Published:Updated:

கோடீஸ்வரர் கனவு: முதலீட்டில் தவிர்க்கவேண்டிய 4 மனநிலைகள்..!

மிடில் கிளாஸ் டு மில்லியனர்
பிரீமியம் ஸ்டோரி
மிடில் கிளாஸ் டு மில்லியனர்

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 23

கோடீஸ்வரர் கனவு: முதலீட்டில் தவிர்க்கவேண்டிய 4 மனநிலைகள்..!

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 23

Published:Updated:
மிடில் கிளாஸ் டு மில்லியனர்
பிரீமியம் ஸ்டோரி
மிடில் கிளாஸ் டு மில்லியனர்

தொழில் அல்லது முதலீடு மூலம் வெற்றி பெற்றவர்களுக்கும் சாதாரணமான வர்களுக்கும் இரண்டு முக்கியமான வித்தியாசங்கள் இருக்கின்றன. ஒன்று, வெற்றி பெற்றவர்கள் கோடிக்கணக்கான செல்வத்தைச் சேர்த்து வைத்திருப்பார்கள். சாதாரணமானவர் களிடம் அந்த அளவுக்கு செல்வம் இருக்காது. இரண்டாவது வித்தியாசம், அந்தச் செல்வத் துக்குப் பின்னால் இருக்கிற முதலீட்டு மனநிலை (Mindset) ஆகும்.

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

உண்மையான சொத்து எது?

கோடீஸ்வரர்களிடம் செல்வத்தை உருவாக்கும் மனநிலை பாசிட்டிவ்வாக இருக்கும். மேலும், அவர்கள் உண்மையான சொத்து (Real Asset) எது என்பதைத் தெளிவாக அறிந்து வைத்திருப்பார்கள்.

சாதாரண மக்கள் ஆண்டுக்கு சுமார் 2.5% - 3% மட்டுமே வாடகை வருமானம் தரும் ரியல் எஸ்டேட்டை சொத்தாக நினைப்பார்கள். அதேபோல், தேய்மான சொத்தான கார் போன்றவற்றையும் அவர்கள் உண்மையான சொத்து எனத் தவறாக நினைக்கிறார்கள். அதுவும் இந்தச் சொத்துகளை கடனில் வேறு வாங்கிவிடுகிறார்கள். வெற்றி பெற்ற கோடீஸ் வரர்கள் இதுபோன்ற தவறுகளைச் செய்ய மாட்டார்கள்.

கோடீஸ்வரர் கனவுடன் இருப்பவர்கள் முதலீட்டில் முக்கியமான 4 நெகட்டிவ் மனநிலைகளைத் தவிர்க்க வேண்டும். இந்த நெகட்டிவ் மனநிலை இருக்கும் வரைக்கும் ஒருவரிடம் எப்போதும் செல்வம் சேராது. எனவே, அந்த நான்கு நெகட்டிவ் மனநிலை களைப் பற்றிக் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

1. விரைவாக கோடீஸ்வரர் ஆவது...

திரைப்படங்களில் வருவதுபோல், பலர் ஒரே நாளில் அல்லது ஒரே பாடலில் கோடீஸ்வரர் ஆகிவிட வேண்டும் எனத் துடிக்கிறார்கள். குறுகிய காலத்தில் ஏதாவது அதிசயம் ஏற்பட்டு அல்லது அதிர்ஷ்டம் மூலம் கோடீஸ்வரர் ஆக வேண்டும் எனப் பலர் நினைக்கிறார்கள்.

‘‘பங்கின் விலை இப்போது 100 ரூபாய்க்குக் கீழே இருக்கும் மல்ட்டி பேக்கர் பங்குகளை சொல்லுங்கள். அது இரண்டு, மூன்று ஆண்டு களில் குறைந்தது 1,000 ரூபாயாக மாற வேண்டும்’’ என்று என்னிடம் கேட்பார்கள்.

இதுபோன்றவர்கள் மிகவும் அதிகமாக பேராசைப்படுகிறார்கள். கேசினோ சூதாட்டம், லாட்டரி சீட்டு, டிவி கோடீஸ்வரர் நிகழ்ச்சிகள் மூலம் கோடீஸ்வரர் ஆகிவிட வேண்டும் எனத் திட்டமிடுகிறார்கள். சிலர், ‘‘ரூ.1 லட்சம் கொடுங்கள். ஆப்ஷன் டிரேடிங் மூலம் உங்களுக்கு 60,000 ரூபாய் தருகிறேன்’’ என்கிறார்கள்.

இது போன்ற திட்டங்களில் எக்காரணம் கொண்டும் முதலீடு செய்யாதீர்கள். அப்படிச் செய்தீர்கள் எனில், நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இழப்பது நிச்சயம். காரணம், நியாயமாக, நேர்மையான வழிமுறைகளில் விரைவாகப் பணம் சேர்க்க வாய்ப்பே இல்லை. அது சிறுக சிறுகத்தான் சேரும். அப்படிச் சேரும் பணம் கூட்டு வட்டி முறையில் வளர்ச்சி காண்பதாக இருந்தால் மட்டுமே நீண்ட காலத்தில் உங்களில் பெரும் செல்வத்தை சேர்க்க முடியுமே அன்றி, ஆப்ஷன் திட்டங் களாலோ, பொன்சி திட்டங்களாலோ பெரும் பணம் சேர்க்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டு அதிலிருந்து விலகியே நில்லுங்கள்.

ஆனால், விரைவாகப் பணம் சேர்க்க வேண்டும் என்கிற ஆசைக்கு பலரும் பலியாகச் செய்கிறார்கள். சதுரங்க வேட்டை படத்தில் வருகிற மாதிரியான ஏமாற்றுகள் நடந்தேறுவது இது மாதிரியான ஆசை கொண்டவர்களால்தாம்.

கோடீஸ்வரர் கனவு: முதலீட்டில்     தவிர்க்கவேண்டிய 4 மனநிலைகள்..!

2. முதலீட்டுத் திட்டம் எதுவும் இல்லாதது..!

சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு காரில் பயணம் செய்யப் போகிறீர்கள் எனில், அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துகொள்வது மிக முக்கியம். காரை நன்றாக சர்வீஸ் செய்து, பெட்ரோல் டேங்க் எல்லாம் நிரப்பிக்கொண்டுதான் பயணத்தை ஆரம்பிப்பீர்கள். மேலும், நன்றாகத் தூங்கி எழுந்து கார் பயணத்தைத் தொடங்குவீர்கள். அப்போதுதான் பயணம் இனிமையாக இருக்கும்.

பொதுவாக, அலசி ஆராய்ந்து நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்து நம் முதலீட்டுக் கலவையில் சேர்த்திருப்போம். சுமார் 10 ஃபண்டுகள் அல்லது பங்குகளில் முதலீடு செய்து வருவோம். இந்த நிலையில், யூடியூப், டிவி சேனல், பத்திரிகை போன்றவற்றில் ஏதாவது ஃபண்ட், பங்கு பரிந்துரை வரும். மேலும், நண்பர்கள், உறவினர்கள் ஏதாவது ஃபண்ட், பங்கு நன்றாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பார்கள். இதை எல்லாம் கேட்டு 11-வது, 12-வது எனப் பங்குகள், ஃபண்டுகளை முதலீட்டுக் கலவையில் சேர்த்துக்கொண்டே வருவோம். இப்படித் திட்டம் எதுவும் இல்லாமல் புதிய ஃபண்டுகள், பங்குகள் முதலீட்டுக் கலவையில் சேரும் போது அதன் ஒட்டுமொத்த செயல்பாடும் சரியில்லாமல் போக அதிக வாய்ப்பிருக்கிறது.

நன்றாகச் செயல்படும் முதலீட்டுத் திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வரும்போது மட்டுமே ஒருவர் கோடீஸ்வரர் ஆகமுடியும். அப்படி இல்லாமல் அடிக்கடி திட்டங்களை மாற்றிக்கொண்டு, திட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டிருந்தால் ஒருவர் ஒருபோதும் செல்வந்தர் ஆகமுடியாது. உங்களால் சரியான முதலீட்டுக் கலவையை உருவாக்க முடியவில்லை எனில், நிதி ஆலோசகரின் உதவியை நாடுவதில் எந்தத் தவறும் இல்லை.

கோடீஸ்வரர் கனவு: முதலீட்டில்     தவிர்க்கவேண்டிய 4 மனநிலைகள்..!

3.மந்தை மனநிலையைப் பின்பற்றுவது..!

ஒரு முதலீடு தனக்கு சரியாக வருமா எனப் பார்க்காமல் மற்ற வர்கள் பணம் போட்டிருக் கிறார்கள் என்பதற்காக அதில் முதலீடு செய்யும் மந்தை மனநிலை ஆபத்தில்தான் முடியும். உதாரணமாக, நண்பர் அல்லது உறவினர் ரியல் எஸ்டேட் சொத்தை வாங்கி இருப்பதைப் பார்த்து அதில் பணத்தைப் போடுவதாகும். நண்பர்/ உறவினர் சில ஆண்டுகள் கழித்து வீடு கட்டும் நோக்கத்தோடு அந்த இடத்தை வாங்கி இருக்கலாம். நீங்கள் அந்த இடத்தை சில ஆண்டுகளில் விலை உயர்ந்த பிறகு விற்று லாபம் ஈட்டும் நோக்கத்துடன் வாங்கி இருக்கலாம். சில ஆண்டுகள் கழித்து அந்த சொத்தின் விலை உயரவில்லை என்றாலும், நண்பர் / உறவினருக்கு இழப்பு எதுவும் இல்லை. காரணம், அவர்கள் வாங்கியது வீடு கட்டி, குடியிருக்கும் நோக்கத்துடன்தான். எனவே, எப்போதும் மற்றவர்களைப் பார்த்து மந்தை நிலையில் முதலீடு செய்யக் கூடாது. நமக்கு என்ன தேவையோ, அதற்கேற்பவே முதலீட்டில் செயல்பட வேண்டும்.

இதே போல், நண்பர்கள், உறவினர்கள் ஏதாவது நிறுவனப் பங்கு அல்லது ஃபண்டில் முதலீடு செய் கிறார்கள் என்பதற்காக நாமும் அவற்றில் எந்தவித ஆராய்ச்சியும் இல்லாமல் முதலீடு செய்வதாகும்.

மேலும், நண்பர்கள், உறவினர்கள் கார் வாங்கி விட்டார்கள், விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் வாங்கி விட்டார்கள் என நீங்களும் வாங்காதீர்கள். உங்களுக்கு தேவை இருந்தால் மற்றும் தகுதி இருந்தால் மட்டுமே வாங்குங்கள்.

4. குறுகிய கால செயல்பாடு

நம்மில் பெரும்பாலானோரைக் கோடீஸ்வரர் ஆக விடாமல் தடுக்கும் மிக முக்கியமான நெகட்டிவ் மனநிலை, குறுகிய கால நோக்கில் முதலீட்டை அணுகுவதாகும். எப்போதுமே ஏதாவது ஒரு பிரச்னை இந்தியாவில் உலகில் இருந்துகொண்டுதான் இருக்கும். தற்போதைய நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் பிரச்னை, இலங்கையில் பொருளாதார பிரச்னை, பாகிஸ்தானில் அரசியல் பிரச்னை எனப் பல இருக்கின்றன. இது போன்ற குறுகிய காலத்தில் பங்குச் சந்தையை கீழே இறக்கும் விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். டிவி மற்றும் பத்திரிகைகள் முதலீட்டாளர்களின் உணர்வுகளைத் தூண்டும் விதமாகச் செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கும். அதற்கு எல்லாம் எதிர்வினையாற்றினால் ஒருவர் ஒரு போதும் கோடீஸ்வரர் ஆக முடியாது.

முடிந்தால் இந்தச் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி நன்றாக விலை இறங்கி இருக்கும் நல்ல நிறுவனப் பங்குகளை வாங்கிச் சேர்க்கலாம். எந்த ஒரு செய்தி பங்குச் சந்தையை மூன்று ஆண்டு காலத்துக்கு பாதிக்குமோ, அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுங்கள். மற்ற செய்திகள், தகவல்களுக்காக அவசரப்பட்டு பங்குகள், ஃபண்டுகளை விற்காதீர்கள்; முதலீட்டுக் கலவையை மாற்றி அமைக்காதீர்கள்.

வெற்றிகரமானவர்கள் மேலே குறிப்பிட்ட நான்கு நெகட்டிவ் மன நிலைகளை மனதில் கொள்ள மாட்டார் கள். ஆனால், சாதாரணமானவர்கள் அவற்றைச் சுற்றியே பயணம் செய்வதால், அவர்கள் எப்போதும் கோடீஸ்வரராக மாட்டார்கள்.

முதலீடு செய்து, கூட்டு வளர்ச்சியின் மூலம் கிடைத்த சொத்து, செல்வம் நீண்ட காலத்துக்கு நீடித்து நிற்கும். அந்தச் சொத்துதான் தலைமுறை தலைமுறையாக மாறிச் செல்லும். மேலும், முதலீட்டுக் கலவையை நீண்ட காலத்துக்கானதாக மாற்றி அமைத்துக் கொண்டால் கோடீஸ்வரர் ஆவது நிச்சயம்.

(கோடீஸ்வரர் ஆவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism