Published:Updated:

`நீங்கள் அறிவித்ததுதான் ஆச்சர்யம் அளிக்கிறது!' நிதியமைச்சருடன் மோதிய 'பயோகான்' தலைவர்

சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிடவேண்டிய அறிவிப்பை, நிதி அமைச்சர் அறிவித்திருப்பது தனக்கு ஆச்சர்யம் அளிப்பதாக, 'பயோகான்' தலைவர் கிரண் மஜும்தார் ஷா ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், உடல்நலத்துக்குக் கேடான இ-சிகரெட் விற்பனை தடை செய்யப்படுவதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த அறிவிப்புதான் ட்விட்டரில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

`சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிடவேண்டிய அறிவிப்பை நிதியமைச்சர் அறிவித்திருப்பது தனக்கு ஆச்சர்யம் அளிப்பதாக' இந்தியாவின் முன்னணி பார்மாசூட்டிகல் நிறுவனமான பயோகான் தலைவர் கிரண் மஜும்தார் ஷா ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், `இதேபோல குட்காவும் தடைசெய்யப்படுமா?' என்றும், `நம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சகம் அறிவிக்குமா?' என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தார்.

ட்விட்டர்
ட்விட்டர்

இவரது கருத்து, உடனே ட்விட்டரில் வைரலானது. இந்தக் கருத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலர் தங்களது கருத்துகளைப் பகிர்ந்தனர். 'பெரிய நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் உங்களுக்கெல்லாம் எதற்கு இந்த தேவையில்லாத வேலை?' என்றும் சிலர் குறைகூறியிருந்தார்கள். அதற்கு பதில் ட்வீட்டாக, 'மக்களில் பலரும் பலவிதமாக இந்த தேசத்தின்மீது அன்பு செலுத்துகிறார்கள். நானும் இந்த தேசம் முன்னேற வேண்டுமென்ற எண்ணத்தில்தான் கேட்டுள்ளேன்' என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இவரது ட்வீட்டுக்கு நிர்மலா சீதாராமன் தனது பக்கத்தில் பதிலளித்திருந்தார். "கேபினட் கூட்டத்தில் எடுத்த முடிவைத்தான் செய்தியாளர்களிடம் தெரிவித்தேன். ஜி.ஓ.எம் எனப்படும் முக்கிய அமைச்சர்கள் குழுவின் தலைவர் என்ற முறையில் அறிவிப்பை வெளியிட்டேன். சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். சுகாதாரத்துறை செயலர் என்னோடுதான் இருக்கிறார். இதுகுறித்த விவரங்களை அவர் என்னோடு பகிர்ந்துகொண்டுள்ளார். நிதியமைச்சர் என்ற முறையில் பொருளாதாரம் குறித்த அறிவிப்புகளையும் தொடர்ச்சியாக வெளியிட்டபடிதான் இருக்கிறேன்" என்று விளக்கியிருந்தார்.

இதையடுத்து, "எனது கேள்விகளுக்குத் தெளிவான விளக்கமளித்த நிதிமைச்சருக்கு நன்றி" என்று கிரண் மஜும்தார் பதில் ட்வீட் போடவும், அந்த விவாதம் முடிவுக்குவந்தது.

கிரண் மஜும்தார்ஷா
கிரண் மஜும்தார்ஷா

இ-சிகரெட்டைத் தடைசெய்யும் அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ஐடிசி நிறுவனத்தின் பங்கு விலை 1.5 சதவிகிதம் அதிகரித்தது. காட்ஃப்ரி பிலிப்ஸ் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை 8 சதவிகிதமும் கோல்டன் டொபாக்கோ நிறுவனப் பங்கு 4.5 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.