பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

முதலீடு, காப்பீடு, கடன்... கொஞ்சம் தாமதம்... நிறைய இழப்பு! நிஜம் சொல்லும் பணக் கணக்கு

கால தாமதம்...
பிரீமியம் ஸ்டோரி
News
கால தாமதம்...

கவர் ஸ்டோரி

பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் மதிய உணவை நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு முடிக்க வேண்டும் எனில் 50, 60 ரூபாய் இருந்தாலே போதும். ஆனால், இப்போது அந்தத் தொகையைப் போல மூன்று, நான்கு மடங்கு இருந்தால்தான் மதிய உணவைச் சிறப்பாகச் சாப்பிட முடியும். இதன் அர்த்தம், பணத்தின் மதிப்பு குறைந்துவிட்டது என்பதே. அதே பணம்தான். ஆனால், அதன் மதிப்பு மட்டும் காலம் செல்லச் செல்லக் குறைந்துவிடுகிறது. இந்தப் பணத்தின் மதிப்பைத் தக்கவைக்க முதலீடு செய்வது அவசியம். நீங்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு வட்டி / வருமானத்தைச் சம்பாதிப்பதன் மூலம் பணத்தின் மதிப்பைக் குறையாமல் பார்த்துக்கொள்வதன் மூலம், அதை வெகுவாகவும் அதிகரிக்கவும் முடியும். அதற்கு முதலீட்டைச் சீக்கிரமாக ஆரம்பிப்பது அவசியம்.

சிவகாசி மணிகண்டன் 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன்  நிதி ஆலோசகர், Aismoney.com

பணத்தின் காலமதிப்பு...

பணத்தின் காலமதிப்பு என்பது உண்மையிலேயே நேரம்தான். உங்களிடம் தற்போதுள்ள பணத்தின் மதிப் பானது, எதிர்காலத்தில் நிச்சயம் குறையவே செய்யும். உதாரணமாக, 2011-ல் ஒரு பைக்கை வாங்க வேண்டும் எனில், சுமார் ரூ.60,000 - ரூ.65,000 செலவாகியிருக்கும். அதே பைக்கின் விலை 2021-ல் ரூ.85,000-க்குமேல். பத்து ஆண்டுகள் கழித்து நீங்கள் பைக் வாங்க நினைக்கும்போது கூடுதலாகத் தர வேண்டிய விலைதான் இந்த ரூ.20,000. பொருள்களின் விலை அதிகரிப்பதால், பணத்தின் மதிப்பு தானாகவே குறைவதுதான் பணவீக்கம்.

காலதாமதத்தால் ஏற்படும் சிக்கலை நடைமுறையில் நம் வாழ்க்கையில் நேரிடையாகப் பார்க்கிறோம். விமானப் பயணம் அல்லது ரயில் பயணத்துக்குத் திட்ட மிட்டிருக்கிறீர்கள். சரியான நேரத்தில் விமானம் அல்லது ரயிலைப் பிடிக்கவில்லை எனில், சிக்கல் என்பதால், சில மணி நேரங்களுக்கு முன்பாகவே நிலையத்துக்குச் சென்றுவிடுகிறோம். ஒருவேளை, ரயிலை நாம் தவற விட்டால்..? கூடுதலாகச் செலவு செய்து, அடுத்த ரயில் அல்லது பஸ்ஸைப் பிடித்துதான் நாம் ஊர் போய் சேர வேண்டும். ஆனால், பணம், முதலீடு விஷயத்தில் இதை நாம் மறந்துவிடுகிறோம். இதைத் பணத்தின் கால மதிப்பு (Time Value of Money) என்கிறார்கள்.

முதலீடு, காப்பீடு, கடன்... கொஞ்சம் தாமதம்... நிறைய இழப்பு! நிஜம் சொல்லும் பணக் கணக்கு

முதலீட்டில் தாமதம் ஏற்படுத்தும் பாதிப்பு...

ஓய்வுக்காலம் அல்லது குழந்தைகளின் படிப்புக்கான முதலீட்டை மேற்கொள்ள நாம் காலதாமதம் செய்தால், இலக்குத் தொகையை அடைய முதலீடு செய்ய தேவைப்படும் தொகை கணிசமாக அதிகரித்துவிடும். இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.

ஒருவர் தன் பிள்ளையின் பட்டமேற்படிப்பு செலவுக்கு இன்றிலிருந்து 20 ஆண்டுகள் கழித்து ரூ.15 லட்சம் தேவை எனக் கணக்கிடுகிறார். அவர் முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாமல், ஆண்டுக்கு சராசரியாக 8% வருமானம் எதிர்பார்க்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் உடனே முதலீட்டை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டால், மாதம் ரூ.2,546 வீதம் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தாலே போதும். இதுவே முதலீட்டை ஐந்தாண்டுகள் கழித்து ஆரம்பித்தால், மாதம் ரூ.4,335 வீதம் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும்; பத்தாண்டு கழித்து முதலீட்டை ஆரம்பித்தால், மாதம் ரூ.8,200 முதலீடு செய்து வர வேண்டும்.

ஐந்தாண்டுக் காலதாமதம் என்பது முதலீட்டுத் தொகையை 1.7 மடங்கும், பத்தாண்டு தாமதம் 3.22 மடங்கும் அதிகரித்திருக் கிறது. முதலீட்டை 15 ஆண்டுகள் கழித்து மிகக் காலதாமதமாக ஆரம்பித்தால், இலக்குத் தொகை யான ரூ.15 லட்சத்தை அடைய மாதம் செய்ய வேண்டிய முதலீடு ரூ.20,425 ஆகும். இந்தத் தொகையை எத்தனை பேரால் முதலீடு செய்ய முடியும்? பணக் காரர்களால்கூட முடியாது. எனவே, முதலீட்டை எவ்வளவு சீக்கிரமாக ஆரம்பிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அதிக லாபம் உண்டு; இழப்பும் குறைவு. (பார்க்க: அட்டவணை 1)

முதலீடு, காப்பீடு, கடன்... கொஞ்சம் தாமதம்... நிறைய இழப்பு! நிஜம் சொல்லும் பணக் கணக்கு

முதலீட்டை ஓராண்டுக் காலம் கழித்து ஆரம்பித்தால் என்ன இழப்பு?

நிதிக் கோணத்தில் பார்த்தால், முதலீடுகளை ஒரு சில ஆண்டுகள் தள்ளிப்போட்டால், பெரிய அளவிலான லாபத்தை இழக்க நேரிடும். தாமதமான காலத்தில் சேர்ந்திருக்கும் வருமான இழப்பு என்பது நிகர வருமானத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். ஓரிரு ஆண்டுகள்தானே முதலீட்டில் தாமதம் என நாம் நினைக்கிறோம். ஆனால், இழப்பு பல லட்சங்களாக இருக்கிறது. (பார்க்க, அட்டவணை 2)

முதலீடு, காப்பீடு, கடன்... கொஞ்சம் தாமதம்... நிறைய இழப்பு! நிஜம் சொல்லும் பணக் கணக்கு

முதலீட்டை 1, 2 மற்றும் 3 ஆண்டுகள் தாமதமாக ஆரம்பித் தால், இலக்குத் தொகையில் முறையே 11%, 22% மற்றும் 32% குறைகிறது. இதைத் தவிர்க்க, மாத முதலீட்டுத் தொகையான ரூ.10,000–ஐ முறையே ரூ.11,357, ரூ.12,924 மற்றும் ரூ.14,739 என அதிகரிக்க வேண்டும். இவை ஒரிஜினல் முதலீட்டுத் தொகை யான ரூ.10,000-ஐவிட முறையே 13%, 29% மற்றும் 47% அதிகமாகும்.

காப்பீட்டில் தாமதம், பிரீமியத்தை அதிகரிக்கும்...

இதேபோல்தான், இன்ஷூ ரன்ஸ் பாலிசி எடுப்பதிலும். இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கத் தாமதிக்கும் ஒவ்வொரு வருடமும் இன்ஷூரன்ஸ் பிரீமியம் வெகுவாக அதிகரிக்கும். ஆயுள் காப்பீடாக இருந்தாலும் மருத்துவக் காப்பீடாக இருந்தாலும் காலதாமதம் செய்யச் செய்ய பிரீமியம் அதிகரித்துக்கொண்டே செல்லும்.

முதிர்வுத் தொகை கிடைக்கும் எண்டோவ்மென்ட் பாலிசியில் காலதாமதம் அதிகரிக்க அதிகரிக்க (வயது கூடக் கூட) முதிர்வுத் தொகை குறைவதுடன், பிரீமியத் தொகையும் அதிகரிக்கிறது. அந்த வகையில் சீக்கிரம் பாலிசி எடுப்பதால் குறைவான பிரீமியம் செலுத்தி அதிக முதிர்வுத் தொகையைப் பெறலாம். (பார்க்க: அட்டவணை 3)

அட்டவணை 3
அட்டவணை 3

இதுவே முழுமையான ஆயுள் காப்பீட்டு பாலிசியான டேர்ம் பிளான் எனில், வயது அதிகரிக்க அதிகரிக்க பிரீமியம் உயர்ந்துகொண்டே செல்லும். (பார்க்க: அட்டவணை 4). இதைத் தவிர்க்க எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக டேர்ம் பிளான் எடுப்பது நல்லது. பொதுவாக, டேர்ம் பிளான் பாலிசியை வருமானம் ஈட்டும் சம்பாதிக்கும் நபருக்குத்தான் கொடுப்பார்கள். 50 வயதுக்கு மேல் நீங்கள் அதிகம் சம்பாதித்தாலும் அதிக தொகைக்கு டேர்ம் பிளான் கிடைக்க வாய்ப்பு குறைவு. காரணம், உங்கள் உடல் வலிமை மற்றும் உடல்நலம் குறைந்திருக்க வாய்ப்புள்ளதால், பிரீமியம் மிக அதிகமாக இருக்கக்கூடும். அந்த வகையில், வேலைக்குச் சேர்ந்ததும் அல்லது சம்பாதிக்க ஆரம்பித்ததும் டேர்ம் பிளான் எடுத்துவிடுவது லாபகரமாக இருக்கும்.

மருத்துவக் காப்பீட்டு பாலிசியிலும் வயது அதிகரிக்க அதிகரிக்க பிரீமியம் கூடிக்கொண்டே போகும். 35 வயதுள்ள ஒருவர் ரூ.5 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு எடுத்தால், ஆண்டு பிரீமியம் சுமார் ரூ.6,500 முதல் ரூ.8,750 ஆக இருக்கும். இதுவே 50 வயது எனில், பிரீமியம் ரூ.12,500 முதல் ரூ.15,000 ஆக இருக்கும். (பார்க்க: அட்டவணை 5) மேலும், குறிப்பிட்ட வயதுக்கு மேல் அவ்வளவு சுலபமாக மருத்துவக் காப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை.

கடனை அடைப்பதில் தாமதம்...

கடன் என்கிறபோது, இதில் தலைகீழ் உத்தியைப் பயன்படுத்தினால் நல்லது. எவ்வளவு அதிக தொகையைக் கட்ட முடியுமோ, அவ்வளவு அதிக தொகையைக் கட்டி வர வேண்டும். உதாரண மாக, ஒருவர், தனிநபர் கடன் ரூ.10 லட்சம் ஆண்டுக்கு 10.99% வட்டியில் வாங்கியிருக்கிறார். இந்தக் கடனை அவர் 34 மாதங் களில் அடைப்பது எனில், மாதத் தவணை ரூ.34,361 கட்டி வந்தால், மொத்தம் ரூ.11,68,274 கட்ட வேண்டும். அதாவது, வட்டிக்குச் செல்லும் தொகை ரூ.1,68,274 ஆக இருக்கும். இந்தக் கடனை 60 மாதங்களில் அடைத்தால், மாத இ.எம்.ஐ ரூ.21,733 -ஆக இருக்கும். மொத்தம் கட்டும் தொகை ரூ.13,03,980 வட்டிக்குச் செல்லும் தொகை ரூ.3,03,980 ஆகும். இதன் மூலம் கடனை விரைந்து அடைத் தால் வட்டியில் கணிசமான தொகையை மிச்சப்படுத்த முடியும். குறுகிய காலத்தில் கடனைக் கட்டி முடிப்பதுடன், அதிக வட்டியுள்ள கடனையே முதலில் கட்டி முடிக்க வேண்டும்.

முதலீட்டை சீக்கிரமாக ஆரம்பியுங்கள்; அதிக லாபம் பெறும் வாய்ப்பை இழக்காதீர்கள்!

வீட்டுக் கடனை விரைந்து அடைக்க வேண்டுமா?

சொந்த வீட்டுக்கு வழிவகுக்கும் வீட்டுக் கடனுக்கு திரும்பக் கட்டும் அசல் (80சி பிரிவு – நிதி ஆண்டில் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம்) மற்றும் வட்டிக்கு (24 பிரிவு நிதி ஆண்டில் அதிகபட்சம் ரூ.2 லட்சம்) வரிச் சலுகை கிடைக்கிறது. மேலும், இதர கடன்களுடன் ஒப்பிடும்போது வீட்டுக் கடனுக்கான வட்டி மிகவும் குறைவு (தற்போது 6.6 - 7.5%). எனவே, வீட்டுக் கடனை விரைந்து அடைப்பது லாபகரமாக இருக்காது என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது. கூடுதலாகக் கட்டும் தொகையை நல்ல வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் (ஆண்டுக்கு எதிர்பார்க்கும் வருமானம் 12%) முதலீடு செய்துவந்தால், அதிக தொகுப்பு நிதி உருவாகும். அதைக்கொண்டு உங்களின் இதர இலக்குகளை சுலபமாக நிறைவேற்றிக்கொள்ள முடியும்!