Published:Updated:

நீண்டகால முதலீடு மாயையா..? உண்மை என்ன..?

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

நீண்டகால முதலீடு மாயையா..? உண்மை என்ன..?

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

இன்றைய சூழலில் இளம் தலைமுறையினர், பெண்கள் உட்பட எல்லோருமே பங்குச் சந்தையில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். பங்குச் சந்தையில் நீண்ட கால முதலீட்டில் பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்தவர்கள் இருக்க, பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்து, லட்ச லட்சமாக அல்ல, கோடி கோடியாக சம்பாதியுங்கள் என்கிறார்கள் சிலர். இந்த நிலையில், நீண்ட கால முதலீடு சிறந்ததா அல்லது குறுகிய கால முதலீடு சிறந்ததா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

‘‘பங்குச் சந்தையில் நீண்டகாலத்துக்கு முதலீடு செய்து சொத்து சேர்ப்பது என்பது ஒரு மாயை. ஜிரோதா புரோக்கிங் நிறுவனத்தின் தலைவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களில் 1 சதவிகிதத்தினர் மட்டுமே நன்றாகப் பணம் சம்பாதிக்கிறார்கள். மீதமுள்ள 99 சதவிகிதத் தினர் வங்கிகள் கொடுக்கும் பிக்சட் டெபாசிட் வருமானத்தைவிட அதிகமாக சம்பாதிப்ப தில்லை என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, முதலீட்டாளராக இருந்தால் பங்குச் சந்தையில் உங்களால் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க முடியாது. ஆனால், வர்த்தகராக இருந்தால் கணிசமான பணம் சம்பாதிக்க முடியும் என்கிறார்கள் வர்த்தகமே ஜெயிக்கும் என்கிற கட்சியின் சார்பாகப் பேசுகிறவர்கள்.

நீண்டகால  முதலீடு மாயையா..?
உண்மை  என்ன..?

‘‘நீண்டகால முதலீட்டைத் தூக்கிப் பிடிப்பவர்கள், நீங்கள் 20 வருடத்துக்குமுன் இந்தப் பங்கை வாங்கியிருந்தால் இப்போது கோடீஸ்வரராக இருப்பீர்கள். அந்தப் பங்கை வாங்கியிருந்தால் இப்போது லட்சாதிபதியாக இருப்பீர்கள் என்பார்கள். ஆனால், ஒரு பங்கு இந்த அளவுக்கு வளர்ச்சியை அடையும் என்று யாருக்கும் தெரியாது. இதே காலத்தில் வேறு சில பங்கை வாங்கியவர்கள் இத்தனை வருடங்களில் ஒன்றுமில்லாமல் நஷ்டமடைந் திருக்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.

ஒரு பங்கானது எதிர்காலத்தில் விலை அதிகரிக்குமா அல்லது குறையுமா என்று கணிக்க முடியாது. அப்படியிருக்க பங்குச் சந்தைகளில் நீண்ட காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்பதை எப்படி நம்ப முடியும்? ஒரு பங்கு நிறுவனம் நல்ல லாபம் தருமெனில், அதை அந்த நிறுவனத்தினரே வைத்துக்கொள்வார்களே, எதற்காகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டும்’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள் வர்த்தகத்தை ஆதரிப்பவர்கள்.

“சினிமாவில் ரஜினியும் கமலும் கோடி கோடியாகச் சம்பாதிக்கிறார்கள், பாருங்கள்’ என்று சொல்வதைக் கேட்டு நாமும் நடிக்கப்போனால் அதே சம்பளம் நமக்குக் கிடைக்குமா? சினிமா போலத்தான் பங்குச் சந்தையும். பணம் சம்பாதித்த சிலரை மட்டுமே பார்க்கிறீர்கள். ஆனால், பணத்தை இழந்த 99 சதவிகிதத்தினரை யாரும் பார்ப்பதில்லை. முகேஷ் அம்பானி, அனில் அம்பானி இருவரும் சகோதரர்கள்தான். ஆனால், இருவருடைய நிறுவனப் பங்கும் இன்று ஒரே மாதிரி இருக்கிறதா?

நிஃப்டியானது கடந்த 10 வருடத்தில் கொடுத்த வருமானத்தை எடுத்துப் பார்த்தால், கூட்டு வட்டிக் கணக்கில் ஒரு வருடத்துக்கு 9-10% கொடுத்திருக்கிறது எனில், வங்கி வைப்பு நிதியின் வருமானத்தைவிட 2 - 3 சதவிகிதம்தான் கூடுதலாக வருமானம் தருகிறது. இந்த 2 - 3% வருமானத்துக்காக பங்குச் சந்தையில் நுழையும் பலர் நஷ்டமடையும் நிலைக்கு ஆளாகிறார்கள்.

பங்குச் சந்தையில் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் பிரச்னை அவர்கள் வாங்குகிற பங்கு விலை இறங்கும், வாங்காத பங்கு விலை ஏறும். இதனால் தொடர்ந்து புலம்பும் நிலைக்கு ஆளாகிவிடுகிறார் கள். அப்படியிருக்க எப்படி செல்வத்தைப் பெருக்கும் முதலீடாக நீண்ட கால முதலீடு இருக்கும் என்று சொல்ல முடியும்’’ என்றும் டிரேடர்கள் கேட்கிறார்கள்.

டிரேடர்களின் வாதம் இப்படி இருக்க, நீண்டகால முதலீடு சரியா, இல்லையா என்பது குறித்து முதலீட்டு ஆலோசகர் பத்மநாபனிடம் கேட்டோம்.

பத்மநாபன்
பத்மநாபன்

“பங்குச் சந்தை ஒரு டிரேடர் அணுகுவதற்கும் ஒரு முதலீட்டாளர் அணுகுவதற் கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ஒரு டிரேடருக்கு முதலீட்டுக் காலம் என்பது அன்றைய தினத்தின் குளோசிங் டைம்தான். ஆனால், ஒரு முதலீட் டாளருக்கு அது 10 வருடங் களுக்குமேல். டிரேடர் களுக்குப் பெரும்பாலும் நீண்ட கால அடிப்படையில் நம்பிக்கை என்றுமே இருந்த தில்லை. அதே போல, முதலீட் டாளருக்குக் குறுகிய கால அடிப்படையில் நம்பிக்கை இருப்பது கிடையாது.

பங்குச் சந்தையைப் பற்றி, பங்குகளின் நகர்வுகள் பற்றி ஓரளவுக்காவது தெரிந்த வர்கள் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும். ஆனால், முதலீடு என்பது மிகவும் எளிமையானது. அதை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும். வர்த்தகம் செய்ய குறிப்பிட்ட அளவு மூலதனம் எப்போதும் தேவை. ஆனால், முதலீடு செய்வதற்கு கையில் இருக்கும் சிறு தொகையே போதும்.

நீண்டகால முதலீடு மாயை என்று சொல்பவர்கள் வர்த்தகத்தை ஊக்குவிப் பவர்கள். பணத்தை வைத்து பணத்தை ஈட்ட நினைக்கும் விளையாட்டை ஆட நினைப்பவர்கள். அவர்கள் பணம் உள்ளவர்களை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு பேசுவார்கள். மாதம் ரூ.1,000 மட்டுமே சேமிக்க முடிந்தவர்களைப் பற்றி டிரேடர்கள் பேசவே மாட்டார்கள். இந்த அளவு குறைந்த வருமானம் கொண்டவர்களால் வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. ஆனால், முதலீடு செய்ய முடியும். அந்த முதலீடு நீண்ட காலத்தில் அவர்களுக்கு நல்ல வருமானத்தைத் தரும் என்பதற்கு ஆயிரக்கணக்கில் நிஜமான உதாரணங்களைக் காட்ட முடியும்.

பங்குச் சந்தையில் நீண்ட காலத்தில் வங்கி பிக்ஸட் டெபாசிட் வருமானத்தைவிட 2-3 சதவிகிதம் கிடைத்தால்கூட மிகப் பெரிய அளவில் லாபம் சம்பாதிக்க முடியும். கூட்டு வட்டியில் தொடர்ச்சியான லாபம் கிடைக்கும்போது ஒவ்வொரு சதவிகிதமும் மிகவும் முக்கியம். அது நிகழ்த்தும் அதிசயத்தைப் பற்றித்தான் செல்வத்தைப் பெருக்கிய நீண்டகால முதலீட்டாளர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.

லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டின் 10 வருட ரிட்டர்ன்களைக் கொடுத்திருக் கிறேன். (பார்க்க, பெட்டிச் செய்தி) அந்த லாபத்தைப் பார்த்தால், நீங்களே மலைத்துப்போவீர்கள். இத்தகைய வருமானத்தைப் பலரும் பெறலாம். ஆனால், வர்த்தகம் செய்கிற எல்லோராலும் இந்த அளவுக்கு வருமானத்தை ஈட்டிவிட முடியாது. ஆனால், முதலீட்டாளர்கள் நீண்டகாலத்துக்குத் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், நிச்சயம் இத்தகைய வருமானத்தை ஈட்ட முடியும். மற்ற முதலீட்டுடன் பங்குச் சந்தை முதலீட்டை ஒப்பிட் டால், அதில் கிடைக்கும் வருமானம் மிக அதிக என்பதுடன், அதற்கு நாம் செலுத்தும் வரியும் மிகக் குறைவு.

நீண்ட கால அடிப்படையில் ஒரு லட்சம் முதலீடானது, 9 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியை மாயை என்று சொல்வது அபத்தம். ஒவ்வொருவரின் முதலீட்டு மதிப்பு, முதலீட்டுக்காலம், ரிஸ்க் எடுக்கும் திறன், சந்தைக்கேற்ப சரியான முதலீட்டு முடிவுகள் ஆகியவற்றைப் பொறுத்தே ஒவ்வொருவரின் வருமானமும் இருக்கும்.

சுருக்கமாக, எல்லோராலும் வர்த்தகம் செய்ய முடியாது. ஆனால், நீண்ட கால நோக்கில் எல்லோரும் முதலீடு செய்து நல்ல லாபம் ஈட்ட முடியும்’’ என்று முத்தாய்ப்பாகப் பேசி முடித்தார் பத்மநாபன்.

நீண்ட கால முதலீட்டின்மூலமே எல்லோரும் நிறைய லாபம் பார்க்க முடியும் என்பதே உண்மை!

நீண்டகால முதலீட்டில்தான் லாபம்!

பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி அல்லது மொத்த முதலீடாக முதலீடு செய்துவருகிறார்கள். மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்டகால அடிப்படையிலான முதலீடுகளில் 10 ஆண்டுகளில் எவ்வளவு வருமானம் தந்திருக்கிறது என்பதைப் பார்த்தோமானால், மிட்கேப் பிரிவுகளில் எடில்வைஸ் மிட்கேப் 20.33 சதவிகிதமும், எஸ்.பி.ஐ மேக்னம் மிட்கேப் 20.30 சதவிகிதமும் கோட்டக் எமர்ஜிங் ஈக்விட்டி 20.21 சதவிகிதமும் ஆக்ஸிஸ் மிட்கேப் 19.86 சதவிகிதமும் வருமானம் தந்துள்ளன. அதேபோல், ஸ்மால்கேப் பிரிவுகளில் எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் 10 ஆண்டுகளில் 25.51 சதவிகிதமும், நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் 24.52 சதவிகிதமும், டி.எஸ்.பி ஸ்மால்கேப் 21.67 சதவிகிதமும், ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மால்கேப் 20.26 சதவிகிதமும் வருமானம் தந்துள்ளன.

லார்ஜ் கேப் ஃபண்டுகளில் மிரே அஸெட் லார்ஜ்கேப் 17.01 சதவிகிதமும், எஸ்.பி.ஐ புளூசிப் லார்ஜ்கேப் 15.74 சதவிகிதமும், ஆக்ஸிஸ் புளூசிப் 15.15 சதவிகிதமும் நிப்பான் இந்தியா லார்ஜ்கேப் ஃபண்ட் 15.02 சதவிகிதமும் வருமானம் தந்துள்ளன. ஸ்மால்கேப் ஃபண்டில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக ரூ.9 லட்சமும், மிட்கேப் ஃபண்டில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதிகபட்சமாக ரூ.6.7 லட்சமும், லார்ஜ்கேப் ஃபண்டில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ.4.8 லட்சம் வரையிலும் வருமானம் கிடைத்திருக்கும். இந்த வருமானம் டிரேடிங்கில் எல்லோருக்கும் கிடைக்குமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism