Published:Updated:

‘‘ஒரு ரூபாய்கூட கடன் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன்..!’’

என்.அருண்குமார்
பிரீமியம் ஸ்டோரி
என்.அருண்குமார்

சூப்பர் இன்வெஸ்டார் -முதலீட்டாளரின் அனுபவம்

‘‘ஒரு ரூபாய்கூட கடன் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன்..!’’

சூப்பர் இன்வெஸ்டார் -முதலீட்டாளரின் அனுபவம்

Published:Updated:
என்.அருண்குமார்
பிரீமியம் ஸ்டோரி
என்.அருண்குமார்

பெங்களூரில் வசித்துவரும் என்.அருண்குமார், ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தின் ஆர்க்கிடெக்ட். மனைவி ராஜலட்சுமி இல்லத்தரசி. முதல் மகள் ஹர்ஷிதா, எல்.கே.ஜி படிக்கிறார். இரண்டாவது மகள் யாழினிக்கு இரண்டரை வயதாகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கடன், வட்டி எனத் தவித்தவர், இப்போது சூப்பர் இன்வெஸ்டார் ஆக மாறியது எப்படி என்பதை அவரே சொல்கிறார்.

“என்னுடைய சொந்த ஊர் மதுரை. வேலைக்காக வெளி ஊர்களுக்கு பயணப்பட ஆரம்பித்து, சென்னை மற்றும் ஹைதராபாத்தி லுள்ள ஐ.டி நிறுவனங்களில் வேலை செய்து, தற்போது பெங்களூரில் செட்டில் ஆகியிருக் கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வருகிறேன்.

என்.அருண்குமார்
என்.அருண்குமார்

எனக்கு இப்போது 35 வயதாகிறது. இன்று எனக்கிருக்கும் பணம் பற்றிய அறிவு, என்னுடைய 28-வது வயதில் இருந்திருந்தால், பல பொருளாதார இழப்புகளை நான் தவிர்த்திருப்பேன். ஏனெனில், அப்போது தனிநபர் கடன் விஷயத்தில் மிகப் பெரிய தவற்றை செய்தேன். அதனால் நான் அடைந்த நஷ்டம் ஏராளம், சந்தித்த மனஉளைச்சல்கள் அதிகம்.

நிலம் வாங்குவதற்காக, கிரெடிட் கார்டு கடன்களை அடைப்பதற்காக என வங்கியில் தனிநபர் கடனை வாங்கினேன். வாங்கிய ஒரு கடனுடன் மட்டும் நிற்காமல், தொடர்ந்து டாப்-அப் ஆப்ஷனைப் பயன்படுத்தியதால், என்னுடைய நஷ்டம் மேலும் அதிகரித்தது.

கடன் ஏஜென்டுகளிடமிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டே இருந்ததாலும், கமிட்மென்ட் எதுவும் இல்லாததாலும், பர்சனல் லோன் வாங்கி கிரெடிட் கார்டு லோனை அடைக்கவும், நிலத்தை வாங்கவும் முடிவு செய்தேன். இதனால் ரூ.7 லட்சத்தில் ஆரம்பித்த என் கடன், ரூ.16.5 லட்சம் வரை அதிகரித்ததுதான் மிச்சம். நான் வாங்கிய அந்தக் கடனுக்காக, ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை வட்டி கட்ட மட்டுமே செலவு செய்தேன்.இதனால் எங்களின் அன்றாடத் தேவைகளுக் கான பணம் கையிருப்பில் இருக்காது. அதற்காக மீண்டும் கடன் வாங்குவேன்.

‘‘ஒரு ரூபாய்கூட கடன் இல்லாமல்
நிம்மதியாக இருக்கிறேன்..!’’

இப்படிப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நிதி ஆலோசகரான லலிதா ஜெயபாலனின் அறிமுகம் கிடைத்தது. அவருடனான அந்த சந்திப்புதான், எங்களுடைய நிதி வாழ்க்கையின் திருப்புமுனை.

கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன்களை முழுமையாக அடைத்தால்தான், முறையாக திட்டமிட முடியும் என்பதையும், நிதி நிர்வாகம் என்றால் என்ன, இலக்குகளை அடைவதற்கு ஏன் திட்டமிட வேண்டும், முதலீட்டுக்கும் சேமிப்புக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன, இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம் என்பதைப் பற்றியெல்லாம் அவர் எங்களுக்கு தெளிவாகப் புரியவைத்தார்.

அவர் சொன்னபடி, கடன்களைத் திட்டமிட்டு அடைத்தேன். அதன்பிறகு, பொருளாதார ரீதியாக மேற்கொள்ளும் விஷயங்களை மனைவியுடன் கலந்துபேசி முடிவெடுக்க ஆரம்பித்தேன். இதனால் என் தவறுகள் குறையத் தொடங்கின.

குடும்பம், குழந்தை என்றான பிறகு எதிர்காலம் குறித்த யோசனை எங்கள் இருவருக்கும் வர ஆரம்பித்தது. நிதி ஆலோசகரின் அறிவுரையின்படி, சம்பாதிக்கும் பணத்தை முதலில் எதிர்காலத் தேவைக்கான முதலீடுகளுக்கு ஒதுக்க ஆரம்பித்தோம். சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு ஒதுக்கியது போக, மீதமிருக்கும் பணத்தைக் கொண்டு இதர தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்துகொண்டோம்.

தற்போதைய நிலையில், தங்கம் சார்ந்த முதலீடுகள், பென்ஷன் சேமிப்புத் திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் எனப் பரவலாக முதலீடு செய்கிறேன். இவற்றில் மாதம்தோறும் மொத்தம் ரூ.1.30 லட்சத்தை முதலீடு செய்து வருகிறேன். இந்தத் தொகையை ஒவ்வொரு வருடமும் 10% வரை அதிகப்படுத்த இலக்கு நிர்ணயித்து, அதையும் முறையாகச் செய்துவருகிறேன். அதாவது, என்னுடைய போர்ட் ஃபோலியோவின் மொத்த முதலீட்டுத் தொகை ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

குழந்தைகளின் படிப்பு, அவர் களின் திருமணத் தேவைக்கான தொகையை முதலீட்டின் மூலம் பெறுவதற்கு முறையாகத் திட்டமிட்டிருக்கிறேன். மிக முக்கியமாக, எனது ஓய்வுக் காலத்துக்கான திட்டமும் தெளிவாக இருக்கிறது.

நான் என்னுடைய 50- 55வது வயதில் ஓய்வு பெறத் திட்ட மிட்டிருக்கிறேன். அன்றைய நிலையில், எனக்குத் தேவைப் படும் தொகைக்கு ஏற்றவாறு இப்போது நான் முதலீடு செய்து வருகிறேன். இப்போது நான் எனக்காக உழைத்து பணம் சம்பாதிக்கிற அதே நேரத்தில், பல்வேறு முதலீடுகளில் நான் முதலீடு செய்துள்ள பணம், எனக்காக உழைத்து, என் ஓய்வுக் காலத்தில் நல்ல வருமானம் தரும்.

தற்போதைய நிலையில் அனைத்து முதலீடுகளிலிருந்தும் சராசரியாக 8 - 10% வரையிலான லாபம் கிடைக்கிறது. இதனால் எதிர்கால வாழ்க்கை பற்றிய கவலைகள் இல்லாமல், நம்பிக்கையாக என் வாழ்க்கை நகர்கிறது. இப்போது ஒரு ரூபாய்கூட கடன் இல்லாமல் நாம் நிம்மதியாக இருக்கிறேன்’’ என்றார் சந்தோஷமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism