Published:Updated:

Paytm: முதல் நாளிலேயே 27% சரிந்த பங்கு மதிப்பு; முதலீடு செய்ய ஏற்ற நேரமா இது?

பேடிஎம் பங்கு பட்டியலாகும் தேதியில் மிகப் பெரிய லாபம் கிடைக்கும் என்று முதலீடு செய்த பெரும்பாலான முதலீட்டாளர்கள், முதல் நாளிலிலேயே மிகப் பெரிய இழப்பைச் சந்தித்திருக்கிறார்கள்!

பேடிஎம் நிறுவனப் பங்கு விலை பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்ட முதல் நாளன்றே 27% விலை குறைந்து, முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.38,000 கோடி அளவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 25 சதவிகிதத்துக்குமேல் விலை குறைந்துள்ள நிலையில் இந்த நிறுவனப் பங்கை இனி வாங்கி முதலீடு செய்யலாமா என்கிற கேள்வியைப் பல முதலீட்டாளர்கள் கேட்டு வருகிறார்கள். இந்தக் கேள்விக்கு என்ன பதில் என்று பார்க்கும் முன், பேடிஎம் ஐ.பி.ஓ குறித்த சில விஷயங்களைப் பார்ப்போம்.

முன்னணி டிஜிட்டல் பேமென்ட் தளமான பேடிஎம் நிறுவனப் பங்கு பங்குச் சந்தையில் ஐ.பி.ஓ வெளியிடுகிறது என்றதும், அதன் மீது முதலீட்டாளர்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

2015-ல் ரூ.15,500 கோடி நிதி திரட்டும் நோக்கில் கோல் இந்தியா வெளியிட்ட ஐ.பி.ஓ-வுக்குப் பிறகு, ரூ.18,300 கோடி நிதி திரட்டும் நோக்கில் வெளியிடப்படும் மிகப் பெரிய ஐ.பி.ஓ இது என்பதால், மக்கள் பேடிஎம் பங்குகளில் முதலீடு செய்வதன்மூலம் லாபம் பார்க்கலாம் எனக் கணித்திருந்தனர்.

ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக, முதலீட்டாளர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது பேடிஎம். முதல் நாளிலேயே இந்த நிறுவனத்தின் பங்கு விலை 27% வரை சரிந்ததால், நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிடலைசேஷன் ரூ.38,000 கோடி வீழ்ச்சியைச் சந்தித்தித்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்தின் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.

Share Market (Representational Image)
Share Market (Representational Image)

இந்த நிறுவனப் பங்கில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கான பங்கு ஒதுக்கீடு நவம்பர் 17-ம் தேதி செய்யப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று அதாவது, நவம்பர் 18-ம் தேதி பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ-யில் பட்டியலிடப்பட்டது. இந்த நிறுவனத்தின் ஐ.பி.ஓ பங்கு வெளியீட்டில் விலை நிர்ணயமானது, ஒரு பங்குக்கு 2,080 ரூபாய் முதல் 2,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டபோது தொடக்கத்தில் பி.எஸ்.இ-யில் 1,955 ரூபாயாகவும், என்.எஸ்.இ-யில் ரூ.1950-ஆக தொடங்கியது. இது வெளியீட்டு விலையைவிட 9.07% குறைவாகும்.

வர்த்தகம் ஆரம்பித்ததிலிருந்தே சரிந்து வந்த இந்த நிறுவனத்தின் பங்கு விலை மதியம் 3.05 மணிக்கு 27.26% சரிந்து பி.எஸ்.இ-யில் ரூ.1,564.15-க்கும், என்.எஸ்.இ-யில் 27.37% சரிந்து ரூ.1,561.35-க்கும் வர்த்தகமானது. வர்த்தகம் முடியும்போது என்.எஸ்.இ சந்தையில் ஐ.பி.ஓ விலையிலிருந்து ரூ.589.20 (27.40%) குறைந்து ரூ.1,560.80-க்கு வர்த்தகமானது. பி.எஸ்.இ-யில் ஐ.பி.ஓ விலையிலிருந்து ரூ.585.85 (27.25%) குறைந்து ரூ.1,564.15-க்கு வர்த்தகமானது.

Paytm
Paytm

முதல் நாளிலேயே இந்தப் பங்கு விலை இந்த அளவுக்கு சரிய என்ன காரணம், விலை கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் இந்தப் பங்கை வாங்கலாமா என்கிற கேள்விகளை பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.நாராயணிடம் கேட்டோம்.

``பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் அனைத்து நிறுவனங்களின் ஐ.பி.ஓ-களும் லாபத்தை மட்டுமே கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது. 10 பங்குகளில் ஏதாவது இரண்டு பங்குகள் நல்ல லாபத்தை முதல் நாளிலேயே பதிவு செய்யலாம். முதல் நாள் வர்த்தகத்தில் `லிஸ்டிங் கெயின்' பார்க்கலாம் என அனைத்து ஐ.பி.ஓ-களையும் முதலீட்டாளர்கள் அணுகுவது பிரச்னைகளுக்குத்தான் வழிவகுக்கும். அதுதான் பேடிஎம் ஐ.பி.ஓ-வில் நடந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லிஸ்டிங் கெயின் பார்க்கலாம் என முதலீடு செய்த பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு முதல் நாளிலிலேயே மிகப் பெரிய இழப்பை பேடிஎம் பங்கு வழங்கியிருக்கிறது. முதலீட்டாளர்கள் ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்யும்போது அந்த நிறுவனத்தின் ஃபண்டமென்டல்களைப் பார்க்கத் தவறுகிறார்கள். அந்த நிறுவனம் என்ன சொல்கிறதோ, அதை மட்டுமே நம்புகிறார்கள். இதனால் வரும் விளைவுதான் இது.

ஏ.கே.நாராயண்,
ஏ.கே.நாராயண்,

அதனால், முதலீட்டாளர்கள் எப்போதும் மிக எச்சரிக்கையாக ஐ.பி.ஓ-களை அணுகுவது அவசியம். நீண்டகால நோக்கில் ஐ.பி.ஓ-வில் முதலீட்டை ஆரம்பிப்பவர்களுக்கு பிரச்னை இல்லை. பங்குச் சந்தையில் பட்டியலாகும் முதல் நாளன்றே அதிக லாபத்தை சம்பாதித்து விட வேண்டும் என்று நினைத்து அல்லது குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து முதலீடு செய்யும்போது, இது போன்ற சரிவு வந்தால், முதலீட்டாளர்களால் அந்தப் பங்கை வாங்க முடியாமல் போகும்.

ஏன் இந்த சரிவு?

பேடிஎம் பங்குகளின் ஐ.பி.ஓ விலை `ஓவர் வேல்யூஷனாக' இருக்கிறது. இந்த ஐ.பி.ஓ-வின் சைஸ் ரூ.18,300 கோடி என்கிற மிகப் பெரிய அளவில் இருந்ததால், ஏராளமான முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளை வாங்கி வசப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இடையே இந்தப் பங்குகளை விற்க, வாங்க என போட்டோ போட்டி நிலவுவதால், பங்கின் விலை மிகப் பெரிய அளவில் சரிவை சந்தித்திருக்கிறது.

இன்னும் சில தினங்கள் இந்த நிலை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சில தினங்களிலேயே பங்கின் விலை ஏற்றத்தையும் சந்திக்கலாம். அல்லது ஐ.பி.ஓ வெளியீட்டு விலையைத் தொடுவதற்கு நீண்டகாலம் வரையிலும் எடுத்துக் கொள்ளலாம். தற்போதைய சந்தையின் போக்கில், இந்த பங்கின் விலை ஏற்ற இறக்கத்தைக் கணிக்க முடியாததாக இருப்பதால், முதலீட்டாளர்கள் பொறுமை காப்பது நல்லது" என்றார் தெளிவாக.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை
இந்த ஆண்டில் ஐ.பி.ஓ வந்த பங்குகள்... இப்போது வாங்கலாமா?

பேடிஎம் ஐ.பி.ஓ-வைப் போல, ஒரு சில நிறுவனங்கள் லிஸ்டிங்கின் போது சரிவைச் சந்தித்திருக்கின்றன. அதில் குறிப்பாக 2007-ல் கெய்ர்ன் இந்தியா, ஐ.பி.ஓ வெளியீட்டின் போது முதல் நாளிலேயே 14% சரிவை சந்தித்தது. அதே போல, 2008-ல் ரிலையன்ஸ் பவர் 17% சரிவையும், 2015-ல் காஃபி டே 18% சரிவையும் மற்றும் 2018-ல் ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் 14% சரிவையும் சந்தித்தன. தற்போது பேடிஎம் அதிகபட்சமாக 27% சரிவை சந்தித்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு