Published:Updated:

``என் 99% சொத்துகளை தானமாக வழங்குவேன்!" - மார்க் சக்கர்பெர்க்

மார்க் சக்கர்பெர்க்
மார்க் சக்கர்பெர்க்

மார்க் சக்கர்பெர்க், சிறு முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 63.5 பில்லியன் டாலர்கள்.

சமூக வலைதள பயன்பாட்டில், ஆரம்பத்தில் பெரும்பாலான மக்களை கட்டிப்போட்டது ஃபேஸ்புக்தான். இன்ஸ்டாகிராம், ஸ்நாப் சாட், வாட்ஸ் அப் வருவதற்கு முன் நாம் உபயோகித்தது ஃபேஸ்புக் மட்டுமே. இன்றும் அது மவுசு குறையாமல் நம்மை சமூகத்துடன் இணைத்திருக்கிறது. அதைச் சாத்தியப்படுத்தியவர் மார்க் சக்கர்பெர்க்.

சிறுவயது முதலே கம்ப்யூட்டர் புரோகிராம்களில் ஆர்வம் காட்டிய மார்க், விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப, பன்னிரண்டாவது வயதிலேயே தன் தந்தையின் பல் கிளினிக்கிற்கு தகவல் பரிமாற `zuknet' என்ற ப்ரோக்ராமைக் கண்டுபிடித்தார்.
Facebook
Facebook

மகனின் கண்டுபிடிப்பு சிறப்பாக வேலை செய்ய, அவரது திறமையைக் கண்டு வியந்த பெற்றோர் அவருக்குக் கம்ப்யூட்டர் புரோகிராம் கற்றுத்தர ஒருவரை நியமித்தனர். மார்க்கின் இன்றைய வெற்றிக்கு முதல் காரணம், தன் மகனின் திறமையை ஊக்குவித்த அவரின் பெற்றோர்தான்.

ஒரு ஃபேஸ்புக் பதிவு; ஒரே ஒரு போன்கால்! - 32 காஷ்மீர் பெண்களுக்கு உதவிய டெல்லி இன்ஜினீயர்

சிறப்பாகப் படித்த மார்க், தனது பள்ளிப் படிப்பை முடித்து பலரின் கனவுக் கல்லூரியான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கல்லூரியில் சேர்ந்த சில காலத்திலேயே தன் புரோகிராமிங் திறமையால், கல்லூரியில் பிரபலமானார் மார்க். கோர்ஸ் மேட்ச், பேஸ் மாஸ் என்ற அவரின் இரு புரோகிராம்கள் கல்லூரி மாணவர்களிடம் பிரபலமடைந்தன.

Facebook
Facebook

ஆனால், சில நாள்களிலேயே கல்லூரி அதற்கு முட்டுக்கட்டை போட்டது. மனம் தளராமல் தன் நண்பர்களுடன் இணைந்து ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களை இணைக்க ஒரு தளம் தொடங்கினார். மிகுந்த வரவேற்பைப் பெற்ற அந்த இணைய தளம், ஜூன் 2004-ம் ஆண்டு ஃபேஸ்புக் என்ற சமூக வலைதளமாக உருவெடுத்தது.

ஃபேஸ்புக்கிற்கு கிடைத்த வரவேற்பு, மார்க் சக்கர்பெர்க்கை நெகிழச் செய்தது.

இதுதான், தான் சாதிக்க வேண்டிய தளம் என்று அன்றே துணிந்து முடிவெடுத்த மார்க், ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலிருந்து விலகி முழுநேரமாக ஃபேஸ்புக்கை வளர்த்தெடுக்கும் வேலையில் இறங்கினார். முதற்கட்டமாக ஸ்டான்ஃபோர்ட், யேல் போன்ற பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் இதை அறிமுகப்படுத்தினார். எதிர்பார்த்ததைவிட அதிக ஆதரவு கிடைக்க 2004-ம் ஆண்டு இறுதியில் ஒரு மில்லியனாக இருந்த இதன் பயனாளர்கள் ஒரே ஆண்டில் 5.5 மில்லியனாக உயர்ந்தார்கள்.

குழந்தைகளுக்கான 'கிட்ஸ் மெசெஞ்சர்' - ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சென்ற பெற்றோர்களின் புகார்கள்!

தற்போது 2018-ம் ஆண்டின் நிலவரப்படி தினமும் 1.7 பில்லியன் மக்கள் முகநூலைப் பயன்படுத்துவதாகவும், ஒவ்வொரு வருடமும் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 11% உயர்ந்து வருவதாகவும் கணக்கெடுப்புகள் கூறுகின்றன.

சிறு முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 63.5 பில்லியன் டாலர்கள்.

இதற்குச் சொந்தக்காரரான மார்க்கின் சபதம் நம்மை வியக்க வைக்கின்றது. தன் வாழ்நாளில் அவரின் சொத்து மதிப்பில் 50 சதவிகிதத்தை தானமாக வழங்குவதாக கூறியது மட்டுமல்லாமல், 2010-ல் நியூஜெர்சியில் உள்ள ஒரு பள்ளிக்கு 100 மில்லியன் டாலர்களுக்கு மேல் நன்கொடை வழங்கியுள்ளார்.

Mark Family
Mark Family

மார்க்கின் மனைவி பெயர், பிரஸ்ஸில்லா. இத்தம்பதிக்கு மேக்ஸ் என்ற பெண் குழந்தை பிறந்தது. அப்போது இருவரும் ஒரு பொதுக் கடிதம் எழுதினர். அதில் தங்கள் சொத்து மதிப்பில் 99 சதவிகிதத்தை தங்கள் வாழ்நாளில் தானமாக அளிப்பதாக கூறியிருந்தனர். உலகமே இதைக் கண்டு வியந்தது. பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் தாங்கள் கொண்ட கொள்கையில் திடமாய் இருந்தனர். தங்கள் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் ஒரு சாரிடபிள் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஏப்ரல் 2018, `கேம்பிரிட்ஜ் அனாலிடிக்' என்ற அரசியல் உதவி நிறுவனத்துக்கு ஃபேஸ்புக் தனது பயன்பாட்டாளர்களின் தகவல்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. மார்க் பழியை மற்றவர்கள் மீது சுமத்துவார் என்று உலகமே எதிர்பார்த்தது. ஆனால், ``இது என் தவறு. என்னை மன்னித்து விடுங்கள். இது நான் ஆரம்பித்த நிறுவனம் . தவற்றுக்கு நான் தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று பொதுவெளியில் மன்னிப்பு கோரினார் மார்க்.

Facebook Meet
Facebook Meet

இவ்வாறு மார்க் தவற்றை ஒப்புக்கொண்டது ஒரு சிறந்த தலைவனுக்கான பண்பு. தவறுகள் நடப்பது இயல்பு. அதற்கு பொறுப்பேற்ற மார்க் அனைவர் மனதிலும் உயர்ந்த இடத்தைப் பிடித்தார். 2004-ல் வெறும் ஏழு பேரைக் கொண்டு ஆரம்பித்த முகநூல் நிறுவனத்தில் இன்று 35,587 முழு நேரப் பணியாளர்கள் உள்ளனர். ஒரு தனிமனிதனான மார்க், தன் முழுத் திறமையை நம்பி இந்த அசுர வளர்ச்சியை அடைந்துள்ளார்.

இந்த உலகமே நம்மை நம்பாமல் போனாலும், நம் திறமையை நாம் நம்பினால்... வானம் நிச்சயம் வசப்படும்!

அடுத்த கட்டுரைக்கு