Published:Updated:

கேள்வி - பதில் : ஹெல்த் பாலிசி காப்பீட்டுத் தொகை எவ்வளவு? - எப்படித் தீர்மானிப்பது...?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

மருத்துவமனைச் சிகிச்சைக் கட்டண விகிதம் மற்றும் வருடாந்தர பிரீமியம் தொகை கவனிக்கப்பட வேண்டியவை!

கேள்வி - பதில் : ஹெல்த் பாலிசி காப்பீட்டுத் தொகை எவ்வளவு? - எப்படித் தீர்மானிப்பது...?

மருத்துவமனைச் சிகிச்சைக் கட்டண விகிதம் மற்றும் வருடாந்தர பிரீமியம் தொகை கவனிக்கப்பட வேண்டியவை!

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

எனக்கு 35 வயது. எனக்கும் என் மனைவிக்கும் சேர்த்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க விரும்புகிறேன். எங்களுக்கு இரண்டு மற்றும் நான்கு வயதில் இரண்டு குழந்தைகள். எங்களுக்கான ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியின் காப்பீட்டுத் தொகையை எப்படித் தீர்மானிப்பது?

- சி.ராகுல், திண்டுக்கல்

பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்

“நீங்கள் வசிக்கும் ஊரில் தற்போதிருக்கும் மருத்துவமனைச் சிகிச்சைக் கட்டண விகிதம் மற்றும் உங்களால் தொடர்ச்சியாகச் செலுத்த முடியும் வருடாந்தர பிரீமியம் தொகையின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியின் காப்பீட்டுத் தொகையைத் தீர்மானிக்க வேண்டும். அதற்கேற்ப காப்பீட்டுத் தொகை இருக்கும்.”

பி.மனோகரன், ஆர்.ரவி
பி.மனோகரன், ஆர்.ரவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`டிரேட் ஃபார் டிரேட்’ வர்த்தக முறைக்கு என்ன அர்த்தம்... இதில் பங்குகளை வாங்க முடியுமா?

- ந.கயல்விழி, திருச்சி

ஆர்.ரவி, ரிசர்ச் அனலிஸ்ட்

“பங்குச் சந்தை வர்த்தகத்தில், ஒரு நிறுவனப் பங்கு அதிக அளவிலான ஏற்ற இறக்கங்களுடன் வர்த்தகமாகிக்கொண்டிருந்தால் அதை `டிரேட் ஃபார் டிரேட்’ வர்த்தகப் பிரிவுக்கு செபி மாற்றுகிறது. அந்தப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பங்குகளை ஒரே வர்த்தக நாளின் இடையே வர்த்தகம் செய்ய முடியாது. கட்டாய டெலிவரி அடிப்படையில் மட்டுமே பங்குகளை வாங்கி வர்த்தகம் செய்ய முடியும். முக்கியமாக, முழுமையான கட்டணம் செலுத்தப்படும் வர்த்தகங்களை மட்டுமே டிரேட் ஃபார் டிரேட் பிரிவு அனுமதிக்கிறது. இப்படிச் செய்வதன் மூலம் அந்தப் பங்கில் காணப்படும் அசாதாரண ஏற்ற இறக்க நிலை கட்டுப்படுத்தப் படும்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான் முகக்கவசங்கள் தயாரித்து ஏற்றுமதி செய்ய விரும்புகிறேன். எந்தெந்த நாடுகளுக்கு விற்பனை செய்ய வாய்ப்பிருக்கிறது?

- பி.செல்வராஜ், சென்னை

கே.எஸ்.கமாலுதீன், இயக்குநர், புளூபாரத் எக்ஸிம்

“மே 16-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கை எண் 6/2015-2020-ல் கூறியுள்ளபடி, மருத்துவ முகக்கவசம் (Medical Mask) ஏற்றுமதி செய்வது தடை செய்யப் பட்டிருக்கிறது. ஆனால், மருத்துவத்துக்கு அல்லாத துணி மாஸ்க்குகளை (Non Medical Mask) ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாஸ்க்குகளுக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, மலேசியா எனக் கிட்டத்தட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் ஏற்றுமதிக்கான வாய்ப்பிருக்கிறது.”

கே.எஸ்.கமாலுதீன், கே.ஆர்.சத்யநாராயணன்
கே.எஸ்.கமாலுதீன், கே.ஆர்.சத்யநாராயணன்

வீடு கட்ட உறவினரிடம் கடனாகப் பெற்ற 6 லட்சம் ரூபாயை, வட்டியோடு திருப்பித் தந்துகொண்டிருக்கிறேன். இந்தத் தொகையை வருமான வரிச் சலுகைக்குக் காட்ட முடியுமா?

- கே.செல்வகுமார், விழுப்புரம்

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

“வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெறக்கூடிய வீட்டுக் கடன் போதுமானதாக இல்லாதபோது, இப்படித் தனிநபர்களிடம் வாங்கும் கடன்களுக்கான வட்டித் தொகையை வருமான வரிக்கணக்கில் காட்ட அனுமதிக்கிறார்கள். இந்தக் கடன், எந்தக் காரணத்துக்காக வாங்கப்பட்டது, எவ்வளவு வட்டி நிர்ணயிக்கப்பட்டது என்பவை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பத்திரத்தில் பதிவு செய்யப் பட்டிருந்தால்தான் அதை வருமான வரித்துறை கணக்கில்கொள்ளும். பணத்தை, வங்கிக் காசோலை மூலமாகவே திருப்பிச் செலுத்த வேண்டும். வாங்கிய தொகை, முழுமையாக அந்த வீட்டைக் கட்ட மட்டுமே செலவழிக்கப்பட்டிருக்க வேண்டும்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என் வயது 32. மலேசியாவில் வேலை செய்கிறேன். 2018-ம் ஆண்டில் ரூ.15 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தேன். அதை ரூ.65 லட்சமாக உயர்த்த விரும்புகிறேன். இதற்கு என்ன செய்ய வேண்டும்?

- ஜே.மோகன், முகநூல் வழியாக

எஸ்.ஸ்ரீதரன், நிதி ஆலோசகர்

”ரூ.15 லட்சத்துக்கு எடுத்த டேர்ம் இன்ஷூரன்ஸை ரூ.65 லட்சத்துக்கு உயர்த்த விரும்பினால், வேறு ஒரு பாலிசியாக மட்டுமே எடுக்க முடியும். மேலும், நீங்கள் மலேசியாவில் இருப்பதால், உங்களால் மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல முடியாது. ஆகவே, அடுத்தமுறை இந்தியாவுக்கு வரும்போது கூடுதலாக ரூ.50 லட்சத்துக்கு ஒரு தனி டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுங்கள்.”

கேள்வி - பதில்
கேள்வி - பதில்

கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்துவரும் நான், சென்னை புறநகரில் என் பெயரில் வீடு வாங்க நேரில் வர வேண்டுமா... வராமலேயே வாங்க என்ன செய்யவேண்டும்?

- ஜே.திவாகர், முகநூல் வழியாக...

கே.அழகுராமன், வழக்கறிஞர், உயர் நீதிமன்றம்,சென்னை.

“இந்த வீட்டை வாங்க நீங்கள் நேரில் வரவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. வராமலேயே தாராளமாக இந்தச் சொத்தை வாங்க இயலும். அதற்கு முதலில் நீங்கள் வாங்கும் சொத்துக்காகப் பத்திரம் தயாரிக்க, கிரயத் தொகை மற்றும் பதிவுத் தொகை செலுத்த, கையொப்பம் இட முதலான காரியங்களை நிறைவேற்றி, அதன் விற்பனையை நிறைவு செய்யும் பொருட்டு அதிகாரம் பெற்ற முகவர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும். அவர் பெயருக்கு இந்தக் கிரயத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு, சகல அதிகாரங்களையும் கொடுத்து, ஒரு ‘பொது அதிகார ஆவணம்’ (General Power of Attorney) உருவாக்கி, உங்கள் கையொப்பத்தை அங்குள்ள நோட்டரி அல்லது இந்தியத் தூதரக அதிகாரிகளால் ஒப்பம் செய்து (Attestation), அந்த நபருக்கு அனுப்ப வேண்டும். அந்த ஆவணத்தைச் சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து, அந்த ஏஜென்ட் முத்திரைத் தீர்வை செலுத்திய பிறகு, உங்களின் முறைப்படியான அனுமதி பெற்ற நபராவார்.

பின்னர், அந்தப் பொது அதிகார ஆவணத்தின் அடிப்படையில் உங்களுக்காக, உங்கள் முகவர், மேற்படி சொத்தை உங்கள் பெயரில் பதிவுசெய்யத் தேவையான சகல காரியங்களையும் மேற்கொள்ள முடியும். சட்டப்படி, உங்கள் முகவர் செய்யும் காரியங்கள் அனைத்தும், நீங்கள் நேரிலிருந்து மேற்கொண்டதாகவே கருதப்படும். இவ்வாறான ஆவணம் உங்களால் வழங்கப்படும் நாளிலிருந்து, ஓராண்டுக்குப் பிறகு பயன்படுத்த வேண்டியிருப்பின், உங்கள் ‘வாழ்நாள் சான்றிதழ்’ அவசியம்.”

எஸ்.ஸ்ரீதரன், கே.அழகுராமன், ஜி.ரமேஷ்
எஸ்.ஸ்ரீதரன், கே.அழகுராமன், ஜி.ரமேஷ்

`புக் வேல்யூ’ எனப்படும் புத்தக மதிப்பை ஒரு பங்குக்கு எப்படிக் கணக்கிடுகிறார்கள் என்று சொல்ல முடியுமா?”

- சு.செந்தில்குமார், கோயமுத்தூர்

ஜி.ரமேஷ், டெக்னிக்கல் அனலிஸ்ட்

“ஒரு நிறுவனத்தின் புத்தக மதிப்பு என்பது அந்த நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்புகளிலிருந்து மொத்த கடன்களைக் கழித்து வருவது (Book Value = Assets - Liabilities). உதாரணமாக, ஒரு நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.20 கோடி, மொத்த கடன் ரூ.10 கோடி என்றால், அந்த நிறுவனத்தின் புத்தக மதிப்பு ரூ.20 கோடி-ரூ.10 கோடி= ரூ.10 கோடி. இதில், ஒரு பங்குக்கு புத்தக மதிப்பைக் கணக்கிட அந்த நிறுவனத்தின் புத்தக மதிப்பை, அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளின் எண்ணிக்கையால் வகுக்க வேண்டும். உதாரணமாக, ஒரு நிறுவனத்தின் புத்தக மதிப்பு ரூ.10 கோடி என்றும், மொத்த பங்குகளின் எண்ணிக்கை 10 லட்சம் என்றும் இருந்தால், அந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் புத்தக மதிப்பு (ரூ.10 கோடி / ரூ.10 லட்சம்) ரூ.100 ஆகும். இதைவிடப் பங்கின் விலை குறைவாக இருந்தால், அந்தப் பங்கின் மதிப்பு கவர்ச்சிகரமாக இருக்கும்.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism