Published:Updated:

சேமிப்புக்கு வேட்டு வைக்கும் லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளேஷன்..!

லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளேஷன்
பிரீமியம் ஸ்டோரி
லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளேஷன்

சேமிப்பு

சேமிப்புக்கு வேட்டு வைக்கும் லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளேஷன்..!

சேமிப்பு

Published:Updated:
லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளேஷன்
பிரீமியம் ஸ்டோரி
லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளேஷன்

நடுத்தட்டு மக்களின் பணவரவு வருடம்தோறும் சீராக உயர்ந்து வருகிறது. ஆனால், வருமானத்தில் இருக்கும் சீரான ஏற்றம், செல்வ வளர்ச்சியில் பிரதிபலிக்கிறதா என்று கேட்டால், இல்லை என்பதே பதிலாக வருகிறது. அதற்கு நாம் சொல்லும் முக்கியமான காரணம், பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு. இவை இரண்டும் நம் செலவுகளை அதிகரிப்பதும், அதன் காரணமாக நம் சேமிப்பு குறைவதும் உண்மைதான். ஆனால், இப்படி யான புறக் காரணங்கள் நம் மனதை சமாதானப் படுத்துவதற்கு வேண்டுமானால் உதவலாம்; உண்மையான காரணம் என்ன?

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

மெள்ள மெள்ள நாம் அறியாமலேயே நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட உயர் ரக செலவுப் பழக்கங்கள்தான் காரணம். மாணவப் பருவத்திலும், வேலைக்குச் சேர்ந்த புதிதிலும் தேவைக்கு மட்டும் செலவழிக்கும் சிக்கன மனப்பான்மை நம்மிடம் இருந்தது. அது இன்று நம்மைவிட்டுப் போயே போய் விட்டது. சம்பளம் ஏற, ஏற செலவும் ஏறுகிறது. எதிர்பாராத விதமாக அதிகப் பணம் கையில் புரளும்போது நம் செலவுப் பழக்கங்கள் உயர ஆரம்பிக்கின்றன. இதைத்தான் ‘லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளேஷன்’ என்கிறார்கள்.

லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளேஷன்...

“எவ்வளவு நாள்தான் சிக்கனமாக இருப்பது, எதற்காக சம்பாதிக்கிறோம், எவ்வளவு பாடு பட்டு மேலே வந்திருக்கிறோம்; கொஞ்சம் வசதியை அனுபவிப்பதில் என்ன தவறு? புரொமோஷன் வந்த பின்னும் இவ்வளவு இழுத்துப் பிடிக்க வேண்டுமா?” என்பது போன்ற சில கேள்விகள் நியாயமானவை. ஆனால், இந்தச் செலவுகள், பழக்கங்களாக மாறுவதுதான் அபாயம். வரவு ஏறும்போதே செலவும் ஏறும் இந்த ‘லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளேஷன்’ நம் செல்வ வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஆகிவிடுகிறது. மிக எளிதில் நம்மைப் பற்றிக்கொள்ளும் இதை உதறுவது மிகவும் கடினம்.

“இதில் என்ன தவறு? பிடித்ததை வாங்கும் பொருளாதார சுதந்திரத்தை அடையத்தானே வேலை, பிசினஸ் என்று அலைகிறோம்?” என்று நீங்கள் கேட்கலாம். கையில் சிறிது பணப் புழக்கம் அதிகரித்ததாலேயே ஏதோ நாம் பொருளாதார சுதந்திரத்தை அடைந்துவிட்டது போலவும், திட்டமிட்டுத்தான் அதிகச் செலவை செய்வது போலவும் பாவித்துக்கொள்கிறோம். பணத்தை சற்று அதிகம் செலவழித்தால், உடனடியாகக் கிடைக்கும் இன்பம் நினைவை ஆக்கிரமிப்பதால், எதிர்காலத் தேவைகள் பற்றிய எண்ணங்களும் எச்சரிக்கைகளும் மழுங்கி விடுகின்றன.

சேமிப்புக்கு வேட்டு வைக்கும்
லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளேஷன்..!

பில்டிங் ஸ்ட்ராங்; பேஸ்மென்ட் வீக்...

“நானெல்லாம் அப்படி இல்லை; அன்றும் இன்றும் ஒரே மாதிரியான எளிய தேவைகள்தான் எனக்கு” என்கிறீர்களா? மனதைத் தொட்டு சொல்லுங்கள்: நம் உணவுப் பழக்கங்கள் எவ்வளவு மாறியுள்ளன? வாழைப்பழம், நிலக்கடலை, இட்லி, தயிர் சாதம் என்றிருந்த இடத்தில் இன்று ஆப்பிள், ஸ்ட்ரா பெரீஸ், கேட்பரீஸ் சாக்லேட், பாதாம், பிஸ்தா, பீட்சா, ஷவர்மா..! இதே உயர்நிலை மாற்றம் நமது ஆடை, அணி கலன்கள், வீட்டு அலங்காரப் பொருள்கள், ஃபர்னிச்சர், கார், டிவி, போன் என்று அத்தனை யிலும் ஏற்பட்டுள்ளன.

இவை அத்தனையும் பொருளாதார வளர்ச்சியின் அறிகுறிகள்தான். ஆனால், இந்த வளர்ச்சி நம் நீண்ட கால சேமிப்பை பாதிக்குமானால் ‘பில்டிங் ஸ்ட்ராங்; பேஸ்மென்ட் வீக்’ என்ற நிலைக்கல்லவா நம்மை இழுத்துச் செல்லும்?

இந்தச் செலவுகளில் பாதி அடுத்த வீட்டுக்காரர்கள் மற்றும் உடன் வேலை பார்ப்ப வர்களுடன் நம்மை ஒப்பீடு செய்வதால் வந்த பாதிப்பு. நாமும் அவர்களுக்கு ஈடாக வளர்ந்துவிட்டோம் என்று நம்மையும் அவர்களையும் நம்பவைக்கும் முயற்சி. செலவு களை முடிவு செய்யும் லகான் நம் கையில் இல்லை என்பதன் அடையாளம்.

ஓய்வுக்காலம் பற்றிய கவலை இல்லாத செல்வந்தர்களுக்கு உயர்நிலை மாற்றம் ஒரு பொருட்டல்ல. ஆனால், நடுத் தட்டு மக்களின் பொருளாதார இலக்குகள் ‘லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளேஷ’னால் அடிபடு கின்றன. எவ்வளவு பணம் வந்தாலும் கையில் நிலைப் பதில்லை. நல்ல வேலையில் இருப்பவர்கள் கூட சம்பளத்தை மட்டுமே நம்பி வாழ்வு நடத்தும் அமெரிக்காவின் ‘பை நவ், பே லேட்டர்’ வாழ்க்கை முறை நம்மிடையேயும் நுழைந்து விடுகிறது.

சம்பளம் எவ்வளவு அதிகரித் தாலும், அவசரத் தேவைகளுக்கு நம்மிடம் பணம் இருப்பதில்லை. நமது நீண்ட கால சேமிப்புத் திட்டங்கள் நிலைகுலை கின்றன. ஓய்வுக்காலத்துக் கான சேமிப்புக்கும் இது உலை வைக்கிறது. வள்ளுவர் கூறியதுபோல “உள போல இலதாக்கிக்” கெடுப்பது இந்த லைஃப்ஸ்டைல் இன்ஃப் ளேஷன்தான். இதனிடம் அடிமை ஆகாமல் எப்படி தப்பிப்பது?

1. விழிப்புணர்வு

“நமது அதீதச் செலவு களுக்குக் காரணம், விலைவாசி உயர்வும், பண வீக்கமும் மட்டுமல்ல, லைஃப்ஸ்டைல் இன்ஃப் ளேஷனும்தான்; இது நம் செல்வ வளர்ச்சிக்கு உலைவைத்துவிடும்” என்ற உண்மையை நாம் உணர்ந்து கொண்டாலே அநாவசிய ஆடம்பரச் செலவுகளை குறைக்க ஆரம்பித்துவிடுவோம்.

2. பட்ஜெட் போட்டு செலவழித்தல்

பட்ஜெட் என்றால் ஏதோ நிதியமைச்சர் ரேஞ்சுக்கு யோசிக்க வேண்டியதில்லை. நம் செலவுகளையும், சேமிப்பையும் ரூபாய்க் கணக்கில் யோசிக்காமல் பர்சென்ட் கணக்கில் யோசனை செய்தாலே நிலைமை கட்டுக்குள் இருக் கும். என் வருமானத்தில் இந்த செலவுக்கு இத்தனை பர்சென்ட், இந்த சேமிப்புக்கு இத்தனை பர்சென்ட் என்று முடிவு செய்து கடைப்பிடித் தால் நம் வருமானம் கூடக் கூட, வசதிகளுக்கான செலவுகள் கூடினாலும், சேமிப்பும் கூடுவதால் லைஃப் ஸ்டைல் இன்ஃப்ளேஷன் நம்மை பாதிக்காது.

3. செலவுகளைப் பழக்கங்களாக மாற்றாதிருத்தல்

ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசியவர் வாரம்தோறும் பிரியாணி சாப்பிட 100 கிலோ மீட்டர் பயணிப்பது பற்றிப் பெருமையாகப் பேசினார். சிலருக்கு வாரக் கடைசி என்றாலே மாலில் தஞ்சம் அடைந்துவிடு கிறார்கள். சிறியதோ, பெரியதோ, விசேஷங்களுக்குப் போகும்முன் பியூட்டி பார்லருக்கு ஒரு விசிட் தேவை என்றாகிறது. இவற்றையெல்லாம் மாற்றுவதே கௌரவக் குறைச்சல் என்றாகிவிடும்போது, அது பழக்கமாக உருமாறிவிடுகிறது.

4. பொருள்களைத் தேவைக்கேற்ப வாங்குதல்

கார், டிவி, போன் போன்றவற்றை வாங்கச் செல்லும் சிலர் இருப்பதிலேயே லேட்டஸ்ட் மாடல் தான் வேண்டும் என்று விரும்புவார்கள். அதில் உள்ள அம்சங்கள் தனக்குத் தேவையா, அவற்றைப் பயன்படுத்தும் அவசியம் தனக்கு உள்ளதா என்றெல்லாம் எண்ணிப் பார்ப்பதில்லை.

சேமிப்புக்கு வேட்டு வைக்கும்
லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளேஷன்..!

5. செலவில்லாத பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல்

பார்க்குகளில் நடைப்பயிற்சி, பாடல்களைக் கேட்டல், தோட்டக் கலையில் ஈடுபடுதல், நண்பர் களுடன் அரட்டை போன்ற செலவில்லாத பொழுது போக்குகளையும் ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு லைஃப் ஸ்டைல் இன்ஃப்ளேஷன் தொல்லை இல்லை.

6. நல்ல நட்பும் சுற்றமும்

நம் உடை, கார், வாட்ச், போன் போன்றவற்றை வைத்து நம்மை மதிப்பிடுபவர்களிடம் இருந்து சற்றுத் தள்ளி இருப்பது நல்லது. இல்லாவிட்டால் ஒவ்வொரு முறை சந்திக்க நேரும்போதும் நம்மை அவர்கள் மதிக்கும்படி உயர்வாகக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மேற்கண்ட குறிப்புகள், வாழ்நாளெல்லாம் உழைத்த பணத்தைச் சேர்த்து, ஓய்வுக்காலத்தை நிம்மதியாக வாழ விரும்பும் நடுத்தட்டு மக்களுக்கு உதவக்கூடியது. கூடவே ஒரு வார்த்தை: அதீதச் செலவு தவறு எனில், எதையுமே அனுபவிக்காமல் சேர்த்துக் குவிப்பதும் ஒரு தவறுதான். இரண்டுக்கும் நடுவே உள்ள தங்க நடுவழியைக் (Golden Mean) கண்டறிவது மிக முக்கியம்.