Published:Updated:

கேள்வி பதில் : மல்ட்டிபேக்கர் பங்குகள் எவை? - அடையாளம் காண்பது எப்படி..?

இன்று லாபம் தரும் எல்லா நிறுவனங்களும் தொடர்ந்து பெரிய அளவில் லாபம் தரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

பிரீமியம் ஸ்டோரி

மல்ட்டிபேக்கர் (Multibagger) பங்குகளில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்கிறான் என் நண்பன். அப்படியென்றால் என்ன, அந்தப் பங்குகளை எப்படி அடையாளம் காண்பது?

- மே.ஜெயச்சந்திரன், திருத்துறைப்பூண்டி

தி.ரா.அருள்ராஜன், முதன்மைச் செயல் அதிகாரி, Ectra.in

“மல்ட்டிபேக்கர் என்பதற்கு, `பல மடங்காக லாபம் தரக்கூடியது’ என்று அர்த்தம். பங்குச் சந்தையில் இன்று சிறிய நிறுவனமாக இருப்பது, தொடர்ந்து லாபம் சம்பாதித்துக்கொண்டே இருந்தால், அது வளர்ந்து பெரிய நிறுவனமாக மாறும். அதேநேரம், அந்த நிறுவனப் பங்கின் விலையும் சந்தையில் பல மடங்காக உயரும். இது போன்ற பங்குகளில் முதலீடு செய்வதைத்தான், `மல்ட்டிபேக்கர் நிறுவனங்களில் முதலீடு செய்வது’ என்கிறோம். இன்று லாபம் தரும் எல்லா நிறுவனங்களும் தொடர்ந்து பெரிய அளவில் லாபம் தரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

ஒரு நிறுவனத்தின் லாபம் ஈட்டும் திறன் பல்வேறு காரணங்களால் அளவிடப்படும். எனவே, எல்லாச் சிக்கல்களையும் தாண்டி சில நிறுவனங்கள் சாதிக்கின்றன. வருங்காலத்தில் பல மடங்கு லாபம் தரும் பெரிய நிறுவனமாக (மல்ட்டிபேக்கர்) மாறும் என்று நாம் எதிர்பார்த்து முதலீடு செய்யும்போது, அதன் நிதிநிலையைத் தொடர்ந்து கண்காணித்துவருவது மிக மிக அவசியம்’’.

தி.ரா.அருள்ராஜன், சா.ராஜசேகரன்
தி.ரா.அருள்ராஜன், சா.ராஜசேகரன்

என் ஒரு வயது மகளின் உயர்கல்விச் செலவுக்கு ரூ.15 லட்சம் அவளின் 18-வது வயதில் தேவையென்றால், மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

- கே.கண்ணம்மா, கண்டிகை

சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர்

“ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் ஆண்டுக்குச் சராசரியாக 6% வருமானம் கிடைக்கும் என்று எடுத்துக்கொண்டால், மாதந்தோறும் ரூ.4,250 முதலீடு செய்துவரலாம். வட்டி விகித ஏற்ற இறக்கத்துக்கேற்ப சற்று அதிகரித்தோ, குறைத்தோ முதலீடு செய்யலாம். வருடங்கள் உயர உயர, உங்கள் முதலீட்டை வட்டி ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டில் ஆண்டுக்குச் சராசரியாக 10% வருமானம் எதிர்பார்த்தால், மகளின் உயர்கல்விக்கு மாதம் ரூ.2,800 முதலீடு செய்ய வேண்டும். இந்த முறையில் நீங்கள் முதலீடு செய்தால், 17 ஆண்டுகளில் உங்களின் இலக்கை அடையலாம்.”

கேள்வி பதில்
கேள்வி பதில்

டேர்ம் பிளான் எடுக்கவிருக்கிறேன். பாலிசி இழப்பீட்டைக் குடும்பத்தினர் ஒரே தொகையாகப் பெற்றுக்கொள்வது சரியா அல்லது பத்தாண்டு காலத்துக்கு மாதந்தோறும் பெற்றுக்கொள்வது சரியா?

- வ.கனகராஜ், விருதுநகர்

எஸ்.ஸ்ரீதரன், நிதி ஆலோசகர், வெல்த்லேடர்

“பாலிசிதாரர் இறந்தால், பாலிசியின் காப்பீட்டுத் தொகையை மொத்தமாக வாங்கிக் கொள்வதே சிறந்தது. உதாரணமாக, ஒருவர் ரூ.50 லட்சத்துக்குக் காப்பீடு எடுத்திருந்தால், பாலிசிதாரர் இறக்கும்பட்சத்தில் ரூ.50 லட்சம் அவரின் குடும்பத்துக்குச் சேரும். இந்த ரூ.50 லட்சத்தை வங்கியில் வைப்பு நிதியில் முதலீடு செய்து, அதற்கு 6% வட்டி வந்தால்கூட அவரின் குடும்பத்துக்கு ரூ.25,000 வரை மாத வருமானம் கிடைக்கும். ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் தரும் தொகை இதைவிடக் குறைவாகவே இருக்கும். இது நிறுவனத்துக்கு நிறுவனம் சற்று வேறுபடும்.”

எஸ்.ஸ்ரீதரன், என்.சங்கர்
எஸ்.ஸ்ரீதரன், என்.சங்கர்

வீட்டு மனை ஒன்றைக் கடன் மூலம் வாங்கத் திட்டம். எவ்வளவு கடன் கிடைக்கும், எத்தனை நாள்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்?

- வி.ரத்தினகுமார், செங்கல்பட்டு

என்.சங்கர், வீட்டுக் கடன் ஆலோசகர்.

“நீங்கள் வாங்கும் மனை டி.டி.சி.பி அல்லது சி.எம்.டி.ஏ அங்கீகாரம் பெற்றதாக இருப்பது அவசியம். மனையைப் பத்திரப் பதிவு செய்யும் தொகையில் 70%- 75% வரை கடன் கிடைக்கும். கடனை 10-15 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். கடன் பெறுபவரின் தகுதியைப் பொறுத்து வட்டி விகிதம், வங்கிக்கு வங்கி, வீட்டு வசதி நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். கடன் பெறுபவரின் மாதச் சம்பளம், கடந்த மூன்று வருட வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்த ஆதாரம் மற்றும் கடந்த ஆறு மாத வங்கிக் கணக்கு பரிவர்த்தனை இவற்றைப் பொறுத்து கடன் தொகை மாறுபடும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு