Published:Updated:

தவறான நம்பிக்கைகளை நீக்கினால் முதலீட்டில் லாபம் பார்க்கலாம்!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

முதலீடு

சிறு முதலீட்டாளர்கள் ஏன் முதலீட்டில் மோசமாகத் தோல்வியடைகிறார்கள்..? அவர்களில் ஒருவராக நீங்கள் இருப்பதைத் தவிர்க்க, முதலீடுகள் குறித்த தவறான நம்பிக்கைகளை உங்களிடமிருந்து விலக்கிக்கொள்வது அவசியம்.

த.ராஜன் 
நிதி ஆலோசகர், 
Holisticinvestment.in
த.ராஜன் நிதி ஆலோசகர், Holisticinvestment.in

தவறான நம்பிக்கை 1: முதலீடு செய்வதன் ஒரே நோக்கம் வரியைச் சேமிப்பது மட்டுமே!

விளக்கம்: மக்களில் ஒரு பிரிவினர் வருமான வரியைச் சேமிக்க மட்டுமே முதலீடு செய்வார் கள். அதுவும் எண்டோவ்மென்ட் காப்பீட்டு பாலிசியை சிறந்த பாலிசி எனவும், முதலீடு என நினைத்தும் அதில் தொடர்ந்து பிரீமியம் கட்டி வருவார்கள். அவர்களுக்கு வரிச் சேமிப்பு, காப்பீடு, முதலீடு என மூன்று பலன்கள் ஒரே திட்டத்தில் கிடைக்கிறது என ஏஜென்டுகள் சொல்லியிருப்பார்கள். இந்தப் பிரிவினரின் முக்கிய நோக்கம், வருமான வரியை மிச்சப்படுத்துவதாக மட்டுமே இருக்கும். இந்தப் பிரிவில் நீங்கள் இருந்தால், உங்களை நிச்சயம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

மற்றொரு பிரிவு மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி. கல்யாணம் மற்றும் தங்களின் ஓய்வுக் காலத்துக்காகவும் வரிச் சேமிப்புக்காகவும் எண்டோவ்மென்ட் பாலிசிகளில் லட்சக் கணக்கான ரூபாயை பிரீமியமாகக் கட்டி வருபவர்களாக இருப்பார்கள். இந்தப் பிரிவில் ஒருவராக நீங்கள் இருந்தாலும் மாற்றிக் கொள்ள வேண்டும். காரணம், இந்த பாலிசிகளின் மூலம் வரியை வேண்டுமானால் அதிகமாக மிச்சப்படுத்தலாம். ஆனால், முக்கிய நிதி இலக்குகளான பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் கல்யாணச் செலவுகளுக்குத் தேவை யான முழுமையான தொகை கிடைக்காது.

நிதித் திட்டமிடல்படி, குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கும் டேர்ம் பிளான் எடுத்துவிட்டு, மீதித் தொகை யைப் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் கொடுக்கும் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் (நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்) முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.

தவறான நம்பிக்கைகளை நீக்கினால் முதலீட்டில் லாபம் பார்க்கலாம்!

தவறான நம்பிக்கை 2 : பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நிறைய அறிவு தேவை!

விளக்கம்: அப்படியெல்லாம் அதிக அறிவு தேவையில்லை. சாதாரண கூட்டல் கழித்தல் தெரிந்தால் போதும். உலகின் முன்னணி முதலீட்டாளர் வாரன் பஃபெட், “முதலீட்டில் வெற்றிக்கும் ஒருவரின் புத்திசாலித்தனத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. உங்களுக்கு சாதாரண புத்திசாலித்தனம் இருந்தாலே போதும். மேலும், முதலீட்டில் உங்களைச் சிக்க வைக்கும் மற்றவர்களின் தூண்டுதலிலிருந்து தப்பிக்கும் மனோபாவம் உங்களுக்கு இருந்தால் போதும்” எனக் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது.

பங்குகளைத் தேர்வு செய்யும் முதலீட்டு முடிவுகளை எடுக்க உங்களுக்கு சூப்பர் மூளை தேவையில்லை. உங்களுக்குப் பொது அறிவு மற்றும் முதலீட்டு ஒழுங்கு மட்டுமே தேவை. முதலீடு செய்யப் போகிற நிறுவனத்தின் கடந்த கால தொழில் மேம்பாடு, வருமான வளர்ச்சி, லாப வளர்ச்சி உள்ளிட்டு சில விஷயங்களைக் கவனித்து நல்ல பங்கைத் தேர்வு செய்ய முடியும்.

இவற்றுக்கெல்லாம் உங்களிடம் போதுமான நேரம் மற்றும் நிபுணத்துவம் இல்லை எனில், நீங்கள் தொழில்முறை நிதி நிபுணர்கள் அல்லது பங்குச் சந்தை நிபுணர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்.

தவறான நம்பிக்கை 3: பங்குச் சந்தைகள் எனக்கு விரைவாகப் பணம் சம்பாதித்துக் கொடுக்கும்!

விளக்கம்: முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கும் ஒரு பொதுவான தவறான நம்பிக்கை இதுவாகும். நீண்ட கால முதலீட்டாளர்களுக்குப் பங்குச் சந்தை வெகுமதி அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பங்குச் சந்தை என்பது பயம் மற்றும் பேராசை (Fearful and Greedy) கொண்ட முதலீட்டாளர்களிடமிருந்து சமநிலை மற்றும் பகுத்தறிவு (Balanced and Rational) கொண்ட முதலீட்டாளர்களுக்குப் பணத்தை மாற்றும் ஓர் அமைப்பாகும்.

நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும், ஒழுங்காகவும், பகுத்தறிவுடனும் இருக்க வேண்டும். நீங்கள் மற்றவர்களை விடப் புத்திசாலியாக இருக்க வேண்டியதில்லை; நீங்கள் மற்றவர்களைவிட ஒழுங்காக முதலீட்டு விதிமுறைகளைப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும். அப்போது பங்குச் சந்தை முதலீடு நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். குறுகிய காலத்தில் பங்குச் சந்தை மூலம் வருமானம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

தவறான நம்பிக்கை 4: பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய நேரம், காலம் முக்கியமானது!

விளக்கம்: முதலீட்டாளர்கள் பெரும்பாலும் பங்குச் சந்தை மிகவும் குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கிறதா என்பதைக் கண்டறிவதில் அதிக நேரத்தைச் செலவிடு கிறார்கள். மேலும், அதற்கேற்ப நிறுவனப் பங்குகளை வாங்குவது மற்றும் விற்பனை செய்வதில் நேரத்தைச் செலவிடுகிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பங்குச் சந்தை அதன் உச்சத்தை அடைந்தவுடன் அவர்கள் வெளியேறுவதையும், சந்தை கீழே இறங்கியிருக்கும் நிலையில் முதலீடு செய்வதையும் அவர்கள் விரும்புகிறார்கள்.

இது நடைமுறைக்கு ஏற்ற சரியான யோசனை அல்ல. ஏனெனில், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கு பல்வேறு காரணிகள் உள்ளன. எல்லா காரணிகளையும் கணித்து பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் (நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்) சரியாக முதலீடு செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை.

இப்படிச் செய்தற்குப் பதிலாக, நல்ல நிறுவனப் பங்குகளில் / நல்ல ஈக்விட்டி ஃபண்டுகளில் குறிப்பிட்ட இடைவெளி களில் அல்லது மாதம்தோறும் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பங்கு களில்/ ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் அல்லது தோராயமாகக் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து வரலாம். நல்ல நிறுவனப் பங்கு களில் / நல்ல ஈக்விட்டி ஃபண்டு களில் சந்தை வீழ்ச்சியின்போது வழக்கத்தைவிடக் கூடுதலாக முதலீடு செய்துவரலாம். இப்படிச் செய்வதன் மூலம் நீண்ட காலத்தில் நல்ல நிறுவனங் களின் பங்குகளைச் சராசரியாகக் குறைந்த விலைக்கு வாங்கியிருக்க முடியும். இதனால், நீண்ட காலத்தில் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு களில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி), சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (எஸ்.டி.பி) மூலம் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்துவருவது லாபகர மாக இருக்கும்.

சந்தையின் ஏற்ற இறக்கத்தில் சராசரியாக அதிக யூனிட்டுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எஸ்.ஐ.பி முறையில் குறிப்பிட்ட இடைவெளியில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து வரவேண்டும். எஸ்.டி.பி முறையில் பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும் காலத்தில் ரிஸ்க் குறைவான லிக்விட் ஃபண்ட் போன்ற கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் மொத்த முதலீட்டைச் செய்துவிட்டு, அதிலிருந்து ஈக்விட்டி ஃபண்டுக்கு குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றி முதலீடு செய்து வரவேண்டும்.

தவறான நம்பிக்கை 5: முதலீட்டை அதிகமாகப் பன்முகத் தன்மை செய்தால் அதிக லாபம் கிடைக்கும்!

விளக்கம்: முதலீட்டின் ரிஸ்க்கைக் குறைத்து, அதிக லாபம் ஈட்ட, முதலீட்டைப் பிரித்து மேற்கொள்ளும் பன்முகப்படுத்தல் (Diversification) தேவை. சுமார் 10 பங்குகள் அல்லது 3 மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் நன்கு பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டுக் கலவையை (Portfolio) உருவாக்கலாம்.

20, 25-க்கும் மேற்பட்ட நிறுவனப் பங்குகள் அல்லது 6, 8 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டை மேற்கொண்டால் முதலீட்டின் கலவையின் ரிஸ்க்கைக் குறைப்பதற்குப் பதில் வருமானத்தைக் குறைக்கக் கூடும். காரணம், ஒருவர் சிறந்த பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் மட்டும் முதலீடு செய்ய வில்லை.

அதிக எண்ணிக்கையிலான பங்குகள் மற்றும் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது பல சராசரியான பங்குகள் மற்றும் ஃபண்டுகளில் முதலீடு செய் யும் சூழல் உருவாகியிருக்கும். அதனால், முதலீட்டுக் கலவையின் ஒட்டுமொத்த வருமானம் குறையும்.

அதிக பல்வகைப் படுத்தலுக்குப் பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட பங்குகள், ஃபண்டுகளில் கவனம் செலுத்தலாம். நல்ல நிறுவனப் பங்குகள், சிறப்பாகச் செயல்படும் ஃபண்டுகள் மூலம் பல்வகைப்படுத்தலை அடைய முடியும்.

தவறான நம்பிக்கை 6: பணம் சம்பாதிப்பதற்கான சிறந்த வழி, மற்றவர்களைப் பின்பற்றி முதலீடு செய்வதாகும்!

விளக்கம்: எந்த முதலீட்டில் அதிக பேர் ஆர்வம் காட்டுகிறார்களோ, பலரும் அந்த முதலீட்டில் பணத்தைப் போடுவார்கள். அதாவது, முதலீட்டில் அடுத்தவர்களைப் (கூட்டத்தினரை) பின்தொடர் வார்கள். முதலீட்டில் ஒருவர் கூட்டத்தைப் பின்பற்றினால், மற்றவர்கள் பெறும் லாபத்தைதான் அவர் பெறுவார். இதைத் தாண்டி லாபம் எதுவும் கிடைக்காது.

பொதுவாக, முதலீட்டில் மற்றவர்கள் பேராசை கொள்ளும்போது நீங்கள் பயப்பட வேண்டும். மற்றவர்கள் பயப்படும்போது நீங்கள் பேராசையுடன் இருக்க வேண்டும். இதன் அர்த்தம், மற்றவர்கள் பயத்தில் நல்ல நிறுவனப் பங்குகளை விற்கும்போது, நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்பதாகும்; நல்ல விலை உயர்ந்திருக்கும் நிலையில் மற்றவர்கள் பேராசை காரணமாக முதலீடு செய்ய வரும்போது நீங்கள் முதலீட்டிலிருந்து வெளியேறிவிட வேண்டும்.

எனவே, பங்குச் சந்தையின் போக்கு பரபரப்பாக இருக்கும்போது அல்லது குறிப்பிட்ட காலத்தில் பரபரப்பாக இருக்கும் முதலீட்டைத் தேர்வு செய்ய வேண்டாம். வித்தியாசமாகச் சிந்தித்து மதிப்பான முதலீட்டை மேற்கொள்ளுங் கள். அப்போதுதான் சாதாரணமானவர் களைவிட அதிக வருமானம் பெற முடியும்!