சசி ரேகா
அண்மையில் சந்தையில் புதிதாக அறிமுகமாகி உள்ள சில திட்டங்களை இந்தப் பகுதியில் பார்ப்போம்.
பி.என்.பி பரிபாஸ் ஃபண்ட்ஸ் அக்வா ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் (BNP Paribas Funds Aqua Funds of Funds)
பி.என்.பி பரிபாஸ் நிறுவனம் உலக அளவில் நீர் மேலாண்மையில் முன்னணியில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யும் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டம் அந்த நிறுவனம் தற்போது நிர்வகித்துவரும் பி.என்.பி பரிபாஸ் அக்வா லக்ஸ் முதலீட்டுக் கலவையில் முதலீடு செய்யும் ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தில் தற்போது 48% அமெரிக்க நிறுவனப் பங்குகளிலும், 34% ஐரோப்பிய நிறுவனப் பங்குகளிலும் மீதமுள்ள பங்குகள் பிறநாட்டு நிறுவனங்களிலும் முதலீடு செய்யப்படுகிறது.
நீர் மேலாண்மைக்கான தேவை அதிகமாக இருப்பதும் அது சார்ந்த நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி அடையும் என்ற நோக்கில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தீமெட்டிக் வகை திட்டமான இதில் ஏப்ரல் 16-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும். மேலும், இது பேஸிவ் வகை ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் வகை திட்டமாகும்.
குறைந்தபட்சம் 5,000 ரூபாய் என்ற அளவில் இருந்து இந்தத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தில் நுழைவுக் கட்டணம் இல்லை.
ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறினால்,1% கட்டணம் செலுத்த வேண்டும். டிவிடெண்ட் மற்றும் குரோத் என்று இரண்டு வகைகளிலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
வெளிநாடுகளில் உள்ள நிறுவனங் களில் முதலீடு செய்யும் பல திட்டங் கள் முதலீட்டாளர்களால் அதிகம் விரும்பப்படுகிறது.
பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உள்ள முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து பயன் பெறலாம்.

ஹெச்.டி.எஃப்சி அஸெட் அலொகேட்டர் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் (HDFC Asset Allocator Fund of Funds)
பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கேற்ப முதலீட்டுக் கலவையைப் பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள், தங்கத்தில் முதலீடு செய்யும் இ.டி.எஃப் திட்டங்கள் என்று மாற்றி அமைக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கேற்ப இந்தக் கலவை மாற்றி அமைக்கப்படுவதால், முதலீட்டாளர்களின் ரிஸ்க் பரவலாக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 30 வரை முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்சம் 5,000 ரூபாய். இந்தத் திட்டத்தில் நுழைவுக் கட்டணம் இல்லை. ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டத்தி லிருந்து வெளியேறினால் 1% கட்டணம் செலுத்த வேண்டும்.
டிவிடெண்ட் மற்றும் குரோத் என்று இரண்டு வகைகளில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஹைபிரிட் வகை திட்டமான இதில் மிதமான ரிஸ்க் விரும்பும் முதலீட்டாளர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.
குவான்ட் குவான்டமென்டல் ஃபண்ட் (Quant Quantamental Fund)
குவான்ட் என்பது பிரத்யேகமாக தகவல்களைப் பகுப்பாய்வு செய்து முதலீடு செய்யும் ஒரு வகை திட்டமாகும். நிறுவனத்தின் சார்ட், விலைநகர்வுகள் போன்ற பல காரணிகளைக் கொண்டு பங்குகள் வாங்கப்படும். இந்த வகை முதலீடுகளுக்கு பிரத்யேக சாஃப்ட்வேர்கள் உள்ளன. இந்த வகைத் திட்டம் ஒரு பேஸிவ் வகை திட்டமாகும்.
குவான்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய திட்டத்தில் ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 27 வரை முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்சம் 5,000 ரூபாய் என்கிற அளவில் இருந்து இந்தத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தில் நுழைவுக் கட்டணம் இல்லை. டிவிடெண்ட் மற்றும் குரோத் என்று இரண்டு வகைகளில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா: இம்யூன் இந்தியா டெபாசிட் திட்டம் (Immune India Deposit Scheme)
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப் படுத்தும் வகையில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தப் புதிய திட்டத்தில் சேரும்போது தடுப்பூசிப் போட்டுக்கொண்டிருந்தால், 0.25% வரை அதிக வட்டி வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் என்பது 1,111 நாள்கள் ஆகும். இது குறுகியகாலத்துக்கு நடைமுறையில் இருக்கும் திட்டமாகும். தடுப்பூசி போட்டுக் கொள்வது ஆரோக்கியத்துடன் அதிக பணம் ஈட்டவும் உதவும் என்பதால், தடுப்பூசி போடத் தகுதியானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு இந்தத் திட்டத்தில் சேர்ந்து இரட்டிப்பு பயன் பெறலாம்.
நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட், தைவான் கேதே சைட் நிறுவனத்துடன் கூட்டு..!
தைவான் நாட்டின் முன்னணி முதலீட்டு நிறுவனமான கேதே சைட் நிறுவனத்தின் திட்டங்களில் நிப்பான் நிறுவனமும், இந்தியாவில் உள்ள நிப்பான் நிறுவனத் திட்டங்களில் கேதே சைட் நிறுவனமும் முதலீடு செய்யும் ஒப்பந்தத்தை இரண்டு நிறுவனமும் செய்துள்ளன. உலக அளவில் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஆர்வம் மக்களிடம் அதிகரித்து வருகிறது. முதலீட்டுக் கலவையில் ஒரு பகுதி வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால், ஒருவரது முதலீட்டுக் கலவை பரவலாக் கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தால் நிப்பான் நிறுவனத்தின் புதிய திட்டங்களில் சேர்ந்து ஜப்பான் போன்ற ஆசியாவின் முன்னணி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய முடியும்!