Published:Updated:

இனிமையான ஓய்வுக்காலத்துக்கு ஈஸியான ‘தொகுப்பு நிதி’ ஃபார்முலா!

ஓய்வுக்காலத்துக்கு...
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வுக்காலத்துக்கு...

- பின்பற்ற வேண்டிய முதலீட்டு உத்திகள் - C O V E R S T O R Y

இனிமையான ஓய்வுக்காலத்துக்கு ஈஸியான ‘தொகுப்பு நிதி’ ஃபார்முலா!

- பின்பற்ற வேண்டிய முதலீட்டு உத்திகள் - C O V E R S T O R Y

Published:Updated:
ஓய்வுக்காலத்துக்கு...
பிரீமியம் ஸ்டோரி
ஓய்வுக்காலத்துக்கு...

ஓய்வுக்காலத் திட்டமிடல் (Retirement planning) மூலம் குறிப்பிடத்தகுந்த அளவில் கணிசமான தொகுப்பு நிதியை, ஓய்வுக்காலத்துக்குச் சேர்ப்பதைப் பலரும் சிறப்பாகச் செய்துவிடுகிறார்கள். சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் அவர்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப கடன் சார்ந்த திட்டங்கள் (ஃபிக்ஸட் டெபாசிட், கடன் மியூச்சுவல் ஃபண்ட்) அல்லது பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள் (நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள்) அல்லது இரண்டு பிரிவு திட்டங் களிலும் நீண்டகாலமாக முதலீடு செய்து இந்தத் தொகுப்பு நிதியைச் சேர்த்திருப்பார்கள். சிலர் அஸெட் அலொகேஷன் முறைப்படி, முதலீட்டைப் பிரித்து செய்வதன் மூலமும் இந்தத் தொகுப்பு நிதியைச் சேர்த்திருப்பார்கள்.

ஓய்வுக்காலத்துக்கு...
ஓய்வுக்காலத்துக்கு...

தொகுப்பு நிதியிலிருந்து மாதச் செலவுகளுக்கு...

இந்தத் தொகுப்பு நிதியை முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு மாதச் செலவுகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். தொகுப்பு தொகையை எப்படி சரியாகப் பிரித்து முதலீடு செய்து கூடுதல் லாபம் பார்ப்பது என்பது பலருக்கும் புரிபடாத ரகசியமாக இருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம் என்று கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம்...

‘வயதாகிவிட்டது. இனி புதிய வருமானத்துக்குப் பெரும்பாலும் வழியில்லை’ என்ற நிலையில் பெரும்பாலானோர் பாதுகாப்பான முதலீடுகளையே தேடுகிறார்கள். அதுநாள் வரை சேர்த்து வைத்த பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் போட்டு விடுகிறார்கள். இதன்மூலம் கிடைக்கும் வருமானம் கிட்டத்தட்ட பணவீக்க விகித அளவுக்குத்தான் இருக்கிறது.

உதாரணமாக, தற்போதைய நிலையில் சில்லறைப் பணவீக்க விகிதம் சுமார் 5.5 சதவிகிதமாக இருக்கிறது. இந்த அளவுக்குதான் ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி வருமானமும் இருக்கிறது. இது போக, இந்த வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டி இருக்கும்பட்சத்தில் உண்மையான வருமானம் (Real Income) என்பது மிகவும் குறைந்துவிடுகிறது. ஆனால், கிடைத்த வருமானத்துக்கு வரி கட்டிய பிறகு, பணவீக்க விகிதத்தைக் கழித்த பிறகு கிடைப்பதுதான் உண்மை யான வருமானம் ஆகும். ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் கிடைக்கும் உண்மையான வருமானம் பெரும்பாலும் ஓரிரு சதவிகிதமாக இருக்கும் அல்லது மைனஸாகத் தான் இருக்கும். எனவே, ஓய்வுக்காலத் தொகுப்பு நிதியை பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் பிரித்து முதலீடு செய்தால்தான் கடைசிக் காலத்தை சிக்கல் இல்லாமல் ஓட்ட முடியும்.

இன்றைக்கு மருத்துவ வசதிகள் மிகவும் மேம்பட்டிருக்கிறது. கூடவே, மருத்துவக் கட்டணங் களும் கணிசமாக அதிகரித்திருக் கிறது. மேலும், இந்தியர்களின் சராசரி ஆயுளும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. பலர் பணி ஓய்வுக்குப் பிறகு சுமார் 30 ஆண்டு களுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில், உங்களின் தொகுப்பு நிதியானது பணவீக்க விகிதத்தைத் தாண்டி அதிக வருமானத்தைத் தந்தால் தான் அந்தத் தொகை நீண்ட காலத்துக்கு வரும். இல்லையெனில், இடையிலேயே கரைந்து தொகுப்பு நிதி காணாமல் போய்விடும்.

ஓய்வுக்காலத்துக்கு...
ஓய்வுக்காலத்துக்கு...

ஓய்வுக்காலத் தொகுப்பு நிதி எவ்வளவு?

58 அல்லது 60 வயதில் பணி ஓய்வுபெறும் ஒருவரின் தொகுப்பு நிதி அவரின் 85 அல்லது 90 வயது வரை பயன்படுவதாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஓய்வுக்கால முதலீடு என்பதும் மிக நீண்டதாக இருக்கிறது.

உதாரணமாக, உங்களிடம் ஓய்வுக்காலத்துக்கான தொகுப்பு நிதி ரூ.40 லட்சம் இருக்கிறது என வைத்துக்கொள்ளவும். ஓய்வுக் காலத்துக்கு இந்த ரூ.40 லட்சம் போதுமா எனில், சொந்த வீடு இருக்கிற தம்பதிகளுக்கு இந்தத் தொகை போதுமானதாக இருக்கக்கூடும். ஆனால், இதுவே இன்னும் 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் கழித்து ஓய்வுப் பெறப் போகிறீர்கள் எனில், இந்தத் தொகை நிச்சயம் போதாது. அவர்கள் ரூ.75 லட்சம், ரூ.1 கோடி எனத் தொகுப்பு நிதியைத் திரட்டுவது அவசியமாக இருக்கும்.

ஹசன் அலி 
ஆலோசகர். 
Siptiger.com
ஹசன் அலி ஆலோசகர். Siptiger.com

மிகவும் பாதுகாப்பான முதலீடு...

இங்கே ரூ.40 லட்சத்தை நான்கு பாகமாகப் பிரித்து ஒவ்வொரு 10 லட்சம் ரூபாய்க்கும் ஒரு கூடை (basket) என மொத்தம் நான்கு கூடையில் வைத்து பாராமரித்து வர வேண்டும். ஓய்வுக்காலத்துக்குப் பிறகு ஒருவர் 30 ஆண்டுகள் உயிர் வாழ்கிறார் என்கிற கணக்கில் ரூ.10 லட்சத்தை முதல் ஏழரை ஆண்டுகளுக்குப் பயன்படும் விதமாக, முதல் கூடையில் மிகவும் பாதுகாப்பான வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டும்.

உதாரணமாக, தபால் அலுவலக மாத வருவாய்த் திட்டத்தில் (POMIS) முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் ஒருவர் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் முதலீடு செய்யலாம். வட்டி வருமானம் மாதம் தோறும் உங்களுக்கு வழங்கப்படும். இந்த வட்டிக்கு நிபந்தனைக்கு உட்பட்டு வரி கட்ட வேண்டிவரும். அதாவது, உங்களுக்கு வேறு வருமானம் எதுவும் இல்லையெனில், உங்களின் வயது 60-க்கு மேல் ஒரு நிதி ஆண்டில் ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கட்ட வேண்டியிருக்காது. தற்போது இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 6.6% வட்டி வருமானம் கிடைக்கிறது. இது அனைத்து வயதினருக்குமான திட்டம் என்பதால், 60 வயதுக்கு முன்னரும் இதில் சேர முடியும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (Senior Citizen Savings Scheme) சேர முடியும். ஒருவர் அதிகபட்சம் ரூ.15 லட்சம் முதலீடு செய்ய முடியும். ஒரு நிதி ஆண்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு 80சி பிரிவின்கீழ் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை உண்டு. இந்தத் திட்டத்தின் முதிர்வுக் காலம் ஐந்து ஆண்டுகளாகும். விருப்பத்தின் அடிப்படையில் மேலும் மூன்று ஆண்டுகள் நீடித்துக்கொள்ள முடியும். தற்போதைய நிலையில், ஆண்டுக்கு வட்டி 7.4% வழங்கப்படுகிறது. வட்டி காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப் படும். ஆனால், வட்டி வருமானத்துக்கு வரி உண்டு.

உங்கள் தொகுப்பு நிதியில் நான்கில் ஒரு பகுதி எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்து, மூத்த குடிமக்கள் திட்டத்தில் முதலீடு செய்ததுபோக இருக்கும் முதலீட்டுத் தொகையை மாத வருமானத் திட்டத்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமாகும்.

குறைவான ரிஸ்க் முதலீடு...

அடுத்த ரூ.10 லட்சத்தை, இரண்டாவது கூடையில் ஓய்வுக் காலத்தின் இரண்டாவது ஏழரை ஆண்டுகளுக்குப் பயன்படுத்தும் விதமாக சிறிது ரிஸ்க் கொண்ட முதலீட்டுப் பிரிவான கடன் ஃபண்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டும். இந்தக் கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது இரு கூடுதல் லாபங்கள் இருக்கின்றன. நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட சிறிது அதிக வருமானம் கிடைக்கும். மேலும், மூன்று ஆண்டுகள் தாண்டிய பிறகு யூனிட்டுகளை விற்று பணமாக்கும் போது, பணவீக்க விகித சரி கட்டலுக்குப் பிறகு (Indexation) உள்ள லாபத்துக்கு மட்டும் வரி கட்டினால் போதும்.

கடன் ஃபண்டுகள் என்கிறபோது கிரெடிட் ரிஸ்க் மற்றும் வட்டி விகித ரிஸ்க் என இரு முக்கிய ரிஸ்க்குகள் இருக்கின்றன. கிரெடிட் ரிஸ்க் என்பது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கும் கடன் பத்திரங்கள் மூலம் வர வேண்டிய வட்டி வருமானம் மற்றும் அசல் தொகையில் ஏற்படும் தாமதம் மற்றும் சிக்கலாகும். வட்டி விகித ரிஸ்க் என்பது கடன் சந்தையில் வட்டி விகிதத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைக் குறிக்கும். முதலீட் டாளர்கள் நிதி ஆலோசகர்களை அணுகும்போதுபோது அவர்கள் ரிஸ்க் குறைவான, அதே நேரத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய கடன் ஃபண்டுகளை அடையாளம் காட்டுவார்கள்.

நடுத்தர அளவு ரிஸ்க்...

ஓய்வுக்காலத் தொகுப்பு நிதியில் இன்னொரு 10 லட்ச ரூபாயை மூன்றாவது கூடையில் போடவும். இந்தத் தொகை, ஒருவரின் ஓய்வுக் காலம் தொடங்கி 15-வது ஆண்டுக்கு பிறகு தேவைப்படும் செலவை ஈடுகட்டுவதற்கு ஏற்றதாக இருக்கும். முதலீட்டுக் காலம் கொஞ்சம் அதிகமாக 15 ஆண்டுகள் என இருப்ப தால், முதலீட்டில் சற்று கூடுதல் ரிஸ்க் எடுக்கலாம். அந்த வகையில், திரட்டப்படும் நிதியில் 50% - 70% வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் கலப்பினப் பிரிவான ஹைபிரிட் (Hybrid) ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்.

உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப, பங்குச் சந்தையில் எத்தனை சதவிகிதம் முதலீடு செய்யப் படுகிறது என்பதை அறிந்து முதலீடு செய்ய வேண்டும். பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் அல்லது ஹைபிரிட் கன்சர்வேட்டிவ் ஃபண்டை முதலீட்டுக்குக் கவனிக்கலாம். இந்த முதலீடுகளின் மூலம் நீண்ட காலத்தில் சுமார் 9-10% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. 65 சதவிகிதத்துக்குமேல் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருக்கும் ஃபண்டுகள், ஈக்விட்டி ஃபண்டு களாகக் கருதப்பட்டு, அதற்குரிய வரி விதிக்கப்படும். மற்ற ஃபண்டுகளுக்கு கடன் ஃபண்டுகளுக்குரிய வரி விதிப்பு முறை பொருந்தும்.

ஈக்விட்டி ஃபண்ட் பிரிவின்கீழ் வரும் ஃபண்டுகளில் முதலீட்டுக் காலம் ஓராண்டைத் தாண்டியிருக்கும் பட்சத்தில், யூனிட்களை விற்று பணமாக்கும்போது நிதி ஆண்டில் மூலதன ஆதாயத்தில் ரூ.1 லட்சம் வரை கிடையாது. அதற்கு மேற்பட்ட ஆதாயத்துக்கு 10% வரி கட்டினால் போதும்.

அதிக ரிஸ்க் கொண்ட முதலீடு...

ஓய்வுக்கால முதலீட்டின் கடைசி 10 லட்ச ரூபாயை நான்காவது கூடையில் வைத்துப் பராமரிக்கவும். இந்தத் தொகை என்பது பணி ஓய்வுக் காலம் தொடங்கி, சுமார் 22 ஆண்டு களுக்குப் பிறகு, பயன்படுத்து வதற்கான தொகையாகும். அதாவது, ஓய்வுக்காலத்தின் கடைசி ஏழரை ஆண்டுகளுக்கான (ஓய்வூதியதாரரின் 72 வயது முதல் 80 வயது வரை) செலவுகளை ஈடுகட்டுவதாகும். இதில் முதலீட்டுக் காலம் ஏறக்குறைய 22 ஆண்டுகள் என்பதால், முதலீட்டில் நன்றாகவே ரிஸ்க் எடுக்கலாம். இந்த ரூ.10 லட்சத்தையும் முழுக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப லார்ஜ்கேப் ஃபண்ட், லார்ஜ் அண்ட் மிட்கேப் ஃபண்ட், மல்ட்டிகேப் ஃபண்ட், ஃபிளெக்ஸி கேப் ஃபண்டுகளில் முதலீட்டை மேற்கொண்டு வரலாம். இந்த ஃபண்டுகளில் நீண்டகாலத்தில் சராசரியாக 10-12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் எதிர்பார்க்கலாம். இந்த ஃபண்டுகளுக்கு ஈக்விட்டி ஃபண்டுகளுக்குரிய வரி விதிப்பு பொருந்தும்.

மொத்த முதலீடு வேண்டாம்..!

மேலே கூறப்பட்ட நான்கு கூடைகளில் எந்தக் கூடையில் தொகையை முதலீடு செய்யும்போதும், ஒரே ஒரு திட்டத்தில் மொத்தமாக முதலீடு செய்யாமல், நான்கைந்து திட்டங் களில் பிரித்து முதலீடு செய்வது மூலம் ரிஸ்க்கைக் குறைப்பதுடன், சராசரியாக வருமானத்தையும் அதிகரிக்க முடியும். ஹைபிரிட் ஃபண்ட் மற்றும் ஈக்விட்டி ஃபண்டு களில் மொத்த முதலீடு செய்வதற்கு பதில் அந்தப் பிரிவுகளில் செய்ய வேண்டிய தலா ரூ.10 லட்சத்தை லிக்விட் ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்துவிட்டு, அதிலிருந்து சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (எஸ்.டி.பி) முறையில் ஹைபிரிட் ஃபண்ட் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு முதலீட்டை மாற்றுவது புத்திசாலித்தனம். இந்த முறை பங்குச் சந்தையின் ரிஸ்க்கைக் குறைக்க உதவும்.

முதலீட்டுத் தொகுப்பை ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்து தேவைப்பட்டால் மாற்றம் செய்து வந்தால், ஓய்வுக்கால பணச் செலவுகளை விலைவாசி உயர்வைத் தாண்டி சுலபமாகச் சமாளித்து இனிமையாக்கிக் கொள்ளலாம்.

செலவுக்குப் பணம் தரும் சொந்த வீடு..!

ஓய்வுக்காலத் தொகுப்பு நிதி போதிய அளவுக்கு இல்லை. செலவுக்குப் பணம் தர பிள்ளைகள் மற்றும் யாரும் இல்லை அல்லது யாரும் விரும்பவில்லை... ஆனால், சொந்த வீடு இருக்கிறது எனில், உங்களின் வீட்டைத் தலைகீழ் அடமானம் என்கிற ரிவர்ஸ் மார்ட்கேஜ் (Reverse Mortgage) முறையில் வங்கியில் அடமானம் வைத்து மொத்தத் தொகை அல்லது மாதம் தோறும் குறிப்பிட்டத் தொகையைப் பெற முடியும். தம்பதிகளின் இறப்புக்குப் பிறகு, அந்த வீட்டை வாங்கி விற்று பணத்தை எடுத்துக்கொள்ளும். கடன் மற்றும் வட்டித் தொகை கழித்தது போக மீதித் தொகையிருந்தால், வாரிசுகளுக்கு வழங்கப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism