அர்ஜுன் பார்த்தசாரதி, நிறுவனர், Inrbonds.com
உணவு டெலிவரி நிறுவனமான ஸொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்யும் அனைவருக்கும், ஆர்டர் செய்து அடுத்த 30 நிமிடங்களில் உணவு வந்து சேர்ந்துவிடும் என்பது நன்றாகத் தெரியும். இப்படி ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வதுபோல், அரசுக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதையும் மிகவும் எளிதாக்கியிருக்கிறது ரிசர்வ் வங்கி. இந்திய அரசு உத்தரவாதத்தின் கீழ் வெளியிடப்படுவதால், நாட்டின் மிகப் பாதுகாப்பான முதலீடாக அரசு கடன் பத்திரங்கள் உள்ளன.

அரசு வெளியிடும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் முறையைப் பாதுகாப்பானதாகக் கட்டமைத்து உள்ளது ரிசர்வ் வங்கி. பங்கு முதலீடுகளில் நாம் மூன்றாம் தரப்பு தரகு நிறுவனங்கள் மூலமாகப் பரிவர்த்தனை செய்வதால், அதில் சில சிக்கல்கள் உள்ளன. ஆனால், இதில் இதுபோன்ற சிக்கல்கள் இல்லை. காரணம், இந்த முதலீட்டில் ரிசர்வ் வங்கி மூலமாக நேரடியாகக் கடன் பத்திரம் வெளியிடும் நிறுவனத்துக்குப் பரிவர்த்தனை நடைபெறுகிறது. மேலும், அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய எந்தக் கட்டணமும் இல்லை.
குறைந்தபட்ச ரூ.10,000 முதலீடு
குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் முதலீடு செய்ய முடியும். ரிசர்வ் வங்கி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி, அரசு கடன் பத்திரங்களில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகரிக்க ரிசர்வ் வங்கி இத்தகைய முன்னெடுப்பை எடுத்துள்ளது. இதற்காக இணையதளம் மூலம் ரிசர்வ் வங்கியின்கீழ் ரீடெயில் டைரக்ட் கில்ட் அக்கவுன்ட் (ஆர்.டி.ஜி) முறையை அறிமுகப்படுத்தி யுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஜூலை 12, 2021 சுற்றறிக்கையின்படி, இந்தத் திட்டத்தில் உள்ள கடன் பத்திரங்கள்... 1. இந்திய அரசின் கருவூலப் பத்திரங்கள். 2. இந்திய அரசின் தேதியிட்ட கடன் பத்திரங்கள். 3. மாநிலங்களின் மேம்பாட்டுக் கடன்கள். 4. அரசு தங்கப் பத்திரங்கள்.

முக்கிய அம்சங்கள்
1. சிறுமுதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தின்கீழ் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தின் வழியாகக் கணக்குத் தொடங்கி முதலீடு செய்யலாம். 2. இதில் பதிவு செய்து கணக்கு வைத்திருப்பவர்கள் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தைகள் இரண்டிலும் அரசின் கடன் பத்திரங்களில் பரிவர்த்தனை செய்யலாம். 3. பதிவுக்குத் தேவையான ஆவணங்கள், வங்கி சேமிப்புக் கணக்கு, பான் எண், கே.ஒய்.சி விவரங்களுக்காக ரிசர்வ் வங்கி அங்கீகரித்த ஏதேனும் ஓர் ஆவணம், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண். 4. இந்தியாவில் வசிக்காத சிறுமுதலீட்டாளர்கள் அரசு கடன் பத்திரங்களில் அந்நிய பரிமாற்ற நிர்வாக சட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். 5. மேற்கூறிய தகுதியுள்ள நபர்கள் தனியாகவோ, சேர்ந்தோ இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.
பதிவு நடைமுறைகள்...
முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கி இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு வரும் ரகசிய கடவு எண்ணை உள்ளிட்டு மின்னஞ்சல் போன்றவற்றைச் சரிபார்த்த பிறகு, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும். வெற்றிகரமாக விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு ‘ரீடெய்ல் டைரக்ட் கில்ட் கணக்கு’ தயாராகும். அதன் விவரங்கள் மின்னஞ்சலுக்கும், மொபைல் எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ் மூலமாகவும் அனுப்பப்படும்.
பதிவு செய்துகொண்ட முதலீட் டாளர்கள் அரசு கடன் பத்திரங்களை என்.டி.எஸ்-ஓ.எம் மூலமாக இணைத்துள்ள வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து பரிமாற்றம் செய்த தொகையை வைத்து வாங்கவும் விற்கவும் செய்யலாம். வாங்கப்பட்ட கடன் பத்திரங்கள் செட்டில்மென்ட் தினத்தன்று ஆர்.டி.ஜி கணக்கில் வரவு வைக்கப்படும்.
கட்டணங்கள் மற்றும் பிடித்தங்கள்
ரிசர்வ் வங்கியின் ஆர்.டி.ஜி கணக்குத் தொடங்கவும் நிர்வகிக்கவும் கட்டணம் இல்லை. ஆனால், பரிவர்த்தனை நிகழ்த்தும் தளத்துக்குக் குறிப்பிட்ட கட்டணம் உண்டு.
தமிழில்: திவ்யா