Published:Updated:

நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனில் இருக்கிறது..!

மிடில் கிளாஸ் டு மில்லியனர்
பிரீமியம் ஸ்டோரி
மிடில் கிளாஸ் டு மில்லியனர்

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 24

நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனில் இருக்கிறது..!

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 24

Published:Updated:
மிடில் கிளாஸ் டு மில்லியனர்
பிரீமியம் ஸ்டோரி
மிடில் கிளாஸ் டு மில்லியனர்

உலகின் முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபெட், பங்குச் சந்தை முதலீட்டில் லாபம் பார்க்க இரு விதிமுறைகளைப் பின்பற்றுவதாகச் சொல்கிறார்.

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

முதல் விதிமுறை: ஒருபோதும் உங்கள் மூலதனத்தை (Investment Capital / Amount) இழக்கக் கூடாது.

இரண்டாவது விதிமுறை: முதல் விதிமுறையை எப்போதும் மறக்கக் கூடாது.

இதன் உண்மையான அர்த்தம், முதலீட்டில் எப்போதும் இழப்பை சந்திக்கக் கூடாது என்பதாகும். அதாவது, அந்த அளவுக்கு முதலீடு செய்யப்போகும் பங்கை நன்றாக அலசி ஆராய வேண்டும் என்பதாகும்.

ஒரு பங்கு முதலீட்டுக் கலவையை (Share Investment Portfolio) உருவாக்கப் போகிறீர்கள், ஒரு நிறுவனப் பங்கில் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றாலும் இந்த விதிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்கிறார் வாரன் பஃபெட்.

சுமார் 70% பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் இழப்பையே சந்திக்கிறார்கள். இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனில் இருக்கிறது..!

1. பேராசை & அதிக பயம்...

பங்குச் சந்தை முதலீட்டில் மூலதனத்தை ஒரு முதலீட்டாளர் இழக்க அதிக ஆசை மற்றும் அதிக பயம் காரணங்களாக உள்ளன. அதாவது, பங்கின் விலை நன்றாக ஏற்றம் கண்டிருக்கும் நிலையிலும் அஸெட் அலொ கேஷன்படி லாபத்தை வெளியில் எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டு, இன்னும் ஏறும் எனக் காத்திருந்து சந்தையின் இறக்கத்தில் லாபத்தைத் தவறவிடுவது ஒரு நிலை.

இன்னொரு நிலை, யாரோ அதிக லாபம் கிடைக்கும் என்று சொன்னார்கள் என்பதற்காகப் பேராசைபட்டு கண்ட பங்கு களிலும் முதலீடு செய்து மூலதனத்தை இழப்பதாகும்.

அடுத்து, பங்குச் சந்தையின் இயற்கை குணமே ஏற்ற இறக்கம்தான் என்பதை மறந்து விட்டு, பங்கின் விலை 10% இறங்கினாலே அதிக பயத்தில் இழப்பில் பங்கு முதலீட்டிலிருந்து வெளியேறிவிடுவது. இவை எல்லாம் தவறான அணுகுமுறைகளே.

2. குறுகிய கால முதலீடு...

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பலரும் மிகவும் குறைவான முதலீட்டுக் காலத்தை கொண்டிருக்கிறார்கள். இதனாலேயே பலரும் பணத்தை இழக்கிறார்கள். பங்குச் சந்தை சார்ந்த முதலீடு என்று வந்துவிட்டாலே குறைந்தபட்ச முதலீட்டுக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். சொத்துப் பிரிவுகள் (Asset Classes) என எடுத்துக்கொண்டால், ஒவ்வொன்றுக்கும் ஒரு முதலீட்டுச் சுழற்சி (Investment Cycle) காலம் இருக்கிறது.

பங்குச் சந்தை முதலீட்டுக்கான சுழற்சி காலம் 5 ஆண்டுகள், தங்கத்துக்கான காலம் சுழற்சி 10 ஆண்டுகள் ஆகும். இருக்கிற முதலீட்டிலேயே அதிக சுழற்சி காலத்தைக் கொண்டிருப்பது ரியல் எஸ்டேட்தான். அதன் சுழற்சிக் காலம் சுமார் 20 ஆண்டுகள் ஆகும்.இந்தக் காலகட்டத்துக்கு குறைவாக முதலீட்டுக் காலம் இருக்கும்பட்சத்தில் முதலீட்டின் மூலம் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

3. ரிஸ்க் எடுக்கும் திறன்...

பலரும் முதலீட்டில் இழப்பை சந்திக்க முக்கியமான காரணம், அவர்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப முதலீட்டுத் திட்டங் களைத் தேர்வு செய்யாமல் இருப்பதாகும். மேலும், ஒருவர் கோடீஸ்வரர் ஆவதும் ஆகாமல் போவதும் அவரின் ரிஸ்க் எடுக்கும் திறனைச் சார்ந்திருக்கிறது.

பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் (நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள்) முதலீடு செய்யும்போது ஒருவர் தனக்குத் தானே இரு கேள்விகளைக் கேட்க வேண்டும். முதல் கேள்வி, இந்த முதலீட்டுத் தொகை எனக்கு எப்போது திரும்பத் தேவைப்படும். இதை வேறு வார்த்தையில் சொல்வது எனில், முதலீட்டுக் காலம் எத்தனை ஆண்டுகள் என்று குறிப்பிடலாம். அடுத்து, இந்த முதலீட்டுக் காலத்தில் மூலதனத்தின் மதிப்பு எந்தளவு ஏற்ற இறக்கத்துடன் (Volatility) இருந்தால், நீங்கள் டென்ஷன் ஆகமாட்டீர்கள்; கூடவே, முதலீட்டின் மதிப்பு மிகவும் குறைந்துபோனால் உங்களின் நிதி இலக்குகளில் ஏதாவது சிக்கல் வருமா என்பதையும் கவனிக்க வேண்டும்.

பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் அதிக ஏற்றமும் வரும்; அதிக வீழ்ச்சியும் வரும். முதலீட்டின் மதிப்பு மிகவும் சரிந்தாலும் சந்தையிலிருந்து வெளியேறாமல், தொடர்ந்து முதலீட்டைத் தக்கவைத்துக்கொள்ளும் ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்டவர்கள் மட்டுமே பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.

வாரன் பஃபெட்டின் பங்கு முதலீட்டுப் பயணத்தை கவனிப் போம். 1987-ல் ஒரு பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டது. அப்போது அவரின் முதலீட்டுக் கலவையின் மதிப்பு 37% வீழ்ச்சி கண்டது. அவரின் முதலீட்டுக் கலவை 2000-ம் ஆண்டில் டாட்காம் நெருக்கடியின்போது 49% சரிவைச் சந்தித்தது. 2008-ல் மீண்டும் உலக அளவில் ஒரு நிதி நெருக்கடி ஏற்பட்டது, அப்போது அவரின் ஷேர் போர்ட்ஃபோலி யோவின் மதிப்பு 51% வீழ்ச்சி கண்டது.

‘‘ஒருவரின் பங்கு முதலீட்டுக் கலவையின் மதிப்பு ரூ.1 கோடி யிலிருந்து ரூ.50 லட்சமாக குறைந் தால்கூட கவலைப்படாதவராக இருக்க வேண்டும்’’ என்கிறார் வாரன் பஃபெட்.

ஒருவர் எந்தளவுக்கு இழப்பை தாங்கி, தன் முதலீட்டைத் தொடர்வதுடன், நல்ல நிறுவனப் பங்காக இருக்கும்போது வீழ்ச்சியில் கூடுதல் முதலீடு செய்தால், பின்னர் அதிக லாபம் கிடைக்கும். இது ஈக்விட்டி ஃபண்டில் எல்லோரும் அறிந்த ரகசியம்.

சீனா – அமெரிக்கப் பொருளா தாரப் போர், கோவிட் 19 பரவல் பாதிப்பு, உக்ரைன் – ரஷ்யா போர் எனப் பல பிரச்னைகள் பங்குச் சந்தையை பாதித்துக் கொண்டுதான் இருக்கும். இது போன்ற இறக்கச் சந்தையிலும் முதலீட்டைத் தொடரும் தைரியம் இருப்பவர்கள் மட்டுமே பங்குச் சந்தைக்கு வர வேண்டும்.

நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனில் இருக்கிறது..!

ஆரம்ப நிலை முதலீட்டாளர்களுக்கு...

பங்குச் சந்தையின் லாபத்தை நினைக்கும் ஆரம்ப நிலை முதலீட் டாளர்களுக்கு ஏற்றதாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு இருக்கிறது. ஒரு ஈக்விட்டி ஃபண்ட் திட்டத்தின் முதலீட்டுக் கலவை என்கிறபோது அதில் குறைந்த பட்சம் 25 நிறுவனப் பங்குகள், அதிகபட்சம் 50 - 60 பங்குகள் வரை இடம்பெற்றிருக்கும். இப்படி பரவலாக அதுவும் பல்வேறு துறை களைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் இடம்பெற்றிருக்கும் போது, நீண்ட காலத்தில் அதிக இழப்புக்கு வாய்ப்பு மிகவும் குறைவு. மேலும், இந்த ஃபண்டை நிர்வகிக்க முதலீட்டு நிபுணத்துவம் கொண்ட ஃபண்ட் மேனேஜர் மற்றும் முதலீட்டுக் குழு இருக்கும். கார், பஸ், விமானம் போன்றவற்றை அனுபவம் வாய்ந்த ஒருவர் ஓட்டிச் செல்லும்போது விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. இது போன்றதே மியூச்சுவல் ஃபண்ட் முதலீடும்.

பங்கு சார்ந்த முதலீட்டுக்கு புதியவர்கள் எனில், கட்டாயம் அவர்கள் ஈக்விட்டி ஃபண்டுகளில்தான் முதலீடு செய்ய வேண்டும். 2020 முதல் 2022 வரைக்கும் ஏகப்பட்ட புதிய முதலீட்டாளர்கள் எந்த அலசல் மற்றும் ஆராய்ச்சி இல்லாமல் நிறுவனப் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்திருக்கிறார்கள். மேலும், இவர்கள் ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்களிலும் முதலீடு செய்திருக்கிறார்கள். இவற்றின் மூலம் நிறைய இழப்பைச் சந்திருக்கிறார்கள். இது மாதிரியானவர்களும், பங்குச் சந்தை முதலீடு பற்றி எதுவும் தெரியாதவர்களும் ஒரு நல்ல நிதி ஆலோசகர் அல்லது முதலீட்டு ஆலோசகர் அல்லது பங்குச் சந்தை நிபுணரின் ஆலோசனையைப் பெற்று முதலீடு செய்வது மட்டுமே லாபகரமாக இருக்கும்.

(கோடீஸ்வரர் ஆவோம்)

பங்கு முதலீட்டாளர்கள் உஷார்..!

பங்குச் சந்தை என்பது ஒருவரை கோடீஸ்வராக மாற்றும் இடமாக இருக்கிறது. அதே நேரத்தில், செல்வத்தை அழிப்பதாகவும் இருக்கிறது.

இன்ஃபோசிஸ் பங்கில் ரூ.1 லட்சம் போட்டவர்களுக்கு ரூ.1 கோடி, எம்.ஆர்.எஃப்பில் ரூ.1 லட்சம் போட்டவர்களுக்கு ரூ.2 கோடி, பிரிட்டானியா பங்கில் ரூ.1 கோடி போட்டவர்களுக்கு ரூ.3 கோடி, உச்சபட்சமாக விப்ரோ பங்கில் 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால், 40 ஆண்டுகளில் 800 கோடி ரூபாய் என்பது போன்ற ஏகப்பட்ட வாட்ஸ் அப் ஃபார்வேர்ட்டுகள், எஸ்.எம்.எஸ்களைப் பார்த்திருப்பீர்கள்.

அதே நேரத்தில், செல்வத்தை அழிக்கும் பங்குகளும் இருப்பதை முதலீட்டாளர்கள் மறந்துவிடக் கூடாது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்கின் விலை 2008-ல் சுமார் 275 ரூபாயாக இருந்தது. இது இன்றைக்கு 14 ரூபாய். ரிலையன்ஸ் பவர் பங்கின் விலை 2008-ல் ரூ.800. இன்றைக்கு அதன் மதிப்பு ரூ.3.

யெஸ் பேங்க் பங்கின் விலை 2008-ல் கிட்டத்தட்ட 400 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு ரூ.15-க்கு வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

சுஸ்லான் பங்கின் விலை 435 ரூபாயிலிருந்து இறங்கி இன்றைக்கு சுமார் ரூ.10-க்கு வர்த்தகமாகிறது.

இது போன்ற நம் செல்வத்தை அழிக்கும் பங்குகள் பங்குச் சந்தையில் நிறையவே உள்ளன. எனவே, எந்த ஒரு பங்கிலும் நம் கையில் உள்ள அத்தனை பணத்தையும் மொத்தமாக முதலீடு செய்துவிடக் கூடாது. 5, 6 துறைகளைச் சேர்ந்த 10, 12 பங்குகளில் முதலீடு செய்வது ரிஸ்க்கைக் குறைக்கவும் லாபத்தை நிலைநிறுத்தவும் உதவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism