நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

நாமக்கல், ஈரோடு... உற்சாகமாகத் திரண்டு வந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள்!

விழிப்புணர்வு கூட்டம்...
பிரீமியம் ஸ்டோரி
News
விழிப்புணர்வு கூட்டம்...

விழிப்புணர்வு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்புணர்வு தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் வேகமாக உருவாகி வருகிறது என்பதை எடுத்து சொல்கிற மாதிரி இருந்தது, சமீபத்தில் நாமக்கல் மற்றும் ஈரோடு நகரங்களில் நடந்த மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வு கூட்டங்கள்.

நாணயம் விகடனும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவன மும் இணைந்து கடந்த 6-ம் தேதி மாலை நாமக்கல்லிலும், 7-ம் தேதி மாலை ஈரோட்டிலும் ‘மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தை உருவாக்குதல்’ என்ற நிகழ்ச்சியை நடத்தின. இந்த இரண்டு கூட்டங்களிலும் முதலீட்டாளர்கள் திரண்டு வந்து அரங்கை நிரப்பினர்.

இந்த நிகழ்ச்சி நடந்த இரு நகரங்களிலும் முதலில் பேசினார் ஆதித்ய பிர்லா சன் லைஃப் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்விப் பிரிவின் தலைவர் எஸ். குருராஜ். அவர் பேசும்முன், நிகழ்ச்சிக்கு வந்திருந்த முதலீட்டாளர்கள் முதலில் என்னென்ன விஷயங்களை அவசியம் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்பதை கேட்டுத் தெரிந்துகொண்டு பிறகு பேசத் தொடங்கினார்.

நாமக்கல், ஈரோடு... உற்சாகமாகத் திரண்டு வந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள்!

“முதலீடு செய்வதால் மட்டுமே நம்முடைய இலக்கு களை அடைய முடியும். குறிப்பிட்ட ஒன்றில் முதலீடு செய்யும்முன் அதிலுள்ள ரிஸ்க்குகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நம் இலக்குகளுக்கு நீண்ட காலம் இருந்தால் மட்டுமே பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். குறுகிய காலம் மட்டுமே கொண்டிருப்ப வர்கள் மூலதனத்துக்குப் பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்வதுதான் சரி.

நாம் எதில் முதலீடு செய் தாலும், அந்த முதலீட்டைத் திரும்ப எடுக்க வேண்டும் எனில், எளிதில் எடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். முதலீட்டைத் திரும்பப் பெற்ற பிறகு, மிகக் குறைந்த அளவு வரி கட்டுகிற மாதிரி இருக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் எதில் முதலீடு செய் தாலும், அதை நம் குடும்ப குடும்ப உறுப்பினர்களுக்குக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். நம் அவசரத் தேவைகளுக்கென குறிப் பிட்ட அளவு தொகையைக் கையில் வைத்துக்கொண்டு, அதன் பிறகு முதலீடு செய்யத் தொடங்குவது நல்லது’’ என்று கூறினார்.

அடுத்து பேசிய நிதி நிபுணரான வ.நாகப்பன், இந்தியப் பங்குச் சந்தையின் போக்கு இனி எப்படி இருக்க வாய்ப்புண்டு என்பது பற்றி விளக்கமாகச் சொன்னார். இந்தியப் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சி கண்டுவருவதற்கு உதாரணங்களாக யு.பி.ஐ மூலம் பணப் பரிமாற்றம் அதிக அளவில் நிகழ்ந்து வருவதையும், இதன் காரணமாக அரசின் வருமானம் கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதையும் புள்ளிவிவரமாக அவர் எடுத்துச் சொன்னார். அதே போல, இந்தியப் பங்குச் சந்தை யின் பி.இ விகிதங்கள் குறைவாகவோ, அதிகமாகவோ இல்லாமல் நடுத்தரமாக இருப்பது முதலீடு செய்வதற்கான வாய்ப்பு என அவர் சுட்டிக் காட்டினார்.

நாமக்கல், ஈரோடு... உற்சாகமாகத் திரண்டு வந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள்!

இந்த இரு நகரங்களிலுமே கூட்டத்துக்கு வந்திருந்த முதலீட்டாளர்கள் தங்களுக்குள்ள கேள்விகளை நிபுணர்களிடம் ஆர்வமாகக் கேட்டு பதில் பெற்றார்கள். ஆதித்ய பிர்லா நிறுவனத்தின் தமிழகப் பிரிவின் தலைவர் க.சுவாமி நாதன் முதலீட்டாளர்களின் கேள்விகளைத் தொகுத்துத் தந்தார். முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று ஒரு வாசகர் கேட்டதற்கு, ‘‘ஒரு இலக்கைத் தேர்வு செய்து அதற்கான பணத்தை சேமித்து வையுங்கள். சேமித்து வைத்த பணத்தை சரியான திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். இந்த நிதி மேலாண்மைதான் நம்மை உயர்த்தும் சரியான வழி’’ என்றார் குருராஜ். ‘‘கடன் வாங்கி பங்குச் சந்தை மற்றும் இதர முதலீடுகளில் முதலீடு செய்யாதீர்கள். உங்களிடம் உள்ள பணம் அனைத்தையும் பங்குச் சந்தை / ஃபண்ட் என ஒரே பிரிவில் மட்டும் முதலீடு செய்யாமல், பல முதலீட்டுப் பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்வது அவசியம்’’ என்றார் நாகப்பன்.

இந்த நிகழ்ச்சிக்குக் குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்தார்கள் சில முதலீட்டாளர்கள். ‘‘ஆண்டுக்கு ஒரு முறையாவது எங்கள் ஊரில் கூட்டம் நடத்துங்கள்’’ என்று வேண்டுகோள் விடுத்தபடி, மகிழ்ச்சியுடன் கிளம்பிச் சென்றார்கள் வாசகர்கள்!