Published:Updated:

உலகின் எட்டாவது அதிசயம்... செல்வம் சேர்க்கும் ரகசியம்..!

மிடில் கிளாஸ் டு மில்லியனர்
பிரீமியம் ஸ்டோரி
மிடில் கிளாஸ் டு மில்லியனர்

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 18

உலகின் எட்டாவது அதிசயம்... செல்வம் சேர்க்கும் ரகசியம்..!

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 18

Published:Updated:
மிடில் கிளாஸ் டு மில்லியனர்
பிரீமியம் ஸ்டோரி
மிடில் கிளாஸ் டு மில்லியனர்

எது செல்வத்தை சேர்த்து தரும் என முதலீட்டாளர்களிடம் கேட்டால், பெரும்பாலானவர்கள், அதிகம் சம்பாதிப்பது, அதிகம் சேமிப்பது, முதலீடு குறித்த நல்ல அறிவு, நிறுவனப் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மூலம் அதிக வருமானம் ஈட்டுவது எனப் பலரும் பல விஷயங்களைக் குறிப்பிடு வார்கள். இவை எல்லாம் சரியான பதில்கள் தான் என்றாலும், செல்வம் உருவாக்குவதன் அடிப்படை என்பது ஒருவர் பணத்தை எப்படி சிறப்பாக நிர்வகிக்கிறார் என்பதில்தான் இருக்கிறது. உங்களிடம் அதிக பணம் இருக்கிறது அல்லது மாதம்தோறும் வேலை அல்லது தொழில் மூலம் கணிசமான வருமானம் வந்துகொண்டிருக்கிறது எனில், அதைச் சரியாக நிர்வகிப்பதில்தான் நீங்கள் செல்வம் சேர்ப்பது, கோடீஸ்வரர் ஆவது எல்லாம் இருக்கிறது.

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

இதற்கான அடிப்படை ஒரே ஒரு விஷயம்தான். அதை உலகில் 20% பேர்தான் பயன்படுத்தி செல்வந்தர் ஆகியிருக்கிறார்கள். அதன் பெயர் தான் கூட்டு வளர்ச்சி அதாவது, பவர் ஆஃப் காம்பவுண்டிங் ஆகும். இதை ரத்தின சுருக்கமாகச் சொல்வது எனில், முதலீட்டில் வட்டிக்கு வட்டி கிடைப்பது / வருமானத்துக்கு வருமானம் கிடைப்பதாகும். இதை உலகின் எட்டாவது அதிசயம் என்பார்கள்.

பவர் ஆஃப் காம்பவுண்டிங் பற்றி பள்ளிக் கூடத்தில் படித்திருப்பீர்கள். கல்லூரியில் படித்திருப்பீர்கள். பெரிய தொழில் அதிபர்கள், முதலீட்டுக் குருக்கள், பெரிய முதலீட்டாளர்கள் அதைப் பயன்படுத்தி மிகப் பெரிய செல்வந்தர் ஆகி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதை உங்கள் நிதி வாழ்க்கையில் பயன்படுத்திப் பார்த்திருக்கிறீர்களா?

கூட்டு வளர்ச்சி மூலம் கோடீஸ்வரர் ஆவது காலத்தால் நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையாகும். இந்தக் கூட்டு வளர்ச்சி மூலம் ஒருவர் செல்வந்த ராவது என்பது 100% உண்மையாகும்.

கூட்டு வளர்ச்சி மூலம் செல்வம் சேர்க்க நீங்கள் பெரிய விஷயங்கள் எல்லாம் செய்ய வேண்டாம். சில சின்ன விஷயங்களைச் செய்தால் போதும். அவை என்னென்ன?

சிறிய தொகை என்றாலும் தொடர்ந்து நீண்ட காலத்துக்கு இடைவிடாமல் முதலீடு செய்து வரும்போது மிகப் பெரிய தொகையாக சேர்ந்திருக்கும்.

கூட்டு வளர்ச்சி முறையில் அதிக வருமானம் ஈட்டி பெரும் செல்வந்தர் ஆக முடிகிறது. பவர் ஆஃப் காம்பவுண்டிங் என்பதைக் காலத்தின் பெருமதிப்பு எனக்கூட சொல்லலாம்.

உலகின் எட்டாவது அதிசயம்...
செல்வம் சேர்க்கும் ரகசியம்..!

நான் 300–க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கூட்டத்தில் இந்தக் கூட்டு வளர்ச்சியின் வலிமை மற்றும் மகிமை பற்றிதான் விரிவாக விளக்கிச் சொல்லியிருக்கிறேன். உங்களுக்கு ரூ.1 கோடி வேண்டுமா அல்லது ரூ.1 என்பது தினசரி இரு மடங்காக அதிகரிக்கும் தொகை 31 நாள்கள் கழித்து வேண்டுமா என்கிற டிரிக் ஆன கேள்வியைக் கேட்பேன்.

பெரும்பாலானோர் ரூ.1 கோடி வேண்டும் என்பார்கள். ஆனால், கூட்டு வளர்ச்சியில் ரூ.1 என்பது இரண்டாம் நாள் ரூ.2 ஆகவும் மூன்றாம் நாள் ரூ.4 ஆகவும், நான்காம் நாள் ரூ.8 ஆகவும் ஐந்தாம் நாள் ரூ.16 ஆகவும் அதிகரித்திருக்கும். இது 21-ம் நாள் ரூ.10.48 லட்சமாக அதிகரித்திருக்கும். இது 25-ம் நாளில் ரூ.1.67 கோடியாக உயர்ந்திருக்கும். 31-ம் நாள் இது ரூ. 107 கோடியாக அதிகரித்திருக்கும். இதுதான் பவர் ஆஃப் காம்பவுண்டிங் செய்யும் அதிசயம் ஆகும்.

கடந்த 20 வருடங்களில் நான் சொல்லிய இந்தக் கூட்டு வளர்ச்சிபடி முதலீடு செய்த பலர் இன்று செல்வந்தர்களாக உருவாகி இருக்கிறார்கள்.

இவையெல்லாம் சரிதான். நான் நடுத்தர வருமான பிரிவைச் சேர்ந்தவன். நான் எப்படி கோடீஸ்வரர் ஆக முடியும் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. நிச்சயம் நீங்களும் கோடீஸ்வரர் ஆக முடியும்.

ஓர் உண்மைச் சம்பவத்தைப் பார்த்தால், பங்கு முதலீடு மூலம் ஒருவர் எப்படி கோடீஸ்வரர் ஆகலாம் எனப் பார்ப்போம்.

கிரேஸ் என்பவரின் உண்மை வரலாற்றைப் பார்த்தால், இது நிச்சயம் நடக்கும் என்பதை நம்புவீர்கள். இவரின் உதாரணத்தைதான் ஐ.ஐ.எம், எம்.பி.ஏ படிப்பவர்களுக்கு பேராசிரியர்கள் விளக்கிச் சொல்வார்கள்.

சிகாகோ நகரிலிருந்து சுமார் 30 மைல் தூரத்தில் லேக் ஃபாரஸ்ட் கல்லூரி சுமார் 100 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்திருக்கிறது. 2010-ம் ஆண்டு இந்தக் கல்லூரியின் மாணவர்கள் பயன் அடைய 7 மில்லியன் டாலர் தொகையை 100 வயதான கிரேஸ் குரோனர் (Grace Groner) என்கிற பெண்மணி நன்கொடையாக வழங்கினார். இந்திய ரூபாயில் சொல்வது எனில், சுமார் ரூ. 50 கோடியாகும்.

இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக வழங்கிய இவரும் இவரின் சகோதிரியும் 12 வயதிலிருந்து ஆதரவற்ற இல்லத்தில் இருந்தனர். இவர் களை ஆண்டர்சன் என்பவர் லேக்ஃபாரஸ்ட் கல்லூரியில் பணம் கட்டி படிக்க வைத்தார்.

கிரேஸ் திருமணம் செய்து கொள்ளவில்லை. அப்பாட் பார்மா (Abbott pharma) நிறுவனத் தில் 1935-ம் ஆண்டு செகரட்டரி வேலையில் சேர்ந்தார். இந்த நிறுவனத்தில் 43 ஆண்டுகள் பணிபுரிந்தார். வேலைக்கு சேர்ந்த முதல் ஆண்டிலேயே அப்பாட் நிறுவனத்தின் மூன்று பங்குகளை 180 டாலருக்கு வாங்கினார். இந்தப் பங்குகளை தன் வாழ் நாள் முழுக்க விற்காமல் வைத்திருந்தார். மேலும், அந்தப் பங்குகள் மூலம் கிடைக்கும் டிவிடெண்ட் வருமானத்தைக் கொண்டு மேலும் பங்குகளை வாங்கி வந்தார்.

மேலும், அந்த நிறுவனம் பல முறை போனஸ் பங்குகளை வெளியிட்டதோடு, பங்குகளின் முகமதிப்பையும் குறைத்து வந்தது. இதனால், மூன்று பங்குகள் என்பது கிட்டத்தட்ட 75 ஆண்டுகளில் 1 லட்சம் பங்குகளாக அதிகரித்து, அதன் மதிப்பு 7 மில்லியன் டாலரைத் தாண்டி இருக்கிறது.

உலகின் எட்டாவது அதிசயம்...
செல்வம் சேர்க்கும் ரகசியம்..!

கிரேஸின் மொத்த முதலீட்டுக் காலம் 75 ஆண்டு களாகும். இந்தக் காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போர், உலக அளவிலான நிதிச் சிக்கல்கள் போன்ற சூழல்கள் ஏற்பட்டிருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் கூட அவர் அப்பாட் பங்குகளை விற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிரேஸ் அவரின் 180 டாலரை ஆண்டுக்கு 5% வட்டி தரும் வங்கியில் போட்டு வைத்திருந்தால், 75 ஆண்டு முடிவில் சுமார் 900 டாலராக மட்டுமே அதிகரித் திருக்கும்.

அவரின் பங்கு முதலீடு இவ்வளவு பெரிய தொகையாக அதிகரிக்க காரணம், பவர் ஆஃப் காம்பவுண்டிங் ஆகும். பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் (நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள்) என்கிறபோது சிறிய தொகையாக இருந்தாலும் நீண்ட காலத்தில் மிகப் பெரிதாகப் பெருகும்.

உலகின் மிகப் பெரிய பங்கு முதலீட்டாளர் வாரன் பஃபெட் முதலீட்டு வரலாறும் இதுதான். அவரின் ஐம்பதாவது வயது வரை அவரிடம் ஒரு பில்லியன் டாலர்கூட இல்லை. ஆனால், இன்றைக்கு அவரின் சொத்து மதிப்பு 111 பில்லியன் டாலருக்கு மேல் அதாவது 11,100 கோடி டாலருக்கு மேலாகும். வாரன் பஃபெட் அவரின் 11 வயதில் முதல் பங்கு முதலீட்டை மேற்கொண்டார். இவர் அவரின் 95 சதவிகித்துக்கும் மேற்பட்ட செல்வத்தை அவரின் 50-வது வயதுக்கு மேல்தான் சேர்த்தார்.

ஒருவர் மாதம் ரூ.10,000 வீதம் 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்வோம். இதன் மூலம் ஆண்டுக்கு 12% வருமானம் கிடைப்பதாக வைத்துகொள்வோம். அவர் முதலீடு செய்திருக்கும் தொகை ரூ.36 லட்சம். ஆனால், அவர் பணம் ரூ. 3.5 கோடியாகப் பெருகி இருக்கும். இதுதான் பவர் ஆஃப் காம்பவுண்டிங்.

இன்றைக்கு 25 வயதில் வேலைக்குச் சேரும் ஒருவர் 55 வயதில் ஓய்வு பெறுகிறார். இவர் மாதம் ரூ.10,000 முதலீடு செய்து வந்தால், சுலபமாக ரூ. 3.5 கோடியை சேர்த்துவிட முடியும்.

நீங்கள் கோடீஸ்வரர் ஆக வேண்டும் எனில், எவ்வளவு முதலீடு செய்கிறீர்கள், எவ்வளவு காலத்துக்கு முதலீடு செய்கிறீர்கள், முதலீட்டு வளர்ச்சி ஆண்டுக்கு சராசரியாக எவ்வளவு என்பதில்தான் இருக்கிறது.

பவர் ஆஃப் காம்பவுண்டிங்கின் உண்மையான பவரை உணர்ந்து, இனி நீங்கள் முதலீடு செய்தால் உங்கள் வாழ்நாளில் நீங்கள் நிச்சயம் கோடீஸ் வரராக மாறுவீர்கள்.

(கோடீஸ்வரர் ஆவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism