Published:Updated:

10 ரூபாயில்கூட முதலீடு... ஃபின்டெக் ஆப்களின் புதிய முயற்சி!

ஃபின்டெக் ஆப்
பிரீமியம் ஸ்டோரி
ஃபின்டெக் ஆப்

டெக்னாலஜி

10 ரூபாயில்கூட முதலீடு... ஃபின்டெக் ஆப்களின் புதிய முயற்சி!

டெக்னாலஜி

Published:Updated:
ஃபின்டெக் ஆப்
பிரீமியம் ஸ்டோரி
ஃபின்டெக் ஆப்

'சிறு துளி பெரு வெள்ளம்’ என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் பழமொழி. சிறுகச் சிறுக சேர்க்கும் தொகை பிற்பாடு பெரிய தொகையாக மாறும். இந்தத் தொகை வெறும் சேமிப்பாக இல்லாமல் முதலீடாக மாறினால் நன்றாக இருக்கும் அல்லவா..? அதற்கு வழிசெய்து தந்திருக்கின்றன சமீபத்தில் வந்திருக்கும் சில ஃபின்டெக் நிறுவனங்கள்.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

சில்லறை முதலீடு...

இன்றைக்கு நாம் பல பொருள்களை பல நூறு ரூபாய்க்கு வாங்குகிறோம். ஒவ்வொரு முறை பொருள் வாங்கும்போதும் ஏதாவது கொஞ்சம் தொகை மிச்சமாகும். மிச்சமாகும் இந்தத் தொகையை முதலீடு செய்தால், எப்படி இருக்கும்? உதாரணமாக, ஒரு டூத்பேஸ்ட்டை வாங்குகிறீர்கள். அதன் விலை ரூ.94. நீங்கள் 100 ரூபாயைத் தந்தால், கடைக்காரர் 6 ரூபாயை மிச்சமாகத் தருவார். இந்தப் பணத்தை மீண்டும் செலவு செய்ய பயன்படுத்தாமல், முதலீடு செய்ய பயன்படுத்தினால், நம்மால் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய பணம் சேர்க்க முடியும் இல்லையா? இப்படி கொசுறாக மிஞ்சும் பணத்தை மியூச்சுவல் ஃபண்ட், தங்கம் எனப் பலவற்றிலும் முதலீடு செய்ய முடியும்.

இந்தப் புதிய முதலீட்டு முறைக்கு `சேஞ்ச் இன்வெஸ்ட்டிங் (Change Investing) என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதாவது, சில்லறை முதலீடு. இதன் மூலம் சிறிய தொகையை வைத்திருப்பவர்களிடையே சேமிப்பு மற்றும் முதலீட்டுப் பழக்கத்தைக் கொண்டு வர முடியும் என நம்புகின்றன இந்த ‘சேஞ்ச் இன்வெஸ்ட்டிங்’ செயலியை முன்நிறுத்தும் ஆப் நிறுவனங்கள்.

முதலீடு என்றாலே அதைச் செய்ய ஆயிரம், இரண்டாயிரம் எனப் பெருந்தொகை வேண்டும் எனப் பலரும் நினைக்கிறார்கள். அதையும் மார்ச் மாதக் கடைசியில் செய்தால் போதும் என்றும் நினைக்கிறார்கள். இன்னும் சிலர், தங்களிடம் இருக்கும் சொற்பமான பணத்தை வைத்து எப்படி முதலீடு செய்ய முடியும் என நினைக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் பயனளிக் கும் வகையில் சில ஃபின்டெக் நிறுவனங்கள் அப்ரிசியேட் (Appreciate), நியோ (Niyo), ஜார் (Jar) எனச் சில செயலிகளைச் சந்தையில் அறிமுகப் படுத்தி யுள்ளன. இதன்மூலம் `மீதிச் சில்லறை’ எனச் சொல்லக்கூடிய `change money’-யை டிஜிட்டல் கோல்டு, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வழிவகை செய்து தருகின்றன இந்தச் செயலிகள்.

சில்லறை முதலீடு என்பது சிறிய அளவிலான முதலீடு (Micro Investment) என்கிற கருத்தாக்கத்தை அடிப்படை யாகக் கொண்டது. இந்தச் செயலிகளைத் தரவிறக்கம் செய்த பின் பயனாளர்களின் செலவை அது கண்காணிக்கத் தொடங்குவதுடன், சிறிய அளவிலான தொகையை முதலீடு செய்ய வழி ஏற்படுத்தித் தருகிறது.

10 ரூபாயில்கூட முதலீடு... ஃபின்டெக் ஆப்களின் புதிய முயற்சி!

எப்படிச் செயல்படுகின்றன?

இந்த ஃபின்டெக் செயலிகள் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீட்டுக்கு எடுத்துக்கொள்ளும். இப்படி எடுத்துக் கொள்ளும் தொகை `ரவுண்ட் அப்’ தொகையாக இருக்கும். அதாவது, நாம் செலவு செய்யும் தொகைக்குப் பக்கத்தில் இருக்கும் 10, 50, 100 ரூபாய் என்பதாக இருக்கும். நீங்கள் டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலமாகப் பரிவர்த்தனை செய்யும்போது இந்தச் செயலியானது அந்தக் கணக்குடன் இணைக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி இணைத்்திருந்தால், நீங்கள் செலவு செய்யும் தொகைக்கு மிக அருகில் இருக்கும் ‘ரவுண்ட் அப்’ தொகை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து ரூ.100, ரூ.500, ரூ.1,000 என்கிற இலக்கை அடையும்போது அந்தத் தொகையானது, ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும்படி உங்களை அறிவுறுத்தும். (பார்க்க அட்டவணை)

10 ரூபாயில்கூட முதலீடு... ஃபின்டெக் ஆப்களின் புதிய முயற்சி!

நாம் செலவு செய்யும்போது ரூ.100-க்குப் பக்கத்தில் இருக்கும் தொகையை ரவுண்ட் அப் செய்யும்படி இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இப்படி சிறுகச் சிறுக பணம் சேர்ப்பது இந்தக் காலத்து இளைஞர்களுக்கும், மாதம்தோறும் தனியாகப் பணம் ஒதுக்கி முதலீடு செய்யும் ஒழுங்குமுறை இல்லாதவர் களுக்கும் மிகவும் உதவியாக இருக்குமென தனிநபர் நிதி முதலீட்டு ஆலோசகர்கள் சொல்கிறார்கள்.

எப்படிச் சேமிப்பது?

நியோ என்கிற செயலியில் நீங்கள் `சில்லறை முதலீடு’ சேவையைப் பயன்படுத்த வேண்டுமெனில், அந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்த பின் NiyoX என்கிற சேமிப்புக் கணக்கைத் தொடங்க வேண்டும். நீங்கள் நெட் பேங்கிங், டெபிட் கார்டு, யு.பி.ஐ மூலம் செலவு செய்யும் தொகையை இது கண்காணிக்கும். செலவுக்கும் ரவுண்ட் அப் தொகைக்கும் உள்ள வித்தியாசத் தொகை இலக்கை எட்டியவுடன் அதை நீங்கள் விரும்பிய முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இது போல, அப்ரிசியேட், ஜார் போன்ற செயலிகளும் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன.

எச்சரிக்கையாக இருப்பது அவசியம்...

இந்தச் செயலிகள் வழங்கும் அம்சங்களில் பயனாளர் சம்பந்தப்பட்ட சில விவரங்கள் மற்றவர்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயங்களில் முதலிடத்தில் இருக்கிறது. இன்னும் சில செயலிகள் மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து அதைத் திரும்ப எடுக்கும்போது `வெளியேறும் கட்டணம்’ செலுத்த வேண்டியது என்பதை அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கை. மேலும், இந்தச் செயலிகளில் திறக்கப்படும் சேமிப்புக் கணக்கு பயனாளரின் முதன்மை சேமிப்புக் கணக்காக இருக்க வேண்டும் என்கிற நிபந்தனை இருப்பதால், மற்ற வங்கியி லிருக்கும் முதன்மைச் சேமிப்புக் கணக்கை இதற்கு மாற்றுவது சிக்கல் மிகுந்த வேலையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் பரவ லாகப் பயன்பாட்டுக்கு வராத நிலையில் அவசரப்பட்டு, நன்கு யோசித்து இந்த முதலீட்டு முறையைத் தேர்வு செய்வது நல்லது என்கிறார்கள் ஃபின்டெக் துறை சார்ந்த ஆலோசகர்கள்.

`சில்லறை முதலீடு’ என்கிற இந்தப் புதிய முறையில் பல குறைகள் இப்போது இருந்தாலும், இனிவரும் காலத்தில் அந்தக் குறைகள் சரிசெய்யப்படும் போது, மிகக் குறைந்த வருமானம் கொண்டவர்களும் முதலீடு செய்ய முடியும் என்பது நல்ல விஷயம்தானே!`சில்லறை முதலீடு’ என்கிற இந்தப் புதிய முறையில் பல குறைகள் இப்போது இருந்தாலும், இனிவரும் காலத்தில் அந்தக் குறைகள் சரிசெய்யப்படும்போது, மிகக் குறைந்த வருமானம் கொண்டவர்களும் முதலீடு செய்ய முடியும் என்பது நல்ல விஷயம்தானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism