பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட்... தவறான நம்பிக்கை, சரியான விளக்கம்!

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

ஆர்.வெங்கடேஷ், நிறுவனர், www.gururamfinancialservices.com

தங்கம், ரியல் எஸ்டேட் ஆகிய முதலீடு களில் பல தவறான நம்பிக்கைகள் (Myths) நம்மவர்களிடையே இருப்பதுபோல, மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய தவறான எண்ணங் களும் நிறையவே இருக்கின்றன. இந்தத் தவறான எண்ணங்களைக் களைவதன்மூலமே இந்த முதலீட்டு முறை பற்றி சரியான புரிந்து கொள்ளலை நம்மால் அடைய முடியும்; சரியான, சிறப்பான வருமானத்தைத் தரும் திட்டங்களைத் தேர்வு செய்ய முடியும். இங்கே மியூச்சுவல் ஃபண்டில் உள்ள சில தவறான நம்பிக்கைகளையும் அவற்றுக்கான சரியான விளக்கங்களையும் பார்ப்போம்.

ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ் நிறுவனர், www.gururamfinancialservices.com

தவறான நம்பிக்கை 1: பழைய ஃபண்டுகளைவிட புதிய ஃபண்டுகள் லாபகரமானவை.

விளக்கம்: ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் ஃபண்டுகளைவிட புதிய ஃபண்ட் வெளியீடு (NFO) மூலம் சந்தைக்கு வரும் ஃபண்ட் சிறப்பானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்தப் புதிய ஃபண்ட், இனிதான் அதன் செயல்பாட்டை ஆரம்பிக்க வேண்டும். அதாவது, என்.எஃப்.ஓ மூலம் இப்போது சந்தைக்கு வந்திருக்கும் ஃபண்ட் செடி எனில், ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் ஃபண்ட் காய்த்துக் குலுங்கும் பெரிய மரம் ஆகும்.

தவறான நம்பிக்கை 2: குறைந்த என்.ஏ.வி கொண்ட ஃபண்டில் முதலீடு செய்வது லாபகரமானது.

விளக்கம்: நிகர சொத்து மதிப்பு (NAV - Net Asset Value) என்பது அந்தக் குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்த சொத்துகளின் மதிப்பைப் பிரதிபலிக்கிறது. குறைந்த என்.ஏ.வி காரணமாக ஒரு ஃபண்டில் முதலீடு செய்வது லாபகரமானது அல்ல. அந்தக் குறிப்பிட்ட ஃபண்ட் எத்தனை சதவிகிதம் வருமானம் தந்து வருகிறது என்பதைப் பார்க்க வேண்டுமே, தவிர, என்.ஏ.வி மதிப்பைப் பார்க்கக் கூடாது.

பலரும் என்.ஏ.வி மதிப்பு ரூ.10 என்பதால், கண்ணை மூடிக்கொண்டு புதிய ஃபண்ட் வெளியீட்டில் (என்.எஃப்.ஓ) முதலீடு செய் கிறார்கள். அதுவும் தவறாகும். பொதுவாக, இதுவரை இல்லாத புதிய கருத்தின் அடிப்படையில் வரும் என்.எஃப்.ஓ-களில் முதலீடு செய்யலாம். மற்றபடி ஏற்கெனவே சிறப்பாகச் செயல்பட்டுவரும் ஃபண்டுகளில் முதலீடு செய்தாலே நல்ல வருமானத்தைப் பெற முடியும்.

தவறான நம்பிக்கை 3: டிவிடெண்ட் அறிவிப்பு வெளியானதும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் லாபகரமாக இருக்கும்.

விளக்கம்: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் லாபத்தில்தான் டிவிடெண்ட் தரப்படுகிறது. எவ்வளவு ரூபாய் டிவிடெண்ட் தரப்படுகிறதோ, அதே அளவுக்கு அந்த ஃபண்டின் என்.ஏ.வி மதிப்பு உடனடியாகக் குறைந்துவிடும். இதனால், டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டதும் அந்த ஃபண்டில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்காது.

இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். ஒரு ஃபண்டின் என்.ஏ.வி மதிப்பு ரூ.20 ஆக உள்ளது. யூனிட் ஒன்றுக்கு ரூ.2 டிவிடெண்ட் அறிவிக்கப் படுகிறது. இந்த ஃபண்டில் ஒருவர் ரூ.10,000 முதலீடு செய்கிறார். அவருக்கு 500 யூனிட்டுகள் ஒதுக்கப்படுகின்றன. இதன் பிறகு, சில தினங்கள் கழித்து யூனிட் ஒன்றுக்கு ரூ.2 டிவிடெண்ட் வழங்கப்படுகிறது.

டிவிடெண்டாக ரூ.1,000 (2 X 500) கிடைக்கிறது. இதன் பிறகு, என்.ஏ.வி மதிப்பு ரூ.18 ஆகக் குறைந்துவிடுகிறது. அவரின் முதலீட்டு மதிப்பு இப்போது ரூ.9,000 (18 X 500)-ஆக குறைந்துவிடுகிறது. இதில், டிவிடெண்டுக்கு அவர் எந்த வருமான வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும். 30% வருமான வரம்பில் வந்தால், ரூ.1,000 டிவிடெண்டுக்கு ரூ.300 வரி கட்டியதுபோக, கையில் கிடைப்பது ரூ.700-தான். எனவே, டிவிடெண்டுக்காக முதலீடு செய்வது இன்றைய தேதியில் முதலீட்டாளருக்கு இழப்புதான்.

மியூச்சுவல் ஃபண்ட்... தவறான நம்பிக்கை, சரியான விளக்கம்!

தவறான நம்பிக்கை 4: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிக விவரம் தெரிந்தவர்களுக்குதான்.

விளக்கம்: பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட், கடன் சந்தை சார்ந்த முதலீடு என எதுவாக இருந்தாலும் அதை நிர்வகிக்க நிதி மேலாளர் (Fund Manager) என்பவர் இருப்பார். இவர் சந்தை பற்றிய படிப்பறிவு, அனுபவம் ஆகியவற்றில் சிறந்தவராக இருப்பார். மேலும், அவருக்குக் கீழே பகுப்பாய்வுக் குழுவும் இருக்கும். அந்தக் குழுவின் பரிந்துரை யின்படிதான் பங்கு / கடன் பத்திரத்தில் முதலீடு / விற்பனை நடக்கும். எனவே, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் அதிக விவரம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று தேவையில்லை.

நிதி மேலாளர் மற்றும் அவரின் குழு முதலீட்டை வளர்ச்சி அடைவதற்கான அனைத்து வழிகளையும் மேற்கொள்ளும். மேலும், நிதி ஆலோசகர்கள், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். இவர்களின் ஆலோசனைபடி, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வந்தாலே சிக்கல் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.

தவறான நம்பிக்கை 5: எஸ்.ஐ.பி ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்.

விளக்கம்: சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) என்பது முதலீட்டுத் திட்டமல்ல. இது ஒரு முதலீட்டு முறை மற்றும் வசதியாகும். இது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் குறிப்பிட்ட இடை வெளியில் (தினசரி / வாரம் / மாதம் / காலாண்டு /ஆண்டு) முதலீடு செய்ய அனுமதிக்கிறது.

தவறான நம்பிக்கை 6: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பங்குச் சந்தை முதலீடு போன்றது / மியூச்சுவல் ஃபண்டுகள் அதிக ரிஸ்க்கானவை

விளக்கம்: முதலீட்டாளர் களிடம் இருந்து திரட்டப்படும் அனைத்து மியூச்சுவல் ஃபண்டு களிலும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய மாட்டார்கள். மியூச்சுவல் ஃபண்ட் வகைக்கேற்ப (கடன் சார்ந்தது, கலப்பின ஃபண்ட், பங்கு சார்ந்தது, தங்கம் சார்ந்தது) முதலீட்டாளர்களின் பணம் முதலீடு செய்யப்படும்.

கடன் ஃபண்டுகளில் அரசு மற்றும் தனியார் கடன் பத்தி ரங்கள், பாண்டுளில் முதலீடு செய்யப்படும். இதில், ரிஸ்க் குறைவாக இருக்கும். ஹைபிரிட் ஃபண்டில் கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகளில் கலந்து முதலீடு செய்யப்படும். இதில் ரிஸ்க் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

பங்கு சார்ந்த ஈக்விட்டி ஃபண்டு களில் மட்டுமே முழுக்க முழுக்க பங்குகள் மற்றும் அது சார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்யப் படும். இதில்தான் அதிக ரிஸ்க் இருக்கும். அந்த ரிஸ்க்கும் நீண்ட காலத்தில் பரவலாக்கப் படும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் குறைவான ரிஸ்க் முதல் அதிக ரிஸ்க் கொண்ட திட்டங்கள் உள்ளன. முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறன், எவ்வளவு நாள்கள் பணம் தேவை என்பதைப் பொறுத்து கடன், கலப்பினம், பங்கு சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்.

உண்மையைச் சொல்லப் போனால், அனைத்து முதலீடு களும் ரிஸ்க்கானவைதான். இப்போது தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களில்கூட மூன்று மாதத்துக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாற்றத்துக்கு உட்பட்டது.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அனைத்தும் அதிக ரிஸ்க்கானவை அல்ல. கடன் ஃபண்டுகள் குறைவான ரிஸ்க் கொண்டவை. ஹைபிரிட் ஃபண்டு கள் ஓரளவுக்கு அதிக ரிஸ்க் கொண்டவை. பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகள் அதிக ரிஸ்க்கானவை. ஒருவரின் முதலீட்டுக் காலம் நீண்டதாக இருக்கும்பட்சத்தில் இந்த ரிஸ்க் பரவலாக்கப்பட்டு குறைகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் எந்த அளவுக்கு அதிக வருமானம் கிடைக்கிறதோ, அந்த அளவுக்கு ரிஸ்க்கும் இருக்கும். ஈக்விட்டி ஃபண்டுகள் குறுகிய காலத்தில் அதிக ரிஸ்க்கானவை. ஆனால், நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தைக் கொடுத்து செல்வம் சேர்க்க உதவுகிறது. உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டுக் காலம் ஆகியவற்றைப் பொறுத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்வது மூலம் ரிஸ்க்கைக் குறைக்க முடியும்.

மியூச்சுவல் ஃபண்ட்... தவறான நம்பிக்கை, சரியான விளக்கம்!

தவறான நம்பிக்கை 7: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய அதிக பணம் தேவை

விளக்கம்: மியூச்சுவல் ஃபண்டில் மொத்த முதலீடு அல்லது சீரான முதலீட்டுத் திட்டம் (Systematic Investment Plan - SIP) மூலம் ரூ.500-க்குக் குறைவாக இருந்தால்கூட முதலீட்டை ஆரம்பித்துவிடலாம். சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் குறைந்தபட்சம் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.100 கூட அனுமதிக்கப்படுகிறது.

தவறான நம்பிக்கை 8: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய நேரம் காலம் பார்க்க வேண்டும்.

விளக்கம்: எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய நேரம் காலம் பார்க்கத் தேவையில்லை. பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தில் ஈக்விட்டி ஃபண்டுகளில் சராசரியாகக் கூடுதல் யூனிட்டுகள் ஒதுக்கீடு செய்ய அதிக வாய்ப்பிருக்கிறது. பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கிறது; விரைவில் அது இறங்கக்கூடும் என எதிர்பார்த்தால், லிக்விட் ஃபண்டில் மொத்த முதலீட்டை மேற்கொண்டுவிட்டு, அதிலிருந்து சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் (எஸ்.டி.பி) மூலம் ஈக்விட்டி ஃபண்டுக்கு முதலீட்டை மாற்றும்போது ரிஸ்க்கைக் குறைக்க முடியும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உங்களுக்கு கிடைக்கும் லாபம் என்பது நீங்கள் எப்போதெல்லாம் முதலீடு செய்கிறீர்கள் என்பதைவிட, எவ்வளவு காலத்துக்கு அந்த முதலீட்டை வைத்திருக்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.

தவறான நம்பிக்கை 9: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் வெளிப்படை தன்மை இல்லை.

விளக்கம்: அதிக வெளிப்படைத்தன்மை இருக்கிறது. செபி மற்றும் ஆம்ஃபி அமைப்பின் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்படி, தினசரி என்.ஏ.வி மதிப்பை வெளியிடுதல், மாதம்தோறும் அறிக்கை அனுப்புவது, முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதி எந்த விதமான கடன் பத்திரங்களில் / பங்குகளில் முதலீடு செய்யப் பட்டிருக்கிறது என்கிற போர்ட்ஃபோலியோ விவரங்கள் குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இணைய தளத்தில் அனைவரும் காணக் கிடைக்கிறது. ஆறு மாதத்துக்கு ஒருமுறை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் பத்திரிகைகளில் வெளியிடப்படுகின்றன. மேலும், முதலீடு தொடங்கியதிலிருந்து லாபத்தை வெளியே எடுப்பது வரைக்குமான தகவல்களை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் எஸ்.எம்.எஸ், இ-மெயில் மூலம் தெரிவித்து வருகின்றன. உங்களின் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கணக்கு (ஃபோலியோ) எண் மூலம் ஃபண்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் உங்கள் முதலீட்டின் மதிப்பு தற்போது எவ்வளவாக உள்ளது, எவ்வளவு லாபம் அல்லது நஷ்டம் என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.

தவறான நம்பிக்கை 10: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு நீண்ட காலத்துக்கானது.

விளக்கம்: அனைத்து ஃபண்ட் திட்டங்களும் நீண்ட கால முதலீட்டுக்காக வடிவமைக்கப்படவில்லை. மிகக் குறுகிய கால முதலீட்டுக்கு ஓவர்நைட் ஃபண்ட், லிக்விட் ஃபண்ட் போன்றவை உள்ளன. குறுகிய காலத்துக்கு ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள் உள்ளன. நடுத்தரக் காலத்துக்கு மீடியம் டேர்ம் டெப்ட் ஃபண்டுகள், ஹைபிரிட் ஃபண்டுகள் உள்ளன. நீண்ட காலத்துக்கு லாங் டேர்ம் டெப்ட் ஃபண்டுகள், ஈக்விட்டி ஃபண்டுகள் போன்றவை உள்ளன. ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து சரியான ஃபண்டைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

தவறான நம்பிக்கை 11: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் வருமான வரித்துறை கண்காணிக்கும்.

விளக்கம்: அனைத்து முதலீட் டாளர்களையும் வரித்துறை கண்காணிக்காது. நிதி ஆண்டில் ரூ.2 லட்சத்துக்கு மேல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், வரித் துறைக்குத் தகவல் செல்லும். இதே போல், பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், தங்கம் ஆகியவற்றிலும் அதிக முதலீடு செய்தால் வரித் துறைக்குத் தகவல் செல்லும். உங்கள் வங்கி சேமிப்புக் கணக்கில் ஓர் ஆண்டில் 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் டெபாசிட் செய்தாலும் வரித் துறைக்குத் தகவல் செல்லும். உங்களின் வருமானம் சட்டத்துக்கு உட்பட்டதாகும், நீங்கள் அந்த வருமானத்துக்கு வரி கட்ட வேண்டியிருந்து, அதைக் கட்டியிருந்தால் பயப் படத் தேவையில்லை.

தவறான நம்பிக்கை 12: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு தேவை.

விளக்கம்: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய பான் அட்டையின் நகல், ஆதார் அட்டையின் நகல், வங்கிக் காசோலை, மார்பளவு புகைப் படங்கள் இரண்டு, உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (know your customer - KYC) படிவம் ஆகியவை இருந்தாலே போதும். டீமேட் கணக்கு தேவையில்லை. கோல்டு இ.டி.எஃப் போன்ற எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டு களில் முதலீடு செய்ய வேண்டு மெனில் மட்டுமே, டீமேட் கணக்கு தேவை. ஆனால், டீமேட் கணக்கு இல்லாமலே கோல்டு சேவிங்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.