Published:Updated:

தமிழகத்தில் ₹2,400 கோடி முதலீடு... இ-ஸ்கூட்டர் பிசினஸில் பிரமாண்ட திட்டங்களுடன் களமிறங்கும் ஓலா!

ஓலா
ஓலா

இனி வரும் நாள்களில் உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு தொழிற்சாலையைத் தமிழ்நாட்டில் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறது ஓலா.

ஓலா மற்றும் உபர் டாக்ஸி செயலி நிறுவனங்களுக்கு இடையே எப்போதுமே ஒருவிதமான போட்டி இருந்துகொண்டே இருக்கும். பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஓலா நிறுவனம், பைக் டாக்ஸியை அறிமுகப்படுத்தும் போதும், உபர் செயலி நிறுவனத்துக்கு ஒரு விதமான அழுத்தம் ஏற்பட்டது. உபரை விடவும், தனது பிஸினஸ் விரிவாக்கத்தை அடுத்தடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் ஓலா எப்போதுமே தனி பாணியைப் பின்பற்றும். அந்த வகையில், தற்போது பிரபலமடைந்துவரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையின் மீது தன் கவனத்தைத் திருப்பியுள்ளது ஓலா.

அதன்படி, இனி வரும் நாள்களில் உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்புத் தொழிற்சாலையைத் தமிழ்நாட்டில் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறது ஓலா. இதற்கு முன்னேற்பாடாகத் தமிழக அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்நிறுவனம் கையெழுத்திட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, 2,400 கோடி ரூபாயைத் தமிழகத்தில் அமைக்கவிருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலையில் இந்நிறுவனம் முதலீடு செய்யவிருக்கிறது.

Ola cabs
Ola cabs

"விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் ஓலா நிறுவனம் தடம்பதிக்கும், வருகிற 2021 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைக் களமிறக்கும்" என்கிற செய்தியும் சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. அப்போது, ஆரம்ப காலகட்டத்தில் நெதர்லாந்தில் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் என்றும் பின்னர் இந்தியாவிலேயே உற்பத்தி ஆலை அமைக்கப்படும் என்றும் ஓலா நிறுவனம் சார்பில் சொல்லப்பட்டிருந்தது.

ஆனால், இப்போது ரூ.2,400 கோடி மதிப்பிலான உற்பத்தி தொழிற்சாலையைத் தமிழகத்தில் அமைக்க ஓலா முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம். இதனால் 2,200 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் மறைமுகமாக பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது. 2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த நிறுவனம் 2,000 பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

பவிஷ் அகர்வால்
பவிஷ் அகர்வால்

இது தொடர்பாகப் பேசிய ஓலா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான பவிஷ் அகர்வால், "சுயசார்பு இந்தியா திட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய ஓலா நிறுவனம் ஆயத்தமாகியுள்ளது.

இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளுக்கும் ஓலா ஸ்கூட்டர்களை ஏற்றுமதி செய்யும். அந்த வகையில், தமிழகத்தில் தயாரிக்கப்படும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியப் போக்குவரத்து சந்தையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஐரோப்பியா, ஆசியா மற்றும் லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்" என்றார்.

இதுவரை சொன்னதைக் கட்டாயம் செய்திருக்கிறது ஓலா. அதனால், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலையையும் விரைந்து கட்டமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு