Published:Updated:

இலவச மின்சாரம்; பாதி விலையில் 400 ஏக்கர்! - பதஞ்சலிக்கு வாரிக் கொடுத்த மகாராஷ்ட்ரா

தெ.சு.கவுதமன்

மகாராஷ்ட்ராவில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்காக 400 ஏக்கர் நிலம் அளிக்கப்படுகிறது.

பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்

மகாராஷ்ட்ரா பா.ஜ.க அரசு, பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்காக லத்தூர் மாவட்டத்திலுள்ள 400 ஏக்கர் நிலத்தை அளித்துள்ளது. ஏற்கெனவே பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தின் தொழிற்சாலை அமைவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தைத்தான் தற்போது பதஞ்சலிக்காகக் கொடுத்துள்ளார்கள். இந்த நிலத்தில் எந்த தொழிற்கூடத்தை நிறுவுவது என்று இன்னமும் முடிவுசெய்யப்படவில்லை என்றாலும், சோயாபீன் பிராசஸிங் தொழிற்கூடம் அமைவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்

லத்தூர் மாவட்டம், விவசாயப் பொருள்கள் விற்பனைக்கான பெரிய சந்தையாகும். இங்கு ஏற்கெனவே மிகப்பெரிய இரண்டு சோயாபீன் பிராசஸிங் யூனிட்டுகள் இயங்கிவருகின்றன. எனவே, பதஞ்சலி நிறுவனமும் இதேபோன்ற தொழிற்கூடத்தைக் கொண்டுவருவதற்கு வாய்ப்புள்ளது.

லத்தூர் மாவட்டத்தில் எம்.எஸ்.எம்.இ தொழிற்கூடம் அமைப்பதற்காக பாபா ராம்தேவுக்கு மகாராஷ்ட்ர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கடந்த மாதத்தில் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் பாபா ராம்தேவ் தொழிற்கூடம் தொடங்க நிறைய சலுகைகள் அளிப்பதாக உறுதியளித்துள்ளார். நிலத்தின் சந்தை மதிப்பில் பாதி, பத்திரப்பதிவுச் செலவுக்கு 100 சதவிகித சலுகை, குறிப்பிட்ட காலம்வரை இலவச மின்சாரம், அதன்பின்னர் ஒரு யூனிட்டுக்கு 1 ரூபாய் சலுகை விலையில் மின்சாரம் மற்றும் ஜி.எஸ்.டி வரிச்சலுகைகள் போன்றவை இதில் அடங்கும்.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

பதஞ்சலிக்குக் கொடுக்கப்படும் நிலம், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பெல் நிறுவனத்துக்கு ஒப்படைப்பதற்காக ஒதுக்கப்பட்டதாகும். ஆனால், அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாததால் தற்போது பதஞ்சலிக்கு அளித்துள்ளார்கள்.

2013-ம் ஆண்டு விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தபட்டபோது அது அரசாங்கத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது தனியாருக்குத் தரப்படுவதால் விவசாயிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். மேலும், கையகப்படுத்தியபோது கொடுக்கப்பட்ட இழப்பீடு மிகவும் குறைவென்றும், தற்போது மூன்று மடங்கு இழப்பீடு அதிகம் வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால், சோயாபீன் ஆலை வருவதால் விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்குமென்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்குமென்றும் அவர்களைச் சமாதானப்படுத்தும் வேலையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்

ஏற்கெனவே மூன்றாண்டுகளுக்கு முன்னர் 230 ஏக்கர் நிலத்தை பதஞ்சலி நிறுவனத்தின் உணவு மற்றும் மூலிகை தொழிற்கூடத்துக்காக ஒதுக்கியிருந்தது மகாராஷ்ட்ர அரசு. கடந்த சில ஆண்டுகளாக விற்பனையில் சரிவு கண்டுவரும் பதஞ்சலி நிறுவனத்துக்கு மகாராஷ்ட்ர அரசு அளிக்கும் வரவேற்பு, மற்ற தொழில் நிறுவனங்களை ஆச்சர்யப்படவைத்துள்ளன.