சில வருடங்களுக்கு முன்பு வரை பல முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வெங்காயம் கிலோ 10 ரூபாய் என விற்பதுபோல, ஹைபிரிட் டிவிடெண்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விற்றன. அதை ஒரு பெரிய மார்க்கெட்டிங் டூலாக எடுத்துக்கொண்டு, பல முன்னணி வங்கிகளும் இந்த வகையான டிவிடெண்ட் திட்டங்களை விற்றன. இவை அனைத்தும் தவறாக (mis-selling) விற்கப்பட்டது என்பதை முதலீட்டாளர்கள் சந்தை இறக்கம் கண்டபோதுதான் புரிந்து கொண்டார்கள்.

முன்பு, இந்த டிவிடெண்டுகளுக்கு வரி இல்லாமல் இருந்தது, மேற்கண்ட நிறுவனங்களுக்கு இன்னும் வசதியாக இருந்தது. கணிசமாக டிவிடெண்ட் வழங்கிய சில திட்டங்களில் பணம் ஆயிரக்கணக்கான கோடி முதலீடு குவிந்தது. நிதி அமைச்சகம் சும்மா இருக்குமா? 2018-ல் டி.டி.டி (DDT–Dividend Distribution Tax) பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு (ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்டுகள் உட்பட) அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு 2020-ல் மியூச்சுவல் ஃபண்டுகள் வழங்கும் டிவிடெண்டுக்கு, முதலீட் டாளர்களுக்கு வரி விதிக்கப்படும் என அறிவிக்கப் பட்டது. அப்போதே இந்த வகையான திட்டங்களின் கவர்ச்சி வெகுவாகக் குறைய ஆரம்பித்துவிட்டது.
செபி அக்டோபர் 05, 2020-ல் வெளியிட்ட சுற்றறிக்கை, ஏப்ரல் 01, 2021-லிருந்து நடைமுறைக்கு வருகிறது. இது சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சுற்றறிக்கை யில் என்ன சொல்லப்பட்டிருந்தது?
இதுவரை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் டிவிடெண்டை சிம்பிளாக வழங்கிவந்தன. ஆனால், இந்த டிவிடெண்டுக்கு இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று, முதலீடு; மற்றொன்று, அந்த முதலீட்டால் கிடைத்த வருமானம். உதாரணத்துக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.10 டிவிடெண்ட் கிடைக்கிறது என்றால், இதில் ரூ.5 அசலாக இருக்கலாம், மீதிமுள்ள தொகை முதலீட்டால் வந்த லாபமாக இருக்கலாம். முன்பெல்லாம் ஒரே லைனில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ரூ.10 டிவிடெண்ட் தரப்பட்டது என்று கணக்கு எழுதி விடுவார்கள். இந்த ஏப்ரல் 1-லிருந்து இதைத் தனித்தனியாகப் பிரித்துக் காட்ட வேண்டும். அதாவது, இன்கம் டிஸ்ட்ரிபியூஷன் (Income distribution) எனவும், கேப்பிடல் டிஸ்ட்ரி பியூஷன் (capital distribution) எனவும் பிரித்துக் காண்பிக்க வேண்டும். இது ஆப்ரேஷன் அளவில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு பெரிய பாரமாக அமைந்துள்ளது. ஆகவே, பல ஃபண்ட் நிறுவனங்கள் இந்த ஆண்டு டிவிடெண்ட் வழங்குவது சந்தேகமே எனத் தோன்றுகிறது.

மேலும், வழங்கும் டிவிடெண்டு களுக்கு, டி.டி.எஸ் (TDS – Tax Deduction at Source) பிடித்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது டி.டி.எஸ் வருமானத்துக்கு மட்டும் பிடித்தால் போதுமா அல்லது முழுத்தொகைக்கும் பிடிக்க வேண்டுமா என்பதிலும் குழப்பம் உள்ளது. இந்தப் பிரச்னை களை எல்லாம் பார்க்கும்போது, எஸ்.டபிள்யூ.பி (SWP – Systematic Withdrawal Plan) தான் பெஸ்ட் எனத் தோன்று கிறது. ரெகுலர் வருமானம் பெற விரும்புபவர்களுக்கு, இது ஒரு நல்ல ஆப்ஷன். டாக்ஸ் எஃபீஷியன்ட் ஆகவும் இருக்கும். ஏனென்றால், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் கிடைக்கும் லாபத்தில் ரூ.1 லட்சம் வரை ஆண்டுக்கு ஒவ்வொருவருக்கும் வரி கிடையாது. மேலும், அதற்குமேல் வரும் லாபத்துக்கு (ஓராண்டுக்கு மேல்) 10 சதவிகிதம்தான் வரி.
ஆகவே, புதிதாக மியூச்சுவல் ஃபண்டுகளில் நுழையும் முதலீட் டாளர்கள், குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்வதே சிறந்தது. ஏற்கெனவே டிவிடெண்ட் ஆப்ஷ னில் இருக்கும் முதலீட்டாளர்கள், அதிலிருந்து வெளியேறி நன்றாகச் செயல்பட்டு வரும் திட்டங்களில் குரோத் ஆப்ஷனில் முதலீடு செய்து கொள்வது சிறந்ததாக அமையும். அவ்வப்போது பணம் தேவையெனில், எஸ்.டபிள்யூ.பி மூலம் ஒரு கன்சர் வேட்டிவ்வான தொகையைக் கணக்கிட்டு எடுத்துக்கொள்வதுதான் நல்லது!