Published:Updated:

உங்களைக் கோடீஸ்வரர் ஆக்கும் நல்ல கடன், கெட்ட கடன் ஃபார்முலா!

மிடில் கிளாஸ் டு மில்லியனர்
பிரீமியம் ஸ்டோரி
மிடில் கிளாஸ் டு மில்லியனர்

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 9

உங்களைக் கோடீஸ்வரர் ஆக்கும் நல்ல கடன், கெட்ட கடன் ஃபார்முலா!

மிடில் கிளாஸ் டு மில்லியனர் - 9

Published:Updated:
மிடில் கிளாஸ் டு மில்லியனர்
பிரீமியம் ஸ்டோரி
மிடில் கிளாஸ் டு மில்லியனர்

நம் அனைவருக்கும் குறைந்தது தினசரி ஐந்து போன் அழைப்புகளாவது கடன் வேண்டுமா எனக் கேட்டு வரும். கூடவே மெயில்கள், எஸ்.எம்.எஸ்களும் குறைந்த கவர்ச்சிகரமான வட்டியில் கடன் தருவதாக வரும். நீங்கள் ‘உம்’ என்று சொல்லிவிட்டால் போதும், சுலப பரிசீலனை, பான் எண் அடிப்படை யில் 10, 15 நிமிடங்களில் உங்கள் வங்கிக் கணக்கில் தனிநபர் கடனை வரவு வைத்துவிடுகிறார்கள்.

ஒரு புள்ளிவிவரப்படி, 25 முதல் 32 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்தாம் இப்படி உடனடிக் கடன்களை வாங்கி, கஷ்டப்பட்டு வருகிறார்கள். இவர்கள் கிரெடிட் கார்டில் அவர்களின் அதிகபட்ச வரம்பு எதுவோ (ரூ.50,000 அல்லது ரூ.1 லட்சம்) அதை முழுமையாகப் பயன் படுத்திவிட்டு, இது போன்ற தனிநபர் கடன்களை வாங்கத் தொடங்கி விடுகிறார்கள். இப்படிக் கடன் வாங்கு பவர்களில் பலர் கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடனுக்கு வட்டியை மட்டுமே கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், எது நல்ல கடன், எது கெட்ட கடன் என்பது புரியாமல் இருப்பதாகும். நல்ல கடன், கெட்ட கடன் நம்மிடையே இருக்கின்றன. நல்ல கடன் என்பது ஒருவரின் பணத்தைப் பல மடங்கு பெருக்கும். உதாரணமாக, தொழில் கடன் 10% - 12% வட்டிக்குக் கிடைக்கிறது. இந்தக் கடனை வாங்கி தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது மூலம் 20% - 25% வருமானம் ஈட்டலாம். மேலும், நல்ல கல்வி கற்க வாங்கப் படும் கல்விக் கடன் மற்றும் அத்தியாவசியத் தேவைக்கு வாங்கப்படும் வீட்டுக் கடன் நல்ல கடன் பட்டியலில் இருக்கின்றன.

வாழ்க்கை முறை கேட்ஜெட்டுகளை (lifestyle gadgets) கடனில் வாங்குவது, கெட்ட கடன் பட்டியலில் இருக்கிறது. கிரெடிட் கார்டு மூலம் பொருள்களை வாங்குவதும் கெட்ட கடனின் கீழ்தான் வருகிறது. இப்படி வாங்குவது தேய்மான சொத்தாக இருப்பதால், பணத்தைக் கரைப்பதாகவும் செல்வம் சேர்வதைத் தடுப்பதாகவும் இருக்கிறது.

பெரும்பாலும் உண்மை யான பணக்காரர்கள் வாழ்க்கை முறை கேட்ஜெட் களான ஸ்மார்ட் போன், லேப்டாப் மற்றும் தேய்மானப் பொருள் களைக் கடனில் வாங்குவதில்லை. பெரும் பணக்காரர்கள் கார் வாங்குவதாக இருந்தாலும் சொந்தப் பணத்தில்தான் கார் வாங்குகிறார்கள்.

கடன் வாங்குவதில் கீழ்க்காணும் 7 தங்க விதிமுறைகளைப் பின்பற்றினால் செல்வம் சேர்வது, கோடீஸ்வரர் ஆவது உறுதியாகும்.

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

1.வாழ்க்கை முறை தேவைக்காகக் கடன் வாங்காதீர்கள்

நவீன காலத்தில் வாழ்க்கை முறை (Lifestyle) தேவைக்கு அதாவது, அதிநவீன ஸ்மார்ட் போன் கடன் மூலம் வாங்கப்படுவது மிகப் பெரிய தவறாகும். இதற்கு முக்கியமான காரணம், தேவை (Need) எது? விரும்பம் (Want) எது எனப் பலருக்குத் தெரியாமல் இருப்பதாகும். பேசுவதற்கு, வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் பார்க்க ஒரு மொபைல் போன் வேண்டும். அது தேவையாகும். லட்சக்கணக்கான விலையுள்ள ஆடம்பரமான ஸ்மார்ட் போன் வேண்டும் என்பது விருப்பம் ஆகும். மொபைல் போன் தேவைக்கு வாங்க வேண்டுமெனில், ரூ.15,000, ரூ.20,000-க்கு ஒரு நல்ல போன் வாங்க நினைத்துக் கடைக்குச் செல்வார்கள். கடைக்காரரோ, ‘‘இது புதுசா வந்திருக்கிற மாடல் சார். வெறும் 6,000 ரூபா கட்டினா போதும்’’ என்று ஆசை காட்டுவார். ஆக, 20,000 ரூபாய் போனை வாங்கப் போய், 60,000 ரூபாய் போனை வாங்கி வருவீர்கள். புது போன் உங்களை 40,000 ரூபாய்க்குக் கடனாளி ஆக்கியிருக்கும். தேவைக்கும் விருப்பத்துக்கும் இடையேயான வித்தியாசத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால், இந்தக் கடன் சிக்கலில் மாட்டத் தேவையில்லை.

2. கடனைத் திரும்பக் கட்டும் காலம் குறைவாக இருக்கட்டும்

வீட்டுக் கடன் வாங்கினாலும், கார் கடன் வாங்கினாலும் எவ்வளவு அதிக காலம் கட்ட முடியுமோ, அந்த அளவுக்குக் குறைவான மாதத் தவணைக்குச் செல்கிறோம். எந்த அளவுக்கு கடனைக் கட்டும் காலம் அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிகமாக வட்டி கட்ட வேண்டியிருக்கும்.இதற்குமுன் எல்லாம் வீட்டுக் கடனை அடைக்கும் காலம் 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் என இருந்தது. இப்போது 25 ஆண்டுகள், 30 ஆண்டுகள் என நீண்டுகொண்டே போகிறது. கடன்கள் எத்தனை ஆண்டுகள் தள்ளிக் கட்டப்படுகிறதோ, அந்த அளவுக்கு வங்கிகள், வீட்டுவசதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்களுக்குக் கூடுதல் வட்டி லாபமாகும். முடிந்த வரையில் ஆரம்ப ஆண்டுகளில் மாதத் தவணை தவிர, கூடுதல் தொகையைக் கட்டி அசலைக் குறைக்கப் பாருங்கள். அப்படிச் செய்யும்போது வட்டிக்குச் செல்லும் தொகை வெகுவாகக் குறையும்.

உங்களைக் கோடீஸ்வரர் ஆக்கும்
நல்ல கடன், கெட்ட கடன் ஃபார்முலா!

3. கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள்

பல முதலீட்டாளர்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி, ‘‘நான் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும்; மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், இப்போது என்னிடம் பணம் இல்லை. நான் கடன் வாங்கி முதலீடு செய்யலாமா?’’ அவர்கள் இப்படிக் கேட்கக் காரணம், நிறைய பங்குச் சந்தை நிபுணர்கள் மற்றும் பங்குச் சந்தை புரோக்கர்கள், பங்கு முதலீட்டில் 50% வருமானம், 100% வருமானம் கிடைக்கும் என்று நினைப்பதே. கடன் வாங்கி முதலீடு செய்யும் தவற்றை மட்டும் எப்போதும் செய்யாதீர்கள். எப்போதுமே உங்களின் உபரி நிதியிலிருந்துதான் முதலீடு செய்ய வேண்டும். அதுவும் அதிக ரிஸ்க்கான பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் (நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்) முதலீடு செய்யும்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஒரு பக்கம் கடனுக்கு வட்டி கட்ட வேண்டும், மறுபக்கம் சந்தை சரிந்து முதலீட்டின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவிட்டால், இரட்டை இழப்பை ஒரே நேரத்தில் சந்திக்க வேண்டிவரும். ஒரு முதலீட்டின் மூலம் எவ்வளவு வருமானம் வருவதாக ஒருவர் சொன்னாலும் எந்தக் காரணம் கொண்டும் கடன் வாங்கி முதலீடு செய்யாதீர் கள். கடனுக்கு ஏற்பாடு செய்கி றோம் என்று சொன்னாலும் ஒப்புக் கொள்ளாதீர்கள்.

4.கடனுக்கு இணையான தொகைக்கு டேர்ம் ஆயுள் இன்ஷூரன்ஸ் கவரேஜ்

எப்போது எந்தக் கடன் வாங்கினாலும், அந்தக் கடன் தொகைக்கு இணையாக ஒரு டேர்ம் பிளான் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பாலிசியில் பிரீமியம் மிகக் குறைவாக இருக்கும்; ஆனால், கவரேஜ் மிக அதிகமாக இருக்கும். இன்றைக்கு வாழ்க்கை என்பது நிலையற்றதாக இருக் கிறது. கடன் வாங்கியவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு கடனைக் கட்ட முடியாமல் போனால், இந்த டேர்ம் பிளான் கைகொடுக்கும். கடன் சுமை குடும்பத்தின் மீது விழாது.

5. கடனுக்கான வட்டி விவரம் தெரிந்திருக்க வேண்டும்

வீட்டுக் கடனை 5, 10 ஆண்டு களுக்கு முன் வாங்கியிருப்போம்; மாதம்தோறும் தவணையைக் கட்டிக் கொண்டிருப்போம். கடன் வாங்கியபோது என்ன வட்டி, இப்போது என்ன வட்டி எனக் கேட்டால் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.

வீட்டுக் கடன் வாங்கும்போது வட்டி விகிதம் 10 சதவிகிதமாக இருக்கும். இன்றைக்கு வீட்டுக் கடன் சந்தையில் வீட்டுக் கடன் வட்டி சுமார் 6.75% அளவுக்கு இறங்கியிருக்கிறது. முன்னர் வாங்கிய கடனுக்கு 10% அல்லது அதைவிட அதிக வட்டி கட்டிக்கொண்டிருக்கலாம். ஒருமுறை கட்டணம் செலுத்தி கடனுக்கான வட்டியை வெகுவாகக் குறைக்க முடியும். அப்படி இல்லைய்யெனில், வேறு வட்டி குறைவாக வழங்கும் வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்துக்குக் கடனை மாற்றுவது மூலம் வட்டிக்குச் செல்லும் தொகையை வெகுவாகக் குறைக்க முடியும். நம்மில் பலர் ஒரு முறை கடன் வாங்கிவிட்டால், இப்போது என்ன வட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம் எனக் கவனிப்பதில்லை. அது பெரிய தவறாகும்.

6. இரண்டாவது வீடு வாங்குவதைத் தவிர்க்கவும்

இரண்டாவது வீட்டை சொந்தப் பணம் போட்டோ, வீட்டுக் கடன் மூலமோ வாங்குவதைத் தவிர்க்கவும். காரணம், வீட்டின் சொத்து மதிப்பில் வாடகையாகக் கிடைக்கும் தொகை சுமார் 3% அளவுக்கு இருப்பது முதல் காரணம். அடுத்த முக்கியமான காரணம், முன்பு போல் ரியல் எஸ்டேட் மதிப்பு அதிகமாக உயரும் சூழல் இல்லை. 2008 முதல் 2022 வரைக்கும் ரியல் எஸ்டேட் விலை பெரிதாக உயரவில்லை. வீட்டுக்கு மேற்கொள்ளும் பராமரிப்புக் கட்டண அளவுக்குக்கூட விலை உயர்வு நடக்கவில்லை. முதல் வீடு என்பது குடியிருக்க என்கிறபோது, அதை வாங்குவது உணர்வுபூர்வமான முடிவாகும். இரண்டாவது வீட்டை வாங்கி வாடகைக்கு விடப் போகிறீர்கள். அதை நிதித் திட்டமிடல் கோணத்தில் தான் பார்க்க வேண்டும். எந்த அளவுக்கு வாடகை வருமானம் வரும், எந்த அளவுக்கு அதன் மதிப்பு உயரும், அவசரத் தேவைக்கு விரைந்து பணமாக்கக் கூடிய நிலை இருக்கிறதா என்பது போன்ற பல்வேறு காரணிகளை அலசி ஆராய்ந்து தேவைப்பட்டால் நல்ல நிதி ஆலோசகர் ஒருவரிடம் ஆலோசனைக் கேட்டு, அதன்பிறகு முடிவெடுப்பது நல்லது.

7. கடன் நிபந்தனைகளைக் கட்டாயம் கவனியுங்கள்

கடன் வாங்கும்போது வங்கி அல்லது நிதி நிறுவனம் நீட்டும் இடத்தில் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போடாதீர்கள். 15, 20 பக்கங்களில் பக்கத்துக்குப் பக்கம் கையெழுத்து வாங்குவார்கள். அனைத்துப் பக்கங்களையும் அனைவராலும் படிக்க முடியாதுதான். குறைந்தபட்சம் முதல் சில பக்கங்களையாவது படியுங்கள். அவற்றில்தான் முன்கூட்டியே கடனைக் கட்டினால் அபராதம் இருக்கிறதா, ஓராண்டில் எத்தனை தவணையை அபராதம் இல்லாமல் கூடுதலாகக் கட்டலாம், முதல் இரண்டு ஆண்டுகளில் கடனை அதிகரித்துக் கட்ட முடியாது; கடனை முடிக்க முடியாது என்பது போன்ற முக்கிய விவரங்கள் இருக்கும்.

மேலே கூறப்பட்ட ஏழு தங்க விதிமுறைகளைப் பின்பற்றி கடன் வாங்கும்போது, உங்களுக்குக் கடன் தவணை போக, அதிக உபரி நிதி கிடைக்கும். அதை முதலீடு செய்வது மூலம் விரைவிலேயே செல்வம் சேர்வதோடு கோடீஸ்வரர் ஆகவும் முடியும். அடுத்த இதழில் முதலீட்டுக்கும் ஊக வணிகத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்ப்போம்.

(கோடீஸ்வரர் ஆவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism