Published:Updated:

உங்களை செல்வந்தராக்கும் நிறுவனப் பங்குகளை எப்படித் தேர்வு செய்வது?

மிடில் கிளாஸ் டு மில்லியனர்
பிரீமியம் ஸ்டோரி
மிடில் கிளாஸ் டு மில்லியனர்

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 15

உங்களை செல்வந்தராக்கும் நிறுவனப் பங்குகளை எப்படித் தேர்வு செய்வது?

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 15

Published:Updated:
மிடில் கிளாஸ் டு மில்லியனர்
பிரீமியம் ஸ்டோரி
மிடில் கிளாஸ் டு மில்லியனர்

செல்வ உருவாக்கத்தில் (Wealth Creation) பங்கு முதலீடு (Share Investing) முக்கிய மானதாக இருக்கிறது. பங்குச் சந்தை முதலீட்டைப் பொறுத்தவரை, குறுகிய காலத்தில் அது அதிக ஏற்ற இறக்கத்தில் இருக்கும். ஏன், மூலதன இழப்பைக்கூட தரும். ஆனால், நீண்ட காலத்தில் நல்ல நிறுவனப் பங்குகளில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு ஒருவருக்கு நிச்சயம் செல்வத்தை உருவாக்கித் தரும்.

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

செல்வ உருவாக்கத்துக்கான பங்குகளைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம். முதலீட்டுக்கு பங்குகளைத் தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

நல்ல பங்கு முதலீட்டுக் கலவை

ஒரு நல்ல பங்கு முதலீட்டுக் கலவையை எப்படி உருவாக்குவது? அண்மைக் காலத்தில் பங்குகளை முதலீட்டுக்குத் தேர்வு செய்வதில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) மற்றும் அளவிடுதல் (Quant) ஆகியவை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறையில் முதலீட்டுக்கு நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்வது உலகம் முழுக்க பரவி இருக்கிறது. இது இந்தியாவுக்கு விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் மிகப் பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிதி மேலாளர்கள் (Fund Managers) இந்த முறையைப் பயன்படுத்தி பங்குகளைத் தேர்வு செய்து வருகிறார்கள். இந்த முறைகளில் நிறுவனப் பங்குகளுக்கு, பி/இ விகிதம் (P/E Ratio) பங்கு மூலதனம் மூலமான வருமானம் (Return on equity - ROE) உள்ளிட்டவை இவ்வளவு இருக்க வேண்டும் என முன்கூட்டியே வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப் பங்குகளைத் தேர்வு செய்யும்போது தனிமனித உணர்ச்சி வசப்படுதல், பயம், பதற்றம் போன்ற எதுவும் இருக்காது. இதனால், சரியான பங்குகளைத் தேர்வு செய்ய முடியும். அந்த வகையில் அந்தப் பங்குகள் நல்ல வருமானம் கொடுக்க அதிக வாய்ப்பிருக்கிறது. பங்குத் தேர்வைப் பொறுத்தவரை, அதைத் தேர்வு செய்யும் கலை மற்றும் அறிவியல் முறை இரண்டும் முக்கியமாகும்.

எதிர்கால வளர்ச்சி மற்றும் தரம்

செயற்கை நுண்ணறிவு மற்றும் அளவிடுதல் முறையில் நாம் இரண்டு முக்கியமான விஷயங் களை மறந்துவிடுகிறோம்; அவை நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் நிறுவனத்தின் தரமாகும். புள்ளி விவரங்கள் எல்லாம் பிரமாதமாக இருக்கும். ஆனால், அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் அந்த நிறுவனம் எப்படிச் செயல்படப்போகிறது, அந்த நிறுவனம் சார்ந்திருக்கும் துறை எப்படி இயங்கப்போகிறது, இதர நிறுவனங்களுடன் இந்த நிறுவனத்தின் தயாரிப்பு பொருள்களின் விலை போட்டி எப்படியிருக்கிறது, போட்டியைத் தாண்டி லாபகரமாக இயங்கக் கூடிய ஆற்றல் நிறுவனத்துக்கு இருக்கிறதா என்கிற விவரங்கள் இருக்காது.

ஒரு நிறுவனத்தின் தரம் என்கிறபோது பஜாஜ் ஃபைனான்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள். வங்கிசாரா நிதி நிறுவனங்களில் முன்னணி கடன் அளிக்கும் நிறுவனம் என்கிறபோது இந்த நிறுவனத்தின் பெயர் அனைவரின் நினைவுக்கும் வரும். இந்த நிறுவனம், அதன் பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு மிகப் பெரிய செல்வத்தைச் சேர்த்து தந்திருக்கிறது. 2020 பிப்ரவரி 23-ம் தேதி நிலவரப்படி, இந்தப் பங்கு கடந்த ஓராண்டில் 26% வருமானம் தந்திருக்கிறது; கடந்த ஐந்து ஆண்டுகளில் 572% வருமானம் தந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் கொடுத்த லாபம் 1,22,160% ஆகும். இந்த நிறுவனத்தின் பங்கு விலை கோவிட் பாதிப்பின்போது மட்டுமே இறக்கம் கண்டிருக்கிறது. மற்றபடி, பங்கின் கடந்த 20 ஆண்டு காலத்தில் விலை சுமார் ரூ.5.75-லிருந்து ரூ.7,030-க்கு ஏற்றம் கண்டிருக்கிறது. இந்த நிறுவனப் பங்கு இவ்வளவு வருமானம் கொடுக்க காரணம். அந்த நிறுவனம் அந்த அளவுக்கு வளர்ச்சியடைந்திருப்பதுதான். நிறுவன வளர்ச்சி மற்றும் பங்கு வளர்ச்சிக்கு அந்த நிறுவனம் தொகுத்து வைத்திருக்கும் பிரிவு வாரியான புள்ளி விவரங்களாகும்.

ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தை எடுத்துக்கொண்டால் மக்கள் எந்த வர்ணங்களை விரும்புகிறார்கள் என்பதை மிகச் சரியாக ஊகித்து அதைத் தரமாகத் தயாரித்து சந்தைக்குக் கொண்டு வருகிறது. எந்தப் பகுதியில் எந்த பெயின்ட் அதிகமாக விற்பனையாகிறது என்பதை அறிந்து அதைத் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்வதற்கான சந்தைப் படுத்தலை மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஏ.ஐ மற்றும் குவான்ட் புள்ளி விவரங்களுடன், தரமான பொருள்களை உற்பத்தி செய்யும் மற்றும் எதிர்கால வளர்ச்சி உள்ள நிறுவனப் பங்கை முதலீட்டுக்குத் தேர்வு செய்வதன்மூலம் செல்வத்தை உருவாக்க முடியும்.

உங்களை செல்வந்தராக்கும் நிறுவனப் பங்குகளை எப்படித் தேர்வு செய்வது?

பங்குச் சந்தை மதிப்பு

பங்கு முதலீட்டுக்குத் தேர்வு செய்யும்போது அந்த நிறுவனப் பங்கின் சந்தை மதிப்பைக் (Market capitalization) கவனிப்பது மிகவும் அவசியம். இந்தியாவின் மிகப் பழைமையான பி.எஸ்.இ பங்குச் சந்தையில் சுமார் 4,790 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில், 950 நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகத்துக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள நிறுவனப் பங்குகளில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் கடந்த ஆறு மாதங்களாக வர்த்தகம் எதுவும் நடக்கவில்லை. கிட்டத்தட்ட 1500 நிறுவனப் பங்குகளில்தான் அடிக்கடி பங்கு வர்த்தகம் மற்றும் முதலீடு நடந்து வருகிறது. இந்த நிறுவனங்களில் 85% நிறுவனங்களின் வருமான வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் 15 சதவிகிதத்துக்கு மேல் இல்லை. மிகவும் லாபகரமாகச் செயல்படும் நிறுவனங்கள் மிகக் குறைவாகத்தான் உள்ளன.

2020 மார்ச் வாக்கில் இந்தியப் பங்குச் சந்தையில் புதிதாக பணம் போட்டவர்களுக்கு 18 - 20 மாதங்களில் நல்ல வருமானம் கிடைத்திருக்கும். இப்போது உக்ரைன் - ரஷ்யா பிரச்னையில் சந்தை இறக்கத்தைப் பயன்படுத்தி நல்ல நிறுவனப் பங்குகளை வாங்கி இருப்பவர்களுக்கு எதிர் காலத்தில் நல்ல லாபம் கிடைக்கக் கூடும். மற்றபடி பங்குச் சந்தை, நீண்ட காலத்தில் அதாவது, 7 முதல் 10 ஆண்டுக் காலத்தில்தான் நல்ல வருமானத்தைத் தரும். இப்படி லாபம் ஈட்ட நீங்கள் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மேலும், தொடர்ந்து முதலீட்டுக் கலவையைக் கண்காணித்து வர வேண்டும்.

நிறுவனப் பங்குகளை அவற்றின் சந்தை மதிப்பு அடிப் படையில் லார்ஜ்கேப் (பங்குச் சந்தை பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் முதல் 100 நூறு நிறுவனங்கள்), மிட்கேப் (101 முதல் 250-வது நிறுவனம் வரை), ஸ்மால்கேப் (251-வது நிறுவனம் முதல்) என மூன்றாகப் பிரித் திருக்கிறார்கள்.

பொதுவாக, ரூ.5,000 கோடிக்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனப் பங்குகளை முதலீட்டுக் குத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும். மேலும், அந்த நிறுவனம் எத்தனை ஆண்டு களாகச் செயல்பட்டு வருகிறது, நிறுவனத்தின் நிறுவனர்கள் யார், அவர்கள் எப்படிப்பட்ட வர்கள், நிறுவனத்தின் நிர்வாகம் நியாயமானதாக, நம்பகமானதாக இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். நிறுவனத்தின் இயக்குநர்களாக குடும்ப உறுப் பினர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இருந்தால் அது போன்ற நிறுவனங்களை முதலீட்டுக்குத் தவிர்ப்பது நல்லது. நிறுவனத்தின் இயக்குநர் களாக நிபுணர்களை வைத்திருந் தால் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். அதே துறையைச் சார்ந்த இதர நிறுவனங்களுடன் போட்டி போட்டு வெற்றி பெறும் திறன் எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

நிறுவனத்தின் நிதிநிலை

அடுத்து நிறுவனத்தின் நிதி நிலைகளைக் கவனிப்பது மிக முக்கியம். கடந்த 5, 10 ஆண்டுகளில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, நிகர லாப வளர்ச்சி எப்படியிருக் கிறது எனக் கவனிக்க வேண்டும். இவை தொடர்ந்து அதிகரிப் பதுடன், சுமார் 15 - 20 சதவிகிதமாக இருப்பது நல்லது. கடன் மற்றும் பங்கு மூலதன விகிதம் 1-க்குக் குறைவாக இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். கடனுக்கு எவ்வளவு வட்டி கட்டுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். கடன் இல்லாத நிறுவனம் எனில், மிகச் சிறப்பாகும்.

நிறுவனத்தின் பணவரத்து (Cash Folow) எப்படியிருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு அதன் கையிருப்புத் தொகை அதிகரித்து வருகிறதா, அந்தத் தொகையை முதலீட்டாளர்களுக்கு டிவிடெண் டாகப் பிரித்துத் தருகிறதா அல்லது அந்த நிறுவனம் முதலீட்டாளர் களிடமிருந்து அதிக விலை கொடுத்து அதன் பங்குகளை வாங்கிக்கொள்கிறதா, இலவசப் பங்குகளை (Bonus Shares) வழங்கு கின்றனவா என்பவற்றை கவனிப் பது கட்டாயம்.

மேலும், பங்கு மூலதனம் மூலமான வருமானம், ஒரு பங்கின் புத்தக மதிப்பு (Book Value), பி/இ விகிதம் ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். இதையும் தாண்டி நிறுவனம் ஈட்டும் நிகர லாபம்தான் மிக முக்கியமானது. நல்ல லாபம் ஈட்டும் நிறுவனத்தின் பங்கு விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். நிறுவனம் லாபத்தை எடுத்துக்கொண்டு போகிறதா, இல்லை அதே வணிகத்தில் மீண்டும் முதலீடு செய்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். ஒரு நிறுவனம் அதன் லாபத்தை நிறுவனத்திலேயே மீண்டும் மீண்டும் போடும்போதுதான் அந்த நிறுவனம் பெரிதாக வளர்ந்து அதிக லாபத்தைக் கொடுக்கும். நிறுவனத்தில் பங்கு மூலதனத்தில் (Share Holding) நிறுவனர்களின் பங்கு குறைந்தது, 40 சதவிகிதத்துக்குமேல் இருக்க வேண்டும். அடுத்து அந்த நிறுவனப் பங்கில் அந்நிய நிதி முதலீட் டாளர்கள் (Foreign Institutional Investors - FIIs), உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (Domestic Institutional Investors -DIIs) எவ்வளவு சதவிகிதம் அதிகமாக முதலீடு செய்திருக் கிறார்களோ அந்த அளவுக்கு பங்கின் விலை உயரும். எஃப்.ஐ.ஐ-க்கள் மற்றும் டி.ஐ.ஐ-க்கள் எப்போதும் அதிக லாபம் ஈட்டுபவர்களாக இருப்பதோடு, பங்குகளை அலசி ஆராய்ந்து முதலீடு செய்பவர்களாக இருக்கிறார்கள்.

இவ்வளவு விஷயங்களை அலசி ஆராய்ந்து பங்குகளை முதலீடு செய்ய முடியும் அல்லது நல்ல பங்குத் தரகர் உதவியுடன் முதலீடு செய்ய முடியும் எனில், நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து செல்வம் சேருங்கள். இல்லையெனில், நிதி நிபுணர்கள் நிர்வகிக்கும் நல்ல ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருவது லாபகரமாக அமையும்.

(கோடீஸ்வரர் ஆவோம்)

குறைந்த விலை பங்குகள்... லாபம் தருமா?

பலரும், பைசா பங்குகள் (Penny Stocks) பின்னால் செல்கிறார்கள். அதாவது, பங்கின் முக மதிப்பைவிட ரூ.1, ரூ.2 மதிப்புகொண்ட பங்குகளை வாங்குகிறார்கள். அவர்கள் எல்லாம் மிக மிக அதிக ரிஸ்க் எடுக்கிறார்கள். ஆனால், அதற்கு ஏற்ப அதிக வருமானம் பெறுகிறார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையை சொல்லப்போனால், பணத்தைத்தான் இழந்து வருகிறார்கள். பலர் 100 ரூபாய்க்கு குறைவான விலையுள்ள பங்குகளைச் சொல்லுங்கள் என்கிறார்கள். இந்த அணுகுமுறையும் தவறாகும். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப பங்கின் விலை அதிகமாகத்தான் இருக்கும்.