு, கடன் ஃபண்டுகள் வங்கி டெபாசிட்டுகளைவிட சற்று அதிகமான நிகர வருவாயைத் தந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போது இந்தக் கடன் ஃபண்டுகள் மற்றும் நமது வங்கி டெபாசிட்டுகளின் வட்டி விகிதம் உயரும்? அரசாங்கங்கள் புதிதாகப் பணத்தை அச்சடித்து வெளியிடும் ஈஸி மணி பாலிசியைக் கைவிட ஆரம்பிக்கும்போது, வட்டி விகிதம் உயரும். அந்த நிலை வர ஓரிரு ஆண்டுகள் ஆகலாம்.

சரி, இந்த நிலையை எவ்வாறு சமாளிக்கலாம், அதிக வருமானத்தை ஈட்ட என்னென்ன வழிகள் உள்ளன என்று கேட்டால், கீழ்க்கண்ட திட்டங்களை ஒருவர் நிச்சயம் பரிசீலிக்கலாம்.

1. ஆர்.பி.ஐ பாண்டுகள், 2. பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் (PPF), 3. செல்வமகள் திட்டம், 4. சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டம், 5.பிரதம மந்திரி வயவந்தனா யோஜனா, 6. ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி டெபாசிட்டுகள், 7. வங்கிசாரா நிதி நிறுவன டெபாசிட்டுகள்,8. லாங் டேர்ம் கடன் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், 9. மத்திய அரசு பாண்டுகள், 10. பெர்பெச்சுவல் பாண்டுகள், 11. பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகள், 12.கன்ஸர்வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்டுகள், 13.ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டுகள்.

இந்தத் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகக் காண்போம்.

கவலை தரும் கடன் ஃபண்டுகள்...
கலக்கல் வருமானத்துக்கு கச்சிதமான முதலீட்டு வழிகள்!

ஆர்.பி.ஐ பாண்டுகள்

பொதுவாக, இவை ஆர்.பி.ஐ ஃப்ளோட்டிங் ரேட் பாண்டுகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஒருவர் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். உச்சவரம்பு கிடையாது. தற்போது ஆண்டுக்கு 7.15% வட்டியை வழங்குகின்றன. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வட்டி கிடைக்கும். இதன் முதிர்வு காலம் ஏழு ஆண்டுகள். இதன் வட்டி விகிதம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாறுபடும். ஏறவும், இறங்கவும் செய்யும். ஆனால், எப்போதும் நேஷனல் சேவிங்ஸ் சர்ட்டிஃபிகேட்டைவிட (NSE) 0.35% அதிகமாக இருக்கும்.

அரசாங்கப் பாதுகாப்புடன் இந்த அளவு அனைத்து வயதினருக்கும் வட்டி கிடைப்பது சிறப்பான விஷயம். எதிர் காலத்தில் வட்டி உயர்ந்தால் என்னவாகும் என நாம் நினைக்கலாம். ஃப்ளோட்டிங் ரேட் என்பதால், ஏறும்போது இந்த பாண்டுகளின் வட்டி விகிதமும் ஏறிவிடும். அதிக பாதுகாப்பை விரும்புபவர் களுக்கு, இந்த பாண்டுகளைவிட வேறொரு திட்டத்தைச் சொல்ல முடியாது.

பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் (PPF)

இது நம்மில் பலருக்கு ஒரு பரிச்சயமான முதலீடு. அஞ்சலகம் மற்றும் வங்கிகள் மூலம் இந்தத் திட்டத்தைத் தொடங்கலாம். முதிர்வுக் காலம் 15 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகும் நீட்டித்துக்கொள்ளலாம். அனைத்து வயதினரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஒருவர் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் முதலீடு செய்யலாம். தற்போதைய வட்டி விகிதம் 7.10% ஆகும். அவ்வப்போது அரசு அறிவிப்புக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபடும். செய்யும் முதலீட்டுக்கு செக்‌ஷன் 80சி-யின் கீழ் வரிச்சலுகையும் பெற்றுக்கொள்ளலாம். மிகுந்த பாதுகாப் பைக் கொண்ட முதலீடு ஆகும்.

செல்வமகள் திட்டம்

இந்தத் திட்டம் பெண் குழந்தை களுக்கானது. தற்போது 7.60% வட்டியை வழங்குகிறது. ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரைக்கும் முதலீடு செய்ய லாம். அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகள் வாயிலாக இந்தத் திட்டத்தைத் தொடங் கலாம். 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தை யின் பெயரில் இந்தத் திட்டத்தைத் தொடங்கலாம். அதிகபட்சமாக 15 வருடங்கள் வரை இந்தத் திட்டத்தை வைத்துக்கொள்ளலாம்.

சீனியர் சிட்டிஸன்ஸ் சேவிங்ஸ் ஸ்கீம்

இதில் முதியோர்கள் மற்றும் விருப்ப ஓய்வு வாங்கியவர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும். தற்போது ஆண்டுக்கு வட்டி விகிதம் 7.40% ஆகும். காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கிடைக்கும். அதிக பட்சமாக ஒருவர் ரூ.15 லட்சம் வரைக்கும் முதலீடு செய்ய முடியும். அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகள் மூலமாக இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தின் முதிர்வுக் காலம் 5 வருடங்கள் ஆகும். அதற்குமேல் 3 வருடங்களுக்கு நீட்டித்துக்கொள்ளலாம். இதுவும் அரசுத் திட்டம் என்பதால், அதிக பாதுகாப்பைக் கொண்டது.

பிரதம மந்திரி வயவந்தன யோஜனா

இதுவும் முதியோர்களுக்கென்று அறிவிக்கப்பட்ட ஓர் அரசுத் திட்டம் ஆகும். குறைந்தபட்சம் ரூ.1.50 லட்சமும் அதிகபட்சமாக ரூ.15 லட்சமும் இதில் ஒருவர் முதலீடு செய்யலாம். இதன் தற்போதைய வட்டி விகிதம் 7.40% ஆகும். இதன் முதலீட்டுக் காலம் 10 வருடங்கள் ஆகும். இந்தத் திட்டம் எல்.ஐ.சி மூலமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது.

ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள்

ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள், பிற வங்கிகளுடன் ஒப்பிடும்போது, 1 – 2% அதிகமான வருமானத்தைக் கொடுக்கின்றன. இந்த வகை வங்கி டெபாசிட்டுகளுக்கும் பிற வங்கி களைப் போல, ரூ 5 லட்சம் வரைக்கும் டெபாசிட் இன்ஷூரன்ஸ் உள்ளது. ஈக்விட்டாஸ் வங்கி 888 நாள்கள் டெபாசிட்டுக்கு 6.50 சதவிகிதமும், முதிர்யோர்களுக்கு 7 சதவிகிதமும் வட்டி வழங்குகிறது. இதுபோல் 10 ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் இந்தியா முழுவதும் உள்ளன.

வங்கிசாரா நிதி நிறுவன டெபாசிட்டுகள்

வங்கிசாரா நிதி நிறுவனங்களும் வங்கிகளைவிட 1 – 2% அதிக வட்டி வருமானம் தருகின்றன. நல்ல ரேட்டிங் கொண்ட நிறுவன டெபாசிட்டுகளில் முதலீடு செய்து கொள்வது பாதுகாப்பைத் தரும்.

லாங் டேர்ம் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்

தற்போது குறுகியகால கடன் ஃபண்டுகளான ஓவர்நைட், லிக்விட் மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள் ஆண்டுக்கு 3 – 4% வட்டியைக் கொடுக்கின்றன. அதே சமயத்தில், மூன்று வருடங்களுக்கு மேல் ஒருவர் முதலீடு செய்ய நினைத்தால், வங்கி டெபாசிட்டு களைத் தாண்டிய வருமானம் கிடைக்க வல்லது. ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள், மீடியம் டேர்ம் ஃபண்டு கள், கிரெடிட் ரிஸ்க் ஃபண்டுகள், டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டுகள், கார்ப்பரேட் பாண்ட் ஃபண்டுகள் எனப் பல கேட்டகிரி ஃபண்டுகள் வங்கி டெபாசிட்டுகளையொட் டியோ, அவற்றைவிட அதிகமாகவோ கிடைக்கவல்லது. இதில் கிடைக்கும் மற்றொரு பெரிய நன்மை, நமக்கு வேண்டியபோது ஒரு பகுதியாகவோ, முழுதாகவோ பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு அபராதமும் விதிக்கப்படுவதில்லை. மேலும், மூன்று வருடங்களுக்கு மேல் வைத்திருக்கையில், பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்துக்குத்தான் வரி செலுத்த வேண்டிவரும் – அதுவும் 20 சதவிகிதத்தில்!

மத்திய அரசாங்க பாண்டுகள்

நமது மத்திய அரசாங்கம் நேரடியாக விற்பனை செய்யும் பாண்டுகள் இவை. பொதுவாக வங்கிகள், மியூச்சுவல் ஃபண்டுகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், பென்ஷன் ஃபண்டுகள் போன்ற நிறுவன முதலீட்டாளர்கள்தாம் நேரடி மத்திய அரசாங்க பாண்டுகளில் முதலீடு செய்கிறார்கள். ஆனால், சிறு முதலீட்டாளர்களும் இந்த வகை பாண்டுகளில் முதலீடு செய்யலாம். தற்போது 10 வருட மெச்சூரிட்டி கொண்ட அரசாங்க பாண்டுகள் வருடத்துக்கு 6.05% வட்டியை வழங்கு கின்றன. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அரசாங்கம் வட்டியை வழங்கும்.

பெர்பெச்சுவல் பாண்டுகள்

முதிர்வில்லாத இவ்வகை பாண்டுகள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால், தங்களது மூலதன கட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக வழங்கப்படுகின்றன. தற்போது, நிறுவனத்தைப் பொறுத்து 7 – 9% ஆண்டுக்கு வட்டி கிடைக்கிறது. இந்த வகை பாண்டுகளுக்கு ரிஸ்க் உள்ளது. சமீபத்தில் யெஸ் பேங்க், லட்சுமி விலாஸ் பேங்க் போன்ற வங்கி பாண்டுகளில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் இழப்பைச் சந்திக்க நேர்ந்தது. ஆகவே, முதலீட்டாளர்கள் நன்கு ஆராய்ந்து முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும்.

பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகள்

நாம் இதுவரை மேலே கொடுத்த திட்டங்கள் அனைத்தும் நிரந்தர வருமானம் தரக்கூடிய திட்டங்கள் ஆகும். ஆனால், குறைந்தது நான்கு, ஐந்து வருடங்களுக்குக் காத்திருக்க முடிந்தவர்கள், ஓரளவு ரிஸ்க் எடுக்கலாம் என நினைப்பவர்கள், கலப்பினத் திட்டங்களில் ஒன்றான பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகளை நாடலாம்.

பங்குச் சந்தையின் மதிப்பீட்டுக்கு ஏற்ப, இந்த வகை ஃபண்டுகள் தங்களின் பங்கு சார்ந்த முதலீட்டை ஏற்றி, இறக்கிக் கொள்ளும். தற்சமயத்தில் இவ்வகை ஃபண்டுகள் 30 – 50% வரை பங்கு சார்ந்த முதலீட்டில் வைத்துள்ளன. நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சுமார் 9 - 10% வருமானத்தைத் தரவல்லது. மொத்தமாக, முதலீடு செய்யும்போது, மாதாந்தர வருமானத்தையும் ஏற்படுத்திக்கொள்ளலாம். இந்த வித ஃபண்டுகளுக்கு ஈக்விட்டி டாக்ஸேஷன் உரித்தாகும்.

கன்ஸர்வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்டுகள்

பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகளைவிட சற்று ரிஸ்க் குறைவானவை. பங்கு சார்ந்த முதலீட்டில் 10 – 25% முதலீட்டையும், எஞ்சியதை பாண்டுகளிலும் இந்த வகைத் திட்டங்கள் முதலீடு செய்யும். குறைந்தது 35 ஆண்டுகளாவது பணம் தேவையில்லாதவர்கள் இந்த வகைத் திட்டங்களைப் பரிசீலிக்கலாம்.

ஆண்டுக்கு சுமார் 8 - 9% வருமானத்தை எதிர்பார்க்கலாம். இந்த வகை ஃபண்டுகளிலும் மாதாந்தர வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். கடன் சார்ந்த ஃபண்டு களுக்கான டாக்ஸேஷன் இந்த வகை ஃபண்டுகளுக்கு உரித்தாகும்.

ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டுகள்

இந்த வகை ஃபண்டுகள், பங்குகள், பாண்டுகள் மற்றும் ஆர்பிட்ரேஜ் வாய்ப்புக்களில் முதலீடு செய்கின்றன. இந்த வித ஃபண்டுகளுக்கு ஈக்விட்டி டாக்ஸேஷன் உரித்தாகும். ஆண்டுக்கு சுமார் 8 - 9% வருமானத்தை எதிர் பார்க்கலாம். குறைவான ரிஸ்க்கை கொண்ட ஃபண்டுகளாகும்.

கடன் ஃபண்டுகளைவிட சற்றுக் கூடுதல் வருமானம் தரும் திட்டங் களைச் சொல்லிவிட்டோம். உங்கள் ரிஸ்க் நிலைக்கேற்ப இந்தத் திட்டங்களை நீங்கள் பரிசீலிக்கலாம்!

கவர்டு பாண்டுகள் உங்களுக்கு ஏற்றதா..?

சமீபத்தில் யூடியூப் மூலமாக இவ்வகை பாண்டுகள் பிரபலமாகி வருகின்றன. இவ்வகை பாண்டுகளில் ரிஸ்க்கே இல்லாதது போலவும் மிகவும் பாதுகாப்பானது எனவும் ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. அது உண்மையல்ல. ஐரோப்பாவில் இது பிரபலமென்றாலும், அங்கு வங்கிகளால் இவ்வகை பாண்டுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் ஒருசில தனியார் நிறுவனங்கள் இதை வெளியிட ஆரம்பித்திருக்கின்றன. இது நன்றாக வளர்ச்சி அடைந்து, செபி போன்ற கட்டுப்பாட்டு வாரியத்தின் எல்லைக்குள் வரும்வரை, முதலீட்டாளர்கள் தொடாமல் இருப்பது நல்லது.