Published:Updated:

பங்கு சார்ந்த முதலீடுகளில் ஜெயிக்க வைக்கும் 3 நடத்தைகள்..!

பங்கு சார்ந்த முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
பங்கு சார்ந்த முதலீடு

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 6

முதலீடு என்று வரும்போது நாம் ஒரு போதும் பகுத்தறிவுடன் ஆராய்ந்து பார்த்து அல்லது தர்க்கரீதியாக (Rational or Logical) செயல்பட மாட்டோம். முதலீடு என்று வரும்போது நீங்கள் நீங்களே அல்ல; நீங்கள் நிறையவே உணர்ச்சி வசப்படுவீர்கள். ஆனால், பங்குச் சந்தையில் உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் முடிவுகள் அனைத்துமே தவறாகச் செல்லவே நிறைய வாய்ப்பு உண்டு.

பங்குச் சந்தையில் நல்ல லாபம் பார்ப்பதற்கு மூன்று முக்கியமான நடத்தைகளை (Behavior) நாம் பெற்றிருக்க வேண்டும். அந்த மூன்று நடத்தைகள் என்னென்ன?

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

1. பொறுமை

‘‘நீங்கள் முதலீடு செய்துள்ள நிறுவனப் பங்கு விலை 50% வரை சரிவைக் கண்டாலும் பீதி அடையாமல் இருக்கும் தகுதி இருந்தால் மட்டுமே நீங்கள் பங்குச் சந்தை முதலீட்டுக்கு தகுதியானவர்’’ என உலகின் முன்னணி பெரும் முதலீட்டாளர் வாரன் பஃபெட் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது.

கரடிகள் (இறக்கங்கள்), காளைகளை (ஏற்றங்கள்) கிழித்துத் தொங்கவிடும்போது, பங்கு சந்தையில் கவலையின் ரேகைகள் பளிச்செனப் படர ஆரம்பிக்கும். ‘அனைவரிட மும் பங்குச் சந்தை டிப்ஸ்கள் நிறைய இருக்கும் மற்றும் மல்ட்டிபேக்கர் யோசனைகள் நிறைய இருந்தால், அது பங்குச் சந்தை இறக்கத்துக் கான (Correction) தெளிவான அறிகுறி மற்றும் எச்சரிக்கை’ என்பது நிபுணர்கள் சொல்லும் வார்த்தைகள்.

சரிவுகள் (Downtrends) என்பது பங்குச் சந்தை யில் மீண்டும் மீண்டும் நிகழும் ஒரு நிகழ்ச்சி ஆகும். ஆனால், வீழ்ச்சிக்கான காரணங்கள் எப்போதும் வித்தியாசமாக வேறு வேறாகவே இருக்கும்.

1992–ம் ஆண்டில் பங்குச் சந்தை முதலீட் டாளர் மற்றும் வர்த்தகர் ஹர்ஷத் மேத்தாவின் மோசடிகளால் இந்தியப் பங்குச் சந்தை 51% வீழ்ச்சியைச் சந்தித்தது. 2008–ம் ஆண்டில் உலக அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, இரண்டாவது முறையாக இந்தியப் பங்குச் சந்தை மிக அதிகமாக 59% வீழ்ச்சியைச் சந்தித்தது. இப்போது அண்மையில் 2020 மார்ச் மாதத்தில் கோவிட் 19 வைரஸ் பரவ லால் மீண்டும் இந்தியப் பங்குச் சந்தை சுமார் 40% வீழ்ச்சியைக் கண்டது.

பங்குச் சந்தைகள் பல்வேறு காரணங்களுக் காக அடிக்கடி வீழ்ச்சி அடைவதை நீங்கள் பார்க்க முடியும். போர்கள் முதல் ஊழல்கள் வரை, அரசியல் ஸ்திரமின்மை, வங்கி நெருக்கடி கள், அரசாங்கக் கொள்கை முடிவுகள் மற்றும் ஆரோக்கிய பாதிப்புகள் போன்ற பல்வேறு காரணிகளால் பங்குச் சந்தைகள் பாதிக்கப் படுகின்றன.

பொறுமை மற்றும் ஒழுக்கம் (discipline) அனைத்து பங்குச் சந்தை முதலீட்டாளர் களுக்கும் வர்த்தகர்களுக்கும் பயனளிக்கும் ஒரு நல்லொழுக்கம் ஆகும். இவை உணர்ச்சிகள் மற்றும் தன்னிச்சையான முடிவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

பங்கு சார்ந்த முதலீடுகளில் ஜெயிக்க வைக்கும் 3 நடத்தைகள்..!

2. பங்குச் சந்தை பற்றிய தெளிவான அறிவு

பங்குச் சந்தையானது திடீரென பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும்போது பெரும்பாலான முதலீட்டாளர்கள் பீதியுடனும் பதற்றத்துடனும் காணப்படுவார்கள். அப்போது, நல்ல முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களாக இருப்பவர்கள் குறுகிய காலத்தில் மற்றும் எதிர்காலத்தில் சந்தையின் போக்கும் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும்.

பங்குச் சந்தையின் சரிவு என்பது பொருளா தாரக் கட்டமைப்பில் (Structural) ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஏற்பட்டதா அல்லது நெகட்டிவ் சென்டிமென்ட் காரணமாக ஏற்பட்டதா என்பதை அறிய வேன்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு வலுவாக இருக்கும் என்கிற தெளிவான பார்வை உங்களுக்கு இருந்தால், அது மல்ட்டி பேக்கர் பங்கு வாங்கும் வாய்ப்பாக இருக்கும். பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் கணிசமான வருமானத்தை ஈட்ட முடியும் என்பது உண்மைதான். ஆனால், அதன் நிச்சயமற்ற தன்மையை அறியாமல் கண்மூடித்தனமாக முதலீடு செய்தால், உங்கள் மூலதனத்தைக்கூட இழக்க நேரிடும்.

“உங்களுக்கு நீச்சல் அடிப்பதின் அடிப்படைகள் தெரியா விட்டால் ஆழமான நீரில் நீந்தாதீர்கள்” என்பது அனுபவ பூர்வமான வழிகாட்டல். இது பங்குச் சந்தைக்கும் பொருந்தும்.

பங்குச் சந்தையின் அடிப்படை விஷயங்கள் உங்களுக்கு புரியவில்லை எனில், உங்கள் பணத்தை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பதே சரியான முடிவாக இருக்கும்.

பங்குச் சந்தை என்கிற முதலீட்டுக் களத்தை நன்கு அறிந்துகொள்வது அறிவார்ந்த முடிவுகளை எடுக்க உதவும். இது நீண்ட காலத்துக்கு உங்களுக்குப் பயனளிக்கும். எனவே, பங்குச் சந்தையின் அடிப்படை அறிவைப் பெற்ற பின்னரே முதலீடு செய்வது முக்கியம். முதலீடு செய்வதற்கு முன் உங்களை அதற்குத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு நீங்கள் பங்குச் சந்தை குறித்த புத்தகங்களைப் படிக்கலாம்; யூடியூப் வீடியோக்களைப் பார்க்கலாம்; பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம். பங்குகளை வாங்கி முதலீடு செய்வதைவிட, முதலில் நீங்கள் உங்களை முதலீடு செய்வது மிக முக்கியம். வாரன் பஃபெட்கூட, ‘‘முதலில் உங்களை முதலீடு செய்வதே வெற்றியைக் கண்டறிவதற்கான சிறந்த வழியாகும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

3. தைரியம், துணிச்சல்

தைரியமானவர்கள் மற்றும் துணிச்சலானவர்களை அதிர்ஷ்டம் ஆதரிக்கிறது. இது வாழ்க்கையிலும் முதலீட்டிலும் நூறு சதவிகிதம் உண்மையாகும்.

நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் கிடைக்கும் முதலீட்டு வருமானம் நிலையற்றதாக இருக்கும். சில வருடங்களின் வருமானம் சிறப்பாக இருக்கும். சில வருடங்களில் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கும்; அந்த சமயத்தில், வருமானம் என்பது சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. அந்த ஆண்டுகளில், ‘ஏன்தான் முதலீடு செய்தோமோ...’ என எல்லா முதலீட்டாளர்களும் வருத்தப்படுவார்கள். இப்படி வருத்தப்படுவது, பெரிய முதலீட்டுத் தவறாகும்.

ஏற்ற இறக்கம் என்பது பங்குச் சந்தைகளின் இயல்பான நிகழ்வு ஆகும். கடந்த இருநூறு வருடங் களாக இப்படித்தான் நடந்து வருகிறது.

சில நேரங்களில் நம் வாழ்க்கை சவால் நிறைந்ததாக இருக்கும். அது மாதிரியான நேரத்தில், நாம் துணிச்சலுடன் எடுக்கும் சவாலான முடிவுகளே நம்மை ஜெயிக்க வைக்கும். முதலீடும் ஏறக்குறைய அப்படிப்பட்டதே.

முதலீட்டில் ரிஸ்க் மற்றும் வருமானத்தின் நிலையற்ற தன்மையைக் குறைக்க பல வழிகள் உள்ளன. தொடர்ச்சி யான முதலீட்டு முறையான பரிமாற்றத் திட்டம் (Systematic Transfer Plan), நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தல் மற்றும் சொத்து ஒதுக்கீடு (Asset Allocation)ஆகிய வற்றின்மூலம் முதலீட்டில் ரிஸ்க்கை வெகுவாகக் குறைக்க முடியும். இப்படிச் செய்யும் போது உங்களின் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் நீண்ட காலத்தில் பெருகி உங்களை நிச்சயம் கோடீஸ்வரர் ஆக்கும்.

(கோடீஸ்வரர் ஆவோம்)