Published:Updated:

மகத்தான லாபம் தரும் ‘மாத்தி யோசி’ முதலீட்டு உத்திகள்!

முதலீட்டு உத்திகள்
பிரீமியம் ஸ்டோரி
முதலீட்டு உத்திகள்

தங்கம்... ரியல் எஸ்டேட்... பங்குச் சந்தை... ஃபிக்ஸட் இன்கம்...

மகத்தான லாபம் தரும் ‘மாத்தி யோசி’ முதலீட்டு உத்திகள்!

தங்கம்... ரியல் எஸ்டேட்... பங்குச் சந்தை... ஃபிக்ஸட் இன்கம்...

Published:Updated:
முதலீட்டு உத்திகள்
பிரீமியம் ஸ்டோரி
முதலீட்டு உத்திகள்

நம் மக்களின் முதலீடு என்று எடுத்துக் கொண்டால் தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது. அடுத்து ஆயுள் காப்பீட்டு பாலிசியை முதலீடாக நினைத்து பிரீமியம் கட்டி வருபவர்களும் நம்மிடையே மிக அதிகமாக இருக்கிறார்கள். நவீன முதலீடு களான பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் நம்மவர்களின் முதலீடு குறைவாக இருக்கிறது.

என்.விஜயகுமார் 
நிதி ஆலோசகர், 
www.vbuildwealth.com
என்.விஜயகுமார் நிதி ஆலோசகர், www.vbuildwealth.com

மாதச் சம்பளம் மற்றும் வருமானத்தில் கணிசமான தொகையைச் சேமிப்பதில் நம் மக்கள் கில்லாடிகளாக இருக்கிறார்கள். ஆனால், கொரோனா பாதிப்புக்குப் பிறகு, இந்தச் சேமிப்பு முன்பைவிட அதிகரித் திருக்கிறது. ஆனால், இந்தச் சேமிப்புத் தொகையை சரியாக முதலீடு செய்கிறார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தவிர, ஒவ்வொரு முதலீடு மற்றும் சொத்து பிரிவுக்கு எனத் தனிப்பட்ட தன்மை மற்றும் தேவை இருக்கிறது. இந்த முக்கியமான விஷயத்தை முழுமையாகப் புரிந்து முதலீடு செய்கிறார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், ‘மாத்தி யோசி’ ஃபார்முலாவைப் பயன்படுத்தி, முதலீடு செய்யும்பட்சத்தில், இனிவரும் காலத்தில் இன்னும் அதிகமாக நம்மால் லாபம் சம்பாதிக்க முடியும். இந்த ‘மாத்தி யோசி’ ஃபார்முலாபடி, இனி ஒவ்வொரு முதலீட்டையும் எப்படி அணுகலாம் என்று பார்ப்போமா?

மகத்தான லாபம் தரும் ‘மாத்தி யோசி’ முதலீட்டு உத்திகள்!

தங்கத்தில் முதலீடு...

தங்கம், தமிழர்களின் பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆண், பெண் இருவருக்கும் தங்க நகை அணிவதில் ஆர்வம் அதிகம். ஆணாக இருந்தால் குறைந்தது ஒரு செயின், இரண்டு மோதிரம் அணிந்திருப்பார்கள். பெண்ணாக இருந்தால், செயின், மோதிரம், கம்மல், மூக்குத்தி அணிந்திருப்பார்கள். இதைத் தவறு என்று சொல்ல முடியாது. அழகுக்காக அணிந்திருக் கிறார்கள் என்கிற வகையில் அது சரிதான்.

அதே நேரத்தில், தங்க நகையை முதலீடாகக் கருதுவதுதான் மிகப் பெரிய தவறு. காரணம். அதை வாங்கும்போது செய்கூலி, சேதாரம் சுமார் 10%, ஜி.எஸ்.டி 3% சேர்த்துதான் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. வாங்கிய தங்க நகையை விற்கப்போனால், முழுத் தொகையைக் கடையில் தர மாட்டார்கள். சுமார் 15% ரொக்கப் பணம் போக, மீதியை நகையாகத்தான் வாங்கிக்கொள்ள வேண்டும்.

10, 15 மற்றும் 20 ஆண்டுகள் கழித்துத் தேவைப்படும் ஆபரணத்துக்கு இப்போதே வாங்கி வைத்தால் பழைய மாடல் மற்றும் பழைய நகையாகிவிடும். இதனால், பழைய நகையைக் கொடுத்துவிட்டுதான் புது நகை வாங்க வேண்டும். அப்போது பழைய நகைக்கான கழிவு மற்றும் புதிய நகைக்கான செய்கூலி, சேதாரம் சுமார் 10%, ஜி.எஸ்.டி 3% கொடுக்க வேண்டும். தவிர, தங்க நகைகளைப் பாதுகாக்க லாக்கர் வேண்டும். அதற்கு ஃபிக்ஸட் டெபாசிட் போட வேண்டும். லாக்கர் வாடகை கொடுக்க வேண்டும். இப்படி செய்வதன்மூலம் கிட்டத்தட்ட 20 - 25 சதவிகிதத்துக்கு மேல் இழப்பு.

இதற்குப் பதிலாக, தங்க நாணயம், தங்கக் கட்டி போன்ற வாய்ப்புகள் இருக்கின்றன. இவற்றில் சேதாரம் சுமார் 3% மற்றும் ஜி.எஸ்.டி 3% இருக்கிறது. இந்த முறையில் இழப்பு சுமார் 6% இருக்கிறது. இந்த இரண்டுக்கும் பதில் கோல்டு பாண்ட், கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் போன்ற தங்கம் சார்ந்த முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்யலாம். இவற்றில் செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி, லாக்கர் போன்ற சிக்கல்கள் இல்லை. ரிசர்வ் வங்கியின் சாவரின் கோல்டு பாண்டில் முதலீட்டுத் தொகைக்கு ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானம், எட்டு ஆண்டு களுக்குப் பிறகு, மூலதன ஆதாய வரி விலக்கு போன்ற சலுகைகள் இருக்கின்றன.

இந்தச் சலுகைகள் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் மற்றும் கோல்டு இ.டி.எஃப் முதலீட்டில் இல்லை. ஆனால், தங்கப் பத்திரத்தில் நினைத்த நேரத்தில் முதலீடு செய்ய முடியாது. அரசு அதை வெளியிடும் நேரத்துக்குக் காத்திருக்க வேண்டும்.

இதற்குப் பதில், நீண்ட கால முதலீட்டில் ரிஸ்க் குறைவான ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டில் முதலீடு செய்து வரும்பட்சத்தில் ஆண்டுக்குச் சராசரியாக 12%-13% வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கடந்த 3, 5 மற்றும் 10 ஆண்டுக் காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 15% வருமானத்தை ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டுகள் கொடுத்திருக்கின்றன. மூன்று ஆண்டுக் காலத்தில் டாப் 5 ஃபண்டுகள் என்று எடுத்துக் கொண்டால், சுமார் 18% முதல் 25% வருமானம் தந்திருக்கின்றன. இதுவே ஐந்தாண்டுக் காலத்தில் 18% - 20% வருமானம் தந்துள்ளன.

கோல்டு இ.டி.எஃப் திட்டங்கள், கடந்த 3, 5 மற்றும் 10 ஆண்டுக் காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக முறையே 16%, 7% மற்றும் 4.40% வருமானத்தைத் தந்திருக்கின்றன. தங்கம் என்றாலும் மியூச்சுவல் ஃபண்ட் என்றாலும் கடந்த கால வருமானம் எதிர்காலத்திலும் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தர வாதமும் இல்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

நீண்ட காலத்தில் தங்க நகை தேவை உள்ளவர்கள் நல்ல ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டுகளில் முதலீட்டைப் பிரித்து மேற் கொண்டு, அந்தத் தொகையைக் கொண்டு புது டிசைனில் தங்க நகை வாங்கிக்கொள்வது லாபகர மாக இருக்கும். தங்க முதலீட்டுடன் ஒப்பிடும்போது, ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு வரிக்குப் பிந்தைய நிலையில் மிகவும் லாபகரமாக இருக்கும்.

எனவே, அணியத் தேவை யான ஆபரண நகைகளை மட்டும் இப்போது வாங்கிவிட்டு, மீதமுள்ள தொகையை ஈக்விட்டி ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்துவிட்டு, பின்னர் தங்க நகை தேவைப்படும்போது வாங்கிக் கொள்வது புத்திசாலித்தனம் மற்றும் லாபகரமானது ஆகும். தங்கம் முதலீட்டை இனி நீங்கள் ‘மாற்றி யோசி’ப்பீர்களா?

ரியல் எஸ்டேட் முதலீடு...

சொந்த பணம் அல்லது வீட்டுக் கடன் மூலம் குடியிருக்க ஒரு வீடு வாங்குவது நல்ல விஷயம்தான். வீட்டுக் கடன் மூலம் வாங்கும்போது நிதி ஆண்டில் திரும்பக் கட்டும் அசலில் ரூ.1.5 லட்சம் மற்றும் வட்டியில் ரூ.2 லட்சம் வரை வரிச் சலுகை கிடைப்பது கூடுதல் லாபம். முதல் வீடு என்கிறபோது பிரதமரின் அனைவருக்கும் சொந்த வீடு என்கிற திட்டத்தின் மூலம் வட்டி மானியம் சுமார் ரூ.2.5 லட்சம் கிடைக்கும்.

அதேநேரத்தில், இரண்டாவது வீட்டைக் கடன் மூலம் அல்லது சொந்தப் பணத்தைப் போட்டு வாங்குவது அவ்வளவு லாபகரமாக இல்லை. காரணம், வாடகை வருமானம் என்பது சுமாராக 2 - 2.5 சதவிகிதமாகத்தான் இருக்கிறது. ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு என்பது முன்புபோல் எதிர்பார்க்க முடியாது.

காரணம், 2008 முதல் 2012 வரை இருந்த தேவை மற்றும் விலை அதிகரிப்பு இப்போது இல்லை. அந்த வகையில் முதலீட்டு நோக்கில் இரண்டாவது மற்றும் மூன்றாவது வீடு வாங்குவது லாபகரமாக இருக்காது.

இரண்டாவது, மூன்றாவது வீட்டை வீட்டுக் கடன் மூலம் வாங்கும்போது கடனுக்கான வட்டியும் அதிகமாக இருக்கும். முதல் வீட்டுக்குக் கிடைப்பதுபோல் வட்டி மானியமும் கிடைக்காது. அதற்குப் பதில், வீடு வாங்கும் மொத்தத் தொகை அல்லது மாதத் தவணைத் தொகையை உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப பி.பி.எஃப், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.

வீடு என்பது குடியிருக்க மட்டுமே. அதைத் தாண்டி ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வாங்கி, முறையாகப் பராமரித்து, லாபம் பார்ப்பது என்பது மிக மிகச் சிலருக்கே அமையும். எனவே, ரியல் எஸ்டேட் முதலீட்டிலும் இனி கொஞ்சம் மாற்றி யோசிக்கத் தொடங்குங்கள். நல்ல லாபம் பார்ப்பீர்கள்.

மகத்தான லாபம் தரும் ‘மாத்தி யோசி’ முதலீட்டு உத்திகள்!

ஃபிக்ஸட் இன்கம் முதலீடுகள்

ஃபிக்ஸட் இன்கம் பிரிவில் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் (எஃப்.டி-கள்), தனியார் நிறுவன எஃப்.டி-கள், மியூச்சுவல் ஃபண்டின் கடன் ஃபண்டுகள், கடன் சார்ந்த ஹைபிரிட் ஃபண்ட் ஆகியவை வரும். இந்த முதலீடுகளை ஒருவர் தொடர்ச்சியான வருமானம் வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் பயன்படுத்த வேண்டும். காரணம்,இந்தத் திட்டங்கள் மூலம் பணவீக்க விகிதம் அல்லது அதைவிட 1 - 2% வருமானம்தான் கிடைக்கும். அந்த வகையில் இவற்றை நீண்ட காலத்தில் செல்வம் சேர்க்க பயன்படுத்தக் கூடாது.

செலவுக்குத் தொடர்ந்து பணம் தேவைப்படும் பட்சத்தில் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்துவிட்டு, அதிலிருந்து எடுத்து பயன்படுத்தலாம். கடன் சார்ந்த ஹைபிரிட் ஃபண்டுகள் என்கிறபோது முதலீடு செய்து மூன்று ஆண்டுகள் கழித்து, அதிலிருந்து சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (எஸ்.டபிள்யூ.பி) என்ற முறையில் எடுத்து குறைவான வரி கட்ட வேண்டிவரும். அதாவது, நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு பணவீக்க விகித சரிகட்டலுக்குப் பிறகு 20% வரி கட்டினால் போதும்.

சில நேரங்களில் பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் வரி கட்டத் தேவை இருக்கிறது. இப்படி தொடர் வருமானம் பெறுவதற்கு டைனமிக் பாண்ட் ஃபண்ட் அல்லது பேலன்ஸ்டு அட்வான் டேஜ் ஃபண்டுகளை பயன் படுத்தும் மூலதனம் விரைவில் கரைந்துவிடாது.

ஃபிக்ஸட் இன்கம் திட்டங் களில் எப்போதும், நீண்ட கால நிதி இலக்குகள் மற்றும் செல்வம் சேர்க்க முதலீடு செய்யக் கூடாது என்பதை எப்போதும் மறக்க கூடாது.

மகத்தான லாபம் தரும் ‘மாத்தி யோசி’ முதலீட்டு உத்திகள்!

பங்கு சார்ந்த முதலீடுகள்...

பங்குச் சந்தை சார்ந்த முதலீடு கள் என்கிறபோது நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் (ஈக்விட்டி ஃபண்டுகள்) ஆகும். இவற்றின் முதலீட்டு நோக்கம் நீண்ட கால நிதி இலக்குகளை நிறைவேற்றுதல் மற்றும் செல்வம் சேர்த்தல் ஆகும். உங்களின் பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம், ஓய்வுக் கால தொகுப்பு நிதிக்கான முதலீட்டுக் காலம் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் நீங்கள் பங்கு சார்ந்த முதலீடுகளைத் தேர்வு செய்யலாம்.

நம்மில் பலர் கடந்த ஓராண்டு வருமானத்தைப் பார்த்து நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் குறிப்பாக, செக்டார் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறோம்.

சந்தை குறுகிய காலத்தில் சரிவைச் சந்திக்கும்போது கையை சுட்டுக்கொண்டு அந்த முதலீட்டிலிருந்து வெளியே விடுகிறோம். பிறகு, சந்தையைக் குறை சொல்கிறோம். அந்த முதலீட்டுக்கு மீண்டும் வருவதே இல்லை.

பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் குறுகிய காலத்தில் அதிக ரிஸ்க் ஆனவை. அதேநேரத்தில், அவற்றில் நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்பட்டு, நல்ல வருமானம் கிடைக்க அதிக வாய்ப்பிருக்கிறது. பங்குச் சந்தை சார்ந்த முதலீடு என்று வரும்போது ஒரே பங்கில் அல்லது ஒரே ஃபண்டில் முதலீடு செய்யாமல் பல துறை பங்குகள், பல வகை ஈக்விட்டி ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்வது மூலம் ரிஸ்க்கை இன்னும் குறைக்க முடியும்.

பங்கு சார்ந்த முதலீடுகளை நீண்ட கால இலக்கு மற்றும் செல்வம் சேர்க்கத் தேர்வு செய்வது புத்திசாலித்தனம், லாபகரமானது.

ஒவ்வொரு முதலீட்டுத் திட்டத்திலும் ‘மாத்தி யோசி’ உத்திகளைப் பின்பற்றினால் நீங்கள் நிர்ணயித்த இலக்குக்கு ஏற்ப வருமானத்தைப் பெறலாம்.

மகத்தான லாபம் தரும் ‘மாத்தி யோசி’ முதலீட்டு உத்திகள்!

ஆயுள் காப்பீட்டு பாலிசியைச் சரியாகப் பயன்படுத்துவது எப்படி?

லைஃப் இன்ஷூரன்ஸ் என்கிற ஆயுள் காப்பீட்டு பாலிசியை நாம் அதன் முதன்மை நோக்கமான ஆயுள் காப்பீடு கவரேஜுக்காகத்தான் எடுக்க வேண்டும். பொதுவாக, குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர்களின் பெயரில் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்க வேண்டும். இதன் நோக்கம் அந்த வருமானம் ஈட்டும் நபருக்கு திடீரென ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகையால் குடும்பத்தினர் நிதிச் சிக்கலைச் சந்திக்கக் கூடாது என்பதுதான்.

ஆனால், நம்மில் பலர் குறைவான ஆயுள் கவரேஜ் அளிக்கும் எண்டோவ்மென்ட் பாலிசி, மணிபேக் பாலிசி, வோல்லைஃப் பாலிசி, பங்குச் சந்தையுடன் இணைந்த யூலிப் பாலிசி ஆகியவற்றை எடுத்துவிடுகிறோம். இந்த பாலிசிகள் மூலம் நீண்ட காலத்தில் ஆண்டுக்குச் சராசரியாக 4 - 5%தான் வளர்ச்சி கிடைக்கிறது. இதற்குப் பதில், குறைவான பிரீமியம் கொண்ட, பாலிசி முதிர்வில் எதுவும் கிடைக்காத டேர்ம் பிளான் (ஆண்டு சம்பளத்தைப்போல் 15 மடங்கு தொகை) எடுத்துக்கொண்டு, மீதித் தொகையை பி.பி.எஃப், வரிச் சலுகை மியூச்சுவல் ஃபண்ட் இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்து வரும்போது, குடும்பத்தினருக்குக் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்.

30 வயதான மாதம் ரூ.50,000 சம்பளம் வாங்கும் ஒருவர் ரூ.2.5 லட்சத்துக்கு ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு பாலிசி எடுத்திருந்தால், விபத்து மூலம் அசம்பாவிதம் ஏற்பட்டால் அவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் கிடைக்கும். இந்தச் சிறிய தொகையை வைத்து அந்தக் குடும்பத்துக்கு ஏற்படும் வருமான இழப்பை ஈடுசெய்ய முடியாது. அவரின் ஆண்டு சம்பளத்தைப்போல் 15 மடங்கு தொகைக்கு, அதாவது 6X15= ரூ. 90 லட்சத்துக்கு ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால், இழப்பீட்டுத் தொகைக்கு 7% (90 லட்சம் X 7%/12) வருமானம் கிடைத்தால் மாதம் ரூ.50 ஆயிரம் வருமானம் கிடைக்கும். இவர் ரூ.90 லட்சத்துக்கு டேர்ம் பிளான் எடுக்க ஆண்டு பிரீமியம் சுமார் 18,000 ரூபாய்தான். ரூ.90 லட்சத்துக்கு எண்டோவ்மென்ட் பாலிசி எடுக்க ஆண்டு பிரீமியம் கிட்டத்த ரூ.4.5 லட்சம் வரும். ஆண்டுக்கு ரூ.6 லட்சம் சம்பளம் வாங்கும் நபரால் ரூ.4.5 லட்சம் பிரீமியம் கட்ட முடியாது.

எனவே, டேர்ம் பிளான்தான் சரியானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வரிச் சலுகைகள் தேவைப்படுபவர்கள் எண்டோவ்மென்ட் பாலிசிக்கு பதில் டேர்ம் பிளான் எடுத்துவிட்டு, எண்டோவ்மென்ட் பாலிசிக்கு கட்டும் அதிக பிரீமியத்தில் டேர்ம் பிளானுக்கு கட்டும் தொகையைக் கழித்துவிட்டு, மீதியை வாலண்டரி பி.எஃப், பி.பி.எஃப், இ.எல்.எஸ்.எஸ் ஆகியவற்றில் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். இனி ஆயுள் காப்பீடு பாலிசியை அதுவும் டேர்ம் பிளானை எடுத்துவிட்டு மீதியை முதலீடு செய்து, இதர நிதி இலக்குகளை சுலபமாக நிறைவேற்றுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism