நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வரிச் சலுகை வழங்கும் இன்ஷூரன்ஸ் திட்டம்! எல்.ஐ.சி-யின் புதிய அறிமுகம்

புதிய அறிமுகம்
பிரீமியம் ஸ்டோரி
News
புதிய அறிமுகம்

N E W S C H E M E S

சசி ரேகா

அண்மையில் புதிதாக அறிமுகமாகியுள்ள புதிய நிதித் திட்டங்களை இந்தப் பகுதியில் பார்ப்போம்.

முத்தூட் ஃபின்கார்ப் மாற்றமுடியாத கடன் பத்திரம் – IX சீரிஸ்

கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட முத்தூட் நிறுவனம், அதிக வட்டி கிடைக்க வாய்ப்புள்ள, மாற்ற இயலாத கடன் பத்திரங்களில் (Non-convertible Debenture) முதலீடு செய்யும் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தப் புதிய வெளியீட்டுக்கு மார்ச் 9 வரை விண்ணப்பிக்க முடியும். இந்தத் திட்டத்தில் ஒரு யூனிட்டின் மதிப்பு 1,000 ரூபாய் என்று அந்த நிறுவனம் நிர்ணயித்திருக்கிறது. குறைந்தபட்சம் 10 யூனிட்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும்.

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும்போது ஆண்டுக்கு 9.4% வட்டி கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் வட்டியானது வழங்கப்படும். க்ரைசில் நிறுவனம் இதற்கு நிலையான ‘ஏ’ ரேட்டிங் வழங்கியுள்ளது (CRISIL A/Stable Rating). அதனால் வங்கி வட்டியைவிட அதிக வருமானம் வேண்டுபவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து பயன் பெறலாம்.

புதிய அறிமுகம்
புதிய அறிமுகம்

மோதிலால் ஆஸ்வால் அஸெட் அலொகேஷன் ஃபண்ட்ஸ் ஆஃப் ஃபண்ட் (Motilal Oswal asset allocation funds of fund)

மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் இந்தப் புதிய திட்டத்தை கன்சர்வேட்டிவ், அக்ரசிவ் என இரு வகைகளில் கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியானது நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்யப்படாது. பங்குச் சந்தையில் இருக்கும் பலவகை இண்டெக்ஸ்கள், தங்கம் மற்றும் நிலையான வருமானம் தரும் முதலீடுகளில் திரட்டப்படும் நிதியை முதலீடு செய்யும். இண்டெக்ஸ்களில் மட்டும் முதலீடு செய்யப்படுவதால், இது ஒரு பேஸிவ் வகை முதலீட்டுத் திட்டம். இந்தத் திட்டம் மார்ச் 5-ல் முடிவடைகிறது.

இதில் திரட்டப்படும் முதலீட்டில் பங்குச் சந்தை இண்டெக்ஸில் சற்று அதிகமாக அதாவது, 50% வரை முதலீடு செய்யப்படும். கன்சர்வேட்டிவ் திட்டத்தில் பங்குச் சந்தை இண்டெக்ஸில் சற்று குறைவாக 30% வரை முதலீடு செய்யப்படும். இந்தத் திட்டம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நேரடி யாகப் பங்குகளில் முதலீடு செய்யாமல், இண்டெக்ஸில் முதலீடு செய்யப்படுவதால் திட்டத்தை நிர்வகிக்கும் செலவு குறைவாக இருக்கும்.

பேசிவ் வகை முதலீட்டுத் திட்டங்களில் தனிநபரின் முதலீட்டு முடிவுகளால் அதிக தவறு நேர்வதற்கு வாய்ப்பு இல்லை. இதுபோன்ற பேசிவ் வகை திட்டங்கள் வெளிநாடுகளில் அதிக பிரபலமாக உள்ளன. என்றாலும் நம் நாட்டில் இப்போதுதான் இதுபோன்ற திட்டங் களில் மக்கள் ஆர்வமுடன் முதலீடு செய்ய ஆரம்பிக்கின்றனர். பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், சற்று ரிஸ்க் உடையதாக இந்தத் திட்டம் இருக்கிறது. மேலும், வெளிநாடுகளில் முதலீடு செய்யப்படுவதன் காரணமாக மாறுபடும் இந்திய ரூபாயின் மதிப்பு காரணமாக, கிடைக்கும் வருமானம் வேறுபடலாம். தனிநபரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப இந்த இரு திட்டங்களில் ஒன்றில் முதலீடு செய்வது நீண்டகாலத்தில் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பை ஏற்படுத்தும்.

எல்.ஐ.சி பீமா ஜ்யோதி (LIC New Beema Jyothi)

2020-21-ம் நிதி ஆண்டு முடிவடைய இருப்பதால், வரிச் சலுகை வழங்கும் இந்தப் புதிய திட்டத்தை எல்.ஐ.சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிச்சய வருமானம் வழங்கும் ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு 5,000 ரூபாய் நிச்சய வருமானம் தரும்.

இதன் திட்டக் காலம் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை உள்ளது. பிரீமியம் தொகையைத் திட்டக் காலம் முடிவடையும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிறுத்திக் கொள்ளலாம். மூன்று மாதக் குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற முடியும். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையாக 1 லட்சம் ரூபாய் உள்ளது. இந்தக் காப்பீட்டில் செலுத்தப்படும் பிரீமியம் தொகை முழுவதற்கும் 80சி பிரிவு மூலம் வருமான வரி சேமிக்கும் வசதி உள்ளது.

இன்வெஸ்கோ இந்தியா இ.எஸ்.ஜி ஈக்விட்டி ஃபண்ட் (Invesco India ESG Equity Fund)

இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் இந்தப் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில் நமது சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யப்படும். சிகரெட், மதுபான நிறுவனங்கள் போன்ற பங்குகளில் இந்தத் திட்டம் முதலீடு செய்யாது. இது தீமெட்டிக் வகை திட்டமாகும். இந்தத் திட்டம் மார்ச் 12 அன்று முடிவடைகிறது. மார்ச் 17-க்குப் பிறகு இந்தத் திட்டத்தில் ஓப்பன் மார்க்கெட்டில் முதலீடு செய்ய முடியும்.

இதில் முதலீடு செய்யும்போது நுழைவுக் கட்டணம் கிடையாது. ஒரு வருடத்தில் வெளியேறினால் 1% வரை வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டும். டிவிடெண்ட் மற்றும் குரோத் என்று இரண்டு வகைகளில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

இந்தத் திட்டத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படுவதால், ரிஸ்க் அதிகம் விரும்பும் முதலீட்டாளர்கள் நீண்டகால நோக்கில் முதலீடு செய்யலாம்!

பிட்ஸ்

திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.6,000 கோடி அளவுக்கு புதிதாக ஒரு மோசடி நடந்திருப்பதை அந்த நிறுவனத்தின் ஆடிட்டிங் நிறுவனம் கிராண்ட் தார்ன்டன் தெரிவித்து உள்ளது!