Published:Updated:

மீண்டும் உச்சத்தில் தங்கம்! - முதலீடு செய்யும் தருணமா..?

தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அவ்வப்போது விற்பதால் விலை இறங்கவும் வாய்ப்பு உண்டு!

மீண்டும் உச்சத்தில் தங்கம்! - முதலீடு செய்யும் தருணமா..?

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அவ்வப்போது விற்பதால் விலை இறங்கவும் வாய்ப்பு உண்டு!

Published:Updated:
தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்
ங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ,4500-ஆக உயர்ந்திருக்கிறது.

இதன் பின்னணியைத் தெரிந்துகொண்டால், ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கும் முதலீடுகளைத் தொடரலாமா... விற்றுப் பணமாக்கலாமா... புதிய முதலீடுகளை ஆரம்பிக்கலாமா ஆகியவை குறித்து முதலீட்டாளர்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியும்.

மீண்டும் உச்சத்தில் தங்கம்! - முதலீடு செய்யும் தருணமா..?

2020-ம் ஆண்டு மட்டும் சர்வதேச விலை 14% ஏற்றம்கண்டிருக்கிறது. இந்திய ரூபாயில் 17% அதிகரித்திருக்கிறது. கடந்த ஒரு வருடத்துக்கு மேலாகவே இந்த விலையேற்றம் நிகழ்ந்துவருகிறது. அமெரிக்க- சீன வர்த்தகப்போர் ஆரம்பமானதிலிருந்து விலை அதிகரித்துவந்த நிலையில், தற்போது கொரோனா சார்ந்த செய்திகள் மற்றும் அதன் பக்க விளைவுகளாகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தாக்கங்கள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்திவருவதால், இந்த விலையேற்றம் ஏற்பட்டிருக்கிறது. உலக அளவில் பங்குச் சந்தைகள் சரிவு, தொடர்ச்சியான எதிர்மறை செய்திகள், வளர்ந்த நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைத்திருப்பது போன்ற காரணங்களால் பொருளாதாரத்தில் நிச்சயமற்றதன்மை காணப்படுகிறது. இதன் காரணமாகப் பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கக்கூடிய தங்கத்தின்மீது கவனம் செலுத்தப்படுகிறது.

தங்கம்
தங்கம்

அமெரிக்கப் பொருளாதாரம் சந்திக்கும் சவால்கள்

கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு நடைமுறை உலகம் முழுக்க இருப்பதால் உணவகங்கள், வணிக வளாகங்கள், சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் 1.50 கோடி பேருக்குமேல் வேலையை இழந்திருக்கிறார்கள். விமானத்துறை நிறுவனங்களின் செயல்பாடு சென்ற வருடத்துடன் ஒப்பிட்டால், 55% வருமான இழப்பைச் சந்தித்திருக்கிறது.

1992-ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவின் சில்லறை வர்த்தகம் 8.5% என்ற மிகப்பெரிய சரிவைச் சந்தித்திருக்கிறது. அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கியான ஃபெட், பொருளாதாரச் சரிவைத் தடுக்க 1.5 ட்ரில்லியன் டாலர் அளவுக்குப் பணப்புழக்கத்தை வங்கிகளின் வாயிலாக அதிகரிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. `இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தை நிமிர்த்திவிடலாம்’ என்பது அமெரிக்க ஃபெட் வங்கியின் எண்ணமாக இருந்தாலும், பொருளாதார வல்லுநர்கள் மிகவும் அச்சத்துடனேயே இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துவருகிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அமெரிக்க ஃபெட் வட்டி விகிதங்களை மிகக் குறைந்த அளவில் வைத்திருப்பது, வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பது, முதல் காலாண்டில் எஸ் & பி 500 நிறுவனங்களின் மோசமான நிலை குறித்து நிதி அறிக்கைகளில் அறிவித்திருப்பது, கச்சா எண்ணெய் விலை மிகவும் இறக்கத்தில் வர்த்தகமாவதன் காரணமாக ஷெல் எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமை பாதிப்பைச் சந்தித்திருப்பது... இவையனைத்தும் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளிலிருந்து விலகுவதற்கான காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. இவ்வாறு நிதிச் சந்தைகளில் அச்சம் அதிகரித்திருப்பதால், தங்கம் மீதான முதலீடுகள் அதிகரிக்கின்றன.

தங்கம்
தங்கம்

இ.டி.எஃப் முதலீடுகள் அதிகரிப்பு!

உலக அளவில் முதன்மையான இ.டி.எஃப் நிறுவனமான எஸ்.பி.டி.ஆர் கோல்டு டிரஸ்ட் 2013-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக முதலீடுகளைப் பெற்றுள்ளது. சுமார் 1,000 டன்னைத் தாண்டி தங்க முதலீடுகளை ஈட்டியிருக்கிறது. உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்றதன்மை இருப்பது, இ.டி.எஃப் முதலீடுகளை அதிகம் ஈர்த்திருக்கிறது. நம் நாட்டில் 2020, ஜனவரியில் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ரூ.202 கோடியாகக் காணப்பட்ட நிலையில், அதற்கடுத்த பிப்ரவரியில் ரூ.1,400 கோடியாக மேலும் அதிகரித்திருக்கிறது. இது தங்கத்தின் விலை எதிர்காலத்தில் அதிகரிக்க வாய்ப்பிருப்பதன் நம்பிக்கையைக் காட்டுவதாக இருக்கிறது.

மொத்தத்தில், கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக கோல்டு இ.டி.எஃப்-களிலிருந்து வெளியேறிய இந்திய முதலீட்டாளர்கள், 2019-20-ம் நிதியாண்டில் தங்கம் சார்ந்த இ.டி.எஃப் முதலீடுகளை அதிக அளவுக்கு மேற்கொண்டுள்ளனர். சுமார் ரூ.1,600 கோடி என்ற அளவுக்கு முதலீடுகள் நடைபெற்றுள்ளன.

மீண்டும் உச்சத்தில் தங்கம்! - முதலீடு செய்யும் தருணமா..?

தங்கப் பத்திர முதலீடு!

மத்திய அரசு வெளியிடும் தங்கப் பத்திரங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய இன்னொரு வாய்ப்பு. தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்வதற்கு பதிலாக அதாவது, தங்க ஆபரணமாக அல்லாமல் மத்திய அரசு அவ்வப்போது வெளியிடும் தங்கப் பத்திரங்கள் மூலமாகவும் முதலீடு செய்யலாம். சமீபத்தில் ஆர்.பி.ஐ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2020-21-ம் நிதியாண்டில் ஆறு முறை முதலீடு செய்ய வரையறுக்கப்பட்டிருக்கிறது.

அதில் முதற்கட்டமாக ஏப்ரல் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையிலான காலத்தில் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அடுத்து, மே 11-15, ஜூன் 8-12, ஜூலை 6-10, ஆகஸ்ட் 3-7, ஆகஸ்ட் 31- செப்டம்பர் 4 போன்ற தேதிகளிலும் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை அதிகரிக்குமா?

கொரோனா சார்ந்த செய்திகள் உலகப் பொருளாதாரத்துக்கு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கும் நிலையில், இதன் தாக்கம் முழுமையாக நீங்கும் வரை தங்கத்தின் விலை தொடர் ஏற்றமாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், லாபத்துக்காக அவ்வப்போது விற்பதால் விலை இறங்கவும் வாய்ப்பு உண்டு.

ஆகையால், குறுகியகாலத்தில் பெரிய அளவிலான ஏற்ற இறக்கத்துடன் தங்கத்தின் விலை இருக்க வாய்ப்பிருக்கிறது. என்றாலும், இப்போதிருக்கும் சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது, நீண்டகால அடிப்படையில் தங்கம் புதிய உச்சங்களைத் தொடுவதற்கான முகாந்திரங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை.