பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

பணக்காரர்களின் முதலீட்டு ரகசியங்கள்..!

மிடில் கிளாஸ் டு மில்லியனர்
பிரீமியம் ஸ்டோரி
News
மிடில் கிளாஸ் டு மில்லியனர்

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 19

மனித வளர்ச்சியின் பரிணாமத்தை எடுத்துகொள்வோம். ஆரம்பத்தில் நாம் கற்காலத்தில் இருந்தோம். அப்போது இரு கற்களை உரசித்தான் நெருப்பைப் பற்ற வைத்து சமையல் செய்தோம். அதன் பிறகு, இயற்கையுடன் இணைந்து ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளை வளர்த்ததுடன் விவசாயம் செய்தோம். பிறகு, தொழில் புரட்சி ஏற்பட்டது.

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

கடந்த நூற்றாண்டின் இறுதியில் அதாவது, 1990-2000-ம் ஆண்டுகளில் ஐ.டி என்கிற தொழில்நுட்பம் வளர ஆரம்பித்தது. 2010-ம் ஆண்டுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மேம்பட ஆரம்பித்து அதில் வெற்றி பெற்றிருக்கிறோம். அடுத்து வரும் ஆண்டுகளில் ஏ.ஐ என்கிற செயற்கை நுண்ணறிவு பிரமாண்ட வளர்ச்சி காணும் நிலை உருவாகியிருக்கிறது.

மாறாத ஒரே விஷயம்...

வாழ்க்கையில் எவ்வளவு விஷயம் மாறினா லும் அன்று முதல் இன்றைக்கு வரைக்கும் ஒரே ஒரு விஷயம் மட்டும் மாறாமல் இருக்கிறது. மனிதர்கள் செல்வத்தைத் தேடுவதும் அதற்குப் போராடுவதும் மாறாமலே இருக்கிறது.

மனிதன் தொடர்ந்து செல்வத்தைத் தேடிக் கொண்டே இருக்கிறான். கடந்த ஐந்தாயிரம் ஆண்டு வரலாற்றைப் பார்த்தால் செல்வம் சேர்ப்பதற்காக நாடுகளிடையே, தனி மனிதர் களிடையே நிறைய போர்கள் மற்றும் போராட்டங்கள் நடந்திருப்பதைப் பார்க் கலாம். இன்றைக்கு மனிதர்கள் தொழில் மற்றும் வேலை என்கிற போராட்டத்தின் மூலம் செல்வத்தைச் சேர்த்து வருகிறார்கள்.

ஒருவருக்கு இருக்கும் மனஅழுத்தத்தில் சுமார் 60% நிதி மற்றும் பணம் சார்ந்த பிரச்னை யாக இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

பணக்காரர்களின் முதலீட்டு ரகசியங்கள்..!

முதலீட்டு வாய்ப்புகள்...

முதலீடுகளின் தன்மை மற்றும் முதலீட்டு முறை நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது. கடந்த 20, 25, 30 ஆண்டுகளுக்கு முன் நம் பெற்றோர் மேற்கொண்ட முதலீட்டு முறையை இப்போது நாமும் பின்பற்றலாமா என்றால் கூடாது என்பதுதான் பதில். காரணம், அன்றைக்கு முதலீட்டு வாய்ப்புகள் என்பது அரிதாகத்தான் இருந்தன. தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசிகள்தான் பிரதானமாக இருந்தன.

மேலும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை சிறப்பாக இயங்கிவந்தது. குடும்பத்தில் ஏதாவது பெரிய சுபச்செலவு அல்லது மருத்துவச் செலவு எனில், ஒட்டுமொத்தக் குடும்பமும் கவனித்துக்கொண்டது. இதனால், அன்றைக்குத் தேவையும் குறைவாக இருந்தது.

இன்றைக்கு அப்படி அல்ல; தனிக் குடித்தனங்கள் பெருகி விட்டன. தனித்தனி தேவைகள் பெருகிவிட்டன; வாழ்க்கை முறை தேவைகள் மிகவும் அதிகரித்து விட்டன. அந்தக் காலத்தில் பணவீக்க விகிதம் குறைவாகவும் முதலீட்டு மூலமான வருமானம் அதிகமாகவும் இருந்தது. இன்றைக்கு ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டியும் பணவீக்க விகிதமும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக் கிறது. இதனால், உண்மையான வருமானம் என்பது எஃப்.டி முதலீட்டில் இல்லை.

இன்றைக்கு 60 வயதுக்குமேல் இருப்பவர்களை எடுத்துக் கொண்டால், தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், ரியல் எஸ்டேட் இவற்றில்தான் பிரதானமாக முதலீடு செய்தார்கள். இதை இப்போதும் பின்பற்றினால் லாபமில்லை.

காரணம், பணவீக்க விகித அதிகரிப்பு மற்றும் அந்த முதலீடு களில் முன்அளவுக்கு அதிக வருமானம் இல்லை என்பதாகும். உதாரணமாக, நமக்கு முந்தைய தலைமுறையினர் எஃப்.டியில் முதலீடு செய்யும்போது ஆண்டுக்கு 12% வட்டி வருமானம் கிடைத்தது.

ஆனால், இன்றைக்கு எஃப்.டி வருமானம் 5%, 6% என்பதாக மிகவும் குறைந்து காணப்படுகிறது. இது உண்மையான பணவீக்க விகிதத்தைவிட குறைவாக இருக்கிறது. இதே போல்தான் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் வருமானமும் குறைவாக இருக்கிறது.

முன்னோர்களின் முதலீட்டு முறையை நாம் இப்போதும் பின்பற்றினால் அது லாபகரமாக இருக்காது. நடுத்தர மக்கள் எப்போதும் நடுத்தர மக்களாகவே இருக்க முக்கிய காரணம், அவர்கள் காலத்துக்கேற்ற முதலீட்டு முறைகளை மாற்றாமல் பாரம்பர்யமான முதலீடுகளிலேயே பணத்தை முதலீடு செய்து வருவதாகும்.

மேலும், அண்மைக் காலத்தில் நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், கிரிப்டோகரன்சி எனப் பல்வேறு வகையான முதலீடுகள் வந்திருக்கின்றன. இவை முதலீட் டாளர்கள் மத்தியில் மிகப் பெரிய குழப்பத்தையும் உருவாக்கி யிருக்கிறது.

கோடீஸ்வரர்களின் முதலீட்டுத் திறமை!

பணக்காரர்கள் எப்போதும் பணத்துக்காக வேலை செய்வதில்லை. பணத்தை அவர்கள் தங்களுக்காக வேலை செய்ய வைப்பதில் வல்லவர் களாக இருக்கிறார்கள். உலகின் முன்னணி பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபெட், ‘‘நீங்கள் உறங்கும்போதும் உங்கள் பணம் உங்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில், இறக்கும் வரை நீங்கள் வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டி யிருக்கும்” என்று சொல்லி யிருப்பது மிகவும் அர்த்தம் உள்ளதாகும்.

இன்றைக்குப் பலரும் தகுதிக்கு மீறி பெரிய வீடாகக் கடனில் வாங்கிவிட்டு, அதற்கு மாதத் தவணை கட்டுவதிலேயே வாழ்க்கையைக் கழித்துவிடு கிறார்கள். பணம் நமக்காக வேலை செய்ய வேண்டும். பணத்துக்காக நாம் வேலை செய்யக் கூடாது. இதுதான் பெரும்பாலான பணக்காரர் களின் தாரக மந்திரமாகும்.

பணக்காரர்கள் என்பவர்கள் அவர்களின் சொத்து மதிப்பு எப்போதும் குறையாமல் பார்த் துக்கொள்வார்கள். அவர்கள் இடையிடையே அவர்களின் சொத்துகள் பட்டியலைப் புரட்டிப் பார்ப்பதுடன், அவை ஒவ்வொன்றும் என்ன வருமானம் தந்து வருகிறது என்பதைக் கவனிக்கத் தவற மாட்டார்கள்.

அவர்களிடம் தங்கம், வைரம், மனைகள், தோட்டங்கள், ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் இருந்தாலும் நவீன முதலீடுகளான நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகியவற்றிலும் முதலீடு செய்திருப்பார்கள். அவர்கள் எப்போதும் எந்தச் சொத்து மலிவான விலையில் கிடைக்கிறதோ, அப்போது மிக அதிகமாக வாங்கிச் சேர்த்துவிடுவார்கள்.

பணக்காரர்களின் முதலீட்டு ரகசியங்கள்..!

உதாரணமாக, ஏதாவது ஒரு தோட்டம் மலிவான விலைக்கு வந்தால் தாராளமாக அதை வாங்கு வார்கள். இதேபோல், தங்கம் விலை குறைந்திருக்கும் காலத்தில் 50 பவுன், 100 பவுன் என்பது போல் வாங்கி வைப்பார்கள். அவர்கள் விலைவாசி உயர்வு 6% எனில், இதைவிட இரு மடங்கு அதாவது, 12% அவர்களின் முதலீட்டுக் கலவை வருமானம் தருவது போல் முதலீட்டைப் பராமரித்து வருவார்கள்.

அவர்கள் தங்களின் முதலீட்டைத் தங்கம், ஃபிக்ஸட் டெபாசிட், ரியல் எஸ்டேட், நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற பிரதான சொத்துப் பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்திருப்பார்கள். மேலும், அவர்களின் முதலீட்டு முடிவுகள் விரைவான தாகவும் விவேகமானதாகவும் இருக்கும். அவர்கள் தங்களின் முதலீடுகள் ஆண்டுக்கு சராசரியாக என்ன வருமானம் தந்து வருகிறது என்பதைத் தெரிந்து வைத்திருப்பார்கள்.

மேலும், எதிர்காலத்தில் எந்தச் சொத்துப் பிரிவு நல்ல வருமானம் தரக்கூடும் என்பதை அறிந்து வைத்திருப்பார்கள். அதற்கு நேரம் இல்லை எனில், தகுதி வாய்ந்த நிதி ஆலோசகர்கள் மற்றும் நிதி நிபுணர்களைத் தங்களுடன் வைத்திருப்பார்கள்.

ஒருவருக்குக் கோடிக்கணக்கான பணம் வரப் போகிறது எனில், அதை எங்கே முதலீடு செய்யப் போகிறோம் அல்லது அந்தப் பணத்தைக் கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்கிற தெளிவான திட்டம் அவரிடம் இருக்கும். இப்படி தெளிவான திட்டம் எதுவும் இல்லாததால்தான் நடுத்தர மக்கள் லாட்டரி, பரிசுப் போட்டி போன்றவற்றில் கோடிக் கணக்கான பணத்தைப் பெற்றாலும், அவற்றை சரியாகக் கையாளத் தெரியாமல் சில ஆண்டுகளில் தொலைத்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடுகிறார்கள்.

நீங்களும் உங்கள் சொத்துப் பிரிவுகளின் வருமான செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து வரும் போது, அவற்றையும் நல்ல லாபம் தரக்கூடியதாக மாற்றியமைக்க முடியும்.

ஒருவர் கோடீஸ்வரர் ஆக வேண்டும் எனில், முதலீடு செய்ய லட்சக்கணக்கான ரூபாய் எல்லாம் தேவையில்லை. இருக்கிற பணத்தை அல்லது மாதம்தோறும் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை தொடர்ந்து, நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் தரக்கூடிய பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் (நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்) முதலீடு செய்து வந்தாலே போதும்.

கூடவே, ஆண்டுக்கு ஒரு முறையாவது முதலீட்டுக் கலவையை அலசி ஆராய்ந்து, தேவைப்பட்டால் மாற்றி அமைத்து வந்தால், நிச்சயம் அனைத்து நிதி இலக்குகளையும் நிறைவேறுவதோடு, செல்வந்தராகவும் ஆக முடியும்.

(கோடீஸ்வரர் ஆவோம்)