Published:Updated:

பத்து ஆண்டுகள் இலக்கு... எஸ்.ஐ.பி முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்! - நிபுணரின் வழிகாட்டல்

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

Q & A - கேள்வி - பதில்

டி.ரவீந்திரன், சென்னை - 600 114

எஸ்.ஐ.பி முறையில் பத்தாண்டுகளுக்கு முதலீடு செய்ய ஏற்ற பங்குகளைப் பரிந்துரை செய்ய முடியுமா?

ரெஜி தாமஸ், முதலீட்டு ஆலோசகர்

“மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டுக்கு எஸ்.ஐ.பி முறையில் ஃபண்டைத் தேர்வு செய்வதற்கும் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய எஸ்.ஐ.பி முறையில் பங்கைத் தேர்வு செய்வதற்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. முதலீட்டுத் தேதி, சரியான பங்கைத் தேர்வு செய்வது, முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறன் எனப் பல விஷயங்களை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது பார்க்க வேண்டும். சமீபத்தில் வெளியிடப்பட்ட செல்வ உருவாக்கம் அறிக்கையில் கடந்த 20-க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் நிலையான செல்வத்தை உருவாக்கும் நிறுவனப் பங்குகளாக இன்ஃபோசிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்றவை கோடிட்டுக் காட்டப் பட்டுள்ளன.

இந்த நிறுவனங்கள் செல்வத்தை உருவாக்கியதற்கான காரணங்களை விரைவாகப் பகுப்பாய்வு செய்து பார்த்ததில், இந்த நிறுவனங்களில் வலுவான நிர்வாகம், நிலையான வளர்ச்சித் திறன், புதுமை மற்றும் கடன் இல்லாத நிறுவனமாக இருக்க வேண்டும் என்பதை நமக்குக் கற்பிக்கிறது. அந்த வகையில், எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதற்கான மாதிரி பங்குகள் பட்டியலை உருவாக்கினால், அதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், கோட்டக் மஹிந்திரா பேங்க், ஹிந்துஸ்தான் யூனிலிவர், நெஸ்லே, பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி ஆகிய பங்குகள் இடம்பெறுவதைத் தவிர்க்க முடியாது.”

எஸ்.முருகேசன், திருவாரூர்

தமிழக அரசில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சிட் ஃபண்டில் சேர்வதற்கு ஒருவர் என்னென்ன ஆவணங்களைக் கொடுக்க வேண்டும்?

எம்.கிருஷ்ணபாரதி, தலைவர், தமிழ்நாடு சிட் ஃபண்ட் கம்பெனீஸ் அசோசியேஷன்

“வங்கியில் புதிய கணக்கு ஆரம்பிக்கும்போது என்னென்ன ஆவணங்கள் தருகிறோமோ, அந்த ஆவணங்கள் சிட் ஃபண்டில் சேருவதற்குத் தேவைப்படும். உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கே.ஒய்.சி) படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். வருமானவரித் துறை வழங்கியிருக்கும் பான் கார்டு கட்டாயம் தேவை. மார்பளவு புகைப்படம் தேவைப்படும். மேலும், முகவரிக்கான ஆதாரம் (ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை) கொடுக்க வேண்டும். சுருக்கமாக, புகைப்படம், பான் கார்டு, ஆதார் கார்டு இருந்தால் எந்த சிட் ஃபண்டிலும் சேர்ந்துவிடலாம்.”

ரெஜி தாமஸ், எம்.கிருஷ்ணபாரதி, அசோகன் ஆர்.ராஜா, வி.தியாகராஜன்
ரெஜி தாமஸ், எம்.கிருஷ்ணபாரதி, அசோகன் ஆர்.ராஜா, வி.தியாகராஜன்

சிலம்பரசன் சிவக்குமார், இ-மெயில் மூலம்

ஏற்றுமதி செய்வதற்கு ஐ.இ கோடு எங்கே பெறுவது? நிறுவனத்தைப் பதிவு செய்வது எப்படி?

அசோகன் ஆர்.ராஜா, முன்னாள் துணை டைரக்டர் ஜெனரல், ஃபியோ (FIEO)

“தனிநபர் நிறுவனம் / கூட்டு நிறுவனம் / வரையறுக்கப்பட்ட நிறுவனம் - இவற்றில் எதைத் தொடங்கப்போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்துகொள்ளுங்கள். நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை உருவாக்கி, பதிவு செய்ய வேண்டும். வங்கியில் நடப்புக் கணக்குத் தொடங்க வேண்டும். அது அந்நியச் செலாவணி பரிவர்த்தனை சேவைகள் வழங்கக்கூடிய வங்கியாக இருப்பது அவசியம்.

ஏற்றுமதி / இறக்குமதி செய்வதற்கு வருமானவரி இலாகாவின் பான் (PAN) எண் பெறுவது அவசியம். (https://tin.tin.nsdl.com/pan/index.html) IEC எனும் குறியீடு எண்ணை ANF 2A எனும் விண்ணப்பத்தின் மூலம் அருகிலுள்ள வெளிநாட்டு வர்த்தக இயக்குநரக ஜெனரல் (DGFT) அலுவலகத்தில் ரூ.500-க்கு வரைவோலை அல்லது வங்கிப் பணமாற்று முறையில் (NEFT) செலுத்தி, தேவையான ஆவணங்களை இணைத்தல் அவசியம். https://iec-nic.com/ எனும் வலைதளத்தில் கூடுதல் விவரம் அறியலாம்.

ஏற்றுமதி செய்யும்போது மத்திய அரசு வழங்கும் மானியங்கள், சலுகைகளைப் பெற தொடர்புடைய ஏற்றுமதி ஊக்குவிப்புக் கழகம் / வாரியம் / இந்திய ஏற்றுமதிக் கூட்டமைப்பு (Export Promotion Councils / FIEO / Commodity Boards / Authorities), பதிவுச் சான்றிதழ் மற்றும் உறுப்பினர் சான்றிதழ் (Registration cum Membership Certificate - RCMC) பெறுவது அவசியம்.”

கணேஷ்குமார், ரெட்டியார்பட்டி, திருநெல்வேலி

வட்டியில்லா மாதத் தவணை மூலம் கம்ப்யூட்டர், லேப்டாப், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவது உண்மையிலேயே லாபகரமாக இருக்குமா?

வி.தியாகராஜன், ஆடிட்டர்

“வட்டியில்லா மாதத் தவணை (No Cost EMI) என்று சொல்லப்பட்டாலும் கடன் பரிசீலனைக் கட்டணமாக உங்களிடமிருந்து ஒரு தொகையை நீங்கள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வசூலித்துவிடுவார்கள். மேலும், அந்த வீட்டு உபயோகப் பொருள்களை ரொக்கமாகக் கொடுத்து வாங்கும்போது தள்ளுபடி யாக ஒரு தொகை உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால், வட்டியில்லா மாதத் தவணைக் கடன் திட்டத்தின் மூலம் பொருள்கள் வாங்கும்போது அந்தத் தள்ளுபடி தொகையைக் கடன் கொடுக்கும் வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுவிடும். மேலும், வட்டித் தொகைக்கு ஈடு கட்டுமாறு பொருள்களின் விலையைச் சற்று ஏற்றியும் சில நிறுவனங்கள் விற்கின்றன.

ஆகவே, வட்டியில்லா மாதத் தவணை என்று சொல்லப்பட்டாலும், கடன் பரிசீலனைக் கட்டணம் மற்றும் தள்ளுபடி தொகை என்று மறைமுகமாக அந்தத் வட்டித் தொகை உங்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது என்பதே நிதர்சனம். எனவே, வட்டியில்லாத மாதத் தவணை என்றால், கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com

பிட்ஸ்

ருகிற 2022-க்குள் இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறையின் மதிப்பு 2.8 பில்லியன் டாலர்களாக இருக்கும் என சர்வதேச பிசினஸ் ஆலோசனை நிறுவனமான டெலாய்ட் சொல்லி இருக்கிறது!