டைனமிக் அஸெட் அலொகேஷன் ஃபண்ட் அல்லது பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த ஃபண்டில் பங்குச் சந்தையின் சூழ்நிலைக்கேற்ப நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு மாற்றி அமைக்கப்படும். பங்குச் சந்தை ஏற்றத்திலிருக்கும் காலத்தில், நிறுவனப் பங்குகளில் முதலீடு குறைக்கப்பட்டு, கடன் பத்திரங்களில் அதிகரிக்கப்படும். இதேபோல், பங்குச் சந்தை இறக்கத்தில் இருந்தால், நிறுவனப் பங்குகளில் முதலீடு அதிகரிக்கப்பட்டு, கடன் பத்திரங்களில் குறைக்கப்படும்.

டைனமிக் பாண்ட் ஃபண்ட்...
ஏறக்குறைய இதேபோல் செயல்படும் விதமாகத்தான் டைனமிக் பாண்ட் ஃபண்ட் (Dynamic Bond Fund) இருக்கிறது. இது கடன் ஃபண்டுகளில் ஒரு வகையாகும். இதில் முதலீடாகும் பணம் நடுத்தர காலம், நீண்ட காலம் எனப் பல்வேறு முதிர்வுக் காலங்களைக் கொண்ட பாண்டுகளில் முதலீடு செய்யும் விதமாக இந்த ஃபண்ட் வடிமைக்கப் பட்டிருக்கிறது.
மேலும், அனைத்து விதமான ஃபிக்ஸட் இன்கம் சொத்துப் பிரிவுகளிலும் முதலீடு செய்யப்படும். இந்த ஃபண்டில் ஃபண்ட் மேஜேனருக்கு வட்டி விகித ரிஸ்க்கைச் (Interest rate risk) சமாளிக்கும் விதமாக எந்தவிதமான பாண்டுகளிலும் முதலீடு செய்யும் நெகிழ்வுத்தன்மை (Flexibility) இருக்கிறது. அதாவது, வட்டி விகிதம் தொடர்பான ஃபண்ட் மேனேஜரின் கணிப்பு மற்றும் எதிர்பார்ப்புக்கேற்ப அனைத்து முதிர்வுக் காலம் கொண்ட பாண்டுகளில் முதலீடு செய்யும் சுதந்திரம் அவருக்கு இருக்கிறது. அந்த வகையில் இந்த ஃபண்டில் கடன் சார்ந்த ரிஸ்க் (Credit risks) குறைவாக இருக்கிறது. மேலும், எளிதில் பணமாக்கக் கூடியதாகவும் இந்த ஃபண்டின் முதலீட்டுக் கலவை (Liquid portfolio) இருக்கிறது.

எங்கே முதலீடு செய்யப்படுகிறது?
இந்த டைனமிக் பாண்ட் ஃபண்ட், ஷார்ட் டியூரேஷன் ஃபண்ட் மற்றும் மீடியம் டியூரேஷன் ஃபண்ட் ஆகியவற்றைவிட சிறிது அதிக ஏற்ற இறக்கத்தைக் (volatile) கொண்டது. ஆனால், அந்த ஃபண்டுகளைவிட அதிக வருமானம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.
இந்த ஃபண்ட் மூலம் வட்டி வருமானம் மற்றும் மூலதன அதிகரிப்பு (Accrual & Capital Appreciation) என இரு பலன்கள் கிடைக்கும்.
ஃபண்ட் போர்ட்ஃபோலியோ
டைனமிக் பாண்ட் ஃபண்டில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதியானது, பல்வேறு முதிர்வுக் காலத்தை கொண்ட கடன் பத்திரங்கள், நிதிச் சந்தை ஆவணங்களான அரசுக் கடன் பத்திரங்கள், கார்ப்பரேட் பாண்டுகள் போன்றவற்றில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. வட்டி விகித ஏற்ற இறக்க சூழ்நிலைக்கேற்ப முதலீடு செய்யப்படும் இந்த ஃபண்ட், எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் மற்றும் எப்போது வேண்டுமானாலும் யூனிட்டுகளை விற்று வெளியேறும் வசதியைக் கொண்ட ஓப்பன் எண்டட் ஃபண்ட் ஆகும்.
எதிர்காலத்தில் வட்டி விகிதம் குறையும் என இந்த வகை பண்டுகளை நிர்வகிக்கும் மேனேஜர் நினைத்தால், அதிகமான முதலீட்டை நீண்ட காலம் முதிர்வுகொண்ட பாண்டுகளில் (Longer Duration Bonds) முதலீடு செய்வார். அப்படி செய்யும்போது, பாண்டின் விலை அதிகரிப்பின் மூலம் அதிக வருமானம் கிடைக்கும்.
இதேபோல், எதிர்காலத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கும் என ஃபண்ட் மேனேஜர் கணித்தால் அவர் அதிக முதலீட்டைக் குறுகிய கால முதிர்வு கொண்ட பாண்டுகளில் (Shorter Term Bonds) முதலீடு செய்வார். அப்படி செய்யும்போது, வட்டி விகித ரிஸ்க் அந்த பாண்ட் ஃபண்டில் குறைகிறது. மேலும், எதிர் காலத்தில் அதிக வட்டி விகிதம் கிடைக்கும் பாண்டுகளில் மறுமுதலீடும் செய்வார்.
சுருக்கமாக, வட்டி விகிதம் குறையும் என ஃபண்ட் மேனேஜர் நினைத்தால், முதலீட்டை நீண்ட கால பாண்டு களுக்கும், வட்டி விகிதம் அதிகரிக்கும் என நினைத்தால், முதலீட்டைக் குறுகிய கால பாண்டுகளுக்கும் மாற்றிவிடுவார்.

வருமானம் எப்படி?
பொதுவாக, கடனுக்கான வட்டி விகிதம் குறைந்துவரும் காலத்தில் கடன் ஃபண்டுகள் நல்ல வருமானம் கொடுக்கும். அதேநேரத்தில், டைனமிக் பாண்ட் ஃபண்டுகள், வட்டி விகிதம் அதிகரித்தாலும் குறைந்தாலும் சிறந்த வருமானம் கொடுக்கும். அதற்கேற்ப அதன் முதலீட்டுக் கலவை நீண்ட கால பாண்டுகள் மற்றும் குறுகிய கால பாண்டுகளின் கலவையாக இருக்கும்.
டைனமிக் பாண்ட் ஃபண்டு களில் மொத்த வருமானம் என்பது ‘யீல்டு டு மெச்சூரிட்டி’ (Yield to maturity) எனப்படுகிறது. அதாவது, வட்டி வருமானம் மற்றும் முதிர்வுத் தொகை சேர்ந்ததாகும். வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்த்தால், ஃபண்ட் மேனேஜர் நீண்ட முதிர்வுக் கால பாண்டுகளில் முதலீடு செய்வார். இதன் மூலம் அதிக யீல்டு கிடைக்கும். இதுவே, வட்டி விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்த்தால், குறுகிய முதிர்வுக் காலம் கொண்ட பாண்டுகளில் முதலீடு செய்வார்.
பொதுவாக, அரசின் கடன் பத்திரங்களில் நீண்ட காலத்தில் அதிக ‘யீல்டு டு மெச்சூரிட்டி’ இருக்கும். இந்த ஃபண்டில் ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட ஓரிரு சதவிகிதம் அதிக வருமானம் கிடைக்கும்.
மேலும், நீண்ட காலத்தில் எஃப்.டி-யைவிட வரிக்குப் பிந்தைய நிலையில் லாபகரமாக இருக்கும். இந்த வகையில் உள்ள டாப் 5 ஃபண்டுகள் கடந்த மூன்றாண்டுக் காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 10% அளவுக்கு வருமானம் கொடுத் திருக்கின்றன. (கூடுதல் விவரங்களுக்கு மேலே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்.)
டைனமிக் பாண்ட் ஃபண்டுகளில் கிரெடிட் ரிஸ்க் எவ்வளவு?
டைனமிக் பாண்ட் ஃபண்டு களில் திரட்டப்படும் தொகை யானது அரசின் கடன் பத்திரங்கள், கார்ப்பரேட் பாண்டுகள் மற்றும் நிதி ஆவணங்களில் முதலீடு செய்யப்படுகிறது எனப் பார்த்தோம். அரசுப் பத்திரங்களை பொறுத்தவரை, சாவரின் கேரன்டி (Sovereign Guarantee) இருக்கிறது என்பதால், இவற்றில் கிரெடிட் ரிஸ்க் கிடையாது.
கிரெடிட் ரிஸ்க் என்பது கடன் பத்திரங்களை வெளியிட்ட நிறுவனம் வட்டி அல்லது மூலதனம் அல்லது இரண்டையும் திருப்பிக் கொடுப்பதில் உள்ள சிக்கலைச் சந்திப்பதாகும். இந்தச் சிக்கல் அரசுக் கடன் பத்திரங்களில் இல்லை. கார்ப்பரேட் பாண்டுகள் மற்றும் நிதி ஆவணங்களில் கிரெடிட் ரிஸ்க் இருக்கிறது. அந்த வகையில், அரசின் கடன் பத்திரங்கள் டைனமிக் பாண்ட் ஃபண்டின் ரிஸ்க்கைக் கொஞ்சம் குறைக்கின்றன. அதேநேரத்தில், முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானம் தர வேண்டும் என்பதற்காகக் குறைவான தரக்குறியீடுகளைப் பெற்றிருக்கும் கடன் பத்திரங்களில் (இந்த வகை பாண்டுகள் அதிக வட்டி அளிக்கும்) ஃபண்ட் மேனேஜர்கள் முதலீடு செய்யக்கூடும். எனவே, அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் எந்த மாதிரி கடன் பத்திரங்கள் இடம்பெற்றுள்ளன, அவற்றின் தரக்குறியீடு என்ன என்பதைக் கவனிப்பது நல்லது.
டைனமிக் பாண்ட் ஃபண்டுகள்; குறுகிய காலத்துக்கு ஏற்றதா, நீண்ட காலத்துக்கு ஏற்றதா?
இந்த ஃபண்டுகள், வட்டிவிகித எதிர்பார்ப்பின் அடிப்படையில் நீண்ட கால முதிர்வு பாண்டுகளை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இதனால், குறுகிய காலத்தில் என்.ஏ.வி மதிப்பில் அதிக ஏற்ற இறக்கம் இருக்க வாய்ப்பு உண்டு. எனவே, முதலீட்டாளர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட கால முதலீட்டு நோக்கில் இந்த வகை களில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். வட்டி விகித ஏற்ற இறக்கம் என்பது ஒரு சுழற்சி (Cycles) அடிப்படையிலானது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் முதலீட்டுக் காலம் இருக்கும்பட்சத்தில், வட்டி விகித ஏற்ற இறக்கம் டைனமிக் பாண்ட் ஃபண்டின் வருமானத்தை அதிகம் பாதிக்காது.
மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக, முதலீட்டுக் காலம் இருக்கும்பட்சத்தில், இன்னொரு லாபமும் இருக்கிறது. அதாவது, நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு பணவீக்க விகித சரிகட்டலுக்குப் பிறகு, ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வந்தாலும் 20% வரி கட்டினால் போதும். அதாவது, ஆதாயத்தில் மூன்று ஆண்டுக் காலத்துக்கான பணவீக்கத்தைக் கழித்துக்கொண்டு, மீதியுள்ள தொகைக்கு மட்டும் 20% வரி கட்ட வேண்டும். இதுவே மூன்றாண்டுகளுக்கு உட்பட்ட வருமானம் என்கிறபோது, அவரவர் வருமான வரம்புக்கு ஏற்ப (5% அல்லது 20% அல்லது 30%) பணவீக்க விகித சரிகட்டல் இல்லாமல் வரி கட்ட வேண்டும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்...
டைனமிக் பாண்ட் ஃபண்டில் முதலீடு செய்யும்முன் சில விஷயங்களைக் கவனத்தில் வைத்துக்கொள்வது அவசியம்.
1. இந்த ஃபண்டில் ஃபண்ட் மேனேஜர், கடன் பத்திரங்களை வாங்குவதும் விற்பதுமாக அதிக டிரேடிங் செய்வார். இதனால், இதர கடன் ஃபண்டுகளைவிட செலவு விகிதம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஓரளவுக்கு குறைந்த செலவு விகிதம், அதேநேரத்தில் அதிக வருமானம் கொடுக்கும் ஃபண்டாகத் தேர்வு செய்வது நல்லது.
2. டைனமிக் ஃபாண்டுகளில் டிவிடெண்ட் ஆப்ஷனைத் தவிர்த்து குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும். இந்த ஃபண்டில் டிவிடெண்ட் வருமானத்தைக் குறிப்பிட்ட இடைவெளியில் நிலையாக எதிர்பார்க்க முடியாது. மேலும், ஃபண்ட் மேனேஜர் நினைத்தால் மட்டுமே டிவிடெண்ட் கொடுப்பார். அடுத்து இந்த டிவிடெண்ட் வருமானத்துக்கு அவரவரின் வருமான வரி வரம்புக்கேற்ப 5%, 20% அல்லது 30% வரி கட்ட வேண்டிவரும். இதற்குப் பதில் மூன்றாண்டுகள் கழித்திருக்கும் நிலையில் யூனிட்டுகளை விற்று பணமாக்கும்போது, நீண்ட கால மூலதன ஆதாய வரியாகப் பணவீக்க விகித சரிகட்டலுக்குப் பிறகு 20% மட்டுமே வரி கட்ட வேண்டும் என்பதால், வருமான வரியைக் கணிசமாகக் குறைக்க முடியும்.
3. இந்த ஃபண்ட் முதலீடு செய்யப்பட்டிருக்கும் கடன் பத்திரங்களை சில நேரங்களில் உடனடியாக விற்று, பணமாக்க முடியாத லிக்விட்டி ரிஸ்க் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
4. வட்டி விகித சுழற்சியால் ஃபிக்ஸட் இன்கம் திட்டங்களின் வருமானம் அதிகம் பாதிக்கக் கூடாது என்று திட்டமிடுபவர்கள், ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கக்கூடிய வர்கள், குறைந்தபட்ச முதலீட்டுக் காலமாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் திட்டமிட்டிருப்பவர்கள் இந்த ஃபண்டை முதலீட்டுக்கு கவனிக்கலாம்.
5. டைனமிக் ஃபாண்ட் ஃபண்டை நடத்தும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நம்பகத் தன்மை மற்றும் அந்த ஃபண்டை நிர்வகிக்கும் ஃபண்ட் மேனேஜரின் திறமையைத் தெளிவுப்படுத்திக் கொண்டு முதலீடு செய்வது லாபகரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.இந்த வகை ஃபண்டுகளில் குறுகிய காலத்தில் என்.ஏ.வி மதிப்பில் அதிக ஏற்ற இறக்கம் வாய்ப்பு இருக்க வாய்ப்பு உண்டு. எனவே, முதலீட்டாளர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட கால முதலீட்டு நோக்கில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்!
ரிஸ்க்கைக் குறைக்க எஸ்.ஐ.பி..!
டைனமிக் பாண்ட் ஃபண்டுகளில் ரிஸ்க்கைக் குறைக்க மொத்தமாக முதலீடு செய்வதற்குப் பதில், எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருவது லாபகரமாக இருக்கும். சில நேரங்களின் ஃபண்ட் மேனேஜரின் எதிர்பார்ப்பு தவறாகப் போகவும் வாய்ப்பிருக்கிறது. அதுபோன்ற நேரங்களில் அதிக ரிஸ்க்கிலிருந்து எஸ்.ஐ.பி முதலீட்டு முறை உங்களைக் காக்கும்.
கையில் மொத்தமாகத் தொகை இருந்தால் அதை லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்து விட்டு, அதிலிருந்து எஸ்.டி.பி முறையில் டைனமிக் பாண்ட் ஃபண்டுக்கு மாற்றுவது மூலம் ரிஸ்க்கை குறைப்பதுடன், அதிக வருமானத் தையும் பெற முடியும். இந்த எஸ்.டி.பி முறையை ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இரு திட்டங்களுக்கு இடையேதான் செய்ய முடியும்.
புதிதாக வரும் டைனமிக் பாண்ட் ஃபண்டு களைவிட ஏற்கெனவே கடந்த 5 மற்றும் 10 ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்பட்டு, நல்ல வருமானத்தைக் கொடுத்த ஃபண்டுகளைத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும். கடந்த காலத்தில் கிடைத்த லாபம் எதிர்காலத்திலும் கிடைக்கும் என்பதற்கு எந்த நிச்சயமும் இல்லை!