நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

சரியும் சந்தை... குறையும் வருமானம்... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலீடு...
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு...

கொரோனா 2-ம் அலை... - C O V E R S T O R Y

மகாராஷ்டிரா, டெல்லி போன்ற இடங்களில் கொரோனா இரண்டாம் அலையையொட்டி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களும் சில கட்டுப்பாடுகளை அறிவித் துள்ளன. இந்த இரண்டாவது அலையின் தாக்கம் மனித குலத்தின் மீது அதிகமாக உள்ளது. இந்தத் தாக்கத்தால் நம் பொருளாதாரம் நலிவடையும். பொருளாதாரம் நலிவடையும்போது, பங்குச் சந்தைப் புள்ளிகளும் குறைய வாய்ப்புள்ளது. சொல்லப்போனால், ஏற்கெனவே நிஃப்டி 50 தனது உச்சத்திலிருந்து (15,315), 6% வரை குறைந்து, மீண்டும் கொஞ்சம் உயர்ந்திருக்கிறது. நம் நாட்டில் உள்ள கொரோனாவின் நிலைமையைப் பொறுத்து இனி வரும் நாள்களில் சந்தை மேலும் இறங்கலாம். ஆகவே, இந்த ஒரு நிச்சயமற்ற நிலைமையை முதலீட் டாளர்கள் குறிப்பாக, புதிய முதலீட் டாளர்கள் எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.

சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், 
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.
prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www. prakala.com)

காரணம், சென்ற வருடத்தில் கொரோனா பற்றி அதிகமாகப் புரிந்து கொள்ளல் ஏதும் இல்லாமலே நாம் அந்தப் பேரிடரைச் சந்தித்தோம். அப்போது சந்தை 38 சதவிகிதத்துக்கும் அதிகமாகக் கடகடவென சரிந்து, மீண்டும் உயர்ந்தது. ஆனால், இப்போது இறங்கத் தொடங்கியிருக்கும் பங்குச் சந்தை புள்ளிகள் இன்னும் எந்த அளவுக்கு இறங்கும், கடந்த ஆண்டைப் போலவே சந்தை மீண்டும் விறுவிறுவென உயர்ந்துவிடுமா, சந்தை இறக்கத்தால் இதுவரை கிடைத்த லாபத்தில் பெரும்பகுதி காணாமல் போய்விட்டது; இருக்கிற லாபம் போய்விடுமா, இந்த நிலையில் தொடர்ந்து முதலீடு செய்யலாமா எனப் பல கேள்விகளை முதலீட்டாளர்கள் கேட்டு வருகிறார்கள். அவர்களின் கேள்விகளுக்கு பதிலைக் காண்போம்.

சந்தை இறங்குமா..?

சென்ற வருடத்துடன் ஒப்பிடும்போது, இப்போது நமது அரசாங்கங்களும் நிறுவனங்களும், மக்களும் ஓரளவுக்குத் தயாராக இருக்கின்றனர். மேலும், இது போன்ற பேரிடரை ஏற்கெனவே ஒரு தடவை சந்தித்துவிட்டதால், இப்போது முன்அனுபவம் உள்ளது. மேலும், தடுப்பூசி போட ஆரம்பித்து மும்முரமாகப் பணி நடந்து வருகிறது. ஆகவே, சந்தையின் சரிவு சென்ற முறை போல மிகவும் ஆழமாக இருக்க வாய்ப்பு குறைவு என்றே தோன்றுகிறது.

ஆனாலும், சென்ற ஆண்டு சந்தைக்குள் நுழைந்தவர்களுக்கு லாபம் நன்றாக இருக்கும். ஆகவே, இந்த இரண்டாவது அலையைக் கண்டு பயப்படுபவர்கள் லாபத்தை எடுத்துச் செல்ல ஆசைப் படுவார்கள். அவ்வாறு செய்யும் போது சந்தை குறைய வாய்ப்புள்ளது.

முதலீடு...
முதலீடு...

எஸ்.ஐ.பி முதலீடு...

அவ்வாறு சந்தை குறையும் போது, முதலாவதாக பயம் கொள்பவர்கள் சந்தைக்குள் கடந்த சில மாதங்களில் நுழைந்த வர்களாகத்தான் இருக்கும். ஏனென்றால், இதுவரை லாபத்துடன் இருந்த அவர்களின் முதலீடு, நஷ்டத்தில் வர ஆரம்பிக்கும். நஷ்டத்தை முதல் முறை பார்த்ததும் கவலைப்பட ஆரம்பிப்பார்கள். முதலீட்டை நிறுத்த யோசிப்பார்கள். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரு பவர்கள், தங்களது முதலீட்டை எக்காரணம் கொண்டும் நிறுத்த வேண்டாம்.

இந்த ஏற்ற இறக்கங்களைப் பயன்படுத்திக்கொள்ளத்தான் நாம் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்கிறோம். இது போன்ற தருணங்களில் நாம் தொடர்ந்து முதலீடு செய்தால்தான், குறைவான சராசரி விலையில் அதிகமான யூனிட்டுகளை நம்மால் வாங்க முடியும். ஆகவே, காலங்காலமாக மக்கள் செய்யும் தவற்றை மீண்டும் செய்தால், இழப்பையே சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை மறக்காதீர்கள்.

குறுகிய காலத் தேவை உள்ளவர்கள்...

ஓரிரு வருடங்களில் தேவை இருந்து, தற்போது நல்ல லாபத் துடன் இருப்பவர்கள் தேவைக் கேற்ற அளவு முதலீட்டைக் கடன் சார்ந்த ஃபண்டுகளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.

சிலரின் குழந்தைகள் அடுத்த ஓரிரு வருடத்தில் கல்லூரியில் நுழையலாம். வேறு சிலருக்கு குழந்தைகளின் திருமணம் அடுத்த சில ஆண்டுகளில் வரலாம். இன்னும் வேறு சிலரோ ஓரிரு ஆண்டுகளில் பதவி ஓய்வு பெறலாம். இதுபோன்ற நிலைமை களில் இருப்பவர்கள், தேவைக் கேற்றவாறு கடன் சார்ந்த ஃபண்டுகளில் அல்லது ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீட்டை மாற்றி வைத்துக்கொள்ளலாம்.

அதே சமயத்தில் அதுபோன்ற செலவுகளைச் சமாளிக்க உங்களுக்குத் தொடர்ந்து பண வரவு இருந்துகொண்டிருந்தால், ஏற்கெனவே உள்ள முதலீட்டைத் தொடாமல் இருக்கலாம்.

ரிஸ்க்கை சற்று குறைத்துக்கொள்ள நினைப்பவர்கள்...

ஈக்விட்டி ஃபண்டுகளில் நல்ல லாபத்துடன் இருந்து தற்போது சற்று ரிஸ்க்கைக் குறைத்துக் கொள்ள சிலர் நினைப்பார்கள். அதிகமான சந்தை ஏற்ற இறக்கங்களை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. அல்லது வாழ்க்கையில் தருணங்கள் மாறியிருக்கலாம். அல்லது, இந்தக் காலகட்டத்தில் சிலருக்கு வருமானங்கள் குறைந்து இருக்கலாம். இன்னும் சிலரோ தங்களுடைய ஓய்வுக்காலத் திட்டத்தை மாற்றி, சீக்கிரமாகவே ஓய்வு பெற நினைக்கலாம்.

அதுபோன்ற அனைவரும், தங்களது முதலீட்டை பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். இந்த வகை ஃபண்டுகள் 30 - 80% வரை ஈக்விட்டியில் வைத்துக் கொள்ளும். தற்போது இந்தக் கேட்டகிரியில் உள்ள பெரும்பாலான ஃபண்டுகள், 30 – 40% வரைதான் ஈக்விட்டியில் முதலீட்டை வைத்துள்ளன. மேலும், சந்தை ஏறும்போது குறைவான ஈக்விட்டி யிலும், சந்தை இறங்கும்போது அதிகமாக ஈக்விட்டி முதலீட்டிலும் இந்த ஃபண்டுகள் வைத்துக்கொள்கின்றன. ஆகவே, இந்த வகை ஃபண்டுகளின் ரிஸ்க், 100% ஈக்விட்டி ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது, குறைவாக இருக்கும். மேலும், இவ்வகை ஃபண்டுகள் ஈக்விட்டி டாக்ஸேஷனுடன் வருவதால், ஆண்டுக்கு ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் வரையிலும் உண்டான லாபத்துக்கு வரி ஏதும் கிடையாது.

சந்தை இறங்கும்போது இந்த வகை ஃபண்டுகளின் என்.ஏ.வி-யிலும் இறக்கம் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த வீழ்ச்சி 100% ஈக்விட்டி ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைவாக இருக்கும்.

நீண்டகால நோக்கில் முதலீடு செய்துள்ளவர்கள்...

நீண்டகால முதலீட்டாளர்கள் எந்தவித செயல்பாடும் இல்லாமல் சும்மா இருக்கலாம்.‌ சந்தை இறங்கும், பிறகு ஏறும். இதுதான் சந்தையின் இயல்பு. ஆனால், நீண்டகாலத்தில் நமது சந்தை ஏறுமுகமாகத்தான் இருக்கும். மேலும், கடன் சார்ந்த முதலீடுகளின் வருவாய் குறைவாக இருப்பதால், நீண்டகால முதலீட்டாளர்கள் ஈக்விட்டி ஃபண்டுகளில் இருப்பதுதான் லாபகரமானதாக அமையும். சந்தை சரியும்போது, உங்கள் கையில் உபரியாக பணம் இருந்தால், நீண்ட காலத் தேவைகளுக்கு முதலீடு செய்துகொள்ளலாம். மொத்தமாக, பணத்தை முதலீடு செய்ய அச்சமாக இருந்தால், எஸ்.டி.பி (Systematic Transfer Plan) முறையில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

அஸெட் அலொகேஷன் செய்பவர்கள்...

தங்கம், பாண்டுகள், ஈக்விட்டி போன்றவற்றில் ஒதுக்கீடு செய்து முதலீடு செய்துள்ளவர்கள், தங்களது அஸெட் அலொகேஷன் பேட்டனுக்கு ஏற்ப முதலீட்டை அவ்வப்போது மாற்றி அமைத்துக்கொள்வது நல்லது. இந்த ஒதுக்கீடே பல பிரச்னைகளை எளிதாகத் தீர்த்துவிடும். சந்தை இறங்கும்போது உங்களின் ஈக்விட்டி சதவிகிதம் குறையும் – அப்போது நீங்கள் கடன் சார்ந்த திட்டங் களிலிருந்து, பங்கு சார்ந்த ஃபண்டு களுக்கு பணத்தை மாற்றிக் கொள்ளலாம். இந்த அஸெட் அலொகேஷன், ஒவ்வொருவரின் வயது, ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் வாழ்க்கை நிலை போன்றவற்றை வைத்து மாறுபடும்.

முதலீடு...
முதலீடு...

புதிதாக முதலீட்டுக்குள் நுழைய விரும்புபவர்கள்...

முதலீடு செய்வதற்கு எந்நேரமும் நல்ல நேரமே. ஆகவே, நீண்டகாலத் தேவைகளுக்கு முதலீடு செய்பவர்கள், எஸ்.ஐ.பி முறையில் லார்ஜ் அண்ட் மிட்கேப், ஃபிளெக்ஸிகேப், அக்ரெசிவ் ஹைபிரிட் போன்ற வகை ஃபண்டு களில் முதலீடு செய்து கொள்ளலாம். மொத்தமாக முதலீடு செய்ய நினைப் பவர்கள், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகளில் முதலீடு செய்து கொள்ளலாம். இவ்வகை ஃபண்டுகள் குறைவான ரிஸ்க்குடன், சிறப்பான வருமானத்தைத் தரவல்லது. ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது, போர்ட்ஃபோலியோ ஒரு ஸ்திரத்தன்மையை அடைவதற்கு குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது ஆகிவிடும் என்பதை நினைவில் கொண்டு உங்களின் முதலீட்டைத் தொடங்குங்கள்.

போர்ட்ஃபோலியோ ரிவ்யூ...

சந்தை சற்று மந்தமாக இருக்கும் போது, போர்ட்ஃபோலியோவை மாற்றி அமைக்க நினைப்பவர்கள், அதை தாராளமாகச் செய்யலாம். சுமாராகச் செயல்படும் ஃபண்டுகளில் இருந்து வெளியேறி, நன்றாகச் செயல்படும் ஃபண்டுகளுக்கு மாறிக் கொள்ளலாம். ஏனென்றால், சந்தை குறைவாக இருக்கும்போது லாபங் களும் சற்று குறைவாக இருக்கும். ஆகவே, செலுத்த வேண்டிய வரியும் குறைவாக இருக்கும்.

அதுபோல், சிலர் சின்னச் சின்ன முதலீடாக பல ஃபண்டுகளில் முதலீட்டை வைத்திருப்பார்கள். உதாரணத்துக்கு, ரூ.1 லட்சத்துக்கு குறைவாக முதலீடு செய்திருக்கும் ஃபண்டுகளிலிருந்து வெளியேறி, அந்தத் தொகையை மொத்தமாக ஓரிரு ஃபண்டுகளில் முதலீடு செய்து கொள்ளலாம். அதுபோல, சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நீங்கள் எதிர்பார்த்ததுபோல் வருமானம இருந்திருக்காது. அதற்கான காரணத்தை ஆராய்ந்து, நன்றாகச் செயல்பட்டு வரும் திட்டங் களுக்கு மாற்றிக்கொள்வது நல்லது.

சந்தை ஏற்றம் இறக்கம் என்பது இயல்பான ஒன்று. ஆகவே, சந்தை ஏற்ற இறக்கத்தை வைத்து நாம் முதலீட்டு விஷயங்களில் தொய்வடைந்து போகாமல், இங்கே சொல்லப்பட்ட சில அம்சங்களை மனதில் வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக முதலீடு செய்ய வேண்டியது மிக அவசியம்.

பிட்ஸ்

கொரோனா 2-ம் அலை காரணமாக செல்போன் விற்பனை பாதிப்படையும் என்று விற்பனை யாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் ரூ.5,700 கோடி - ரூ.11,500 கோடி வரை நஷ்டம் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்து உள்ளனர்!