Published:Updated:

நல்ல நிதி ஆலோசகருக்கான ஐந்து முக்கியமான தகுதிகள்..!

மிடில் கிளாஸ் டு மில்லியனர்
பிரீமியம் ஸ்டோரி
மிடில் கிளாஸ் டு மில்லியனர்

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 16

நல்ல நிதி ஆலோசகருக்கான ஐந்து முக்கியமான தகுதிகள்..!

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 16

Published:Updated:
மிடில் கிளாஸ் டு மில்லியனர்
பிரீமியம் ஸ்டோரி
மிடில் கிளாஸ் டு மில்லியனர்

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக உலக பங்குச் சந்தைகள் குறிப்பாக, இந்தியப் பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. இது போன்ற நேரங்களில் தினசரி வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், நீண்ட கால முதலீட்டாளர்கள் என அனைத்துத் தரப்பு பங்கு முதலீட்டாளர்களும் பதற்றத்துக்கு உள்ளாகிறார்கள்.

சந்தை இன்னும் இறங்குமா, இறக்கத்தில் இருக்கும் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளை விற்றுவிட்டு வெளியேற வேண்டுமா, மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்திவிடலாமா, நல்ல நிறுவனப் பங்குகள் மலிவாகக் கிடைக்கும்போது வாங்கிப் போடலாமா என நிதி ஆலோசகர்களுக்கு எஸ்.எம்.எஸ், வாட்ஸ்அப், மெயில் அனுப்பியும் போன் செய்தும் கேட்கிறார்கள்.

மனப்பக்குவம் வேண்டும்

பங்கு சார்ந்த முதலீட்டுத் திட்டங்களை (Equity related Investment Instruments) எடுத்துக் கொண்டால், இரண்டு விஷயங்களை முக்கிய மாகக் கவனிக்க வேண்டும். ஒன்று, அவை முதலீட்டு மதிப்பில் அதிக ஏற்ற இறக்கம் கொண்டவையாகும். அடுத்து அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத சிக்கலான (Complex) முதலீட்டுத் திட்டங்களாக இருக்கின்றன.

ஒருவர் நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவராக இருந்தால், மேற்கண்ட இரண்டு விஷயங்களான அதிக ஏற்ற இறக்கத்தை சாதாரணமாக எடுத்துகொள்ளும் மனப் பங்குவம் மற்றும் சிக்கலான திட்டங் களைப் புரிந்துகொள்ளும் திறன் இருப்பது அவசியம் ஆகும். இவை தவிர, அவர் முதலீடு செய்திருக்கும் பங்குகள் மற்றும் ஃபண்டுகள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அவரின் முதலீட்டுப் பயணம் குழப்பம் இல்லாமல், பதற்றம் இல்லாமல் நிதானமாகச் சென்றுகொண்டிருக்க வேண்டும். குறிப்பாக, நாளைக்கு பங்குச் சந்தை எப்படி இருக்குமோ, இன்னும் பங்குச் சந்தை அதிகமாக இறங்குமோ என்கிற கவலை இல்லாமல் நன்றாகத் தூங்க வேண்டும்.

நிதி ஆலோசகரின் தேவை..!

இது போன்றுதான் முதலீட்டு அனுபவமும் இனிமையாக அமைய வேண்டும். ஒருவரின் ஈக்விட்டி சார்ந்த முதலீட்டுக்கு நிதி ஆலோசகர் எந்த அளவுக்குத் தேவை.

சச்சின் டெண்டுல்கர் நம் எல்லோருக்குமே தெரிந்த மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் மாதிரி இன்னொருவர் இந்திய கிரிக்கெட் அணியில் இன்றில்லை. அப்படிப்பட்ட மிகச் சிறந்த அதிதிறமைசாலி, கடைசிவரைக்கும் ஒரு பயிற்சியாளரை வைத்திருந்தார். அவரே மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் என்கிற அவருக்கு பயிற்சியாளர் எதற்கு என்று நீங்கள் கேட்கலாம். சச்சின் வெற்றிக்குக் காரணம், அதுதான்.

அதுபோல, உலகின் சிறந்த தொழில் அதிபர்கள் பிசினஸ் தொடர்பான முடிவுகளை அவர்கள் மட்டுமே எடுப்பதில்லை. அவர்கள் திறமையான செயல் அதிகாரிகளை உடன் வைத்திருக்கிறார்கள். அது போக இயக்குநர்கள் குழுவை வைத்திருக்கிறார்கள். அவர்கள் நிறுவனத்தை எப்படி லாபகரமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

பயிற்சியாளர்கள், செயல் அதிகாரிகள் போல் முதலீட்டாளர்களுக்கு கண்டிப்பாக ஆலோகர் தேவை. முதலீட்டாளர் ஒரு கோணத்தில் யோசிக்கும்போது, மூன்றாவது ஒரு கோணத்தில் சிந்திக்க நிதி ஆலோகர் அவசியம் தேவைதான். அந்த ஆலோகரை எப்படித் தேர்வு செய்வது?

முதலீட்டு ஆலோசகர் என்பவர் குறைந்தபட்சம் ஒரு தொழில்முறை அறிஞராக (Professonal) இருக்க வேண்டும். யார் தொழில்முறை அறிஞர் என்பதற்கான விளக்கத்தை அவுட்லயர்ஸ் என்கிற பிரபல நூலில் அதன் ஆசிரியர் மால்கம் கிளாட்வெல் குறிப்பிட்டுள்ளார்.

‘யார் ஒருவர் அவரின் துறை சார்ந்த விஷயங்களில் 10,000 மணி நேரத்தை செலவிட்டிருக்கிறாரோ, அவரை தொழில் முறை அறிஞர் எனக் குறிப்பிடலாம்’ என்கிறார். ஒரு தொழில் அல்லது வேலையில் முழு நேரமாக இருக்கிறீர்கள் எனில், 7 முதல் 8 ஆண்டுகள் பணிபுரிந்தால் மட்டுமே ஒருவர் தொழில்முறை அறிஞர் ஆக வாய்ப்பு உண்டு. அதாவது, சுமார் 10 ஆண்டுகள் என வைத்துக்கொள்ளலாம். இந்த நேரக் கணக்கைத் தவிர்த்து, ஒரு நல்ல நிதி ஆலோசகருக்கான ஐந்து முக்கியமான தகுதிகளைப் பார்ப்போம்.

1. அதிக அனுபவம்

ஒரு நிதி ஆலோசகருக்கு சுமார் 20 ஆண்டுகள் அந்தத் துறையில் அனுபவம் இருப்பது நல்லது. ஏன் இந்த 20 ஆண்டு அனுபவம் தேவை? அப்போதுதான் அந்த நிதி ஆலோசகர் பங்குச் சந்தையின் அதீத ஏற்றம் மற்றும் அதீத இறக்கத்தைச் சந்திருப்பார். இந்த ஏற்ற, இறக்க காலத்தில் அவர் முதலீடு அணுகுமுறை எப்படி இருந்தது, முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைவதை எப்படித் தவிர்த்திருக்கிறார், நஷ்டத்திலிருந்து மீண்டு வர எப்படி உதவியிருக்கிறார் என்கிற அனுபவம் அவருக்கு நிச்சயம் இருக்கும். இந்த அனுபவம்தான் அவரை இனிவரும் காலத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தில் இருந்து நஷ்டப்படாமல் இருக்க சரியான யோசனை சொல்ல வைத்து, முதலீட்டாளர்கள் சரியான முடிவை எடுக்க உதவும்.

2. சட்டப்படியான தகுதி

நிதி ஆலோசகருக்கு அனுபவத்தை அடுத்து சட்டப்படியான தகுதி மிக முக்கியம். அதாவது, செபியில் பதிவு செய்திருக்கும் முதலீட்டு ஆலோசகர் (Investment Advisor) அல்லது ஆஃம்பி அமைப்பில் பதிவு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தராக (Mutual Fund Distributor) இருப்பது அவசியம். இவர்கள் முதலீடு குறித்த தேர்வில் வெற்றி பெற்றவர்களாக இருப்பதால், முதலீடு குறித்த தெளிவான கண்ணோட்டம் இருக்கும். இவர்கள் குறிப்பிட்ட இடை வெளியில் அப்போதுள்ள பாடத் திட்டத்துக்கேற்ப மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பதால், அவர்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டும் படித்துக்கொண்டும் இருப்பார்கள். இதனால், நல்ல முதலீட்டு அறிவை பெற்றவர் களாக இருப்பார்கள்.

நிதி சார்ந்த விஷயங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றன. புதுப் புது முதலீட்டுத் திட்டங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. உதாரணமாக, இப்போது ஓய்வுக் கால திட்டமிடலில் ஃபயர் (FIRE - Financial Independence Retire Early) என்கிற புதிய கருத்து வந்திருக்கிறது. அதாவது, முன் கூட்டியே ஓய்வு பெறுவதாகும். அடுத்து தற்போதைய புதிய டிரெண்ட் ஆன பாசிவ் இன்கம், மல்ட்டிபிள் சோசர்ஸ் ஆஃப் இன்கம் போன்றவை பற்றி நிதி ஆலோசகருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

3. தொடர் ஆலோசனை

பலர் இதற்குமுன் தபால் அலுவலக ஏஜென்ட், இன்ஷூ ரன்ஸ் ஏஜென்ட் அல்லது வேறு ஏதாவது துறையில் வேலை பார்த்துவிட்டு, பணி ஓய்வுக்குப் பிறகு, திடுதிப்பென முதலீட்டு ஆலோசகர், மியூச்சுவல் ஏஜென்ட்டாக மாறிவிடு கிறார்கள். இவர்களுக்கு பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் பற்றி முழுமையாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அடுத்து, அவர்கள் 55, 58 வயதில் இந்தத் துறைக்கு வந்திருப் பார்கள். அவர்களால் இன்னும் சுமார் 10, 15 ஆண்டுகள்தான் ‘ஆக்டிவ்’வாகச் செயல்பட முடியும். இந்த நிலையில், 40, 45 வயது முதலீட்டாளர்களுக்கு அவர்கள் ஆயுள் முழுக்க நிதிச் சேவை கிடைக்காது. அந்த வகையில் நிதி ஆலோசகரின் வயது சுமார் 40, 45 வயதுக்குள் இருப்பது போல் பார்த்துக் கொள்வது நல்லது. இந்த வயதில் இருப்பவர்களுக்கு ஏற்கெனவே சுமார் 20 - 25 வயது அனுபவம் இருக்கும் இன்னும் 20 - 25 ஆண்டுகள் ஆலோசகராகச் செயல்பட வாய்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்ட நிதி ஆலோசகரைத் தேர்வு செய்யும்போது உங்களின் முதலீட்டுப் பயணம் தடைபடாமல் செல்லும்.

4. அதிக வருமானத்துக்கு உத்தர வாதம்..!

பங்கு சார்ந்த முதலீடுகளில் உத்தரவாதமான வருமானம் கிடைப்பதாகச் சொல்கிறார்கள். பங்குச் சந்தை சார்ந்த நிறுவனப் பங்குகள், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் யாரும் உத்தரவாத வருமானம் கொடுக்க முடியாது; அப்படிக் கொடுப்பதாகச் சொல்வது சட்டப்படி குற்றமாகும்.

இது போன்றவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சிலர் மிக அதிகமாக வருமானம் தருவதாகச் சொல் கிறார்கள். ஆண்டுக்கு 60% வரு மானம் தருகிறோம், ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷனில் முதலீடு செய்யுங்கள், டிப்ஸ் தருகிறோம் என்கிறார்கள். ‘இதுவரைக்கும் முதலீடு செய்திருக்கும் பலருக்கு கடந்த இரண்டு வருடமாக, மூன்று வருடமாக வருமானம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்’ என்பார்கள். இந்த ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் மிக அதிக ரிஸ்க் ஆனது என்பது தெரியாமல் பலரும் பணத்தைப் போட்டுவிட்டு மூலதனத்தை இழந்து, ஏமார்ந்துபோகிறார்கள். ஈக்விட்டி சார்ந்த முதலீடுகளில் யாராவது வருமானத்துக்கு உத்தரவாதம் தந்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

5. முதலீட்டாளர்கள் எண்ணிக்கை

அந்த நிதி ஆலோசகருக்கு எத்தனை முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள், எவ்வளவு ஆண்டுகளாக இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். ஏனெனில், ஒரு முதலீட் டாளர் ஒரு நிதி ஆலோசகரிடம் எவ்வளவு ஆண்டுகளாகத் தொடர்கிறார் என்பதை வைத்தே அந்த நிதி ஆலோசகர், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் நல்லவரா, திறமை யானவரா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். தொடர்ந்து முதலீட்டாளரின் எதிர்ப்பார்ப்புக்கேற்ற, அவரின் நிதி இலக்குகள் நிறைவேறுவதற்குத் தேவையான வருமானத்தைப் பெற்றுத் தரும் நிதி ஆலோகரிடம் மட்டுமே முதலீட்டாளர்கள் தொடர்வார்கள். இல்லை எனில், வேறு நல்ல நிதி ஆலோசகரை நாடி சென்று விடுவார்கள். அதிக முதலீட்டாளர்களைக் கொண்ட நிதி ஆலோசகர்களைத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும்.

மேற்கண்ட தகுதிகளைக் கொண்ட நிதி ஆலோசகரைத் தேர்வு செய்யும்பட்சத்தில் ஒருவரின் முதலீட்டுப் பயணம் இனிமையானதாக இருக்கும்; சந்தையின் ஏற்ற இறக்கத்தால் தூக்கத்தைக் கெடுக்க வேண்டாம்.

(கோடீஸ்வரர் ஆவோம்)

நல்ல நிதி ஆலோசகருக்கான ஐந்து முக்கியமான தகுதிகள்..!
நல்ல நிதி ஆலோசகருக்கான ஐந்து முக்கியமான தகுதிகள்..!
நல்ல நிதி ஆலோசகருக்கான ஐந்து முக்கியமான தகுதிகள்..!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism