
இனி பிட்காயின் போன்ற க்ரிப்டோகரன்ஸிகளில் முதலீடு செய்வது நல்லதா என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதைத் தெரிந்துகொள்ளும் முன் க்ரிப்டோகரன்ஸி, பிட்காயின் ஆகியவை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
கொரோனா காட்டிய மரண பயத்தில் உலகெங்கும் உள்ள முதலீட்டுச் சந்தைகள் பெரும் வீழ்ச்சி அடைந்தபோதும், அசராமல் உயர்ந்த பெருமை ஒரு முதலீட்டுக்கு உண்டு என்றால் அது பிட்காயினுக்கு மட்டும்தான். 2020-ம் வருடம் இதன் மதிப்பு கிட்டத்தட்ட 160% உயர்ந்தது. கடந்த வாரத்தில் 5,000 டாலர்கள் வரை (இந்திய ரூபாய் மதிப்பில் 3,75,000 உயர்ந்தது!) உயர்ந்து, மொத்த மதிப்பு 34,000 டாலருக்கு மேல் பிட்காயின் சென்று முதலீட்டாளர்களை மனம் குளிர வைத்தது. (ஆனால், அடுத்த சில நாள்களிலேயே 5,000 டாலர் வரை சரிந்தது.)

பெருகும் ஆதரவு
இதன் காரணமாக பிட்காயின் போன்ற க்ரிப்டோகரன்ஸிகளுக்கு மரியாதை பெருகி வருகிறது. அனைத்துலக நாணய நிதியம் (International Monetary Fund) ஆகஸ்ட் மாதம் க்ரிப்டோகரன்ஸிகள் பற்றிய தகவல்கள் அடங்கிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. க்ரிஸ் வுட் போன்ற பெயர்பெற்ற முதலீட்டாளர்கள்கூட ``உங்களிடம் பிட்காயின் இல்லாவிட்டால் இப்போதே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறத் தொடங்கியுள்ளனர்.
சிட்டி பேங்க்கின் தலைமை அதிகாரிகளில் ஒருவரான டாம் ஃபிட்ஸ்பட்ரிக் தங்கள் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள ரிப்போர்ட்டில் பிட்காயின்தான் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் புதிய தங்கம் என்றும், 2021 இறுதிக்குள் அதன் மதிப்பு 3,18,000 டாலராக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இதேபோல பேபால் (PayPal) பிட்காயினைத் தங்கள் தளத்தில் பயன்படுத்துவதை அங்கீகரிப்பதாக தனது 346 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவிருக்கும் பைடன் அமைச்சரவையில் இடம்பெறக்கூடிய முக்கியஸ்தர்களில் பலர் க்ரிப்டோகரன்ஸியின் விசிறிகள்.
அப்படியானால் இனி பிட்காயின் போன்ற க்ரிப்டோகரன்ஸிகளில் முதலீடு செய்வது நல்லதா என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதைத் தெரிந்துகொள்ளும் முன் க்ரிப்டோகரன்ஸி, பிட்காயின் ஆகியவை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.
6,700 வகை க்ரிப்டோகரன்ஸிகள்
ஒரு நாட்டு அரசாங்கத்தால் சில அடிப்படை விதிகளுக்குட்பட்டு தயாரிக்கப்படும் கரன்ஸிகள், வங்கிக் கணக்குகள் மூலம் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. அவற்றின் இயக்கங்களை அந்த அரசாங்கமும் அதன் தலைமை வங்கியும் எளிதில் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும், அவற்றின் மதிப்பைக் கூட்டவும் குறைக்கவும் முடியும்.
அரசாங்கங்களின் தலையீடு பிடிக்காத சுதந்திர மனிதர்கள் கண்டுபிடித்ததே க்ரிப்டோகரன்ஸி. 2008-ல் சடோஷி நகமோடோ என்ற மனிதரால் பிட்காயின் என்னும் கரன்ஸி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. க்ரிப்டோகரன்ஸியில் சுமார் 6,700 வகை உண்டு. டெதர், போல்காடாட், லைட் காயின், எதீரியம் போல பிட்காயினும் ஒரு க்ரிப்டோகரன்ஸி. இவை பிளாக்செயின் டெக்னாலஜி மூலம் தயாரிக்கப்படுவதால், இவற்றின் பரிவர்த்தனைகள் ஒரு பலமான அஸ்திவாரத்தின் மேல் கட்டமைக்கப்படுகின்றன.
க்ரிப்டோகரன்ஸியின் நன்மைகள்
முதலீட்டு வகைகளில் ஒன்றாக மாறிவரும் இவற்றை வாங்குவதில் தற்சமயம் முதலீட்டு நிறுவனங்களும் ஆர்வம் காட்டுகின்றன. அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள்...
1. பணவீக்கத்தில் இருந்து காக்கும் கருவியாக இருப்பவை தங்கமும், க்ரிப்டோகரன்ஸியுமே.
2. டாலர் போன்ற கரன்ஸிகள் மதிப்பிழந்து வருகின்றன.
3. சீனாவும், ஐரோப்பிய நாடுகளும் தங்கள் யுவானையும், யூரோவையும் டிஜிட்டல் மயமாக்குவது டிஜிட்டல் கரன்ஸியின் தாக்கம் அதிகரிப்பதைக் காட்டுகிறது.
4. பல நாடுகளும் மக்களுக்கு அளிக்கும் நிதியுதவி க்ரிப்டோகரன்ஸிகள் மூலம் வழங்கலாம். ஏனெனில் கள்ள நோட்டு அடிப்பது போல, இந்த க்ரிப்டோகரன்ஸிகளை தயாரிக்க முடியாது.
5. இவை எதிர்காலத்தில் அதிக விலையேற்றம் காண வாய்ப்புண்டு.

க்ரிப்டோகரன்ஸியின் பாதகங்கள்
எந்த முதலீட்டுக்கும் ஆதரவு இருப்பது போல் எதிர்ப்பும் இருக்கும் அல்லவா? அப்படி க்ரிப்டோகரன்ஸி எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் வாதங்கள்:
1. ஒரு பங்கையோ, பாண்டுகளையோ ஆராய்ந்து பார்க்க பல வழிகள் உண்டு. ஆனால், பிட்காயினின் மதிப்பு ஏன் ஏறுகிறது, ஏன் இறங்குகிறது என்பது பெரிய முதலீட்டு நிறுவனங்களுக்கே புரியாத மர்மம். ஆகவே, இதில் முதலீடு செய்வது சூதாட்டம் போலத்தான்.
2. பரிவர்த்தனைகள் முகமற்றவை என்பதால், இதனை யார் வாங்குகிறார்கள், தனியாரா, நிறுவனங்களா என்பது யாருக்கும் தெரியாது.
3. எந்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழும் இந்த க்ரிப்டோகரன்ஸிகள் வருவதில்லை என்பதால், மாஃபியாக்கள், போதை மருந்து வியாபாரிகள், ஆள் கடத்தல் அடியாட்கள் போன்றவர்களின் அண்டர்கிரவுண்ட் ஆட்டங்களுக்கு உதவலாம்.
4. தங்கத்தைப் போல, இது ஒன்றும் அரிதான பொருள் இல்லை. யார் வேண்டுமானாலும் இவற்றைத் தயாரிக்க முடியும்.
5. இதன் மதிப்பு தாறுமாறாக ஏறி இறங்குவதால், இதை கரன்ஸியாக பயன்படுத்தாமல் பதுக்குவதையே பலரும் விரும்புவர்.
6. 2014-ல் ஒரு உலகளாவிய நிறுவனமே தன் க்ரிப்டோகரன்ஸி முதலீட்டை சைபர் திருடர்களிடம் பறிகொடுத்து, திவாலாகிப் போனது. சிறுமுதலீட்டாளர்கள் எம்மாத்திரம்?
7. பங்கு வர்த்தகத்தில் வரக்கூடிய லாப, நஷ்டங்களைக் கணக்கிட்டு வரி கட்டுவதே சிறு முதலீட்டாளர்களுக்கு பெரும்பாடு. க்ரிப்டோகரன்ஸி கணக்குகள் இன்னும் தலைசுற்றவைப்பவை.
க்ரிப்டோகரன்ஸியில் பணம் போடலாமா?

2017 முடிவில் ஒரு பிட்காயின் 19,000 டாலருக்கு வாங்கிய சிறுமுதலீட்டாளர்கள் பலரும், நான்கே மாதங்களில் அதன் மதிப்பு 3,200 டாலர் அளவுக்குக் குறைந்ததைப் பார்த்து அதிர்ந்து, நஷ்டத்துடன் வெளியேறியுள்ளார்கள். தினசரி ஏற்ற இறக்கங்கள் அளித்த அதிக டென்ஷனில் நான்கு வருட காலம் அவதிப்பட்டதாக சாஃப்ட் பேங்கின் தலைவர் மசயோஷி ஸன் குறிப்பிடுகிறார். இந்தியாவில் க்ரிப்டோகரன்ஸிகளுக்கு இருந்த தடை மார்ச் 2020-ல் நீக்கப்பட்டாலும், அடிக்கடி செய்தியில் அடிபடுவதும், பின் மறைவதுமாக இருக்கும் இந்த க்ரிப்டோகரன்ஸிகளில் இப்போதைக்கு பணம் போடுவது மிக அதிக ரிஸ்க்கை விரும்பியேற்பதாகும். இன்னும் சில ஆண்டுகளில் க்ரிப்டோகரன்ஸிகளின் செயல்பாடுகள் மேன்மை அடையும். அப்போது இதில் பணம் போடுவதற்கு யோசிக்கலாம். அதுவரை அதிக ரிஸ்க் எடுக்க நினைக்கும் முதலீட்டாளர்கள் தவிர, மற்றவர்கள் இந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்காமலே இருக்கலாம்!